செவ்வாய், 20 ஜூன், 2023

காசி விஸ்வநாத ஸ்வாமி கோவில், கும்பகோணம்

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.

நேற்று வெளியிட்ட சதுரகிரிக்கு ஒரு குறும்பயணம்… - பகுதி ஒன்று பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.


******

இந்த வருட ஆரம்பத்தில் வந்த எனது தமிழகப் பயணத்தில் பல கோவில்களுக்குச் சென்று வந்தேன் என்று முன்னரும் இங்கே எழுதி இருக்கிறேன். அப்படிச் சென்று வந்த கோவில்களில் ஒன்றான கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோவில் குறித்த சில தகவல்களையும் அங்கே சென்ற போது கிடைத்த அனுபவங்களையும் உங்களுடன் இந்தப் பதிவில் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். வாருங்கள் முதல் கோவில் குறித்து பார்க்கலாம். இந்தக் கோவிலில் இருக்கும் பிரதான சுவாமி சன்னதி அருள்மிகு காசிவிஸ்வநாத சுவாமிக்கான சன்னதி. அம்பாள் அருள்மிகு விசாலாட்சி என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். கோவிலுக்கான தீர்த்தம் மகாமகத் தீர்த்தம். தல விருட்சம் வில்வம்! கோவில் எங்கே இருக்கிறது? கோவிலுக்கான சிறப்பு என்ன? இது பாடல் பெற்ற ஸ்தலமா? போன்ற தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம் வாருங்கள்.

எனது தில்லி நண்பரும் அவரது துணைவியாரும் திருச்சி வர, அவருடன் நானும் சேர்ந்து கொண்டு கும்பகோணம் சென்றோம். கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து ஒரு ஆட்டோ பிடித்து நேரடியாக அவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்த Raya’s Mahal என்ற இடத்திற்குச் சென்று சேர்ந்தோம். Rayas குழுமத்தினர் இங்கே நிறைய தங்குமிடங்களை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். நமது நட்பு வட்டத்தில் இருக்கும் பலரும் கூட இங்கே தான் தங்குகின்றனர். அந்த தங்குமிடத்தில் உடைமைகளை வைத்துவிட்டு, தயார் ஆனதும், அவர்களது அலுவலகத்தில் கேட்டு ஒரு ஆட்டோவை அமர்த்திக் கொண்டு கும்பகோணம் நகரில் இருக்கும் சில கோவில்களைப் பார்க்க புறப்பட்டோம். எங்களுக்கு அமைந்த ஆட்டோ ஓட்டுநர் வரிசையாக சில கோவில்களுக்கு அழைத்துச் சென்றார். அப்படிச் சென்ற கோவில்களில் முதலாவது கோவில் கும்பகோணம் நகரில் மகாமகக் குளத்திற்கு வெகு அருகிலேயே, குளத்தின் வடகரையில் அமைந்திருக்கும் காசி விஸ்வநாதர் கோவில் தான்.

தலச்சிறப்பு: இந்தக் கோவில் நால்வரால் பாடப்பெற்ற ஸ்தலம் இல்லை என்றாலும் கும்பகோணம் தல வரலாற்றில் இடம்பெறும் கோவில்களில் ஒன்றாக இருப்பது. இந்தத் தலத்திற்கு முக்கியமான இரண்டு சிறப்புகள் உண்டு என்று தகவல்கள் சொல்கிறார்கள். அந்த இரண்டு சிறப்புகள் - நவ நதிகள் (கன்னிகைகள்) தங்களது பாவம் தீர்க்க காசிவிஸ்வநாதரைத் தரிசித்துப் பலன் பெற்றனர் என்பது முதலாம் சிறப்பு. இரண்டாம் சிறப்பாகச் சொல்லப்படுவது ராவணனை வதம் செய்ய, ராமபிரான் இத்தலத்திற்கு வந்து காசிவிஸ்வநாதரை வணங்கி ருத்திராம்சம் பெற்றார் என்பது. இந்த இரண்டு சிறப்புகள் குறித்த விரிவான தகவல்களை மேலும் பார்க்கலாம் வாருங்கள்.





