அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட மதுரை பயணம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
நடப்பதெல்லாம் நன்மைக்கே என நினைத்து வாழப் பழகிவிட்டால்… மகிழ்ச்சியை நாம் தேடிச் செல்ல வேண்டாம். மகிழ்ச்சியே நம்மைத் தேடிவரும்.
******
இந்த வாரத்தின் நிழற்படம் - பொம்மை :
சினிமாக்களில் சில வில்லன்கள் இப்படியும் மிரட்டுவதுண்டு - ”துவைச்சு கொடியில் க்ளிப் போட்டு காய வைத்து விடுவேன் பார்த்துக்கோ” என்று! எங்கள் குடியிருப்பில் ஒரு வீட்டில் காய வைத்திருந்த நாய் பொம்மை - பார்க்கவே ஏனோ பரிதாபமாக இருந்தது! பொம்மையாக இருந்தாலும்! அதிலும் வாஷிங்க் மெஷினில் துவைத்து பிழிந்து காய வைத்திருப்பார்கள் எனத் தோன்றியபோது மனதுக்குக் கஷ்டமாக இருந்தது - அந்த பொம்மை நாய்க்கு வலிக்காது என்றாலும்!
******
பழைய நினைப்புடா பேராண்டி: செல்ஃபி புள்ள!
2014-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - செல்ஃபி புள்ள!
பதிவிலிருந்து சில வரிகள் இங்கே! முழு பதிவினையும் படிக்க, மேலே உள்ள சுட்டியைச் சொடுக்கலாம்!
தில்லியில் உள்ள வணிக வளாகங்களாகட்டும், விமான நிலையமாகட்டும், பூங்காக்களாக இருக்கட்டும், எங்கே போனாலும் இப்படி தனது அலைபேசியில் புகைப்படம் எடுத்துக் கொள்பவர்கள் ரொம்பவே அதிகமாகி விட்டார்கள். சமீபத்தில் குஜராத் சென்று தில்லி திரும்புவதற்காக அஹமதாபாத் விமான நிலையத்தில் காத்திருந்தேன். இரவு 07.45 மணிக்கு தான் விமானம் என்றாலும், 06.15 மணிக்கே விமான நிலையத்திற்கு வந்தாயிற்று. அங்கே உள்ள இருக்கைகளில் கண்களை மூடியபடியே அமர்ந்து, அப்பயணம் தந்த அனுபவங்களை அசை போட்டுக் கொண்டிருந்தேன்.
அப்போது தன்னுடைய சிறுபையை முதுகில் மாட்டிய இளைஞர் எனக்கு எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்தார். அந்த சப்தத்தில் கண் விழித்து பார்த்தேன். எதிரே வந்தமர்ந்த இளைஞர் தனது பையை கழட்டி பக்கத்து இருக்கையில் தொப்பென்று போட்டார். பிறகு தனது நவீன அலைபேசியை கையில் எடுத்துக் கொண்டார்! கிராமங்களில் கண்டதுண்டா? – வெற்றிலையை எடுத்து புறங்கையால் துடைத்து – ஆள்காட்டி விரலால் மீண்டும் மீண்டும் சுண்ணாம்பு தடவுவார்கள்! – அதே போல அந்த சக்ரீன் டச் அலைபேசியில் ஆள்காட்டி விரலால் தடவித் தடவி தனக்கு வந்த இற்றைகளைப் பார்த்தார். அதில் கொஞ்சம் நேரம் சென்ற பிறகு அவருக்கே போரடித்து விட்டது போலும்!
