சனி, 11 ஜூன், 2022

காஃபி வித் கிட்டு - 154 - கடன் அன்பை முறிக்கும் - ஒவ்வொரு நொடியும் - திருவெள்ளறை பெருமாள் - IRCTC - சிறுகதைகள் தளம் - பச்சை


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட நதிக்கரை நகரங்கள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

FOCUS ON THE STEP IN FRONT OF YOU, NOT THE WHOLE STAIRCASE! 


 

******

 

இந்த வாரத்தின் எண்ணங்கள் - கடன் அன்பை முறிக்கும் :  



படம் இணையத்திலிருந்து…
 

சில நாட்களுக்கு முன்னர் தில்லியில் இருக்கும் வட இந்திய நண்பர் ஒருவரிடமிருந்து பதட்டமாக ஒரு அழைப்பு…  மாலை நேரத்தில், அலுவலக சமயத்தில் வந்த அழைப்பு.  பத்து வருடங்களுக்கு மேலான நட்பு.  என்னைவிட பதவியில் இரண்டு படி மேலே உள்ள அதிகாரி.  உடனடியாக பணம் வேண்டும், நான்கு நாட்களில் சம்பளம் வந்ததும் திரும்பித் தந்து விடுகிறேன் என்றார்.  பொதுவாக என்னிடம் பணம் கேட்டு நான் கொடுக்காமல் இருப்பது சில சமயங்களில் - அதுவும் என்னிடம் இல்லாத பட்சத்தில் மட்டுமே! சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்! என் கீழ் பணிபுரியும் சிலர் கேட்கும் போது, திரும்பி வராது என்று தெரிந்தே சின்னச் சின்ன தொகைகளை கொடுத்ததுண்டு.   இது கொஞ்சம் அதிகமான தொகை. அதுவும் நான்கு நாட்களில் கொடுத்துவிடுவேன் என்று சொல்கிறாரே என உடனடியாக அவரது வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பிவிட்டேன்.  நான்கு நாட்களில் தருகிறேன் என்றவர் இருபத்தி ஐந்து நாட்கள் ஆனபின்னும் தரவில்லை.  எனக்குத் தேவை என்ற சமயத்தில் கேட்க, ஒவ்வொரு முறை நான் கேட்கும்போதும் இதோ தருகிறேன், அதோ தருகிறேன் என்று சொல்லிக்கொண்டு இருந்தார். பிறகு அவரிடமிருந்து ஒரு சத்தமும் இல்லை. அழைப்பையும் ஏற்கவில்லை. கடன் அன்பை முறிக்கும் என்று சும்மாவா சொன்னார்கள் பெரியவர்கள்!  இது போன்ற சிலரால் யாருக்குமே உதவி செய்ய தோன்றுவதில்லை. 

 

******

 

இந்த வாரத்தின் ரசித்த நிலைத்தகவல் - ஒவ்வொரு நொடியும் :

 

பல சமயங்களில் நண்பர்கள் வைத்துக் கொள்ளும் WHATSAPP நிலைத்தகவல் ரசிக்கும்படி இருக்கும்.  அப்படி சமீபத்தில் ரசித்த ஒரு நிலைத்தகவல் கீழே! 

 

சில சமயங்களில் வாழ்க்கை மிகவும் கடினமானதாக தெரியலாம்.  ஆனால் செய்வதற்கும், வெல்வதற்கும் ஒவ்வொரு நொடியும் ஏதோ ஒன்று இருந்து கொண்டே தான் இருக்கிறது.  

 

******

 

பழைய நினைப்புடா பேராண்டி: ”திருவெள்ளறை பெருமாள்”

 

2014-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - ”திருவெள்ளறை பெருமாள்” - அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.  



 

அந்த மொட்டை கோபுரத்தின் முன்னே பதினெட்டு படிகள் – பகவத் கீதையின் பதினெட்டு அத்தியாயங்களை இவை குறிப்பதாகச் சொல்கிறார்கள்.

