சனி, 16 ஜனவரி, 2021

காஃபி வித் கிட்டு 94 - இல்லை ஆனா இருக்கு - மந்திரவாதி - காவல் தேவதை - நட்பு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட அந்தமானின் அழகு - மின்னூலுக்கான இரு விமர்சனங்கள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


இதயம் ஒரு வினோதமான சிறை…  ஏனென்றால் இதில் குற்றம் செய்பவர்கள் மாட்டிக் கொள்வதில்லை. பாசம் வைப்பவர்கள் தான் மாட்டிக் கொள்கிறார்கள்.


******




தீநுண்மி - இல்லை ஆனா இருக்கு:





தீநுண்மி பற்றிய பயம் பலருக்கும் இல்லை.  எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று இருக்கிறவர்கள் அதிகமாகி விட்டார்கள். கடமைக்கு தாடையில் ஒரு முகக் கவசத்தினை மாட்டிக் கொண்டு இருப்பவர்கள் தான் அதிகம்.  முகக் கவசம் அணியாமல் வெளியே உலவினால் தலைநகர் தில்லியில் 2000 ரூபாய் அபராதம் வசூலிக்கிறார்கள்.  வசூலிப்பதற்கு தில்லி அரசாங்கம் அமர்த்தியிருப்பது Civil Defence என்ற பெயரில் இருக்கும் ஊழியர்கள் - இவர்கள் அரசாங்க ஊழியர்கள் அல்ல!  முகக் கவசம் இல்லாமல் செல்பவர்களை காணொளியாக எடுத்து (For the purpose of proof!) அந்த இடத்திலேயே 2000 ரூபாய் அபராதம் வசூலிக்கிறார்கள். பல சமயங்களில் இவர்களுக்கும் பொது மக்களுக்கும் வாக்குவாதம் உண்டாகிறது.  சமீபத்தில் எனக்குத் தெரிந்த ஒரு பெண் அவரது கணவருடன் (சமீபத்தில் தான் இந்தப் பெண்ணுக்கு திருமணம் நடந்தது!) உல்லாசமாக கனாட் ப்ளேஸ் பகுதியில் சுற்றிக் கொண்டிருந்தபோது கணவர் தாடையில் முகக் கவசம் அணிந்திருக்க 2000 ரூபாய் அபராதம் வாங்கி விட்டார்கள். அந்தப் பெண்ணும், அவரது கணவரும் அந்த இடத்திலேயே நீண்ட நேரம் வாக்குவாதம் செய்தாலும், கட்டாமல் தப்பிக்க முடியவில்லை!  ஆனால் நிறைய பேர் தங்களது தொடர்பு பற்றிச் சொல்லி தப்பித்து விடுகிறார்கள் என்பது அந்தப் பெண்ணின் வாதம்!  இது ஒரு புறம் இருக்கட்டும்… தீநுண்மி உண்மையிலேயே இருக்கிறதா இல்லையா?


இருக்கு ஆனா இல்லை என்று ஒரு படத்தில் சொல்லி குழப்புவாரே ஒரு நடிகர், அது போல, தீநுண்மி இல்லை ஆனா இருக்கு என்பதை நிரூபிக்கும் விதமாக அவ்வப்போது சக மனிதர்கள் தங்கள் உயிரை இந்த தீநுண்மிக்கு இழந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.  எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி, மூச்சுத் திணறல் வந்து மருத்துவமனை சென்று பரிசோதிக்க, அவருக்கு நெகட்டிவ் ரிசல்ட்.  ஆனால் மீண்டும் பரிசோதனைகள் செய்ததில் தீநுண்மி தொற்று ஏற்பட்டு அதிலிருந்து விடுபட்டு இருந்தாலும், நுரையீரல் பாதிப்பு போன்றவை ஏற்பட்டு கிட்டத்தட்ட 10 நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.  இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒரு மாலையில் அவர் இறந்து போனதாகச் செய்தி வந்தது.  அவரை இழந்து துன்பத்தில் ஆழ்ந்திருக்கும் குடும்பத்தினருக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்ற குழப்பத்திலேயே நண்பர்கள் அனைவரும் இருக்கிறார்கள்.  தங்கள் பாசத்துக்குரிய அம்மாவை இழந்து தவிக்கும் அவரது குழந்தைகளுக்கு ஆறுதல் சொல்வது தவிர வேறொன்றும் செய்ய முடியாதே!  அனைவரும் ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டியது அவசியம். இதனை ஒவ்வொருவரும் உணர்ந்து கொண்டால் நல்லது! 


