அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த
நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட தெய்வம் தந்த பூவே பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக
நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன்
தொடங்கலாம் வாருங்கள்.
A GOOD FRIEND LISTENS TO YOUR ADVENTURES; A BEST
FRIEND MAKES THEM WITH YOU.
******
நதிக்கரை நகரங்கள் என்ற
தலைப்பில் இதுவரை வெளியிட்ட பயணத் தொடரின்
பகுதிகளுக்கான சுட்டி கீழே!
நதிக்கரை நகரங்கள் - பயணத் தொடர் - சற்றே இடைவெளிக்குப் பிறகு.
நதிக்கரை நகரங்கள் - அதிகாலையில் நீண்ட ஆட்டோ பயணம்.
நதிக்கரை நகரங்கள் - நைமிசாரண்யம் - தங்குமிடங்கள்.
நதிக்கரை நகரங்கள் - நைமிசாரண்யம் - உள்ளூர் சாரதி.
நதிக்கரை நகரங்கள் - நைமிசாரண்யம் - உலா - மா லலிதா தேவி.
நதிக்கரை நகரங்கள் - நைமிசாரண்யம் - ததீச்சி குண்ட்.
நதிக்கரை நகரங்கள் - நைமிசாரண்யம் - காலை உணவு.
நதிக்கரை நகரங்கள் - நைமிசாரண்யம் - ருத்ர குண்ட்.
சென்ற பகுதியில் கோமதி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும்
ருத்ர குண்ட் எனும் இடத்திற்குச் சென்றது குறித்தும், அங்கே கிடைத்த அனுபவங்கள் குறித்தும்
உங்களுடன் பகிர்ந்து கொண்டது நினைவில் இருக்கலாம். இந்தப் பயணத் தொடரின்
முந்தைய பகுதிகளை நீங்கள் இதுவரை படிக்கவில்லை எனில் மேலே உள்ள சுட்டிகள் வழி
ஒவ்வொரு பகுதியையும் படித்து வரலாம். இனி தொடர்ந்து எங்கே பயணித்தோம் என்ற
தகவல்களை பார்க்கலாம் வாருங்கள். அங்கிருந்து மிக அருகில் உள்ள இன்னுமொரு
கோவிலுக்கு தான் எங்களை அழைத்துச் சென்றார் எங்கள் சாரதி அவ்தேஷ். அந்தக் கோவில் எது? அங்கே இருக்கும் விசேஷங்கள் என்ன என்று பார்க்கலாமா? நாங்கள் அடுத்ததாக சென்ற கோவில் DHதேவ DHதேவேஷ்வர் DHதாம் என்று
அழைக்கப்படும் ஒரு கோவிலுக்கு தான். அந்தக் கோவிலின் சிறப்பு என்று சொல்லப்படுவது, அங்கே ஸ்தாபிக்கப்பட்ட
சிவலிங்கம் ஸ்வயம் வாயு தேவனே சிவ ஆராதனை செய்வதற்காக ஸ்தாபித்த சிவலிங்கம்
என்றும் இது குறித்த தகவல்கள் வாயு புராணத்தில் இருக்கிறது என்பதும் தான்.
சிறிய கோவில் என்றாலும் இயற்கையான சூழலில் மரங்கள்
அடர்ந்த நதிக்கரை பகுதியில் அமைந்திருக்கிறது. கோவில் அருகிலேயே ஒரு யாகசாலையும்
இருக்கிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் எப்படியாவது பணம் வாங்கி விட வேண்டும் என்ற
எண்ணத்தினை கொண்டவர்களாக இருக்கிறார்கள். யாகசாலை அருகே இருந்த சிறுவன் கூட இங்கே
பூஜை செய்து கொள்ளுங்கள் என்று எங்களிடம் கேட்டுக் கொண்டிருந்தார். அமைதியான சூழலில், இயற்கையுடன் இயைந்து இருக்கும் கோவிலில் நின்று
நிதானித்து பிரார்த்தனை செய்யலாம் என்றால் இது போன்ற சில தொந்தரவுகள் இருக்கத்தான்
செய்கிறது. ஆனாலும் ஒரு சில நிமிடங்கள் கண்களை மூடி, பிரார்த்தனை செய்து கொள்ள
முடிந்தது. பெரும்பாலும் இது போன்ற தலங்களுக்குச் செல்லும் போது மனதை
ஒருமுகப்படுத்தி, சுற்றிலும் இருக்கும் மனிதர்களை மறந்து இறைவனோடு ஒன்றிட வேண்டும்
- யார் அழைத்தாலும் கண்டுகொள்ளாது நம் நோக்கமான இறை சிந்தனை மட்டுமே சிந்தையில் இருக்க, நாம் இறையோடு ஒன்றலாம்.
