வெள்ளி, 3 ஜூன், 2022

நதிக்கரை நகரங்கள் - பயணத் தொடர் - நைமிசாரண்யம் - உள்ளூர் சாரதி - பகுதி நான்கு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட யாரிவள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


அழகான நாள்கள் உங்களைத் தேடி வருவதில்லை. நீங்கள்தான் அவற்றை நோக்கி நகரவேண்டும்.


******

 

நதிக்கரை நகரங்கள் - பகுதி ஒன்று இங்கே. பகுதி இரண்டு இங்கே.  பகுதி மூன்று இங்கே. 




சென்ற பகுதியில் சொன்னது போல நைமிசாரண்யம் வந்து சேர்ந்து அன்றைக்கு தங்குவதற்கு ஒரு  இடம் பார்த்தாயிற்று.  அடுத்து என்ன?  தங்குமிட வாயிலில் இருந்த ஒரு சிறு கடையில் தேநீர் - குல்லட் என்று ஹிந்தியில் அழைக்கப்படும் மண்குடுவையில்!  10 ரூபாய் கொடுத்தால் சுவையான தேநீர் கிடைத்துவிடுகிறது.  தேநீர் அருந்திய பிறகு ஆந்திரா லாட்ஜ் சென்று முந்தைய நாள் இரவு பயணத்தினால் ஏற்பட்ட அசதி தீர குளித்து விட்டு நகர்வலம் செல்ல வேண்டும்.  இங்கே, சென்ற பகுதியில் எழுதாமல் விட்ட ஒரு விஷயத்தினை எழுகிறேன். ஹர்தோய் இரயில் நிலையத்தில் இருந்து எங்களை அழைத்து வந்த ஆட்டோ ஓட்டுநர் எங்களுக்கு தங்குமிடம் கிடைக்கும் வரை காத்திருந்து எங்களை இறக்கி விட்டார்.  அன்றைக்கு நகர்வலம் செல்ல வேண்டுமானாலும் அவரே வருவதாக சொல்லிக் கொண்டிருந்தார். அவருக்கும் ஒரு தேநீர் வாங்கிக் கொடுத்துவிட்டு அவருக்கு கொடுக்க வேண்டிய பணத்தினையும் கொடுத்து அவரை அனுப்பி வைத்தோம். 


தங்குமிடத்தின் வாசலில், அந்த பிரதான சாலையில் ஆட்டோக்கள், பாட்டரி ரிக்ஷாக்கள் என நிறைய வாகனங்கள்.  சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வந்த உடன் அவர்களை சூழ்ந்து கொண்டு ஊர் சுற்றிக் காண்பிக்க தங்களது வாகனத்தினை அமர்த்திக் கொள்ளுங்கள், எல்லா இடங்களையும் நின்று நிதானித்து பார்க்கும்படி அழைத்துச் செல்கிறோம் என்று சொல்கிறார்கள். முன்பு சொன்னது போல தென்னிந்தியர்கள் என்று தெரிந்தால் (அதான் நம் முகத்திலேயே எழுதி ஒட்டி இருக்கிறதே!) உடனேயே தெலுகுவில் மாட்லாடுகிறார்கள் - ஓரிரு வார்த்தையாவது - “அம்மா Bபண்டி காவலா?” எங்களையும் அப்படி சிலர் சூழ்ந்து கொள்ள, நாங்கள் எங்கள் வேலைகளை முடித்துக் கொண்டு சொல்கிறோம் என தங்குமிடத்தின் உள்ளே சென்று விட்டோம்.    மூன்று பேர் என்பதால் ஒவ்வொருவராக குளித்து முடித்து மீண்டும் ஒரு தேநீர் அருந்தி காலை உணவையும் முடித்துக் கொண்டு செல்லலாம் என்றால் பக்கத்தில் இருந்த கடை திறக்கவில்லை.  வழியில் எங்கேயாவது சாப்பிடவேண்டும். மீண்டும் அதே கடையில் ஒரு தேநீர் மட்டும் அப்போதைக்கு!  