அதன் பிறகு தான் எனக்கு ஆரம்பித்தது பயங்கர தொல்லை! அலைபேசியை சற்றே தொலைவில் ஒரு கையால் பிடித்துக் கொண்டு மற்ற கையின் விரல்களால் துப்பாக்கி போல கேமரா நோக்கி காண்பித்து படம் எடுக்க ஆரம்பித்தார். ஒவ்வொரு முறையும் சுடுவதும் தொடர்ந்தது! – தன்னைத் தானே சுட்டுக் கொள்கிறாரா? விமான நிலைய காவலதிகாரி பார்த்தால் ஏதோ இவரால் பிரச்சனை வரக்கூடும் என்று நினைத்திருக்கலாம்!! இது மட்டுமாவது செய்தால் பரவாயில்லை – கூடவே அவர் செய்த மற்றொரு சேஷ்டை – ஒவ்வொரு முறை செல்ஃபி எடுத்துக் கொள்ளும்போது முகத்தை அஷ்டகோணலாக்கிக் கொண்டார் - அதில் எதிரே அமர்ந்திருந்த அனைவருமே டரியல் ஆகிப் போனோம்!
******
இந்த வாரத்தின் காணொளி - லக்ஷ்மண் ஜூலா :
எனது யூட்யூப் பக்கத்தில், தொடர்ந்து காணோளிகளை பகிர்ந்து கொள்ள முடியாவிட்டாலும், அவ்வப்போது ஏதாவது காணொளி பகிர்ந்து கொள்வதுண்டு. அப்படி, சமீபத்தில் பகிர்ந்த காணொளி ஒன்று உங்கள் பார்வைக்கு! ரிஷிகேஷ் நகரின் லக்ஷ்மண் ஜூலாவில், நடப்பவர்களின் நடைக்குத் தகுந்தபடி ஆட்டம் காணும் அந்த தொங்கு பாலத்தில் நடந்தபடி எடுத்த ஒரு காணொளி யூட்யூபில் பதிவேற்றி இருக்கிறேன். அந்த காணொளியைப் பார்க்க கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கலாம்!
Walk through hanging bridge (LAKSHMAN JHOOLA) in RISHIKESH
******e
இந்த வாரத்தின் ரசித்த கவிதை - முகநாடகம்:
சொல்வனம் பக்கத்தில் நமது நண்பர் ஏகாந்தன் அவர்கள் எழுதிய கவிதை ஒன்று இந்த வாரத்தின் ரசித்த கவிதையாக… நல்லதொரு ரசனை! படித்துப் பாருங்களேன்.
முகநாடகம்
சரியாக அணிந்துகொள்ளவில்லை
என்பதான திடீர் உணர்வினால்போல்
முகக்கவசத்தை மெல்ல அவிழ்த்து
மீண்டும் போட்டுக்கொள்வதாய்
ஒரு தருணத்தை அமைத்து
எதிரே கடக்கப்போகும்
எனக்குன் தளிர் முகத்தை
காண்பித்து மறைத்த
உன் குறுநாடகம்
கொரோனாவின் பின்புலமின்றி
சாத்தியமாகியிருக்குமா என்ன?
******
இந்த வாரத்தின் ரசித்த விளம்பரம் - JOY OF HOMECOMING :
எல்லாவற்றிற்கும் விளம்பரங்கள் செய்யும் காலம் இது. சின்னச் சின்ன ஆணியிலிருந்து, பெரிய பெரிய விஷயங்கள் வரை எல்லாவற்றிற்கும் விளம்பரம் செய்ய வேண்டியிருக்கிறது. அவற்றில் பல சுமாராகவே இருக்கும். ஒரு சில விளம்பரங்கள் மட்டுமே நம் மனதைத் தொடுவதாக அமையும். அப்படியான விளம்பரங்களை இங்கே பகிர்வது வழக்கம் தானே. அப்படியான ஒரு விளம்பரம் - விவோ மொபைல் இந்த வருடம் தீபாவளி சமயத்தில் வெளியிட்டு இருக்கும் விளம்பரம். பாருங்களேன்.