கோவில் பகுதியில் இருக்கும் மரம் ஒன்றில் கிளைகள்,
விழுதுகளென பரந்திருக்க, அதில் ஒரு இடம் மட்டும் தும்பிக்கையுடன் இருக்கும்
விநாயகப்பெருமான் போலவே இருக்கிறது என்று காண்பித்தார் ஒரு சிறுவர். அந்தப் பகுதியில் காவி வண்ணம் பூசி இருப்பதால் நன்கு தெரிகிறது (படம்
பார்க்க!) பெரிய ஆல மரத்தில் இப்படியான உருவங்கள் இயற்கையாகவே அமைந்து விடுகின்றன. பார்க்கவும் அழகாக இருந்த அந்த இடத்தில் சில படங்களை எடுத்துக் கொண்டோம். அங்கிருந்து வெகு அருகிலேயே, நடந்து செல்லக்கூடிய தொலைவில், கோமதி
ஆற்றங்கரையில் இன்னுமொரு கோவில்! அந்தக் கோவிலை ராமேஷ்வர் DHதாம் என்று
அழைக்கிறார்கள். புத்தம் புதியதாக வண்ணம் பூசப்பட்டு
பொலிவுடன் இருந்த அந்தக் கோவிலில் இரண்டு அழகான சிவ லிங்கங்கள் இருக்கின்றன. தென்னகத்தில் இருக்கும் ராமேஸ்வரத்திற்கும் வடக்கே நைமிசாரண்யத்தில்
இருக்கும் இந்த இடத்திற்கும் அப்படி என்ன சம்பந்தம்… அதையும் இங்கேயே இதே
பகுதியில் சொல்லி விடுகிறேன்.
நைமிசாரண்யம் பகுதியில் CHOURASI KHOS PARIKRAMA
எனும் சுற்றிவரும் வழிப்பாதை உண்டு. பொதுவாக கிரிவலம் என்று சொல்வதுண்டு -
மலையைச் சுற்றி வருவதற்கு கிரிவலம் என்று சொல்வார்கள். வடக்கில் இந்த மாதிரி CHசௌராஸி KHகோஸ் பரிக்ரமா என்ற பெயரில் பல இடங்களில்
வலம் வருவார்கள் - குறிப்பாக வ்ருந்தாவன் பகுதியில்!. KHகோஸ் என்பது மீட்டர் போன்ற ஒரு அளவீடு. CHசௌராஸி என்பது ஹிந்தி மொழியில்
எண் எண்பத்தி நான்கை குறிப்பது. KHகோஸ் என்ற அளவீடு சுமார் 1.8 கி.மீ.
அப்படிப் பார்த்தால் CHசௌராஸி KHகோஸ் பரிக்ரமா என்பது சுமார் 151.2 கிலோமீட்டர்!
இந்த அளவு தூரத்தினை நடந்தே கடப்பது வாடிக்கை. ராவண வதத்திற்கு பிறகு அயோத்யா
திரும்பியதும் ராம் ஜி இப்படி வலம்
செய்தார் என்றும் அப்படிச் சென்ற போது வழியில் பல இடங்களில் கோவில்கள் அமைத்தாராம். கோமதி ஆற்றங்கரையில், மேலே சொன்ன ராமேஷ்வர்
DHதாம் என்ற இந்த இடத்தில் ராமர் அமைத்த கோவில் இது என்று நம்பிக்கை. அதற்கு ஒரு கதையும் உண்டு! பார்க்கலாமா?
