ஞாயிறு, 14 நவம்பர், 2021

வாசிப்பனுபவம் - முதன்மை திட்டம்: மாஸ்டர் ப்ளான் - சதீஷ் கோபால்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


“WHEN YOU HAVE EYES THAT SEE THE BEST, A HEART THAT FORGIVES THE WORST AND A MIND THAT FORGETS NEGATIVITY, YOUR LIFE IS TRULY BLESSED.”


******





சஹானா இணைய இதழின் வாசிப்புப் போட்டிக்காக நான் படித்த ஒரு மின்னூல் சதீஷ் கோபால் அவர்கள் எழுதிய “முதன்மை திட்டம்: மாஸ்டர் ப்ளான்” எனும் நாவல். அந்த மின்னூல் குறித்து இன்றைய பதிவில் பார்க்கலாம் வாருங்கள்! 


வகை: நாவல்

வெளியீடு: அமேசான் கிண்டில்

பக்கங்கள்: 82

விலை: ரூபாய் 49/-

மின்னூல் தரவிறக்கம் செய்ய சுட்டி கீழே:


முதன்மை திட்டம்: மாஸ்டர் பிளான் (Tamil Edition) eBook : ஜி, சதீஷ்


******* 


மிகவும் சாதாரணமான அட்டைப்படம் - உள்ளே இருக்கும் கதை ஒரு க்ரைம் நாவல்!  குடியிருப்பில் மிகவும் பாராட்டப்படக்கூடிய ஒரு குடும்பம் - கணவன் - மனைவிக்குள் அத்தனை ஒத்துமை என்று அனைவருமே சொல்லக் கூடிய அளவுக்கு அந்தக் குடும்பம் - அக்குடும்பத்தில் ஒரு நாள் பயங்கர சண்டை.  எதிர் வீட்டு தாத்தா வந்து சமாதானம் செய்யும் அளவுக்கு சண்டை.  அடுத்த நாள் வழக்கம் போல அலுவலகம் செல்கிறார் கதாநாயகன் - பாதியிலேயே வீடு திரும்புகிறார்.  மாலையில் வீடு திரும்புகிறார் மனைவி.  இருவருக்கும் ஊடல் இருந்ததால் வீடு திறந்திருக்க, குழந்தைகள் தான் வீட்டை திறந்து போட்டு விட்டு வெளியே சென்றிருப்பார்கள் என நினைத்தபடி தான் வேலையில் மூழ்கி விடுகிறார்.  குழந்தைகள் வந்த பின்னும் நாயகன் படுக்கையறையை விட்டு வெளியே வரவில்லை எனும்போது தான் தெரிகிறது அவன் படுக்கையிலேயே இறந்து போய் இருப்பது.  அவனது இறப்பில் சந்தேகம் இருப்பதாக எதிர் வீட்டு பெரியவர் காவல் துறைக்குச் சொல்ல, துப்பு துலக்க இறங்குகிறார் காவல் அதிகாரி.  


இந்த Knot தான் கதை.  அதை அவிழ்க்க நூலாசிரியர் காதல், காமம், உறவு என பலவற்றையும் சேர்த்து கதையை எழுதி இருக்கிறார்.  காதலை விட காமமே அதிகமாக அள்ளித் தெளித்திருக்கிறார் - படிப்பவர்களை சங்கடப்படுத்தும் அளவுக்கு இருக்கலாம் - அமேசானில் வயது வரம்பு என்ன கொடுத்திருக்கிறார் என்பது தெரியவில்லை!  நிறைய இடங்களில் எழுத்துப் பிழைகள். சில இடங்களில் குழப்பங்கள் - ஒரு இடத்தில் சித்தப்பாவினை அண்ணா என்று கூட எழுதி இருக்கிறார்.  ஒரு கோர்வையாக இருப்பதாகத் தோன்றவில்லை.  கூடவே இன்னுமொரு விஷயமும் சொல்ல வேண்டும் - காவல்துறை அதிகாரியாக வருபவர் தான் சந்தேகக் கண்ணோடு பார்ப்பவர்கள் தரும் விளக்கங்களை ஏற்றுக் கொண்ட பிறகு அவர்களை தனது உறவினர்களாக பாவிக்கிறார் என்று வருவது நடக்காத காரியம் என்றே சொல்ல வேண்டும்!  இப்படி எந்த காவல் அதிகாரி இருக்கிறார் என்பது புரியவில்லை - தனக்கு இப்படி ஒரு ஆசை இருப்பதை எழுத்தில் தீர்த்துக் கொண்டிருக்கிறார் என்று தோன்றுகிறது. 


