அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
இரக்கப்படுபவன் ஏமாந்து போகலாம் ஆனால் தாழ்ந்து போவதில்லை. ஏமாற்றுபவர்கள் வெற்றி பெறலாம் ஆனால் கடைசிவரை சாதிப்பதில்லை!
******
அவித்த முட்டையும் ஆம்லெட்டும்...
தலைநகர் தில்லியின் நடைபாதைகளில் கீழேயுள்ள படத்தில் இருப்பது போன்ற பலர் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கான ஆதாரத்தை தேடிக் கொண்டிருப்பதை பார்க்க முடியும். ஐந்து அல்லது ஆறு ட்ரே முட்டைகள், ஒரு அடுப்பு, முட்டைகளை வேக வைக்க ஒரு பாத்திரம், ஆம்லேட் போட ஒரு தவா, கலக்க ஒரு டம்ளரும் ஸ்பூனும், ஒரு கத்தி, வெங்காயம் தக்காளி, பச்சை மிளகாய் என சிலப்வகைகளில் காய்கறி, சாஸ், பச்சை சட்னி...... இவ்வளவு தான் அவர்களைச் சுற்றி..... ஒன்றிரண்டு பொருட்களை நான் விட்டிருக்கலாம்.
பெரும்பாலும் வருடம் முழுவதும் இப்படியான கடைகளை நகர் எங்கும் காண முடியும் என்றாலும், குளிர் நாட்களில் இந்த கடைகள் அதிகரித்து விடும். அவர்களுக்கான வாடிக்கையாளர் அதிகரித்து விடுவார்கள். குளிர் நாட்களில் இவற்றை உண்பது அதிகரித்து விடும் என்பதால் இது போன்ற உழைப்பாளிகளும் கொஞ்சம் காசு பா(சே)ர்க்க முடியும். தொடர்ந்து அடிக்கும் குளிர் காற்றில் இப்படி சாலைகளில் அமர்ந்து இருப்பது சுலபமான விஷயம் இல்லை. சில நிமிடங்கள் வெளியே, அதுவும் தேவையான குளிர் கால உடைகள் அணிந்து வெளியே இருந்தாலும் இந்த தில்லி குளிர் பலருக்கும் ஒத்துக் கொள்ளாது.
ஆனால் இவர் போன்ற உழைப்பாளிகள் தொடர்ந்து இப்படி அமர்ந்து இரவு வெகு நேரம் வரை விற்பனையில், உழைப்பில் ஈடுபட்டு இருப்பார்கள். குளிர் நாட்களில் அவித்த முட்டைகளை மசாலா தூவி சாப்பிடுவதை இங்கே பலரும் வழக்கமாக வைத்து உள்ளார்கள். முட்டையின் சூடு குளிருக்கு இதமானது என்று சொல்வார்கள். போலவே ஆம்லேட் விற்பனையும் பரபரப்பாக நடப்பதுண்டு. நாள் முழுவதும் அமர்ந்து விற்பனை செய்தாலும், மாலை நேரங்களில் தான் விற்பனை சூடு பிடிக்கத் துவங்கும். இரவு பத்தரை பதினொன்று வரை கூட இப்படியான உழைப்பாளிகள் அமர்ந்து விற்பனை செய்வதை பார்க்க முடியும்.
கடை வாடகை கிடையாது என்றாலும், நகர நிர்வாக அலுவலகர்கள், காவல் துறையினர் போன்றவர்களுக்கு கையூட்டு கொடுக்க வேண்டியிருக்கலாம். அது குறித்து ஒன்றும் சொல்வதற்கு இல்லை. இவர்களைப் போன்றவர்களுக்கும் தலைநகர் தில்லி வாழ்வாதாரத்தினை தந்து கொண்டிருக்கிறது. முயற்சி செய்தால் நிச்சயம் பிழைக்கும் வழி இங்கே இல்லாமல் இல்லை. இவர்களும் ஒரு விதத்தில் கதை மாந்தர்களே.....
******
ராமானுஜம்ஸ் கெஸ்ட் ஹவுஸ்:
தலைநகர் வரும் பல தமிழர்கள் "கரோல் பாக்(G)" பகுதியில் தங்குவதே வழக்கம். அதிலும் அங்கே சரஸ்வதி மார்க்(G)-இல் இருக்கும் ராமானுஜம் தங்கும் விடுதியையே தேர்ந்தெடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார்கள். நான் முதல் முறை 1991 மார்ச் மாதம் தலைநகர் வந்த போது இங்கே தான் இரண்டு மூன்று நாட்கள் தங்கி இருந்தேன். அப்போது அங்கேயே ஒரு உணவகமும் இருந்தது (காலை மாலை வேளைகளில் சிற்றுண்டி மட்டுமே கிடைக்கும்) கூடுதல் வசதி. தனி அறைகள் மட்டுமல்லாமல் Dormitory - அதாவது ஒரே அறையில் ஐந்து படுக்கைகள் கொண்ட தங்கும் வசதியும் இருந்தது. ஒரு படுக்கை மற்றும் பொருட்களை பாதுகாப்பாக வைக்க பூட்டும் வசதியுடன் ஒரு தடுப்பு - அதற்கு அப்போதே நாள் ஒன்றுக்கு வாடகை அறுபது ரூபாயோ எண்பது ரூபாயோ.