யுத்தத்திற்குச் செல்வதற்கு முன்னர் தென்னக
இராமேஸ்வரத்தில் மணலால் சிவலிங்கம் அமைத்து ஸ்ரீராமர் சிவனை வணங்கினார் என்பது
நம்பிக்கை. இங்கே நைமிசாரண்யம் பகுதியில் CHசௌராஸி KHகோஸ் பரிக்ரமா செய்த பொது,
ராமேஸ்வரம் போலவே இங்கேயும் சிவலிங்கம் அமைத்து பூஜை செய்ய விரும்பினாராம். தன்னுடன் எப்போதும் இருக்கும் ஹநுமனைப் பார்த்து, ராமேஸ்வரத்திலிருந்து
மண் கொண்டு வந்து இங்கே ஒரு சிவலிங்கம் அமைக்கவேண்டும் என்று வேண்டுகோள்
விடுத்தாராம் ராம் ஜி! அவர் சொன்ன பின் மறுப்பேது? உடனேயே புறப்பட்டாராம் ஹனுமன். ஆனால் அவர் வருவதற்கு நேரம் ஆக, கோமதி
ஆற்றங்கரை மண் எடுத்து தானே ஒரு சிவலிங்கம் அமைத்து பூஜை செய்ய ஆரம்பித்து
விட்டார் ராம் ஜி. பாதி பூஜையில் வந்து சேர்ந்த ஹனுமனுக்கு
“அடடா, ராம் ஜி சொன்ன வேலையை சொன்ன விதத்தில் என்னால் செய்து முடிக்க முடியாமல்
போனதே”, என்று வேதனைப்பட, தனது அத்யந்த ஹனுமனின் மனவேதனையை பொறுக்க முடியாத
ராம் ஜி ஹனுமன் கொண்டு வந்த சிவலிங்கத்தினையும் அங்கேயே பிரதிஷ்டை செய்து ராம
நாமம் இருக்கும் வரை இந்த இரண்டு சிவலிங்கங்களும் இங்கே இருக்கும் என்றும், அவை
பூஜிக்கப்படும் என்றும் வாக்கு அளித்தாராம்.
மேலே சொல்லப்பட்ட விஷயம் காரணமாக இங்கே இரண்டு
சிவலிங்கங்கள். இரண்டுமே அருகருகே இருக்கின்றன. ஹனுமன் கொண்டு வந்த சிவலிங்கத்தில்
நிறைய வேலைப்பாடுகளும் உண்டு. இந்தக் கோவில் அமைந்திருப்பது அழகிய
கோமதி ஆற்றங்கரையில்! அங்கே ஒரு படகு குழாமும் உண்டு. கோமதி ஆற்றில் படகு சவாரி செய்து சில இடங்களை பார்த்தபடியே நீங்கள்
இயற்கையை ரசிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் நாங்கள் சென்ற பொது நல்ல சூடு. படகில் செல்லும் எண்ணமும் எங்களுக்கு இல்லை என்பதால், இறைதரிசனம் முடித்து
இயற்கைக் காட்சிகளை ரசித்தோம். அந்த இடத்தில் சில கடைகள் - அங்கே
சாப்பிடக் கிடைக்கும் பொருட்களை பார்த்தாலே சாப்பிடத் தோன்றவில்லை. உருளைக்கிழங்கு வேக வைத்து மசாலா சேர்த்து, பிறகு வாடிக்கையாளர் கேட்டால்
கடலை மாவில் முக்கி, எண்ணையில் பொறித்து பஜ்ஜி என்ற பெயரில் கொடுக்கிறார்கள். அங்கே இருந்த கடை ஒன்றில் அவற்றை படம் மட்டும் எடுத்துக் கொண்டோம். குடிக்க தண்ணீரும், குளிர்பானமும் வாங்கிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டோம்.
தொடர்ந்து எங்கே சென்றோம், அங்கே பார்த்த இடங்களென்ன,
அனுபவங்கள், தகவல்கள் என அனைத்தும் வரும் பகுதியில் சொல்கிறேன். அடுத்த பகுதியில்
சந்திக்கலாம். தொடர்ந்து பயணத்தில் இணைந்து இருங்கள் நண்பர்களே.
*****
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை
பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும்
சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லியிலிருந்து….
படங்கள் அழகு. விவரங்கள் சுவாரஸ்யம். ஆஞ்சநேயர் ராமேஸ்வரம் சென்று வர தாமதமானது கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாகவா?! அவரை அனுப்பிவிட்டு, அவருக்காகக் காத்திருக்காமல் இராமன் சட்டென ஒரு சிவலிங்கம் அமைத்து பூஜையைத் தொங்கி விட்டது கண்டனத்துக்குரியது. நல்லவேளை ஆஞ்சி தொழிசங்கம் அமைக்கவில்லை!
பதிலளிநீக்குஹையோ ஸ்ரீராம் என் மனதிலும் தோன்றியது....பாவம் ஆஞ்சு ...
நீக்குஉங்கள் கருத்தை ரொம்பவே ரசித்தேன்.
கீதா
ஆஞ்சு வுக்கு இல்லாத படையா என்ன?!! ஹாஹா ஆனால் அவர் அப்படிச் செய்ய மாட்டாரே! ராமா என்றால் அப்படியே அங்கு இருந்திடுவாரே...
நீக்குகீதா
ஹாஹாஹாஹா, ராமர் சிவலிங்கம் அமைத்தாரா? சீதா தேவியா?
