அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த
நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட ராசாவே உன்னை நான் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக
நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன்
தொடங்கலாம் வாருங்கள்.
பயணம் செய்யுங்கள் - பயணத்திற்காக நீங்கள் செய்த
செலவு உங்களிடம் வேறு வடிவில் திரும்பி வரும்.
பயணம் செய்யாமல் வீணாக்கிய நேரம் நிச்சயம் திரும்பி வராது!
******
நதிக்கரை நகரங்கள் - பகுதி ஒன்று இங்கே.
நதிக்கரை நகரங்கள் - பகுதி இரண்டு இங்கே.
நதிக்கரை நகரங்கள் - பகுதி மூன்று இங்கே.
நதிக்கரை நகரங்கள் - பகுதி நான்கு இங்கே.
நதிக்கரை நகரங்கள் - பகுதி ஐந்து இங்கே.
நதிக்கரை நகரங்கள் - பகுதி ஆறு இங்கே.
நைமிசாரண்யம் சென்றதும் காலை வேலைகளை முடித்துக்
கொண்டு காலை உணவு சாப்பிட்ட பிறகு புறப்படலாம் என்று சொன்னபோது எங்கள் அன்றைய
சாரதி வழியில் வேறு இடத்தில் சாப்பிடலாம் என்று சொல்லி இருந்தார். சென்ற பகுதியில் ததீச்சி குண்ட் சென்று தரிசனம் செய்த பிறகு அந்த சிறு
ஊரில் இருந்த ஒரு உணவகத்திற்கு எங்களை அழைத்துச் சென்றார். உணவகத்தினை வெளியிலிருந்து பார்க்கும்போதே அப்படி ஒன்றும் சுவாரஸ்யமாக
தெரியவில்லை. சுத்தமாகவும் இல்லை என்பதால் நண்பரின் இல்லத்தரசிக்கு கொஞ்சம் யோசனை -
இந்த இடத்தில் எப்படி சாப்பிடுவது என்று!. அதை சொல்லவும் செய்தார்! ஆனாலும் வேறு வழியில்லை. வயிறு வேறு க்வான் க்வான் என்று சப்தம் எழுப்பிக்
கொண்டிருந்தது. வந்தது வரட்டும் என உள்ளே நுழைந்துவிட்டோம். வாயிலில் கண்ணாடி அறைக்குள் கஸ்தி கச்சோடி, பூரி, சமோசா என எண்ணையில்
குளித்த பதார்த்தங்கள் அடுக்கி வைத்திருந்தார்கள். அதை பார்க்கும்போதே “இதையா
காலை உணவாக சாப்பிடுவது?” என யோசனை.
உள்ளூர் கடையில் இருக்கும் சிப்பந்திகள், அழுக்கு
உடையில் வந்து எதோ வேண்டா வெறுப்பாக “இட்லி வடை சாம்பார், பொங்கல்” என
இழுக்கும் நம் ஊர் ஹோட்டல் சிப்பந்தி போலவே “சமோசா, கஸ்தி கச்சோடி, பூரி,
பராட்டா” என்று ஒரு வித மந்தகாசப் புன்னகையுடன் சொல்லிக் கொண்டிருந்தார். அடுக்கடுக்காகச் சொன்ன பதார்த்தங்களில் பராட்டா மட்டுமே எங்களைக்
கவர்ந்தது. சரி என அவரிடம் ஆளுக்கு ஒரு உருளைக்கிழங்கு பராட்டாவும், தொட்டுக்கொள்ள
தயிரும், சாப்பிட்டு முடித்தபின் உண்டதை ஜெரிக்க ஆளுக்கு ஒரு தேநீரும் சொன்னோம்
கூடவே ஓட்டுநருக்கும்! சில நிமிடங்கள் காத்திருக்க
வேண்டியிருந்தது. பொதுவாகவே இது போன்ற வட இந்திய ஊர்களில்
இருக்கும் நபர்கள் வெளியூர் வாசிகள் என்றால் ஒரு வித ஆச்சர்ய மனோபாவத்துடன் தான்
பார்ப்பது வழக்கம் - எங்கேயிருந்தோ இங்கே வரை வந்து பார்க்க இவர்களுக்கு எப்படித்
தோன்றியது? இங்கே அப்படி என்ன தான் இருக்கிறது? என ஒரு விதமாகவே பார்ப்பது
வழக்கம். அதே ஊரில் இருப்பவர்களுக்கு அந்த இடத்தின் மதிப்பு தெரிவதில்லை - அப்படியே
தெரிந்தாலும் அது பெரிய விஷயமாக தெரிவதில்லை.
