அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். நண்பர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த
பொங்கல் நல்வாழ்த்துகள். இந்த நாளும் வரும் எல்லா நாட்களும் கரும்பின் சாறு போல, அதிலிருந்து
எடுக்கப்படும் வெல்லம்போல இனிப்பாக இருக்கட்டும்!
இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் துவங்கலாம்.
விதைத்துக் கொண்டே இரு – முளைத்தால் மரம்! இல்லையேல் உரம் – சே குவேரா.
மார்கழி முடிந்து தை மகள் பிறந்திருக்கிறாள். இந்தத் தைத் திருநாளில் மகிழ்ச்சியும்
உற்சாகமும் எங்கும் நிறைந்து இருக்கட்டும். மார்கழி என்றால் விடிகாலை எழுந்திருப்பதும்,
பாடல் தெரியவில்லை என்றாலும் பிள்ளையார் கோவிலில் கொடுக்கப்படும் பொங்கலுக்காகவே சென்ற
சில நாட்கள் – நம்ம சங்கீத ஞானம் அப்படி! எல்லோரும் ”மார்கழித் திங்கள் மதி நிறைந்த
நன்னாள்” என்று பாடினால் நான் பாடுவது இப்படி இருந்திருக்கும் – “மார்கழித் திங்கள், மடி
நிறைய பொங்கல்!” [நன்றி நண்பர் ஸ்ரீபதி!] ஹாஹா… நமக்கும் சங்கீதத்திற்கும்
அவ்வளவு தூரம்! வீட்டில் தினம் தினம் கோலங்கள் போடுவது உண்டு என்றாலும் கலர் கோலங்கள்
பெரிதாகப் போட்ட நினைவில்லை. பெரிய பெரிய கோலங்கள் என்றாலும் அரிசி மாவு கோலமோ அல்லது
கோலமாவில் போட்ட கோலங்களோ தான். இப்போது அடுக்கு மாடிக் குடியிருப்பில் இருந்தாலும்
வீட்டு வாசலில் சின்னச் சின்னதாய் கலர் பொடி சேர்த்த கோலங்களை போடுகிறார்கள். இந்த
வருடத்தின் மார்கழி நாட்களில் முதல் இருபது நாட்களில் போட்ட கோலங்களை உங்களுடன் பகிர்ந்தது
நினைவில் இருக்கலாம்!
நெய்வேலியில் இருந்தவரை பொங்கல் என்றாலே கொண்டாட்டம் தான்! இரண்டு மூன்று நாட்கள்
முன்பிருந்தே பொங்கலுக்கான தயாரிப்பு முஸ்தீபுகள் தொடங்கி விடும். மஞ்சக் கொத்து, கரும்பு
என எல்லாம் வாங்கி வருவதற்கென்றே பொங்கலுக்கு முந்தைய சந்தை நாளில் (செவ்வா சந்தை அல்லது
வியாழன் சந்தை) நிச்சயம் போய் வருவோம்! நானே சைக்கிள் ஓட்ட ஆரம்பித்த பிறகு, கரும்பை
அதன் இலைகளோடு சைக்கிளில் வாகாக வைத்துக் கட்டி சந்தையிலிருந்து வீடு வரை கொண்டு வருவது
பெரிய சவாலாக இருக்கும்! சில சமயங்களில் சைக்கிள் ஹேண்டில் பாரை ஒரு கையிலும், தோளில்
வைத்து எடுத்து வரும் கரும்புகளை ஒரு கையிலும் பிடித்துக் கொண்டு சைக்கிள் ஓட்டியபடி
வீடு வந்து சேர்ந்திருக்கிறேன்! செவ்வா சந்தை (செவ்வாய் கிழமைகளில் மட்டும் இருக்கும்
சந்தை) எனில் கிட்டத்தட்ட ஐந்து கிலோமீட்டர் தொலைவு இருக்கலாம்! வியாழன் சந்தை சற்றே
கூடுதலான தூரம்! தேவையான பொருட்கள் எல்லாவற்றையும் சேகரித்து வைத்து, பொங்கல் அன்று
விடிகாலையில் எழுந்து அம்மா எல்லா வேலைகளையும் ஆரம்பித்து விடுவார்.
