அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட என்ன தவம் செய்தனை பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
A person’s most valuable asset is not a brain loaded with knowledge.... but a heart full of love with an ear open to listen and a hand willing to help….
******
புத்தாண்டு கொண்டாட்டங்கள் - தவிர்க்க முடியாதவை:
புத்தாண்டு சமயத்தில் இரண்டு நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு உத்தரவினை தில்லி அரசு பிறப்பித்திருந்தது பற்றி சென்ற வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவில் சொல்லி இருந்தேன். “ஓ நீங்க இரவு நேர ஊரடங்கு உத்தரவு போட்டா? நாங்க கொண்டாடுவதைத் தடை செய்து விடமுடியுமா? நாங்க பகல்ல கொண்டாடுவோம்! என்ன பண்ணுவீங்க?” என்று கேட்பது போல ஜனவரி முதல் தேதி அன்று தில்லி முழுவதும் கொண்டாட்டம். மாலை நேரம் வீடு திரும்பும்போது சாலை முழுவதும் வாகன நெரிசல் - கூடவே மக்கள் குடும்பம் குடும்பமாக வழிபாட்டுத் தலங்களுக்கும், கனாட் ப்ளேஸ்-இண்டிய கேட் பகுதிகளுக்கும் வந்த வண்ணமே இருந்தார்கள். பத்து நிமிடத்தில் வீட்டுக்கு வர வேண்டிய எனக்கு அரை மணி நேரத்திற்கும் அதிகமாக ஆனது - சாலைகளில் அத்தனை வாகன நெரிசல்! தீநுண்மி - புதிய வடிவத்தினை எடுத்தாலும் எங்கள் கொண்டாட்டங்களை நாங்கள் விடுவதாக இல்லை என்று மக்கள் முடிவெடுத்த பிறகு யாராலும் எதுவும் செய்ய முடியாது! நான் வந்த ஆட்டோவின் ஓட்டுனர் சொன்னது தான் ஹைலைட் - “செத்தா செத்துட்டு போறோம்! உங்களுக்கு என்ன வந்தது? அது எப்படி ஊரடங்கு உத்தரவு போடலாம்!”
இந்த வாரத்தின் சினிமா: தும் மிலோ தோ சஹி!
நானா படேகர் - எனக்குப் பிடித்த ஹிந்தி நடிகர்களில் ஒருவர். கொஞ்சம் ஓவர் ஆக்டிங், ஓவராக கத்திப் பேசுவார் என்றெல்லாம் அவரைப் பற்றி விமர்சனங்கள் இருந்தாலும், சில படங்களில் மிகவும் நன்றாக நடித்து இருப்பார். அப்படி ஒரு படம் இந்த தும் மிலோ தோ சஹி! எனும் படம். இந்தப் படத்தில் ஒரு மும்பை வாழ் தமிழராக நடித்திருப்பார். வழக்கம் போல, பாலிவுட்/ஹிந்திக்காரர்கள் - தமிழர் என்றாலே காஃபி அருந்துபவர், வீட்டில் பெரிய காஃபி ஃபில்டர்/ஜக் வைத்திருப்பார், ஹிந்தி உச்சரிப்பு சரியாக வராதவராக இருப்பார் என்று நினைப்பவர்கள்! இந்தப் படத்திலும் அப்படியே! நானா படேகர்-உம் அவ்வப்போது தமிழ்க் கொலை செய்கிறார்! அவர் வீட்டில் இருக்கும் காஃபி ஃபில்டர் அளவு இன்றைய தமிழகத்தில் எவர் வீட்டிலும் இருக்க வாய்ப்பில்லை! :) இப்படிச் சில குறைகள் இருந்தாலும், படத்தில் எனக்கு பிடித்த சில காட்சிகள் உண்டு - Typical Nana Patekar ஆக ஒன்றிரண்டு இடங்களில் நடித்திருப்பார். யூ ட்யூபில் முழு படமும் இருக்கிறது! பிடித்தால் பார்க்கலாம்!