பத்து நிமிடங்களுக்கு மேல் காத்திருந்த பின்னர்
நாங்கள் சொன்ன உருளைக்கிழங்கு பராட்டாவும் தொட்டுக்கொள்ள தயிரும் வந்தது. கூடவே
தேநீரும் தரவா என்று கேட்க, முதலில் இதை சாப்பிட்டு விட்டு பின்னர் வேண்டும் போது
சொல்கிறோம் என சொன்னோம். வடக்கில் சிலர் பராட்டாவை தேநீருடன்
சாப்பிடுவது வழக்கம் - அப்படி சாப்பிடுபவர்கள் தயிர் தொட்டுக்க கொள்ள மாட்டார்கள். சுடச்சுட வந்த உணவு நன்றாகவே இருந்தது. தந்தூரியில் செய்து
இருப்பார்களோ என்று சொல்லும் அளவு தடிமனாக இருக்க, “இல்லை இல்லை, தவாவில்
செய்தது தான்! உங்களுக்கு தந்தூரி பராட்டா
வேண்டுமென்றால் முதலிலேயே சொல்லி இருக்க வேண்டும்” என்றார். உணவகத்தின் முதலாளி “எல்லாம் வேலையாட்கள் பார்த்துக்
கொள்வார்கள்” என்ற போக்கில் கல்லாவில் உட்கார்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்! சில நிமிடங்கள் நாங்கள் வாய்க்கும் கைக்கும் சண்டையிட, கல்லாவிற்கும்,
கடைக்கும் பூஜை செய்ய ஒருவர் வந்து சேர்ந்தார். அப்போது கூட முதலாளி
சற்றே தள்ளி அமர்ந்து கொண்டு “நீ உன் வேலையை பாரு ராசா!” என்று மெத்தனமாக
இருந்தார்.
கடையில் நிறைய வாடிக்கையாளர்கள் இல்லை. சிலர் வருவதும் போவதுமாக இருந்தார்கள். எங்களைத் தவிர
ஒன்றிரண்டு பேர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். சாப்பிட்டு முடித்து காய் கழுவும் இடம் பார்த்தால் அப்படி ஒரு Gகலீஜ்!
பராமரிக்கப்படாமல் அழுக்கு! சுத்தமாகவே இல்லை! அங்கேயே பாத்திரங்கள் கழுவுவதும்,
பான் குதப்பி துப்புவதும் என பார்க்கவே அசிங்கமாக இருந்தது. அடடா… “என்ன கொடுமை சரவணா?” மொமெண்ட் எங்களுக்கு! வேறு வழியில்லை. ஓட்டுநர் சொல்கிறாரே என்று நம்பி வெளியே
சென்று சாப்பிடலாம் என்றால் சில சமயங்களில் இப்படியான இடங்களில் நீங்கள்
மாட்டிக்கொள்ளக் கூடும். நல்ல வேளையாக, சாப்பிட்ட உணவு எங்களை
எதுவும் செய்யவில்லை. வயிற்றுக்குக் கேடு செய்யாதவரை நல்லதே! தேநீரும் வர, நன்றாக
இருந்த அந்த தேநீரை குடித்து விட்டு (எப்போதுமே எண்ணெய் சேர்த்த பதார்த்தங்கள்
சாப்பிட்டால் இப்படி தேநீர் அருந்திவிட்டால் நல்லது என்று வடக்கில் சொல்வதுண்டு!)
மூன்று பேருக்கும் சாப்பிட்டதற்கான கட்டணம் எவ்வளவு என்று கேட்டோம். அதிகமில்லை லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன்…. 280 ரூபாய் மட்டுமே!
காலை உணவு இப்படியாக அமைந்தது என்றால் மதிய உணவு
எப்படி இருக்கப் போகிறதோ என்ற எண்ணம் எனக்குள் இருந்தது. “அதையும் ஒரு கை பார்த்துவிடலாம், உனக்காச்சு எனக்காச்சு” என்று
திடமான மனதுடன் அந்த உணவகத்திலிருந்து வெளியே வந்தேன். வெளியே ஒரு முதியவர் ஏதேதோ ஜடி Bபூட்(t)டி என்று சொல்லக்கூடிய மரம்
செடி கொடிகளிலிருந்தும், காடுகளிலிருந்தும் தயாராக்கும் மருந்துப் பொருட்களை
விற்பனைக்கு வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தார். கிராமத்து மக்களுக்கு
இந்த மாதிரி பொருட்களில் அதிக நம்பிக்கை உண்டு. நான் சும்மா வேடிக்கை
பார்த்ததோடு சரி. ஏதேதோ பொருட்கள், வித்தியாசமான வண்ணங்களில், வடிவங்களில்
பொருட்கள். என்னவென்று கேட்டு, அதை வாங்கிக் கொண்டே ஆகவேண்டும் என்று சொல்லி
விட்டால்… அதனால் வேடிக்கை மட்டுமே! பேச்சுக் கொடுக்கவே இல்லை! எல்லாம் ஒரு
முன்ஜாக்கிரதை தான்! ஹாஹா… காலை உணவினை
முடித்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டோம். அடுத்ததாக நாங்கள் சென்ற இடம் என்ன,
அங்கே என்ன சிறப்பு, அங்கே கிடைத்த அனுபவங்களென்ன போன்ற தகவல்களை வரும் பகுதியில்
சொல்கிறேன். அடுத்த பகுதியில் சந்திக்கலாம். தொடர்ந்து பயணத்தில் இணைந்து இருங்கள்
நண்பர்களே.