நீக்குபொரிப்பதற்கு முன் மசால் வடை போல இருக்கிறது. பொரித்த பின் போண்டா போல இருக்கிறது!!
பதிலளிநீக்குஸ்ரீராம் ஹைஃபைவ்! எனக்கும் அதேதான் தோன்றியது....
நீக்குகீதா
நாங்க அங்கெல்லாம் ஏதும் சாப்பிடலை. பயமோ பயம்.
நீக்குஹிஹிஹி, சில/பல கருத்துரைகள் காணாமல் போயிருக்கே! இங்கேயும்/எங்கேயும் இதானா வலை உலகில்? :(
நீக்குவிநாயகர் தும்பிக்கை போன்றே மரம் இருக்கிறதே...
பதிலளிநீக்குராமர்,ஹனுமான் அமைத்த லிங்கம் வாயு பகவான் அமைத்து வழிபட்ட லிங்கம் என்பன வழிபட்டோம் வரலாறுகளும் அறிந்தோம்.
பதிலளிநீக்குமுழுதான விளக்கங்கள் அருமை ஜி...
பதிலளிநீக்குஇந்த இடங்கள் சென்றதில்லை. தைமிசாரண்ய மண்ணே, வனமே திவ்யதேசம்தான். அங்கு யாசகர்களின் தொந்தரவு உண்டு
பதிலளிநீக்குஅது சாபுதான வடையா மசால் வடையா? கீழே பஜ்ஜியோ?
கர்ர்ர்ர்ர் வெங்கட்ஜி கீழே கொடுத்திருக்கிறாரே நெல்லை...!! அதை கடலைமாவில் முக்கிப் பொரிப்பது என்று சொல்லியிருக்கிறாரே!!!
நீக்குகீதா
படங்களும் விபரங்களும் அருமை. நன்றி
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குவாசகம் அருமை. பயணப் பதிவும் அருமை. மரத்தில் விநாயகர் தத்ரூபமாக தெரிகிறார். ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி உண்டாக்கிய லிங்கம், வாயு தேவன் அமைத்த லிங்கம், வாயு புத்திரன் அமைத்த லிங்கம் அனைத்தையும் தங்கள் பதிவின் வாயிலாக தரிசித்து கொண்டேன். புராண கதைகள் எப்படி கேட்டாலும் சுவாரஸ்யமாகத்தான் உள்ளது.
/பெரும்பாலும் இது போன்ற தலங்களுக்குச் செல்லும் போது மனதை ஒருமுகப்படுத்தி, சுற்றிலும் இருக்கும் மனிதர்களை மறந்து இறைவனோடு ஒன்றிட வேண்டும் - யார் அழைத்தாலும் கண்டுகொள்ளாது நம் நோக்கமான இறை சிந்தனை மட்டுமே சிந்தையில் இருக்க, நாம் இறையோடு ஒன்றலாம் /
இந்த வரிகள் நன்றாக உள்ளன. தாங்கள் குறிப்பிட்ட தூரம் அளக்கும் அளவுகளையும் தெரிந்து கொண்டேன். நல்லதொரு பதிவின் பகிர்வுக்கு உங்களுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அருமை அருமை
பதிலளிநீக்குரசித்து வாசித்தேன் வெங்கட்ஜி...முந்தைய பகுதிகளையும் வாசித்துவிடுகிறேன் விரைவில்...
பதிலளிநீக்குஇரு சிவலிங்க கதையைக் கேட்டிருக்கிறேன். ஆனால் அது இந்தக் கோயிலுக்கானது என்பது உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன்.
பொரிக்கும் முன் - பருப்பு வடையோ என்று நினைத்தேன்...பொரித்த பின் உள்ளதைப் பார்த்ததும் அதெப்படி வடை பொரித்ததும் இப்படியானது என்று தோன்றியது பின்னர் உங்கள் குறிப்புகளைப் பார்த்ததும் கடலமாவில் பொரித்தது என்று தெரிகிறது.
கீதா
இயற்கையாக கிளையில் அமைந்திருக்கும் அந்தப் பிள்லையார் அழகு... அதே போன்று கோமதியும் அழகாய் இருக்கிறாள்! படகு அதன் வடிவம் மனதைக் கவர்கிறது.
பதிலளிநீக்குகீதா
முதல் கருத்து காணவில்லையே...
பதிலளிநீக்குகீதா
பிள்ளையார் எங்கே போனாலும் அம்சமாக இருக்கார்.
பதிலளிநீக்கு