படித்ததில் பிடித்தது: காவல் தேவதை 





நான் சமீபத்தில் வாசித்த ஒரு மின்னூல் பாரதிப்பிரியன் அவர்களின் “காவல் தேவதை-இவள் ஆபத்பாந்தவள்” எனும் மின்னூல்.  அமேசான் தளத்தில் ரூபாய் 99/-க்குக் கிடைக்கிறது.  


குறைவான பக்கங்கள் என்பதால் விரைவில் படித்து முடிக்க முடியும் - கூடவே தீநுண்மி காலத்தில் மனிதர்கள் அடைந்த இன்னல்களை மின்னூல் பகிர்ந்து கொள்வதால் ஒரு வித படபடப்புடன் தொடர்ந்து படிக்க முடிந்தது.  என்னதான் பெற்ற மகளாக இருந்தாலும், பணம் என்று வரும்போது, தன்னைக் கஷ்டப்பட்டு வளர்த்த அம்மாவாக இருந்தாலும், பணத்திற்காக எதையும் செய்யத் தயாராக, அந்த மகள்கள்  இருக்கிறார்கள் என்பதை இந்த மின்னூல் வழி சொல்லி இருக்கிறார் ஆசிரியர்.  இருக்கும் பணத்தை எல்லாம் அம்மாவுக்குத் தெரியாமல் எடுத்துக் கொண்ட பிறகு வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட தாய் ஒரு பக்கம், தாய்-தந்தை என இருவரையுமே தீநுண்மிக்கு பலி கொடுத்த பன்னிரெண்டு வயது சிறுமி ஒரு பக்கம் என நாடு தழுவிய ஊரடங்கு சமயத்தில் வீட்டை விட்டு வெளியே திண்டாடிய இரு பெண்கள்.  அவர்கள் சந்திக்க, ஒருத்தருக்கு ஒருத்தர் ஆதரவாக இருக்க, பிரச்சனைகளைச் சந்திக்க தயாராக இருக்கும் சமயத்தில் இந்தச் சமூகத்தில் ஊடுருவி இருக்கும் புல்லுருவிகளால் அவர்கள் சந்திக்க நேர்ந்த கொடுமைகள் என படிக்கும்போதே பதறுகிறது. 


அவர்கள் சந்தித்த பிரச்சனைகள், சிறுமியை எப்படியாவது அடைந்து விடத் துடிக்கும் காமக் கொடூரன்கள், அவர்களிடமிருந்து தப்பிக்க வைக்க பாடுபடும் பெண்மணி, ஆபத்பாந்தவளாக வந்த மூன்றாம் கதாபாத்திரம் என கதை வழி பல பிரச்சனைகளை மனது தொடும் விதமாக பகிர்ந்து இருக்கிறார்.  ஆங்காங்கே பலரையும் சாடியும் இருக்கிறார் நூலாசிரியர்.  சிறுமி காமக் கொடூரன்களிடமிருந்து தப்பித்தாரா, அவரும் அவர் சந்தித்த மூதாட்டியும் என்ன ஆனார்கள் என்பதை மின்னூலை வாசித்துத் தெரிந்து கொள்ளலாமே!  


இந்தச் சமூகத்தில் பல புல்லுருவிகள் அதிகார வர்க்கத்திலும், நம்மிடையேயும் இருந்தாலும், சில நல்லவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள் என்பதை மூன்றாவது கதாப்பாத்திரம் மூலம் சொல்லி இருக்கிறார்.  மின்னூலை படித்து நூலின் வழி சொன்ன விஷயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே!


இந்த வாரத்தின் பின்னோக்கிப் பார்க்கலாம் பதிவு:  


2013-ஆம் ஆண்டு - எட்டு வருடங்களுக்கு முன்னர் இதே நாளில் வெளியிட்ட ஒரு பதிவு மந்திரவாதி!  அட என்ன தலைப்புங்க இது என்று நீங்கள் கேட்கலாம்.  பதிவிலிருந்து சில வரிகள் கீழே.