பொங்கல் அன்று எங்களுக்குப் பெரிதாக வேலைகள் கிடையாது! பொங்கல் வெண்கலப் பானையின்
வெளிப்புறம் பூசி, அதன் கழுத்தில் வாகாக மஞ்சள் கொத்து கட்டி எல்லாவற்றையும் அம்மாவே
பார்த்துக் கொள்வார். எங்களுக்கான வேலை அன்றைக்கு ஒன்றே ஒன்று தான் – பொங்கல் பொங்கி
வரும் சமயம் எங்கள் கைகளில் ஒரு எவர்சில்வர் தட்டும், கரண்டியும் இருக்கும்! கரண்டியால்
தட்டுகளில் தட்டி ஒலி எழுப்பி, “பொங்கலோ பொங்கல்” சப்தமாகச் சொல்ல வேண்டியது மட்டுமே
அன்றைய எங்கள் வேலையாக இருக்கும்! அப்படிச் சப்தம் எழுப்புவதில் தான் எத்தனை இன்பமாக
இருந்தது அப்போது! அதிலும் நானும் சகோதரிகள் இருவருமாக போட்டி போட்டுக் கொண்டு சப்தம்
எழுப்பி இருக்கிறோம்! இப்போது நினைத்தால் வெட்கமாக இருக்கிறது – இன்றைய நாளில் இப்படி
“பொங்கலோ பொங்கல்” சப்தம் எழுப்பலாம் என்று அழைத்தால், பல வீடுகளில் “அடப் போப்பா வேற
வேலை இல்லை! டிவில படம் பார்க்கணும்” எனச் சென்று விடும் சிறுவர்கள் தான் காண முடிகிறது!
இருபது வருடங்கள் இப்படி இருந்த பிறகு தலைநகர் வாசம் – இங்கே சங்கராந்தி தான்!
பொங்கலுக்கு அலுவலக விடுமுறை கூடக் கிடையாது! பொங்கல் அன்று கூட – இதோ இன்றைக்குக்
கூட அலுவலகம் உண்டு! – அதுவும் நம் போல போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல்
என நான்கு நாள் ஐந்து நாள் கொண்டாட்டங்கள் எல்லாம் இங்கே கிடையாது! ஜனவரி 13-ஆம் தேதி
லோடி (Lohri), 14-ஆம் தேதி மகர்சங்கராந்தி! அவ்வளவு தான். அதற்கு விடுமுறை கிடையாது.
லோடி அன்று மாலை விறகுகளைக் குவித்து வைத்து அதனை எரிய விட்டு, வேர்க்கடலை, மக்காச்
சோளம் போன்றவற்றை அதில் போட்டு வெடிக்க விடுவார்கள். பிறகு வெல்லமும் எள்ளும் சேர்த்த
ரேவ்டி, வேர்க்கடலை, சோளப் பொரி என நிவேதனம் செய்து, எரிந்து கொண்டிருக்கும் இடத்தினைச்
சுற்றி பாடல்கள் பாடி, நடனம் ஆடி நிவேதனம் செய்த பொருட்களை உண்டு மகிழ்வார்கள். திருமணம்
ஆன பின் முதல் லோடி எனில் பெண் வீட்டிலிருந்து சீர் தரும் வழக்கம் கூட உண்டு! ஒரு கலக்கான லோடி பாடல் கேட்கலாம் வாங்க!
என்ன நண்பர்களே, லோடி பாடல் எப்படி இருந்தது? இப்படி நிறைய பாடல்கள் உண்டு. மகர்
சங்கராந்தி கொண்டாட்டங்கள் தலைநகரில் அப்படி ஒன்றும் பிரமாதமாக இருப்பதில்லை. வட இந்திய
கிராமங்களில் இன்றைக்கும் இந்தக் கொண்டாட்டங்கள் உண்டு என்றாலும் தலைநகரில் கொண்டாட்டமே
இல்லை! தலைநகரில் சில வருடங்கள் நானும் நண்பரும் சேர்ந்து எங்கள் பகுதி தமிழர்களுக்காக
”பொங்கல் விழா” எடுத்து நடத்தியதுண்டு. அதுவும் சில வருடங்கள் தான் – எல்லோரிடமும்
பணம் வாங்கி, குழந்தைகளுக்கான போட்டிகள், பரிசுகள், பெரியவர்களுக்கும் சில போட்டிகள்,
நாள் முழுவதுமாக உணவு என பலவும் செய்தோம் – ஆனால் அதில் எங்களுக்கான செலவு தான் அதிகம்
– ஏதோ எங்களுக்கு பெரியதாக பணம் கிடைத்து விடுகிறது என்று பலரும் நினைத்தாலும், (சிலர்
வெளிப்படையாகவே சொன்னது கூட உண்டு!) நாங்கள் இருவரும் செய்த செலவு தான் அதிகமாக இருந்தது.