நாங்கள் தயாராகிக் கொண்டிருந்த போதே ஒரு பாட்டரி ரிக்ஷா ஓட்டுநர் தங்குமிடத்தின் உள்ளே வந்து எங்களிடம் பேசினார் - தானே எல்லா இடங்களுக்கும் அழைத்துச் செல்வதாக கூறியதோடு, உள்ளூர் மட்டுமல்லாது சற்று தொலைவில் இருக்கும் இடங்களுக்கும் அழைத்துச் செல்வதாகவும், அதற்கு தனி கட்டணம் என்றும் சொன்னார்.  உள்ளூர் கோவில்கள் சுற்றிக் காண்பிக்க ரூபாய் நானூறு என்றும், வெளியிடங்களில், சற்றே தொலைவில் இருக்கும் இடங்களை காண்பிக்க ரூபாய் நானூறு என்றும் முடிவானது. அவ்(dh)தேஷ் Gகிரி..... என்ற பெயர் கொண்ட அந்த மனிதர் தான் எங்களுக்கு அன்றைக்கு முழுவதும் சாரதி..... ஆரண்யமே திவ்ய தேசங்களில் ஒன்றாக இருக்கும் இந்த நைமிசாரண்யத்தில் ஒவ்வொரு இடமாக நின்று நிதானித்து அழைத்துச் சென்று அந்த இடங்கள் குறித்த தகவல்களையும் முடிந்த/தெரிந்த அளவு சொல்லிக்கொண்டே வந்தார். வண்டி சொந்த வண்டியாம்..... யாராவது உங்கள் நண்பர்கள் வந்தால் சொல்லியனுப்புங்கள் என்று கேட்டுக் கொண்டார்..... 

 

இன்றைய நாள் முழுவதும் பேட்டரி ரிக்ஷா உலா தான்.  என்ன மாப்பிள்ளை ஊர்வலம் போல பொறுமையாக செல்லும் இந்த வாகனம்..... ஒரு மாப்பிள்ளை பெண்ணும் சேர்ந்து வந்திருக்க நான் தன்னந்தனியே இந்தப் பயணத்தில். பயணத்தின் பொது பார்த்த ஒரு விஷயம் மனதுக்கு வேதனையைத் தந்தது - உத்திரப் பிரதேசம்..... என்னதான் காலம் மாறிக்கொண்டே இருந்தாலும், மனிதர்களின் மனநிலை மாறும் வரை எந்த முன்னேற்றமும் இந்த ஊரை/மாநிலத்தை மாற்றப் போவதில்லை.....  சாலைகள், வசதிகள் என பல விஷயங்களில் முன்னேற்றம் காண முடிந்தாலும் மனிதர்கள் அவற்றை வெகு விரைவில் கெடுத்து விடுவதை பார்க்க முடிகிறது. சுத்தம் குறித்த சிந்தனை இவர்களுக்கு வருவதே இல்லை என்பது வேதனையான நிதர்சனம். புதிதாக கட்டப்பட்ட இடங்களில் கூட, சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கிஞ்சித்தளவு கூட இல்லாமல், குட்கா மற்றும் பான் குதப்பித் துப்புகிறார்கள்......   இவர்களை அந்த ஆண்டவனே வந்தாலும் மாற்ற முடியாது...... 🙁


அன்றைய நாளின் பெரும்பாலான நேரம் எங்களுடன் இருக்கப் போகிறார் அவ்(dh)தேஷ் Gகிரி.  முடிந்தால் அவருடன் பேசி விஷயங்கள் கறக்க வேண்டும் - முடியுமா?  எல்லோரும் வளவளவென பேசுவதை விரும்புவதில்லை. இவர் எப்படி?  தகவல்கள் பெற முடிந்ததா? எங்கே எல்லாம் எங்களை அழைத்துச் சென்றார் போன்ற தகவல்களை வரும் பகுதிகளில் சொல்கிறேன்.  இந்த முறை என்னுடன் என் செல்லப்பெட்டி - DSLR CAMERA வரவில்லை என்பதால் படங்கள் நானும், நண்பரும், நண்பரின் இல்லத்தரசியும் அவரவர் அலைபேசியில் எடுத்த படங்களே என்பதால் படங்களின் எண்ணிக்கையும் குறைவு - தரமும் DSLR CAMERA அளவிற்கு இருக்காது என்பதையும் சொல்லி விடுகிறேன். வரும் பகுதிகளில் மேலும் பல அனுபவங்களை எழுதுகிறேன்.  அடுத்த பகுதியில் சந்திக்கலாம்.  தொடர்ந்து பயணத்தில் இணைந்து இருங்கள் நண்பர்களே. 


