அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
மகிழ்ச்சி என்பது ஒரு மனநிலை. அதைக் கற்றுக் கொண்டால் துன்பத்திலும் மகிழ்ச்சியுடன் இருக்க முடியும். அதுவே இறைநிலை - அரவிந்தர்.
******
இன்றைய நாளிள் மீண்டும் ஒரு வட இந்திய பராட்டா வகையுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்த பராட்டா நம் ஊர் பரோட்டா போல மைதாவில் செய்யப்படுவது அல்ல! கோதுமை மாவில் செய்யப்படும் பராட்டா இது. பராட்டா சரி அது என்ன Bபத்துவா? நம் ஊரில் சக்ரவர்த்தி கீரை/பருப்புக் கீரை என்ற பெயர்களில் அழைக்கப்படும் கீரையை தான் இங்கே, வடக்கில் Bபத்துவா என்று அழைக்கிறார்கள். பொதுவாக கீரை வாங்கினால் அதில் இருக்கும் நச்சு வேலைகள் - ஆய்வது, சுத்தம் செய்வது போன்றவை - அதிக நேரம் எடுக்கும் வேலை! அதனாலேயே நான் வாங்குவது குறைவு - அதுவும் ஒரே ஒரு ஆளுக்கு, ஒரே ஒரு வேளைக்கு சமைப்பது என்றால் கடினம் என்று வாங்குவதைத் தவிர்ப்பேன். வாரத்தில் ஒரு முறை வாங்கினாலே பெரிது!
இந்த Bபத்துவா இருக்கிறதே, குளிர் நாட்களில் தான் அதிகமாகவும், ஃப்ரெஷ்-ஆகவும் கிடைக்கும். இந்தக் குளிர் நாட்களில் வாங்கி இந்தக் கீரையில் நிறைய விதங்களில் சப்பாத்திக்கு தொட்டுக்கையாக சப்ஜியாகவும், பராட்டாவாகவும் செய்வது இந்த ஊர் மக்களின் பழக்கம். உணவகங்களில் சாப்பிடும்போது இந்த மாதிரி கீரை வகைகளை வாங்கிக் கொள்வது உண்டு. இந்த தீநுண்மி காலங்களில் உணவகத்திற்குச் செல்வதே இல்லை என்பதால் வீட்டிலேயே இதனைப் பயன்படுத்த முடிவு செய்தேன். அப்படி வாங்கி ஒரு ஞாயிறில் செய்தது தான் இந்த Bபத்துவா பராட்டா. வாருங்கள், இந்த Bபத்துவா பராட்டா செய்வதற்கு என்னென்ன தேவை, எப்படிச் செய்ய வேண்டும் என்பதை எல்லாம் பார்க்கலாம்! அதற்கு முன்னர் இந்தக் கீரையில் உள்ள சத்துக்கள் என்ன என்பதையும் பார்க்கலாம்!
Bபத்துவா கீரையில் உள்ள சத்துகள்: விட்டமின் சி, ப்ரோட்டீன், இரும்புச் சத்து, பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துகள் அடங்கியது இந்தக் கீரை. மலச்சிக்கல் பிரச்சனைகளுக்கும், ரத்தத்தில் உள்ள அழுக்குகளை நீக்கவும், ஹிமோகுளோபின் அதிகரிக்கவும் இந்தக் கீரை உதவுகிறது. சத்து அதிகம் இருக்கிறதே என அதிக அளவில் எடுத்துக் கொள்வதும் சரியில்லை! சிலருக்கு அரிப்பு போன்றவை தோன்றலாம்! சரி வாருங்கள் Bபத்துவா பராட்டா செய்ய தேவையானவற்றைப் பார்க்கலாம்!
தேவையான பொருட்கள்:
Bபத்துவா கீரை: ஒரு கப் - இலைகளை மட்டும் ஆய்ந்து நீரில் நன்கு சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்
கோதுமை மாவு - இரண்டு கப்
எண்ணெய் - தேவையான அளவு
சீரகம் - ½ ஸ்பூன்
பெருங்காயத் தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
மிளகாய்த் தூள் - ½ ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1 (சிறு சிறு துண்டுகளாக நறுக்கியது)
இஞ்சி - சிறு துண்டு - தோல் நீக்கி துருவி வைத்துக் கொள்ளவும்.
எப்படிச் செய்யணும் மாமு?