தில்லியிலிருந்து சென்னை செல்லும் தமிழ்நாடு விரைவு வண்டி. எதிர் சீட்டில் கோட்-சூட் போட்ட மனிதர் அமர்ந்திருந்தார். பார்க்கும்போதே தமிழர் எனச் சொல்லமுடியும் முகவெட்டு. ஒல்லியான தேகம். அணிந்திருந்த கோட் தோள்களின் மீது தொங்கிக் கொண்டிருந்தது ஹேங்கரில் தொங்குவது போல இருந்தது. கோட்டின் எல்லாப் பாக்கெட்டுகளிலும் ஏதோ வைத்திருப்பது தெரிந்தது. என்ன என்பது தெரிந்து கொள்ள எனக்கு எக்ஸ்-ரே கண்ணில்லை – ஆனால் மனது துருதுருத்தது – அப்படி என்ன தான் வைத்திருப்பார் என தெரிந்து கொள்ள. அடங்கு அடங்கு என்றேன் மனதிடம். எப்படியும் தெரிந்து கொள்ள வேண்டும் எனச் சொன்னது மனம்.


இரவு பத்து மணிக்கு தான் கிளம்பும் என்பதால் பயணச் சீட்டு பரிசோதித்தபின் குளிருக்குப் பயந்து மனதில் கேள்வியுடனேயே உறங்கினேன். நிச்சயம் காலை தெரிந்து கொள்வேன் என்றது மனம். :)


சீக்கிரம் எழுந்து ஒன்றும் வெட்டி முறிக்கப் போவதில்லை என்பதால் எட்டு மணிக்குப் பிறகு தான் எழுந்தேன். காலைக் கடன்கள் முடித்து இருக்கையில் அமர்ந்தபோது எதிர்சீட்டு கோட்டு மனிதர் ”உறக்கம் எப்படி?” எனக் கேட்டுச் சிரித்தார் –.  ”கோட்டில் என்ன?” என அவரிடம் கேள் என்றது மனம்.  ‘தானாகத் தெரியும், சும்மா இரு மனமே!’ என்றேன்.  

  

சிறிது நேரத்தில் கோட்டு மனிதர் ஒரு பாக்கெட்டில் கைவிட்டார். வெளியே வரப்போவது என்ன, என்னுள் பதட்டம். ஆனால் தெரியவில்லை. எடுத்த கை, நேராக வாய்க்குச் சென்றது. வாய் அசை போட ஆரம்பித்தது. கை பாக்கெட்டுக்கும் வாய்க்கும் சென்றது தெரிகிறதே தவிர, என்ன என்பது தெரியவில்லை! சிறிது நேரத்தில் கையோடு வெளியே வந்தது ’Good Day’ காலி பாக்கெட்.



முழுப்பதிவும் படிக்க சுட்டி கீழே..


மந்திரவாதி


இந்த வாரத்தில் ரசித்த WhatsApp Status:





படம் சொல்ல வரும் விஷயம் எத்தனை உண்மை.  இப்படித்தானே இன்றைய நிலை இருக்கிறது! 


என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவினை ரசித்தீர்களா? பதிவு பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டம் வழி சொல்லுங்களேன்.  நாளை வேறு ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லி.


18 கருத்துகள்:

  1. தீ நுண்மி கதை இங்கும் அதேபடியே...   இங்கு கட்டுப்படுகள், அபராதம் இல்லை.  எனவே இன்னும் சுத்தம்.  நேற்று எவ்வளவு சொல்லியும் முகக்கவசம் மாட்டாத ஒருவர் என்னிடம் நெருங்கிப் பேச முயலும்போது ஓரடி பின்னே போனேன் என்று எனக்கு பயங்கர அர்ச்சனை.  இவ்வளவு கஷ்டங்கள் இருந்தும் சில இல்ல விழாக்களுக்கு போயாகவேண்டிய கட்டாயம் வேறு..   நன்றாகவே கூட்டம் கூடுகிறார்கள்...  "உனக்கு கவலையில்லை..  உனக்கு வந்துட்டுப் போயிடுச்சு...   இனிமே வராது...."  போன்ற வசனங்கள் வேறு கடுப்பேற்றும்!  ஒருமுறை வ்நதவர்களுக்கு ஆபத்து அதிகம் என்று சொன்னால் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு முறை வந்தவர்களுக்கு ஆபத்து அதிகம் - உண்மை தான். கொஞ்சம் அஜாக்கிரதையாக இருந்தாலும் பிரச்சனைகள் தோன்றுவதை இங்கேயும் பார்க்கிறேன் ஸ்ரீராம்.