சந்தேகப்படும்படி இருக்கும் நபரிடம் விசாரணைக்குச் செல்ல, அவர்கள் சொன்ன கதை கேட்டு - அவர்கள் கொலையாளி வேறு ஒருவராக இருக்கலாம் என்று சொல்ல, அவர்களை விசாரணைக்கு அழைத்து அவர்களுடன் பேசுவது, பிறகு வேறொருவர் என வரிசையாக  சென்று கொண்டே இருக்கிறது கதை.  யார் தான் கொலையாளி? இந்தச் சம்பவத்துக்குப் பின் என்ன காரணம் என்பதை கொஞ்சம் கொஞ்சமாகச் சொல்லிச் சென்றிருக்கிறார் நூலாசிரியர்.  கடைசியில் கொலையாளி என்று காட்டப்படுபவர் யார்?  நான் நினைத்தபடியே தான் இருந்தார்! அதற்குக் காரணமும் இப்படித்தான் இருக்க முடியும் என்ற என் யூகம் சரியாகவே இருந்தது.  மொத்தத்தில் கதையின் மீது எனக்கு ஈர்ப்பு ஏற்படவில்லை!  தனது இந்தக் கதையில் காமத்திற்குத் தந்திருக்கும் இடத்தினை, அடுத்து எழுதும் நாவல்களில் குறைத்துக் கொண்டால் நலம். 


******


எங்களது இல்லத்திலிருந்து, நானும், எனது இல்லத்தரசியும் இதுவரை வெளியிட்ட மின்னூல்களுக்கான சுட்டி கீழே.  முடிந்தால் எங்களது நூல்களை தரவிறக்கம் செய்து வாசிப்பதோடு, உங்கள் வாசிப்பனுபவங்களையும் பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி!  


சந்தித்ததும் சிந்தித்ததும்: மின்புத்தகங்கள்...


******


இந்த நாளின் வாசிப்பனுபவம் குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கலாமே! மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து….


14 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    நூல் விமர்சனம் அருமையாக செய்திருக்கிறீர்கள். க்ரைம் நாவல் எனும் போது கதை விறுவிறுப்பாகத்தான் போகும். கதையை சிறப்பித்து விமர்சனம் எழுதிய நீங்கள் அதிலிருக்கும் சில தவறுகளையும் சுட்டிக் காட்டியிருப்பது சிறப்பு. பாராட்டுக்கள். கதை எழுதிய ஆசிரியருக்கும் வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      நூல் விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. விமர்சனம் உண்மையை சொல்லுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. நேர்மையான விமர்சனத்திற்கு நன்றி சார்.
    கிரைம் நாவல் என்றாலும், காமத்திற்கு எவ்வளவு இடம் தரவேண்டும் என்றும். எப்படி எழுதவேண்டும் என்றும் கிரைம் நாவல் சிறப்பு ஆசிரியர் திரு ராஜேஶ் குமார் நூல்களை படித்து புரிந்துகொள்ளலாம்.
    சுஜாதா நூல்களும் சிறந்த படிப்பினைகளை வழங்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த். மேலதிகத் தகவல்களும் சிறப்பு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. இன்றைய வாசகம் அருமை.

    நிறை குறைகளை சொன்ன அருமையான விமர்சனம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும் விமர்சனமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....