சஹானா வாசிப்புப் போட்டி - ஜனவரி 2021 - வாசிப்பனுபவம் 1:
சஹானா இணைய இதழில் ஜனவரி 2021 மாதத்திற்கு வாசிப்புப் போட்டியில் 10 புத்தகங்களை தேர்ந்தெடுத்து வாசிப்பனுபவங்களை பகிரச் சொல்லி இருக்கிறார். பத்து நூல்களில் எனது அந்தமானின் அழகு நூலும், இல்லத்தரசியின் “லாக்டவுன் ரெசிபீஸ்” நூலும் இருக்கிறது. மற்ற நூல்களை வாசித்து அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வேண்டியது, போட்டிக்கான விதிமுறைகளில் ஒன்று! பத்தில் எட்டு புத்தகங்களையும் இந்த ஜனவரியில் படித்து முடிக்க முடியுமா என்பது தெரியவில்லை. ஆனால் ஆரம்பித்து விட்டேன். முதல் வாசிப்பனுபவமாக அகிலா வைகுந்தம் அவர்கள் எழுதிய ”நீ மட்டும் போதும்” என்ற நெடுங்கதை பற்றி, அதற்கான குழுமத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். அந்த வாசிப்பனுபவம் வரும் நாட்களில் ”படித்ததில் பிடித்தது” பகிர்வாக வெளி வரலாம்! வரும்! ஒரு சில வரிகள் மட்டும் இங்கேயும் ஒரு Teaser-ஆக!
அகிலா வைகுந்தம் அவர்களுடைய எழுத்தினை இதற்கு முன்னர் படித்தது இல்லை. அவர்களது எழுத்தில் நான் படித்த முதல் நூல் “நீ மட்டும் போதும்” என்ற 512 பக்கங்கள் கொண்ட நெடுங்கதை! மின்னூலின் விலை ரூபாய் 440/-. மின்னூலாக தரவிறக்கம் செய்து கொள்ள சுட்டியை மேலே நூலின் தலைப்பில் கொடுத்திருக்கிறேன். நூலாசிரியர் ஒரு Knot எடுத்துக் கொண்டு அதை மிகவும் கவனமாக, நீண்ட நெடும் நாவலாக எழுதி இருக்கிறார். இந்த கதை ஒரு தொலைக்காட்சித் தொடராக, நெடுந் தொடராக கொண்டு வரக் கூடிய அம்சங்களைப் பெற்றிருக்கிறது - ஆசிரியர் முயற்சி செய்யலாம். எழுத்துப் பிழைகள் நிறையவே இருக்கின்றன. அதனை சரிபார்த்து இருக்கலாம் என்பது எனக்குத் தோன்றிய ஒரு குறை.
இந்த வாரத்தின் பாடல்: Bபச்சாலோ - பஞ்சாபி பாடல்
இந்த வராத்தின் பாடல் பகிர்வாக ஒரு பஞ்சாபி பாடல் - பொதுவாக பஞ்சாபி பாடல்கள் கொஞ்சம் Fast Beat-ஆக இருப்பது வழக்கம். இந்தப் பாடல் அப்படி இல்லை! கேட்டுப் பாருங்களேன்…
பின்னோக்கிப் பார்க்கலாம் - பயணம்
இதே நாளில் 2016-ஆம் ஆண்டு எழுதிய ஒரு பதிவு - முதுகுச் சுமையோடு ஒரு பயணம் - புத்தக வாசிப்பில் கிடைத்த அனுபவமும் எண்ணங்களும் பதிவாக எழுதி இருக்கிறேன்! அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் உங்கள் பார்வைக்கு….
வெளிநாட்டவர்கள் பலருக்கு ஒரு வழக்கம். வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு வருடத்திற்கொரு முறையோ தங்கள் நாட்டினை விட்டு வெளியூர்களுக்குப் பயணம் புறப்பட்டு விடுவார்கள். ஒன்றிரண்டு நாள் பயணமாக இல்லாமல் நீண்ட நெடிய பயணமாக இருக்கும். முதுகுச் சுமையாக ஒரு பை மட்டும் கொண்டு உலகையே சுற்றி வர ஆசைப்படுகிறார்கள். தில்லியில் இப்படி பலரைப் பார்க்கமுடியும். தலைநகரின் [p]பாஹர்[ட்] [g]கஞ்ச் பகுதியில் இப்படி வரும் சுற்றுலா வாசிகளுக்கென்றே பல தங்கும் விடுதிகள் உண்டு.