அந்த நண்பர் இப்போது தொடர்பில் கூட இல்லை – ஏதோ சில மனஸ்தாபங்கள்… நல்ல நட்பு என்றாலும்
சில சமயங்களில் விட்டு விலகி ரொம்பவே தொலைவு சென்று விடுகிறார்கள்… விடுங்கள், இந்த
மகிழ்ச்சியான நாளில் இழந்த நட்பு பற்றி எதற்குப் பேச வேண்டும்…
சுமார் ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு, நேற்றிலிருந்து எங்கள் வீட்டில் பண்டிகைகள்
கொண்டாட ஆரம்பித்திருக்கிறோம்! சில நெருங்கிய உறவினர்கள் மறைவினால் பண்டிகைகள் கொண்டாட
முடியாத சூழல். இந்தப் பொங்கல் சமயத்தில் ஊருக்கு வரலாம் என நினைத்திருந்தாலும் வர
இயலவில்லை! தில்லியில் வரும் மாதம் தேர்தல் என்பதால் எப்போது வேண்டுமானாலும் தேர்தல்
பணிக்கான அழைப்பு வரும் என்று இங்கேயே இருக்க வேண்டியிருக்கிறது. தேர்தல் பணிக்கான
அழைப்பு வந்தால் விடுமுறையில் இருக்கிறேன் என்று சொல்லி தப்பித்துக் கொள்ள முடியாது
– தமிழகத்திலிருந்து அலறி அடித்து ஓடி வர வேண்டியிருக்கும்! சரி அடுத்த மாதம் செல்லலாம்
என்றால் பாராளுமன்றக் கூட்டம் ஆரம்பித்து விடும் – அப்போதும் விடுமுறை கிடைக்காது!
எப்போது விடுமுறை கிடைக்குமோ அப்போது தான் தமிழகம் வர முடியும்! பொங்கல் சமயத்தில்
வந்து அங்கே நிகழ்வுகளில் கலந்து கொள்ளலாம் என்றாலும் முடியாத சூழல்! என்ன செய்ய முடியும்?
இதோ இன்றைக்கும் வழமை போல எழுந்து உணவு சமைத்து அலுவலகம் செல்ல வேண்டியது தான்! சீச்சீ
இந்தப் பழம் புளிக்கும் நரி கதையாக அலுவலகம் சென்று வரப் போகிறேன். அடுத்த வருடம் பொங்கல் வராமலா இருக்கப் போகிறது!
நாம் நினைத்தால், எல்லா நாளும் பொங்கல் தான்…
இந்த நாளின் பதிவு உங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். உங்கள்
எண்ணங்களையும் கருத்துகளையும் பின்னூட்டம் வழியே பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி. மீண்டும்
வேறொரு பதிவின் வழி சந்திக்கும் வரை…
பொங்கல் நாளில் மீண்டும் உங்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகளைச் சொல்லிக்
கொண்டு…
நட்புடன்
வெங்கட்
புது தில்லியிலிருந்து…
இனிய பொங்கல் வாழ்த்துகள். விரைவில் குடும்பத்தோடு சேர்த்துப் பொங்கல் கொண்டாடும் நாட்கள் வரட்டும். நாங்களும் மார்கழித் திங்கள், மடி நிறையப் பொங்கல்னு தான் பாடுவோம் சின்ன வயசில். :)))) அப்போல்லாம் காலம்பரவே எழுந்து குளித்துவிட்டு அக்கம்பக்கம் இருக்கும் சின்னக் கோயில்களுக்கெல்லாம் போய்ச் சுண்டல், பொங்கல் கலெக்ஷன் செய்துட்டு வீட்டுக்கு வந்துட்டுப் பள்ளிக்குப் போவோம். பஜனைகளிலும் கலந்து கொண்டது உண்டு. எங்க பெரியப்பா வீட்டிலேயே சிறப்பான பஜனை கோஷ்டியை வைத்து பஜனை சம்பிரதாயத்துடன் நடத்துவார்கள். அதிலேயும் கலந்து கொள்வோம்.
பதிலளிநீக்குமடி நிறைய பொங்கல் - பல ஊர்களில் இப்படித்தான் போலும் கீதாம்மா.!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
இந்தியாவில் இருந்தும் குடும்பத்தோடு பொங்கல் கொண்டாட இயலாதது வருத்தம்தான் என்ன செய்வது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சூழல்.
பதிலளிநீக்குஇனிய பொங்கல் நல்வாழ்த்துகள் ஜி
இதுவும் கடந்து போகும் என்று சென்று கொண்டே இருக்க வேண்டியது தான் கில்லர்ஜி!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ஊருடன் ஒத்து வாழ் என்று சொல்லியிருக்கிறார்கள். பொங்கல் அன்று சும்மா கொஞ்சம் வெண் பொங்கல் வைத்து நண்பர்களுடன் கொண்டாடலாம்.
பதிலளிநீக்குஊருடன் ஒத்து வாழ்! :) நண்பர் வீட்டிலிருந்து பொங்கல் வந்து விட்டது ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள். பொங்கலுக்கு விடுமுறை கிடையாது என்பது சோகம்தான். என்ன செய்வது? பிழைப்பு! உங்கள் பொங்கல் நினைவுகள் என் நினைவுகளையும் எழுப்பின. கிட்டத்தட்ட ஒத்த நினைவுகள்.