*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து…

 

20 கருத்துகள்:

  1. மட்கா சாய் அழகு.  அங்கு நம் விருப்பப்படி, விருப்பப்பட்ட நேரங்களில் காலை சிற்றுண்டி கிடைக்காதா?  பேட்டரி வண்டி பார்க்கா ழகாய் இருந்தாலும் மெல்ல ஊர்ந்தாள் வெறுப்பாகுமே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில இடங்களில் கிடைக்கும். கிடைப்பவை நமக்குத் தோதாக இருக்காது. வடக்கில் பெரும்பாலும் பராட்டா பூரி வகைகள் தான் காலை நேர உணவு. இல்லை எனில் டபிள் ரொட்டி எனப்படும் bread slices.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஶ்ரீராம்.

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    வாசகம் அருமை. பயணப் பதிவும் நன்றாக உள்ளது. அந்த சாய் பார்க்க நன்றாக உள்ளது. அதுவும் மண் குடுவையில். பாட்டரி ரிக்ஷாவும் மெல்ல நகர்ந்தாலும் பார்க்க அழகாக உள்ளது. நிதானமாக ஒவ்வொரு இடத்தையும் பார்த்தபடி செல்லலாம். அலைபேசியில் எடுத்த படங்களும் நன்றாக உள்ளது.

    /தென்னிந்தியர்கள் என்று தெரிந்தால் (அதான் நம் முகத்திலேயே எழுதி ஒட்டி இருக்கிறதே!) உடனேயே தெலுகுவில் மாட்லாடுகிறார்கள் /

    ஹா.ஹா.ஹா. எப்படித்தான் இந்த வேறுபாடு நம் முகத்தில் வந்து விடுகிறதோ ?

    ஒரு இடத்தின் சுத்தத்தை மக்களே மாசுபடுத்துகிறார்கள். உண்மை. அன்றைய பயணம் நன்றாக இருந்திருக்கும் என நினைக்கிறேன். மேற்கொண்டு காலை உணவை எங்கு முடித்தீர்கள் , எங்கெல்லாம் பயணம் செய்தீர்கள் என்றறிய ஆவலாக உங்களுடன் தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      பதிவில் பகிர்ந்துகொண்ட விஷயங்கள் குறித்த தங்களது விரிவான கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

      நீக்கு
  3. வடப்பக்கம் சுத்தம் சுத்தமாக இருக்காது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி பொதுவாக சொல்ல இயலாது. ஆனாலும் சுத்தம் போதாது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நெஞ்சார்ந்த நன்றி தனபாலன்.

      நீக்கு
  4. பான்பராக்கை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுத்தால்தான் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மது, பான்பராக், குட்கா போன்றவை பணம் காய்க்கும் மரங்கள். அவற்றை வெட்ட பெரும்பாலும் ஒருவரும் முன்வருவதில்லை கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளங்கனிந்த நன்றி.

      நீக்கு
  5. 'புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்களையும் சுத்தமாக வைத்திருக்கத் தெரியாதவர்கள் '.....எப்போதுதான் திருந்துவார்கள்.
    சாயா ரீ நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  6. 1978 ல் காசி போன போது முதன் முதலில் மண்குடுவை டீ குடித்தோம், அப்போது மிகவும் ஆச்சிரியமாக இருந்தது.
    அப்புறம் வடமாநிலங்களில் பயணிக்கும் போது மண்குடுவையில் பல முறை டீ குடித்து இருக்கிறோம். பாட்டரி ரிக்ஷா பயணம் பற்றி சொன்னது அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மண் குடுவை டீ சுவை தனிதான். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நெஞ்சார்ந்த நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  7. ஆஹா!! குல்லட்/சிறிய மண்பானையில் தேநீர்!!!