உரிமையாளர் ரவி அவர்கள் மிகவும் மரியாதையாக பேசுவார். எல்லா வேலைகளையும் தானும் கூட இருந்து செய்வார். சிற்றுண்டி எடுத்துத் தருவது, சமயங்களில் தோசை/அடை போடக் கூட தயங்க மாட்டார். காலை/மாலை நேரங்களில் கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால் நிறைய வேலை இருக்கும். பணியாளர்களுடன் தானும் சேர்ந்து வேலை செய்ய அவர் தயங்கியதே இல்லை. அதிலும் என்னை போல காலையும் மாலையும் அங்கே சாப்பிடும் வாடிக்கையாளர்களை நன்கு கவனித்துக் கொள்வார்.
1991 ஏப்ரல் மாதத்திலிருந்து 1994 ஜூன் மாதம் வரை கரோல் பாக்(G) பகுதியில் தங்கி இருந்த வரை பெரும்பாலும் காலை நேர சிற்றுண்டி - இட்லி, பொங்கல், தோசை, வடை என ஏதோ ஒன்று... கூடவே ஒரு காஃபி. அந்த நாட்களிலேயே காஃபி 5 ரூபாய், தோசை ஒன்று 10/12 ரூபாய் என விலை இருந்தது. மற்ற இடங்களை விட விலை அதிகம் என்று தோன்றினாலும் சுவை அலாதியாக இருக்கும். அதுவும் அங்கே கிடைக்கும் சாம்பார் மிகவும் நன்றாக இருக்கும். வீட்டை விட்டு வெளியே இருந்த பல தமிழ் இளைஞர்களுக்கு ராமானுஜம் உணவகம் தான் அன்னதாதா.
உணவகமும் சிறப்பாக இருந்தாலும், பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்னர் ஏனோ அதனை மூடி விட்டு தங்குமிடத்தை மட்டுமே வைத்திருக்கிறார்கள். அந்தப் பகுதியில் முன்பு போல தமிழ் இளைஞர்கள் வேலைக்காக, குறிப்பாக அரசு வேலைக்கு வருவது இல்லை என்பதாலும் மூடி இருக்கலாம். எனக்குத் தெரிந்து இருபது வருடங்களாக தமிழகத்திலிருந்து தில்லிக்கு மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இல்லவே இல்லை என்று கூட சொல்லலாம். உணவகம் இல்லா ராமானுஜம் செல்ல மனதே இல்லை.
இன்றைக்கு கரோல் பாக்(G) பகுதிக்குச் சென்றபோது வெளியேயிருந்து ஒரு படம் எடுத்துக்கொண்டு பழைய நினைவுகளை மனதில் அசைபோட்டபடியே அங்கே இருந்து புறப்பட்டேன். அங்கே இப்போதும் தமிழகத்தில் இருந்து வருபவர்கள் தங்கினாலும் உணவுக்காக வெளியே தான் செல்ல வேண்டியிருக்கும். தற்போதைய அறை வாடகை குறித்து விசாரிக்க வேண்டும். விசாரித்து பின்னர் சொல்கிறேன்....
******
பதிவு குறித்த தங்கள் எண்ணங்களையும், பின்னூட்டங்கள் வாயிலாக பகிர்ந்து கொள்ளலாமே! மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லியிலிருந்து….
சுவாரஸ்யமான தகவல்கள். இரண்டுமே பேஸ்புக்கில் படித்த நினைவு.
பதிலளிநீக்குதகவல்கள் முன்னர் முகநூலில் எழுதியவையே. பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வாசகம் அருமை. கதை மாந்தர்கள் குளிர் காலத்தில் தெருவில் அமர்ந்து கடை நடத்துவது கஷ்டம். குடும்பத்தை காப்பாற்ற குளிரை பொருட்படுத்தாமல் உழைக்கிறார்கள்.ராமானுஜம் தங்கும் விடுதியில் உணவகம் இருப்பது வசதி.
பதிலளிநீக்குவாசகமும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா. குளிர் நாட்களில் தெருவில் இருந்து வேலை செய்வது கடினம் தான்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
இரண்டுமே புதிய செய்திகள்.