கீரையை தண்டு நீக்கி, ஒரு வடிகட்டியில் போட்டு தண்ணீரில் நன்கு அலசவும். இரண்டு மூன்று முறை தண்ணீரில் சுத்தம் செய்து கொள்வது நல்லது. கீரையில் இருக்கும் மண் போன்றவை நீங்க இந்த வேலை செய்தே ஆக வேண்டும். தண்ணீரை நன்கு வடிகட்டிய பிறகு, Bபத்துவா இலைகளைச் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்வது நலம்!
கோதுமை மாவில் துருவிய இஞ்சி, பச்சை மிளகாய், சீரகம், பெருங்காயத் தூள், மிளகாய்த் தூள், உப்பு மற்றும் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள்.
நறுக்கிய Bபத்துவா கீரையை கோதுமை மாவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
அனைத்தையும் சேர்த்து நன்கு பிசைய வேண்டும். முதலில் தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியமில்லை. நன்கு கலந்து கொண்ட பிறகு குறைவான அளவில் தண்ணீர் சேர்த்து பிசைந்து பதினைந்து முதல் இருபது நிமிடங்கள் வரை மூடி வைக்கவும்.
பிறகு மாவில் ஒன்றிரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து பிசைந்து, உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
சப்பாத்தி இடுவது போல இட்டு, அதன் மீது கொஞ்சம் எண்ணெய் தடவி, கொழுக்கட்டைக்கு மூடுவது போல மூடி, மீண்டும் தட்டையாக்கி, திரும்பவும் சப்பாத்திகளாக இட்டுக் கொள்ளுங்கள்.
ஒரு தவாவினை அடுப்பில் வைத்து கொஞ்சம் சூடான பிறகு ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து இட்டு வைத்திருக்கும் பராட்டாவினை போட்டு, அவ்வப்போது திருப்பி, வேகும் வரை காத்திருக்கவும்.
இரண்டு பக்கங்களிலும் எண்ணெய்/நெய் தடவி பராட்டாக்களை தவாவில் சுட்டு எடுத்தால் முடிந்தது வேலை!
இந்த Bபத்துவா பராட்டாவிற்கு தனியாக தொட்டுக்கொள்ள எதுவும் செய்யத் தேவையில்லை. ஊறுகாய் மற்றும் தயிர் இருந்தால் போதுமானது. தயிருக்குப் பதிலாக ராய்தாவும் பயன்படுத்திக் கொள்ளலாம்! மிகவும் சுவையான இந்த Bபத்துவா பராட்டாவினை உங்கள் வீட்டிலும் செய்து சுவைத்துப் பாருங்கள்.
என்ன நண்பர்களே, இந்த நாளில் உங்களுடன் பகிர்ந்து கொண்ட வட இந்திய உணவு வகையை உங்கள் வீட்டிலும் செய்து பார்ப்பீர்கள் தானே? உங்கள் கருத்துகளைப் பின்னூட்டங்கள் வழி சொன்னால் மகிழ்ச்சி. நாளை வேறு ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி.
புகைப்படத்தில் அடை போல இருக்கிறதே....
பதிலளிநீக்குஅடை போன்று தடிமனாக இருக்கத் தேவையில்லை கில்லர்ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
இப்படி கீரைகளை சப்பாத்தி மாவுடன் சேர்த்து, சப்பாத்தி செய்வதுண்டு...
பதிலளிநீக்குநல்ல விஷயம். சப்பாத்தியுடன் இப்படி கீரையும் சேர்ப்பது நல்லது தனபாலன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
புதுவிதமான உணவு.
பதிலளிநீக்குரொட்டியும் ஊருகாயும் அல்லது தயிரும் மிகவும் சுவையாக இருக்கும்.
வீட்டில் முயர்ச்சித்து பார்க்கிறோம்.
இங்கே இது போல பல வித பராட்டாக்கள் செய்வதுண்டு அரவிந்த். முயற்சித்துப் பாருங்கள்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வெந்தயக்கீரை, பாலக், முள்ளங்கிக்கீரை, முருங்கைக்கீரை போன்றவற்றில் செய்வதுண்டு. இது செய்ததே இல்லை.வடக்கே கிடைக்கும் அந்தச் சிவப்புக்கீரையைத் தான் அதிகம் வாங்குவோம். அடுத்தது பாலக். வெல்லக்கட்டியா அது? மைசூர்ப்பாகு மாதிரி இருக்கேனு நினைச்சேன். :))))
பதிலளிநீக்குமைசூர்பாகு - ஹாஹா... வெல்லம் இப்படிக் கட்டிகளிலும் இங்கே கிடைக்கிறது கீதாம்மா. சக்கரவர்த்திக் கீரை நம் ஊரில் கிடைக்கிறதே - செய்து பாருங்கள்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.