நதிகளின் பாபம் தீர்த்த கதை:

நம் நாட்டின் புண்ணிய நதிகளாக வணங்கப்படும் நதிகள் மொத்தம் ஒன்பது! அதாவது கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, காவிரி, கிருஷ்ணா, கோதாவரி, சரயு மற்றும் துங்கபத்ரா ஆகிய ஒன்பது நதிகளும் புண்ணிய நதிகளாக வணங்கப்படுபவை. இந்த நதிகளில் நீராடினால், நீராடுபவர்களின் அனைத்து பாபங்களும் தீரும் என்பதும் ஒரு வித நம்பிக்கை. இப்படி தினம் தினம் இந்தப் புண்ணிய நதிகளில் நீராடி தங்களது பாபங்களை தீர்த்துக் கொள்ளும் பக்தர்களின் எண்ணிக்கை லட்சங்களில்! அத்தனை பேரின் பாபங்களும் நதிகளுக்குச் சேர்ந்தால் அந்த நதிகளின் பாபக் கணக்கு அதிகமாகிக் கொண்டே போகுமே! அந்த நதிகள் அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து, நாங்கள் எல்லோருடைய பாபங்களையும் சேர்த்து சுமக்க வேண்டியிருக்கிறதே என சிவபெருமானிடம் முறையிட்டு தங்களுக்கு இந்தப் பாபக்கணக்கிலிருந்து விமோசனம் தர வேண்டுகிறார்கள். அவர்களது வேண்டுதலுக்கு மனம் இறங்கிய சிவபெருமான், நவ நதிகளையும் கைலாயத்திலிருந்து கும்பகோணத்திற்கு அழைத்து வந்து மகாமகக் குளத்தில் நீராட வைத்து அவர்களது பாபக்கணக்கினை தீர்த்து வைத்தார் என்பது கதை. அது மட்டுமல்லாது, கும்பகோணத்தில் இருக்கும் காசி விஸ்வநாதர் ஆலயம் தற்போது இருக்கும் இடத்தில் கோவில் கொண்டார் என்பதும் கதை.

கோவில் வளாகத்தில் நவ நதி(கன்னிகை)களான கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, காவிரி, கிருஷ்ணா, கோதாவரி, சரயு மற்றும் துங்கபத்ரா ஆகியோரின் முழு உருவ சிலைகள் கோவிலில் நுழைந்ததும் இடப்பக்கத்தில் தனிச்சன்னதி ஒன்றில் இருக்கின்றன. அனைத்துமே அழகான வேலைப்பாடுகள் நிறைந்த சிலைகள். வேறு எங்கும் இந்த நவ நதிகளுக்கான சிலைகள், ஒரே இடத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. மகாமகக் குளத்திற்கும் கன்னியர் தீர்த்தம் என்ற பெயரும் - இந்த நவ நதிகள் (கன்னிகைகள்) காரணமாக இந்தப் பெயர் உண்டானது என்றும் சொல்கிறார்கள்.

இராமபிரான் ருத்திராம்சம் பெற்ற கதை:

இராமபிரான் தனது அரச வாழ்க்கையைவிட்டு வனவாசம் வந்து வழியில் இராவணனின் லீலையால் மனைவி சீதாதேவியை பிரிய நேரிட்டது. தனது மனைவியை மீட்டு வர அவருக்கு ருத்ராம்சம் தேவையாக இருக்க, அதற்கான வழியை அகத்திய முனிவரிடம் வேண்டுகிறார். அந்தச் சமயத்தில் அகத்திய முனிவர் அதற்கான வழியாகச் சொன்னது - கும்பகோணம் நகரில் தங்கி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் காசி விஸ்வநாதரை வழிபடவேண்டும். அப்படி வழிபட்டால் ருத்ராம்சம் பெறலாம் என்று சொல்ல, இராமபிரான் இலங்கைக்குச் செல்வதற்கு முன்னர் இங்கே வந்து சிவபெருமானை வழிபட்டு ருத்ராம்சம் பெற்றார் என்பதும் இந்தக் கோவிலுக்கான சிறப்பாகச் சொல்லப்படுகிறது. ருத்ராம்சம் என்று சொல்வதற்கு பதிலாக உத்திராட்ச மாலையைப் பெற்றார் என்றும் சிலர் தற்போது சொல்கிறார்கள் என்றாலும் ருத்ராம்சம் பெறவே இந்தக் கோவிலுக்கு வந்து சிவபெருமானை வணங்கினார் என்பதே சரியாக இருக்கமுடியும் என்று தோன்றுகிறது. எது எப்படியோ, கோவிலுக்கான சிறப்புகளில் ஒன்றாக இந்த சம்பவமும் சொல்லப்படுகிறது.

கோவில் குறித்த மற்ற தகவல்கள்:

இந்தக் கோவிலில் வழிபட்டவர்கள் பட்டியலில் அகத்தியர், நவ நதிக்கன்னிகைகள், வியாழன் மற்றும் சந்திரன் என பலரையும் சொல்கிறார்கள்.

நடைதிறப்பு: கோவில் தினமும் காலை 6.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரையும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும்.

கோயில் முகவரி: அருள்மிகு காசிவிஸ்வநாத சுவாமி திருக்கோவில், மகாமக திருக்குள வடகரை, கும்பகோணம் அஞ்சல் - 612 001.

இப்படியான சிறப்பான கோவிலுக்குச் சென்று நாங்களும் தரிசனம் கண்டு வந்தோம். கோவிலில் அத்தனை கும்பல் இல்லை. அதனால் நின்று நிதானித்து எங்களால் தரிசனம் பெற முடிந்தது. கோவில் வளாகத்தில் படம் எடுக்க முடியாது என்பதால் படங்கள் எடுக்கவில்லை. முடிந்த இடங்களில் சில படங்கள் எடுத்தேன். அவை இந்தப் பதிவில் இணைத்திருக்கிறேன். கும்பகோணத்தில் பார்த்த மற்ற கோவில்கள் குறித்து பிறிதொரு நாளில் எழுதுகிறேன். இந்தக் கோவில் குறித்த தகவல்கள் உங்களுக்கும் பயன்படலாம்! முடிந்தால் கும்பகோணம் செல்ல வாய்ப்பு அமையும்போது, இக்கோவிலுக்கும் சென்று வாருங்கள்.

******


இந்த நாளின் பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன். மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

நட்புடன்


வெங்கட் நாகராஜ்
புது தில்லியிலிருந்து….

26 கருத்துகள்:

  1. இழக்க நேரிட்டது என்னும் வார்த்தையை விட பிரிய நேரிட்டது என்கிற வார்த்தை பொருத்தமாக இருக்கும்!


    கோவில் பற்றிய விவரங்கள் தெரிந்து கொண்டேன். நானும் ஒருமுறை இங்கு சென்று வந்துள்ளேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் கருத்தை மதித்து மாற்றி விட்டமைக்கு நன்றி.

      நீக்கு
    2. சரியான வார்த்தையை மாற்றி விட்டேன் ஸ்ரீராம். தங்கள் அன்பிற்கு நன்றி. நீங்களும் இந்தக் கோவிலுக்குச் சென்று வந்தது அறிந்து மகிழ்ச்சி.

      நீக்கு
    3. சரியான வார்த்தை நீங்கள் சொன்னதும் மாற்றிவிட்டேன். நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. கும்பகோணம் கோயில்களின் நகரம். நான் ஆஸ்ரமங்களில் இல்லைனா கௌரிகிருஷ்ணா ஹோட்டல் எதிரிலுள்ள லாட்ஜில் தங்குவேன்.

