அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு
பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட நதிக்கரை நகரங்கள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக
நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன்
தொடங்கலாம் வாருங்கள்.
உங்களுக்கு
எது பிடிக்கவில்லையோ அதனிடமிருந்து விலகி
நில்லுங்கள்; அது உறவானாலும் சரி, பொருளானாலும் சரி! அதையே நினைத்து வருந்தி
உடலையும் மனதையும் கெடுத்துக் கொள்வதில் பலனில்லை. அப்படி இருந்தால்
பாதிக்கப்படுவது நீங்கள் மட்டுமே!
******
ராஜா
காது கழுதைக் காது - சாப்பாடா சாப்பிடப்போற! :
திருவரங்கம் ராஜகோபுரம் அருகே அருண் ஐஸ்க்ரீம் கடை வாசலில் நின்று
கொண்டிருந்தபோது…
“என்னங்க கடைக்கு உள்ளே போய் உட்க்கார்ந்து சாப்பிடலாமா?”
“ஏன் உள்ள போய் உட்க்கார்ந்து என்ன சாப்பாடா சாப்பிடப்போற…. ஐஸ்க்ரீம் தான… அப்படியே வாங்கிட்டு சாப்பிட்டுட்டே நடப்பியா!”
******
பழைய
நினைப்புடா பேராண்டி: ”என்னோட நியூயார்க் வந்துடும்மா...”
2012-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - “என்னோட நியூயார்க் வந்துடும்மா…” - அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.
“அப்பாடி….
எவ்வளவு வருடங்கள் ஆயிற்று இப்படி நிம்மதியாய் உட்கார்ந்து. வாழ்வின்
தொடக்கத்திலிருந்தே ஓடி ஓடி, மணமுடித்து, “ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு” என ஒரு மகனைப்
பெற்று, வளர்த்து, ஆளாக்கி என ஓட்டம் தொடர்ந்து கொண்டே தான் இருந்தது. ஒரு வருடமா,
இரண்டு வருடமா, கடந்த 72 வருடங்களாக ஓடிட்டே தான் இருந்திருக்கேன்….
ஆச்சு,
ஒரே பையனும் கல்யாணம் பண்ணி நியூயார்க்-லயே செட்டிலாயிட்டான். ஆனாலும் எனக்கென்னமோ
இந்த தில்லியை விட்டு போகணும்னு நினைச்சுக்கூட பார்க்கமுடியல. வயசு தான் ஏறிட்டு
போகுதே, எப்படி தனியாக இருக்க முடியும்னு அப்பப்ப மனசுல தோணிட்டே இருந்தாலும், ஏனோ
போக மனசு வரல. ஆனா இந்த ஒரு வருஷமா உடம்பு ரொம்பதான் படுத்துது. எவ்வளவு நாள் தான்
ஓட முடியும், என்னிக்காவது ஒரு நாள் உட்கார்ந்து தானே ஆகணும்.
இப்படி
ஒரு நாள் உடம்பு சரியில்லாம பக்கத்து வீட்டுக்காரங்க துணையோட ஆஸ்பத்திரி போன
போதுதான் என் பையன் அமெரிக்காவிலிருந்து ஃபோன் பண்ணான். “ஏம்மா, இன்னும் எத்தனை
நாள் தான் தனியா கஷ்டப்படுவே, இங்கேயே வந்துடேன்னு” கூப்பிட்டான். உடம்பு
சரியில்லாத கஷ்டத்திலேயே சரின்னு சொல்லிட்டேன்.
இப்படியும் சில மகன்கள்… முழு பதிவினையும் மேலே உள்ள சுட்டி வழி
படிக்கலாம்!
******
இந்த
வாரத்தின் எண்ணங்கள் - நம்பிக்கை :
கடந்த சில நாட்கள்முன்னர் திருவரங்கத்தில் நடந்து சென்ற போது, இரண்டு
இளைஞர்கள் அவர்களுக்குள் பேசியபடியே நடந்து கொண்டிருந்தார்கள். பேச்சு நம்பிக்கை
பற்றியது. “யாரையும் நம்ப முடியலடா மாப்பிள…. சொல்றது ஒண்ணு செய்யறது ஒண்ணா இருக்கு! நேத்திக்கு பட்டர்ஃபிளை பார்க்
வரேன்னு சொல்லிட்டு வரவே இல்லைடா!” சரி இதில் என்ன புதுமை, இதை இங்கே எழுத
வேண்டிய அவசியமென்ன? இனிமேல் தான் மெயின் ட்விஸ்ட்-ஏ! அப்படி
பேசிச் சென்ற இளைஞரின் மேல்சட்டை/டீ - ஷர்ட் வாசகம் தான் என் எண்ணத்தினைத்
தூண்டியது! “சந்த்ரு” என்ற பெயர் எழுதி இருந்தது தவிர,
அப்படி என்ன எழுதி இருந்தது….
நீ யாரை வேணும்னாலும் நம்பு
ஆனா என்னை மட்டும் நம்பாதே!