 

இந்தக் கோபுரத்தினைத் தாண்டினால் மற்றொரு சிறிய கோபுரம் – ஆனால் முழுமையான கோபுரம். இந்தக் கோபுரத்தின் கீழே நான்கு படிகள் – இவை நான்கு வேதங்களைக் குறிப்பதாகச் சொல்வார்கள்.  அதன் பிறகு உள்ளே சென்றால் பலிபீடம் – அதை வலம் வந்து முன்னே சென்றால் – ஐந்து படிகள் – அவை பஞ்ச இந்த்ரியங்களைக் குறிப்பதாகச் சொல்வார்கள்.

 

இக்கோவிலில் வீற்றிருக்கும் இறைவனைக் காண இரண்டு வாயில்கள் உண்டு – உத்தராயண வாயில் மற்றும் தக்ஷிணாயன வாயில். தை முதல் ஆணி வரை உத்தராயண வாயில் வழியாகவும் ஆடி முதல் மார்கழி வரையிலான மாதங்களில் தக்ஷிணாயன வாயில் வழியாகவும், பெருமாளை தரிசிக்கச் செல்லவேண்டும். இந்த வழிகளிலும் 21 படிகள் உண்டு. படிகளில் முன்னேறினால் இதோ கோவில் வந்துவிட்டது.

 

இங்கே தான் செந்தாமரைக் கண்ணனான புண்டரீகாக்ஷன் கோவில் கொண்டிருக்கிறார். தனிச் சன்னதியில் குடி கொண்டிருக்கிறார் செண்பகவல்லி எனும் செங்கமலவல்லி.  இவரை பங்கயச் செல்வி என்றும் அழைப்பதுண்டு. இவர்களைத் தவிர சக்கரத்தாழ்வார், ஹனுமான், உடையவர் ஆகியோருக்கும் தனிச் சன்னதி உண்டு.

 

முழு பதிவினையும் மேலே உள்ள சுட்டி வழி படிக்கலாம்!

******

 

இந்த வாரத்தின் தகவல் - IRCTC TOUR PACKAGES :

 

சமீபத்தில் நண்பர் ஒருவர் IRCTC நிறுவனம் நடத்தும் சுற்றுலா ஒன்றில் பங்கு கொண்டு திரும்பினார்.  அவருக்கு அந்த சுற்றுலா ஏற்பாடுகள் மிகவும் பிடித்ததாக சொல்லிக் கொண்டு இருந்தார்.  எனக்கும் அவர்களது சுற்றுலா ஏதாவது சென்று பார்க்க விருப்பம் உண்டு.  அப்படி ஒரு சுற்றுலா கீழே இருக்கும் சுற்றுலா! 

 

IRCTC Tourism Tour Packages

பயண ஏற்பாடுகள் குறித்த கவலையில்லாமல் இப்படியான பயணம் ஒன்றை நீங்களும் மேற்கொள்ள நினைத்தால் IRCTC தளம் வழி பயண ஏற்பாடுகளை செய்து கொள்ளலாம்.  சென்னையிலிருந்து கூட சில பயணங்கள் இருக்கின்றன.  இந்தத் தகவல்கள் உங்களில் சிலருக்கு முன்னரே தெரிந்திருக்கலாம்.  இந்தப் பதிவில் சொல்வது தெரியாதவர்களுக்காக!

 

******

 

இந்த வாரத்தின் தள அறிமுகம் - சிறுகதைகள்.காம் :

 

சொல்வனம் தளத்திற்கு அடிக்கடி செல்வது போலவே சிறுகதைகள்.காம் எனும் தளத்திற்கும் அவ்வப்போது செல்வதுண்டு.  பல தின/வார/மாத இதழ்களில் வந்த கதைகளும் வேறு சில கதைகளும் இந்தத் தளத்தில் படிக்கக் கிடைக்கிறது.  அம்புலிமாமா-வில் வந்த கதைகள் கூட இந்த இதழில் படிக்கக் கிடைக்கிறது என்பது கூடுதல் மகிழ்ச்சி.  பல வருடங்களுக்குப் பிறகு அம்புலிமாமாவில் வந்த சில கதைகளை என்னால் படிக்க முடிந்தது.  நீங்களும் இந்தத் தளத்திற்குச் சென்று கதைகளை வாசிக்கலாம்.  