Joy of Homecoming: ये एड आपका दिल छू लेगा | Vivo Diwali Ad #JoyOfHomecoming
******
இந்த வாரத்தின் வாசகமும் படமும் - அழகு :
"நீங்கள் அசிங்கமானவர் அல்ல, ஏழையாய் இருப்பதால் மட்டுமே இப்படி இருக்கிறீர்கள்"
******
இந்த வாரத்தின் அனுபவம் - அண்ணாத்தே:
தீபாவளிக்கு வெளியிட்ட படங்கள் என்ன என்று கூட எனக்குத் தெரியாது! நண்பர் ஒருவர், ”அண்ணாத்தே படத்துக்கு போகலாம், டிக்கெட் புக் பண்ணு” என்றார். இங்கே PVR Theatre-கள் நிறைய இருக்கிறது. அதில் மூன்று திரையரங்குகளில் அண்ணாத்தே படம் வெளியிட்டு இருந்தார்கள். எந்த வகையாக இருந்தாலும் 250 ரூபாய்! கூடவே வரிகள் உண்டு! 250/- ரூபாய் கொடுத்து இந்தப் படத்தினை பார்க்க வேண்டுமா என்ன? என்ற கேள்வி எனக்குள் எழ, முன்பதிவு செய்யாமல், நண்பரையும் மடை மாற்றி விட்டுவிட்டேன் - ”அண்ணாத்தே, எப்படியும் முதல் முறையாக என்று தொலைக்காட்சியில் வெகு சீக்கிரம் போட்டு விடுவார்கள்!” என்று சொல்ல அவரும் வேண்டாம் என்று விட்டு விட்டார். 250 ரூபாய் மிச்சம் - கூடவே தலைவலியும் மிச்சம்! ஹாஹா…
******
இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன். மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லியிலிருந்து….
தொங்கும் நாய் பொம்மை படத்தைப் பார்த்ததும் எனக்கு எழுந்த உணர்வும் அதுதான்.
பதிலளிநீக்குசெல்பி கோணல்கள் வெளியில் விட குடும்ப நிகழ்வுகளில் அதிகம் பார்த்திருக்கிறேன்!
லக்ஷ்மன் ஜூலா காணொளி ஏற்கெனவே பார்த்துவிட்டேன்!
ஏகாந்தன்ஸ் சார் கவிதை டாப்!
நடந்து வரும் அந்தச் சிறுமியின் இயல்பான கம்பீரம் அழகு.
அண்ணாத்தே - ஹா.. ஹா.. ஹா...
பதிவின் பகுதிகள் குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
இந்த செல்ஃபி எடுப்பவர்கள் முகத்தை அஷ்டகோணலாக்குவது எதற்கு என்பது விளங்கவே இல்லை.
பதிலளிநீக்கு250 ரூபாயை மிச்சப்படுத்தியது நன்று ஜி.
அஷ்ட கோணல் - ஹாஹா... புரியாத புதிர் கில்லர்ஜி.
நீக்குபைசா மிச்சம் - வேறு விதமாக பயன்படுத்தலாமே!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
தொலைக்காட்சியில் விரைவில்... நல்லதொரு செயல்...
பதிலளிநீக்குமற்றவைகளும் அருமை...
பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
செல்ஃபி அனுபவம் சிரிப்பை வரவழைத்தது. சில நேரங்களில் மகள் செல்ஃபி எடுக்கும்போதும்.... கொஞ்சம் கடுப்படிக்கும். ஹாஹா
பதிலளிநீக்குகுழந்தை படம் சூப்பர் என எழுத நினைத்தேன். அது கூகுளில் சுட்டதா?
படம் இணையத்திலிருந்து நெல்லைத் தமிழன். செல்ஃபி - ஹாஹா...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வாசகம் அருமை.
பதிலளிநீக்குசெய்திகள் , படங்கள், கவிதை எல்லாம் அருமை.
வாசகமும் பதிவின் பகுதிகளும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
செல்ஃபி புள்ளிகளின் அலப்பறை கொஞ்சம் ஓவர்தான்.
பதிலளிநீக்குஅண்ணாத்த படம் தவிர்த்ததன் மூலம் ஒரு நல்ல காரியம் செய்திருக்கிறீர்கள்.
பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி பானும்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அருமை
பதிலளிநீக்குபதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்கு