பதிலளிநீக்குபொங்கலுக்கு இங்கே எப்போதுமே விடுமுறை கிடையாது. Restricted Holiday - ஒரு நாளுக்கு எடுத்துக் கொள்ளலாம்! ஆனால் பொதுவாக எடுப்பதில்லை ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
லோரி பாடல் கேட்டேன். பெரிதாகக் கவரவில்லை. ஆனால் அந்த வார்த்தை எனக்கு முக்தி பட முகேஷ் பாடலை நினைவு படுத்தி விட்டதால் "லல்லா லல்லா லோரி.." என்று சென்று கேட்கப்போகிறேன்.
பதிலளிநீக்குhttps://www.youtube.com/watch?v=lZ1xY5Q7Hwg
லோடி பாடல் - இன்னும் நிறைய ஃபாஸ்ட் பீட் பாடல்கள் உண்டு! கொஞ்சம் சுமாரான பாடல் தான் இன்றைய பாடல். சினிமா பாடல்கள் இருந்தாலும் அவற்றை இணைக்கவில்லை - அமிதாப் பாடல் கூட ஒன்று உண்டு ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குஇனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குஅன்பின் வெங்கட்..
பதிலளிநீக்குதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி.
நீக்குபாடல் அருமை அதைக் கேட்டபடி பதிவைப் படிப்பது
பதிலளிநீக்குஒருவகை சுகம்...
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
லோடி பாடல் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ரமணி ஜி!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
மனம் நிறைந்த பொங்கல் வாழ்த்துகள்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.
நீக்குஅன்பு வெங்கட்,
பதிலளிநீக்குஇனிய பொங்கல் நாள் நல்வாழ்த்துகள்.
விடுமுறை இல்லாவிட்டாலும்,
சாயந்திரம் திரும்பியதும் நல்லதா
ஒரு அவியலாவது செய்து சாப்பிடுங்கள்.
டெல்லி பாலில் சர்க்கரை சேர்த்தால் பாயசம்.
இளவயது நினைவுகள் எல்லோருக்கும் இனிமையே.
சைக்கிளில் பாலன்ஸ் செய்து ,கரும்பு கொண்டு வந்தது
அருமை.நெய்வேலிக்கு நாங்களும் 1975 வாக்கில் வந்திருக்கிறோம்.
இவரது நண்பர் கிருஷ்ணன்
லீகோ கம்பெனியில் நல்ல வேலையில் இருந்தார்.
வெய்யில் தான் தாங்க முடியவில்லை.
நலமுடன் இருங்கள் மா.
நண்பர் வீட்டிலிருந்து பொங்கலும் வடையும் வந்தது. என் சமையல் வழக்கம் போல! பொங்கல் நாள் இனிதே கழிந்தது வல்லிம்மா...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
இடைவெளிக்குப் பிறகு கொண்டாடும் பொங்கலின் போது குடும்பத்தினருடன் இருக்க முடியாது போனது வருத்தமே. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்!
பதிலளிநீக்குநேற்று எங்கள் குடியிருப்பில் நீங்கள் சொல்லியிருப்பது போலவே லோடி கொண்டாடப்பட்டது :).
இப்போது வட இந்தியர்கள் பல பகுதிகளிலும் இருக்கிறார்கள் என்பதால் எல்லா இடங்களிலும் லோடி கொண்டாடுவதைப் பார்க்க முடிகிறது - குறிப்பாக பெங்களூருவில்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
நினைவுகள் அருமை.
பதிலளிநீக்குபொங்கல் சமயம் ஊருக்கு வரமுடியாமல் போய் விட்டதே! அடுத்த பொங்கலுக்கு எல்லோரும் சேர்ந்து பொங்கலை கொண்டாட வாழ்த்துக்கள்.
கலக்கான லோடி பாடல் கேட்டேன் அருமை.
பொங்கல் வாழ்த்துக்கள்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...
நீக்கு//மார்கழி முடிந்து தை மகள் பிறந்திருக்கிறாள்.//
பதிலளிநீக்குஹா ஹா ஹா இதை அவசரமாகப் படிச்சு தை என்பதைத் தவறவிட்ட்டு, மகள் பிறந்திருக்கிறா வெங்கட்டுக்கு என நினைச்சு மீண்டும் படிச்சுப் பார்த்தேன் ஹா ஹா ஹா..
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
ஹாஹாஹா... அப்படி என்ன ஒரு அவசரம் உங்களுக்கு அதிரா!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
இந்த ஆண்டு சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி யாழ் பாவாணன் ஜி.
நீக்குதைதிருநாள் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஅடுத்த பொங்கல் குடும்பத்துடன் கொண்டாட வாழ்த்துகள்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.
நீக்கு