 

******

 

இந்த வாரத்தின் கதை மாந்தர் - பச்சை :

 

எனக்குத் தெரிந்த ஒரு குடியிருப்பில் இருக்கும் வீடு ஒன்றில் கணவன்-மனைவி என இரண்டு பேர் மட்டுமே வசிக்கிறார்கள்.  கணவன் மட்டுமே வீட்டை விட்டு வெளியே சென்று வெளி வேலைகளை பார்த்துக் கொள்வார்.  மனைவி எதற்கும் வீட்டை விட்டு வெளியே செல்வதே இல்லை.  பால்கனிக்குக் கூட அவர் வருவது இல்லை. அப்படி வந்தாலும் அது வேறு ஒருவருக்கும் தெரியாத மாதிரி பால்கனி முழுவதும் பச்சை வண்ண துணி/போர்வையால் மூடி வைத்திருக்கும்.  எப்போதாவது அந்த கணவர் மட்டும் வெளியே வருவதும், குடியிருப்பில் யாருடனும் பேசாமல் இருப்பதும் குடியிருப்பில் இருப்பவர்கள் அனைவருக்குமே ஒரு புதிர்.  அவரிடம் யாரும் பேசினாலும் எப்போதுமே சண்டையில் தான் முடியும்.  அவராகவே ஒதுங்கி ஒதுங்கிச் சென்று விடுவார், இல்லை என்றால் பார்க்கும் மற்றவர்கள் ஒதுங்கிச் சென்று விடுவார்கள்.  அவர்களுக்கு உலகில் யாரையுமே பிடிக்காத மாதிரி ஒதுங்கி ஒதுங்கி செல்வது பார்க்கும்போது, என்னைப் பொறுத்தவரையில்  ஒருவிதத்தில் பாவமாகவே இருக்கும்.  என்னதான் பிரச்சனை அவர்களுக்கு? ஏன் இப்படி ஒதுங்கியே இருக்கிறார்கள்? என பல பதில் தெரியாத கேள்விகள்.  என்ன தான் சக மனிதர்களை பிடிக்காது என்றாலும் கடைசியில் நான்கு பேராவது வேண்டுமே?

 

******

 

இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து….

 

19 கருத்துகள்:

  1. இந்த கடன் கொடுத்து மனா அமைதி இழக்கும் வழக்கம் என்னிடமும் இருக்கிறது.  நானும் சிலருக்கு சில சிறிய தொகைகள் வராது என்று நினைத்தே கொடுப்பேன்.  வந்தால் லாபம்.

    திருவெள்ளறை பெருமாள் கோவில் பார்க்கும் ஆவல் வருகிறது.  என் கமெண்ட்டும் அங்கே இருக்கிறது!

    கதை மாந்தர் பகுதியில் வருக ஜோடி அதிசயம்.  அநேகமாக அந்த ஆணுக்கு நேர்மாறான குணமுடையவராக இருப்பார் அந்தப் பெண்மணி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வந்தால் லாபம் - அதே தான் ஸ்ரீராம். திருவெள்ளரை கோவில் - முடிந்த போது சென்று வாருங்கள். பதிவின் பகுதிகள் குறித்த தங்களது கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  2. நானும் சமீபத்தில் ஓர் முக்கிய உறவின் அவசர செலவை அறிந்து நானாக கேட்டு உதவினேன்.

    ஒரு வாரத்தில் தருவேன் என்றவர் இதோ ஒரு மாதம் கடந்து விட்டது. அம்மா இறந்ததால் பணம் வேண்டுமென்று கேட்டேன். மூன்றில் ஒரு பங்கு கொடுத்தார்.

    பிறகு கிரிகை செலவுக்கு அழுத்தி கேட்டும் இதோ என்றவர் அலைபேசியை எடுக்கவே இல்லை.

    இவரை நம்பி நான் கிரிகை நடத்தினால் என்ன ஆகி இருக்கும் ?