    ஆட்டோ 800 ரூபாய்க்கு அமர்த்திக்கொண்டால், ஒரு நாள் கும்பகோணம் முழுதும் சென்றாலும் பார்த்து முடிக்க முடியாத அளவு கோயில்கள் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோயில்களின் நகரம் - உண்மை நெல்லைத் தமிழன். எத்தனை எத்தனை கோயில்கள் இங்கே. நாங்களும் ஒரு தினத்தில் பார்க்க முடிந்த கோயில்களைப் பார்த்து வந்தோம். காலை முதல் மதியம் ஒரு ஆட்டோவை ஏற்பாடு செய்து கொண்டு ஆறு கோயில்கள் பார்த்தோம். பிறகு மதியம் ஒரு கார் ஏற்பாடு செய்து சில கோயில்களுக்குச் சென்று தரிசனம் செய்தோம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. நானும் தரிசனம் செய்து கொண்டேன் நன்றி ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கும் பதிவு வழி தரிசனம் கிடைத்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. இனிய தரிசனம்..
    சிறப்பான பதிவு..

    மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கும் பதிவு வழி தரிசனம் கிடைத்ததில் மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஐயா. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. ஆளாளுக்கு தலபுராணம் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்..

    ருத்திராம்சம் பெற்றார் என்பதே சரி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆளாளுக்கு தலபுராணம் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்// - உண்மை - என்னையும் சேர்த்து! ருத்திராம்சம் பெற்றார் என்பதே சரியாக இருக்க வேண்டும் துரை செல்வராஜூ ஐயா. கால மாற்றங்களுடன் பல விஷயங்கள் திரிந்து போய்விடுகின்றன. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. கும்பகோணம் பிடிக்குமே தவிர அங்கே ஏவாரம் பிடிக்காது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏவாரம் - பல இடங்களில் குறிப்பாக வழிபாட்டுத் தலங்களில் இப்படியான ஏவாரம் தான் மிதமிஞ்சி இருக்கிறது துரை செல்வராஜூ ஐயா. ஒன்றும் செய்யமுடியாது. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. கோயில் பற்றி சிறப்பான தகவல், வெங்கட்ஜி.

    இன்றைய வாசகம் மிகவும் பிடித்தது.

    கீதா



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோயில் பற்றிய தகவல்களும் இன்றைய வாசகமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. கோயில் குறித்த தகவல்களும் புரான கதைகளும் அருமை சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவல்களும் கோயில் குறித்த புராணக் கதைகளும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  9. கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோவில் சிறப்புகள் அறிந்து தரிசனமும் பெற்றோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோயில் குறித்த தகவல்கள் பயன்பட்டால் மகிழ்ச்சியே. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி மாதேவி.

      நீக்கு
  10. குடந்தை காசி விஸ்வநாதர் கோவில் பற்றிய தகவல்கள் அருமை! கும்பகோணத்தில் தடுக்கி விழுந்தால் கோவில் தான்! கும்பகோணம் அருகேயும் வரலாற்று சிறப்பு மிக்க பட்டீஸ்வரம், திருநாகேஸ்வரம், திருவலஞ்சுழி போன்ற ஊர்களின் அழகிய கோவில்களையும் பார்த்து ரசித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கும்பகோணத்தில் தடுக்கி விழுந்தால் கோயில் தான் - உண்மை. நீங்கள் சொன்ன கோயில்கள் இன்னும் பார்க்க வாய்ப்பு அமையவில்லை மனோம்மா. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. குடந்தை காசி விஸ்வநாதர் கோவில் பல முறை சென்றிருக்கின்றேன் வெங்கட் ஜி. உங்கள் பதிவை படித்தவுடன் மீண்டும் கோவிலை தரிசித்த அனுபவம் கிடைத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி இராமசாமி ஐயா. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....