******
இந்த
வாரத்தின் ரசித்த உணவு - கொல்லிமலை மிளகு தோசை :
திருவரங்கம் சென்றிந்தபோது ஒரு உணவகம் பற்றி அறிந்து கொண்டு அங்கே
சென்றிருந்தேன் - குடும்பத்துடன் தான். மாலை நேரத்தில் மட்டுமே, வீட்டிலேயே
செயல்படும் இந்த உணவகத்தினை திறக்கிறார்கள். உணவகம் சென்ற போது கிடைத்த அனுபவங்களை முகநூலில் எழுதி இருந்தேன். சற்றே நீண்ட பதிவு
என்பதால் தனிப்பதிவாக இங்கே வெளியிட்டு விடலாம் என்று எண்ணம். அதற்கு ஒரு முன்னோட்டமாக அந்த உணவகத்தில் சாப்பிட்டதில் எனக்கு மிகவும்
பிடித்த ஒரு உணவு எது என்பதை மட்டும் இங்கே சொல்லி விடுகிறேன். அப்படிச் சாப்பிட்டதில் பிடித்தது - கொல்லிமலை மிளகு தோசை! ஏழு வித சட்னி மற்றும் சாம்பார், மிளகாய் பொடி என சிறப்பான
தொட்டுக்கைகளுடன் சிறப்பாக இருந்தது அந்த தோசை. படம் மேலே!
******
இந்த
வாரத்தின் ஆசை - தமிழகத்தில் கோவில் உலா:
வட இந்தியாவில் நிறைய சுற்றி வந்தாலும், நம் தமிழகத்தில் இருக்கும் பல
சிறப்பு வாய்ந்த, பழமையான கோவில்களுக்குச் சென்று வர வேண்டும் என்பது நீண்ட நாள்
ஆசை. ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலையில் புறப்பட்டு
கோவில்களுக்குச் சென்று வழிபடுவதோடு, அங்கே இருக்கும் சிற்பங்களைக் கண்டும், படம்
எடுத்தும் பதிவு செய்ய வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. ஆனால் இது வரை அந்த ஆசை நிறைவேற வாய்ப்பே இல்லாமல் இருக்கிறது. தமிழகம் வரும்போது கிடைக்கும் கொஞ்ச நாட்கள் வீட்டினருடன் இருப்பதையே
அதிகம் விரும்புவதால் இது போன்ற பயணங்கள் செய்ய நேரமும் கிடைப்பதில்லை. வாய்ப்பு
கிடைக்காமல் போய்விடாது என்ற நம்பிக்கை உண்டு. எல்லா நிகழ்வுகளுக்கும் அதற்கான நேரம்
வந்தால் தன்னால் நடக்கும் என்பதிலும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. பார்க்கலாம்!
******
இந்த
வாரத்தின் ரசித்த முகநூல் இடுகை - சம்சாரம் :
நண்பர் முரளி அவர்களைக் குறித்து முன்பு கூட இங்கே சொல்லி இருக்கிறேன். அவரது முகநூலில் எழுதிய சில இடுகைகளை இங்கேயும் பகிர்ந்து
கொண்டிருக்கிறேன். அவர் ஒரு வருடம் முன்னர் எழுதிய ஒரு
இடுகை இங்கே இன்றைக்கு!
காலையில்
சற்றே தாமதமாக எழுந்தேன். சம்சாரம் வேஸ்ட் பேப்பர் படித்துக் கொண்டிருந்தாள்.
கோபமாக இருக்கிறாளா என check செய்ய "கருத்து கணிப்பில் என்ன
போட்டிருக்கிறது?" என்றேன். "காலையிலிருந்து ஒரு phase கரண்ட்
புட்டுக்கிச்சு" என்றாள். "அதற்கு இது பதில் இல்லையே" என்றேன்.
"புரிஞ்சவன் பிஸ்தா" என்றாள். நான் கம்முனு பாதாம் drink குடித்து
விட்டு அவ்விடம் சென்றேன்.
"இடித்து
உரைக்கும் சம்சாரம் அடுத்து
வருவது
உணர்த்தும் மின்சாரம்".
இதுதான்
இன்றைய சமாச்சாரம்.
******
இந்த
வாரத்தின் ரசித்த நிழற்படம் - ஒற்றைப் பனை :
சமீபத்தில் இல்லத்தரசி அவரது அலைபேசியில் எடுத்த ஒரு நிழற்படம் உங்கள்
பார்வைக்கு! வாழைத் தோப்பின் அருகே ஒரு ஒற்றைப் பனை! பாருங்களேன்.
******
இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை
பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன். மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள்
அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட்
நாகராஜ்
புது
தில்லியிலிருந்து….
- நல்ல மகன்தானே? வரமுடியாவிட்டாலும், தானிருக்கும் இடத்துக்கு அழைத்துக்கொள்ள நினைக்கும் நல்ல மகன்தானே!