    முக்கிய உறவு என்பதால் அமைதியாக இருக்கிறேன். எனது ராசியே இப்படித்தான் பணம் கொடுத்ததும் பகையாகும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் அப்பா சின்ன வயசிலிருந்தே எனக்குச் சொன்ன அறிவுரை... நண்பன் கடன் கேட்டால் 2 ரூபாய்க்கு மேல கொடுக்காதே (அப்போ உள்ளதுக்கு. இப்போ 50-100 ரூ), பெரும்பாலும் திருப்பித்தர மாட்டான். உனக்கும் அனுபவம் கிடைக்கும், அதுக்கு அப்புறம் யாருக்கும் கடன் கொடுக்கமாட்டாய் என்றார்.

      நீக்கு
    2. பணம் கொடுத்ததும் பகை - நம்மில் பலருக்கும் இந்த அனுபவம் கிடைத்திருக்கிறது என்பது உண்மை தான் கில்லர்ஜி. ஆனாலும் மீண்டும் மீண்டும் இப்படி கொடுத்துக் கொண்டே இருக்கிறோம் என்பதையும் ஒப்புக் கொள்ள வேண்டும்.

      தங்களது அனுபவங்களையும் இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
    3. ’’நண்பன் கடன் கேட்டால் 2 ரூபாய்க்கு மேல கொடுக்காதே” - நல்ல அறிவுரை தான் நெல்லைத் தமிழன். பல சமயங்களில் கொடுக்காமல் இருக்க முடிவதில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. வித்தியாசமான கதம்பம். கடன் அன்பை முறிக்கும் என்பது உண்மைதான். ஐஆரசிடிசி உபயோகிக்கும் எண்ணம் இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன். ஐ.ஆர்.சி.டி.சி. தளத்தின் வழி அவர்கள் சேவையை உபயோகிக்கும் எண்ணம் எனக்கும் உண்டு. வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன். வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  5. கடன் கொடுத்து திரும்ப கிடைப்பது என்பது அதிசய நிகழ்ச்சி தான் எங்களுக்கும் அனுபவம் உண்டு வேண்டாம் என்றே விட்டு விட்டோம்.
    கோவிலும் படிகள் வாயில்கள் தத்துவமும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடன் அனுபவம் - உங்கள் அனுபவங்களையும் இங்கே சொன்னதற்கு நன்றி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி மாதேவி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  7. கடன் கேட்டு கொடுக்கவில்லை யென்றாலும் பகைதான், கொடுத்த கடனை கேட்டாலும் பகைதான். "கொடுத்ததை கேட்டால் அடுத்தது பகை"
    என்ற பழ மொழியே இருக்கிறது.

    திருவெள்ளறை பெருமாள் செய்திகள் அருமை.
    கதை மாந்தரில் நீங்கள் சொன்னது போல நிறைய இருக்கிறார்கள்.




    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடன் குறித்த பழமொழி நன்று. மீண்டும் படிக்கத் தந்தமைக்கு நன்றி. பதிவு குறித்த தங்கள் கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  8. காஃபி வித் கிட்டு பகுதியில் சொல்லப்பட்ட அனைத்தும் அறுமை.
    கடனே கொடுக்காமல் வாழ்வை ஓட்டிவிடுவதும் அசாத்தியமே.
    அதிலும் உயர் அதிகாரி திடீரென்று கேட்கையில் தர்மசங்கடமான நிலையிலேயே மாட்டிக்கொள்வோம்.
    கடன் கொடுத்து திரும்ப வராதது வீட்டில் உள்ளோருக்கும் தெரிந்துவிட்டால் இன்னும் கஶ்டம்தான்.
    விரைவில் திரும்பி கொடுப்பார் என னம்புவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடன் குறித்த தங்கள் எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி அரவிந்த். தொடர்ந்து வாசித்து உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளும் தங்களுக்கு மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  9. கடன் அன்பை முறிக்கும் தான் என்னதான் அனுபவங்கள் வந்தாலும் பல சமயங்களில் தர்மசங்கடமான நிலைதான்.

    திருவெள்ளறை கோயில் சுட்டி சென்று வாசித்தேன். ஸ்வஸ்திக் கிணறு பார்க்க முடியாமல் போனது வருத்தம், இப்படி வணங்க வேண்டும் என்று சொல்லியிருப்பது புது தகவல். வேறு கோயில்களில் இப்படி இருக்குமா என்று தெரியவில்லை

    கீதா

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....