    ரொம்பப் பிடிக்கும் அதென்னவோ தெரியவில்லை இதில் குடித்தால் தனிச்சுவை போலத் தோன்றும். எனக்கு மிகவும் பிடிக்கும். மதுரா சென்றிருந்த போதும் இப்படி தேநீரும், அந்த ஊரின் தனித் தன்மையான பாலும் இதே போன்று சற்று பெரிய மண் பானையில். குடித்தது.. இன்னும் நினைவில். எப்போது சென்றேன் என்றால் 30 வருடங்களுக்கு முன்!!!!!!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குல்லட் தேநீர் சுவை தனித்துவமானது தான் கீதா ஜி. எனக்கும் மண் வாசனை கலந்த அந்த தேநீர் சுவை பிடிக்கும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. பாட்டரி ஆட்டோ பார்க்க அழகாக இருக்கிறது. மெதுவாகத்தான் போகும்.

    உங்கள் செல்லப்பெட்டிப் படங்களைக் காணவில்லையே என்று கேட்க நினைத்திருந்தேன். நீங்களே சொல்லிவிட்டீர்கள். படங்களில் வித்தியாசம் தெரிகிறதுதான் அதனால் என்ன.

    அவ்(D)தேஷ் (G)கிரி என்ன சொன்னார் என்று அடுத்த பதிவில் சொல்லுங்கள்.

    உபி, பீஹார் எல்லாம் கண்டிப்பாக மாறுவது கஷ்டம். மக்கள் திருந்தாதவரை. இதோ இங்கும் அங்கிருந்து வந்து வேலை செய்பவர்கள் குட்கா, பான் குதப்பித் துப்புவதைப் பார்க்க முடிகிறது. சுவர்கள் எல்லாம் ஒரே சிவப்பு மயம். கண்றாவியாக. என்ன சொல்ல?

    அடுத்து என்ன சாப்பிட்டீர்கள் எங்கே கிடைத்தது விவரங்கள் அடுத்த பதிவில் என்று நினைக்கிறேன்.

    “அம்மா Bபண்டி காவலா?”// அர்த்தம் தெரியும் என்றாலும் டக்கென்று சிரிப்பு வந்துவிட்டது....அம்மா வண்டிக்கு காவலா என்பது போல்!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேட்டரி ரிக்ஷா மெதுவாகத் தான் செல்லும் என்பதால் கொஞ்சம் போரடிக்கும் தான் கீதா ஜி. ஆனாலும் அப்படி மெதுவாக செல்வதும் சில சமயங்களில் நல்லதே.

      தங்களின் விரிவான கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  9. பயணம் பற்றிய தகவல்கள் நன்று. பல விவரங்கள் சொல்லி வருகிறீர்கள். இந்த ஆட்டோ வித்தியாசமாய் இருக்கிறது இதுதான் பாட்டரி ஆட்டோ இல்லையா?

    தொடர்கிறேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆட்டோ அல்ல ரிக்ஷா.... மிதிப்பதற்கு பதில் பேட்டரி மூலம் இயங்கும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி.

      நீக்கு
  10. மண்குடுவை தேநீர் பார்க்க அழகு. சுவையும் நன்றென அறிய வருகிறோம். பாட்டரி ரிக்ஷா வடிவமே வித்தியாசமாக உள்ளது. செல்லுமிடங்களுக்கெல்லாம் எப்போதும் கேமராவை எடுத்துச் செல்வது சாத்தியமற்ற சூழலில் தற்போது மொபைல் நன்றாகவே கை கொடுக்கிறது. காட்சிகளைத் தவற விடாமல் பதிவதே முக்கியம்.

    பகிர்வு நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்போதும் கேமராவை எடுத்துச் செல்வது கடினமாகவே இருக்கிறது. நல்ல மொபைல் இருந்தால் படங்கள் சரியாகவே வருகின்றன என்பதும் ஒப்புக்கொள்ள வேண்டிய விஷயம். காட்சிகளைத் தவற விடாமல் பதிவது முக்கியம் - உண்மை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....