பதிலளிநீக்கு- சந்த்ரு விவகாரமான ஆள் போல... "வேறெந்த கெட்ட பழக்கமும் என்னிடம் கிடையாது... பொய் மட்டும் சொல்வேன்" என்பது போல...
- அதென்ன கொல்லிமலை மிளகு தோசை? மற்ற ஊர் மிளகுகள் நன்றாயிருக்காதா?!
- தமிழகத்தின் கோயில் உலா... உங்கள் இந்த ஆசை எனக்கும் உண்டு!
- முரளியை விட அவரது பாஸ் பிஸ்தா என்று தெரிகிறது!!
- ஒற்றைப்பனை அருமை. நேற்று நான் எடுத்த பழைய புகைப்படங்களை பார்த்துக் கொண்டிருக்கையில் ஒரு தென்னை மரத்தை வானத்திற்கு பின்னணியாக வைத்து எடுத்திருக்கிறேன். அதைப் பார்த்தது நினைவுக்கு வருகிறது!
கொல்லிமலை மிளகு தோசை ஆசையை தூண்டுகிறது ஜி.
பதிலளிநீக்குராஜா காதுகள் சூப்பர்
எல்லாமே ரசிக்க வைத்தது ஜி
கொல்லிமலை மிளகு தோசையா?..... அம்மாவை அமெரிக்கா அழைத்துச் செல்கிறேன் என, வீட்டை வித்த பணத்தைத் தனதாக்கிக்கொண்டு ஏர்போர்ட்டில் அம்போ என விட்டுவிட்டுப் போகும் மகனின் கதைபோல மனதில் நிழலாடுகிறதே. அனைத்தையும் ரசித்தேன்.
பதிலளிநீக்குஎண்ணத்தை தூண்டிய எண்ணம் மிகவும் பிடித்தது...
பதிலளிநீக்குவாசகம் அருமை.
பதிலளிநீக்குஇப்படியும் சில மகன்கள் முன்பும் படித்து மனம் கனத்து போனது இப்போதும் தான். கன்னியாகுமரியில் இப்படி பிள்ளைகள் விட்டு போன முதியவர்கள் நிறைய இருக்கிறார்களாம். செய்தி படித்தேன்.
கொல்லிமலை மிளகு தோசை பார்க்க நன்றாக இருக்கிறது.
ஆதி எடுத்த படம் அருமை.
கொல்லி மலை மிளகு தோசைக்கு கொல்லி மலை மிளகைத்தான் போட்டார்களா? :) ஏழு சட்னி கேட்கவே பசிக்கிறது சூப்பர்.
பதிலளிநீக்குஅம்மா மகன்களை முன்பு படித்திருக்கிறேன் இப்படியும் மகன்கள்.
முரளியின் இடுகை. சிரிப்பை வரவழைத்தது .
ஒன்றைப் பனை எப்பொழுதுமே அழகுதான்.
ஹாஹா, ஐஸ்கீரிமை உட்கார்ந்து அனுபவித்துச் சாப்பிடணும் அந்த மனிதருக்கு அது தெரியவில்லை! ஹூம்
பதிலளிநீக்குபழைய பதிவையும் வாசித்தேன்...அந்த மகனை "அந்நியன்" படத்தில் சொல்வது போல் அப்படியான ஒரு தண்டனை கொடுக்கலாம் தப்பே இல்லை. இப்படியுமா என்றும் தோன்றியது...மனம் தவித்துவிட்டது வாசித்ததும்...
கீதா
அந்தத் தாயின் பரிதாபம் இன்னும் மனதிலிருந்து போகவில்லை. இப்போது எங்கிருப்பார் எப்படி இருப்பார் என்று தோன்றிக் கொண்டே இருக்கிற்து. பாவம்.
பதிலளிநீக்குஅங்கே இருக்கும் சிற்பங்களைக் கண்டும், படம் எடுத்தும் பதிவு செய்ய வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை.//
ஹைஃபைவ் வெங்கட்ஜி. எனக்கும் இந்த ஆசை உண்டு. அப்படி ஒரு முறை வாய்ப்பு கிடைத்த போது எடுத்திருக்கிறேன். போட வேண்டும். .ஆனால் மிகப் பழமை வாய்ந்த கோயில்கள் சிற்பங்களை எடுக்க வேண்டும் என்ற ஆசைஉண்டு..புளியஞ்சோலையும். 15 வருடங்களாகிவிட்டது. ..புளியஞ்சோலை கொல்லிமலையின் இப்பக்கம். திருச்சியிலிருந்து 2-21/2 மணி நேரப் பயணம் தான் நீங்கள் சென்று வரலாம் ஜி.
கொல்லி மலைக்கு இரு முறை சென்றிருக்கிறேன். அழகான இடம். புளியஞ்சோலையும். அகொல்லி மலை மிளகு நல்ல மணமாக இருக்கும். அங்கு மிளகு தேன், எல்லாம் மிக நன்றாக இருக்கும். அப்போது மிளகு தோசை சாப்பிட்டதுண்டு
கீதா