பதிலளிநீக்குதற்போதைய அறை வாடகை என்னவாக இருக்கும் என்றே மனம் யோசிக்கிறது.
தற்போதைய அறை வாடகை - விசாரித்து இங்கே பகிர்ந்து கொள்கிறேன் நெல்லைத் தமிழன். செய்திகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
உழைப்பாளிகள் வாழ்வு சிறக்கட்டும்...
பதிலளிநீக்குஉழைப்பாளிகளின் வாழ்வு சிறந்தால் மகிழ்ச்சியே தனபாலன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குவாசகம் அருமை. பதிவும் நன்றாக உள்ளது.
குடும்பத்திற்காக குளிரை பொருட்படுத்தாமல் உழைக்கும் அவர்களது செயல் சிறந்ததுதான்.அவர்களுக்கும் ஒரு வாழ்வாதாரம் வேண்டுமே..!
கரோல் பாக்கில் தங்கும் விடுதி பற்றி கூறியிருப்பது பயனுள்ள தகவல். அந்த உணவகமும் மறுபடி செயல்பட்டால், அங்கு வந்து தங்குபவர்களுக்கு உதவியாக இருக்கும். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.
நீக்குவாசகமும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
வாழ்வாதாரம் - மிகவும் அத்தியாவசியமான ஒன்று தானே.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
உழைப்பவர்கள் எங்கும் வாழலாம் ஜி.
பதிலளிநீக்குஉழைப்பவர்கள் எங்கும் வாழலாம் - உண்மை தான் கில்லர்ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ராமானுஜம் தங்கும் விடுதியை நான் பார்த்து இருக்கிறேன் வெங்கட் ஜி. தமிழகத்தில் இருந்து இப்போது மத்திய அரசு பணிக்கு யாரும் வருவதில்லை என்பது தமிழ்நாட்டின் வளர்சியை பிரதிபலிக்கின்றது.
பதிலளிநீக்குஇப்போவும் மத்திய அரசு பென்ஷன் ஸ்கீம் உண்டா? இருந்துமா தமிழகத்திலிருந்து மத்திய அரசு பணிக்கு யாரும் அப்ளை செய்வதில்லை?
நீக்குராமானுஜம் தங்கும் விடுதி - பல வருடங்களாக இயங்கி வருகிறதே இராமசாமி ஜி.
நீக்குதமிழ்நாட்டின் வளர்ச்சி என்பதை விட பலரும் வெளிநாடுகளுக்கு சென்று விடுகிறார்கள், இன்னும் பலர் தனியார் வேலைவாய்ப்புகளை நோக்கிச் சென்று விடுகிறார்கள்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
2004-ஆம் ஆண்டிற்குப் பிறகு பென்ஷன் கிடையாது நெல்லைத்தமிழன் - புதிய பென்ஷன் திட்டம் தொடங்கி விட்டது. ஆரம்பம் முதல் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்து அதன் மூலம் பென்ஷன் பெறும் திட்டம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
மழையோ,வெய்யிலோ,குளிரோ ஏழைகள் பாடு கஷ்டம்தான்.
பதிலளிநீக்குராமானுஜம் கெஸ்ட் ஹவுஸ் தகவல்கள் interesting.
இன்றைய இளைஞர்கள் அரசு வேலையை விரும்புவதில்லை.
ஏழைகள் பாடு கடினம் தான் பானும்மா. அரசு வேலை - இப்போது பலரும் விரும்புவதில்லை என்பது உண்மை தான் பானும்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
இப்போதைய யுவ யுவதிகள் மத்திய/மாநில அரசு வேலையை விரும்புவதில்லை. எங்கள் கிராமத்து தபால்நிலைய அலுவகத்தைப் பார்த்தால் மிக மிகப் பரிதாபமாக இருக்கிறது.
பதிலளிநீக்குராமானுஜம் கெஸ்ட் ஹவுஸ் தகவல்கள் நன்று.
உழைக்கும் ஆர்வமும் எண்ணமும், முயற்சியும் இருந்தால் எங்கும் பிழைக்கலாம்.
கீதா
எங்கும் பிழைக்கலாம் - உண்மை கீதாஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ஜி. நான் 1972இல் Indian airlines interview க்கு டில்லி வந்திருந்தேன். அப்போது wea இல் Rasan's boarding and lodging இல் 3 நாட்கள் தங்கினென். இதுவு ராமானுஜம் விடுதியும் ஒன்றா.
பதிலளிநீக்குஇந்த தங்கும் விடுதி சரஸ்வதி மார்க், WEA பகுதியில் இருக்கிறது. ஆரம்பத்திலிருந்தே இதே பெயர் தான் ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.