ஹரித்வார், ரிஷிகேஷ், ஆக்ரா, மதுரா, ஷிம்லா, என வடக்கில் பல இடங்களுக்குச் செல்லும்போதும் இப்படி முதுகுச் சுமையோடு வெளிநாட்டுப் பயணிகளைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கும். கையில் புகைப்படக் கருவியும், Lovely Planet India புத்தகமும் வைத்துக் கொண்டு, முதுகில் சுமையோடு இவர்கள் சுற்றாத இடமே இல்லையா எனத் தோன்றும் அளவுக்கு இந்தியாவின் பல பகுதிகளுக்கும் பயணிக்கும் இவர்களைக்கண்டு பிரமிப்பும், சற்றே பொறாமையும் தோன்றும் – பிரமிப்பு அவர்களது பயணிக்கும் ஆர்வம் கண்டு..... பொறாமை – இப்படி நம்மால் பயணிக்க இயலவில்லையே எனும் எண்ணத்தில்!
முழு பதிவும் படிக்க ஏதுவாக அப்பதிவின் சுட்டி கீழே…
முதுகுச் சுமையோடு ஒரு பயணம்......
என்ன நண்பர்களே, இந்த நாளின் காஃபி வித் கிட்டு பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா? உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்! மீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
ஹிந்திப் படங்களில் தமிழர் என்று உணரத்தக்க காட்டும் குறிப்புகளில் வேஷ்டி, விபூதியும் உண்டு! நாமும் ஹிந்திக்காரர்களை காட்டுவதற்கு சில ஒரே மாதிரியான வசனங்கள், காட்சிகள் உண்டே... சிரிப்புதான் வரும். நானா படேகரை எனக்கும் பிடிக்கும்.
பதிலளிநீக்குநானா படேகர் - நிறைய பேருக்கு பிடித்தவர் அவர். நன்றி ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நல்ல பதிவு. நானா படேகர் எனக்கும் பிடித்த நடிகர். நஸ்ருதீன் ஷாவும்! இந்தப் படத்தைப் பார்க்க முயற்சிக்கிறேன். புத்தாண்டன்று இங்கும் வழக்கம்போல் இரவு பனிரண்டு மணிக்கு அனைவரையும் எழுப்பிவிட்டார்கள். ஆயிரம் வாலா, இரண்டாயிரம் வாலா எனப் பட்டாசுகள் வெடித்து. கதை விமரிசனம் முகநூலிலும் பார்த்தேன். என்னால் இந்தப் போட்டியில் கலந்துக்க முடியலை. இஃகி,இஃகி,இஃகி, பஞ்சாபிப் பாடலைப் பின்னர் கேட்கணும். வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அடைத்து அடைத்து அந்த முதுகுச் சுமையில் வைத்திருப்பதைப் பார்த்தும் அதிசயித்திருக்கேன்.
பதிலளிநீக்குபதிவு குறித்த உங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி கீதாம்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நானா படேகர் அவர்களின் நடிப்பு பிடிக்கும்... மின்னூல் இணைப்பிற்கு நன்றி ஜி...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குஒரு கையில் புகைப்படக் கருவியும் மறுகையில் புத்தகமுமாகச் சுற்றும் வெளிநாட்டவர்களைக் கண்டு பலமுறை ஏங்கியிருக்கிறேன், இவர்களைப் போல் நம்மால் சுற்ற முடியவில்லையே என்று
பதிலளிநீக்குஎனக்கும் இப்படிச் சுற்ற முடியவில்லை என்ற ஏக்கம் உண்டு - தமிழகம் வந்த பிறகாவது இப்படிச் சுற்ற முடியுமா எனப் பார்க்க வேண்டும்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நானா படேகர்..பாரதிராஜாவின் படத்தில் அதிகம் ரசித்தேன்.
பதிலளிநீக்குபாரதிராஜாவின் படத்தில் நானா படேகர் - எந்தப் படம் என்று எனக்குத் தெரியவில்லை - பார்த்த நினைவும் இல்லை முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.