      இன்னும் பலர் இதன் மூலம் பிரச்சனைகள் இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்ள மறுப்பது வேதனையான விஷயம் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. பாரதிப்ரியனின் கதை சுவாரஸ்யமாக இருக்கும் என்று தெரிகிறது.   பின்னோக்கி பார்க்கும் பதிவும் சுவாரஸ்யமானது.  மொத்தத்தில் இன்று கதம்பம் வெகு சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. தீநுண்மி பற்றிய awarenessஐ, அப்படி ஒண்ணு இருக்கு ஜாக்கிரதை என்பதை செயல் வடிவில் வெங்கட்தான் எனக்குக் காண்பித்தார்.

    நிறையபேர் பாதிக்கப்படுகிறார்கள், அதைவிட அதற்குப் பலியாகும்போது உறவினர்கள் நினைத்துப் பார்க்க, கௌரவ வழியனுப்பு நடத்துக்கூட முடியாது. ஆஸ்பத்திரியில் இருந்தால் போய்க்கூட பார்க்க முடியாது. இது தீயைப் போன்றதல்ல, எம்படி வருகிறது என்றே தெரியாது என்பதை அனைவரும் புரிந்துகொள்ளணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தீநுண்மியின் ஆரம்ப காலத்தில் தான் உங்களை தில்லியில் சந்தித்தேன் என்பது நினைவில் இருக்கிறது. அதற்குள் ஒரு வருடம் ஆகப் போகிறது நெல்லைத் தமிழன் - நாட்கள் தான் எத்தனை வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

      நிறைய பிரச்சனைகள் இதில் உண்டு என்பதை இன்னமும் பலரும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பது வேதனை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. உண்மையான நண்பன் ஒருவன் போதும்.

    இரயில் பாக்கெட் மனிதர் புன்னகை வரவைக்கிறார்

    இன்றைய கதம்பம் அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. மூன்று நண்பர்கள் படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. தீநுண்மி - உண்மையிலேயே புரியவில்லை...

    பாரதிப்பிரியன் அவர்களின் நூலை வாசிக்க வேண்டும்... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மின்னூல் - முடிந்த போது வாசியுங்கள் தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. வாசகம் எனது மனதை அழுத்தி விட்டது ஜி அத்தனை உண்மை.

    தீநுண்மி இருக்கு ஆனால் இல்லை இதுதான் இன்றைய குழப்பநிலை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி. தீநுண்மி - குழப்பமான சூழல் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. மக்கள் தெனாவட்டாக இருப்பது வேதனை தருகிறது. கதை வாசிக்க வேண்டும்.
    3ரியல் நண்பர்கள் 👌

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேதனை தான். பலரும் சொன்னாலும் கேட்பதில்லை என்பது அதிக வேதனை தருகிறது.

      மின்னூல் - முடிந்த போது வாசியுங்கள் கிரேஸ்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. மக்கள் கவனக்குறைவாகவே இருக்கிறார்கள். இங்கே எல்லாமே வழக்கம் போல் தொடங்கிவிட்டது. வீட்டுப் பக்கச் சத்திரத்தில் இன்று ஒரு கல்யாணம். நேற்றிலிருந்து திமிலோகப்படுகிறது. யாருக்கும் கவலையோ/பயமோ/அக்கறையோ இல்லை என்பதே உண்மை. சொல்லும் நாம் தான் பொல்லாதவர்கள் ஆகிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவனக் குறைவாக இருப்பது எங்கள் உரிமை என்று சொல்கிறார்கள் சிலர். ஒன்றும் சொல்வதற்கு இல்லை கீதாம்மா.

      கல்யாணம் - தில்லியில் சமீபத்தில் எனக்கு ஒரு அழைப்பு வந்தது. நல்ல வேளை நான் செல்லவில்லை. சென்று வந்த நண்பர் சொன்னார் - அந்த சிறு மண்டபத்தில் மொத்தம் 1500 பேர் இருந்தார்களாம்! மொத்த அனுமதி 100 பேருக்கு மட்டுமே! மண்டபத்தின் உரிமையாளர் எவ்வளவு சொல்லியும் கல்யாண வீட்டுக்காரர்கள் கேட்கவே இல்லையாம் - எது வந்தாலும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்லிவிட்டார்களாம். என்ன சொல்வது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....