*****
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை
பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும்
சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லியிலிருந்து….
அதைப் பார்த்தால் பரோட்டா போலவே இல்லை என்பதோடு தயிர் என்ன கருப்பு நிறத்தில் இருக்கிறது! வெள்ளையாக இருப்பது வெங்காயம்தானே?
பதிலளிநீக்குபரோட்டா - சின்னச் சின்னதாக வெட்டப்பட்டு இருக்கிறது. தயிர் தனிக் கிண்ணத்தில் தான் தருவார்கள். கருப்பு நிறத்தில் - இல்லை அது பச்சை - கொத்தமல்லி, தனியா சேர்த்து அரைத்த சட்னி அது! ஹாஹா... தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குஎப்படியோ.. உணவு கிடைத்ததே... நல்லவேளை... முதலில் குழாயில் கைகழுவிவிட்டு உட்காரலாம் என நினைத்திருந்தால் எஆலைச் சாப்பாட்டை மதியம்தான் சாப்பிட நேர்ந்திருக்கும்.
பதிலளிநீக்குஅது சரி.. கச்சோரிலாம் எப்போ பொரித்திருப்பார்கள்? அழகாக அடுக்கியிருக்கிறார்கள்.
ஆமாம் - நல்ல வேளை உணவு கிடைத்தது. காலை சாப்பாட்டை மதியம் தான் சாப்பிட வேண்டிட நேர்ந்திருக்கும் - சில பயணங்களில் அப்படியும் நடந்ததுண்டு நெல்லைத் தமிழன்.
நீக்குகச்சோரி எப்போது பொரித்து இருப்பார்கள் - தொடர்ந்து பொரித்துக் கொண்டே தான் இருந்தார்கள். அடுக்கி இருப்பது அழகாகவே இருக்கிறது.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
மட்டுமே + வெங்கோலன் வரி...?
பதிலளிநீக்குவரிகள் இல்லை! தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குபயணம் என்று போனால் எல்லா இடங்களிலும் நல்ல உணவை எதிர்பார்த்து இருக்க முடியாது.
பதிலளிநீக்குபயணங்களில் எல்லா இடங்களிலும் நல்ல உணவு கிடைக்க வாய்ப்பில்லை - எதிர்பார்க்கவும் முடியாது தான் கில்லர்ஜி! தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வாசகம் அருமை. பதிவும் நன்றாக உள்ளது. உணவு படங்கள் பார்க்க அழகாகத்தான் உள்ளது. உணவு கூடம் நன்றாக பராமரிக்கபடவில்லை என்றால், அந்த இடங்களில் சாப்பிட சற்று தயக்கந்தான் எழும். ஆனால் ஒன்றுமே சரியாக அமையாத அந்த ஊரில் வேறு வழியுமில்லை. அடுத்து எங்கு சென்று எந்த கோவில்களை /இடங்களை கண்டு கொண்டீர்கள் என அறிய ஆவலாக உள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.
நீக்குவாசகமும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. பதிவு குறித்த தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. தொடர்ந்து வாசிக்க வேண்டுகிறேன்.
'சுத்தமே இல்லை ' சென்ற இடத்தில் சிரமம் தான். வயித்துக்கு பிரச்சினை வராத வரை தப்பினீர்கள்.
பதிலளிநீக்குவயிற்றுக்கு பிரச்சனை வராத வரை மகிழ்ச்சியே! ஆனால் வரவும் செய்தது. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.
நீக்குபயணத்தில் நீங்கள் பல பதிவுகளில் சொல்லியிருப்பது போல உணவைப் பற்றி ரொம்பக் கவலைப்பட்டால் பயணமே செய்ய முடியாதுதான், ஜி எப்படியோ வயிற்றிற்கு ஒன்றும் செய்யாத பதார்த்தம் கிடைத்ததே. அதுவே பெரியவிஷயம் கூடவே தேநீர். ஒரு வேளைக்கானது முடிந்தது. சிறிய கடை ஆனால் விலை அதிகமோ?
பதிலளிநீக்குகீதா
மேலே இருப்பதைப் பூரி என்று நினைத்தேன். உங்கள் குறிப்பு பார்த்து அது கஸ்தி கச்சோடி என்று இதுவரை அறிந்திராது சுவைத்திராததைத் தெரிந்துகொண்டேன். கீதா அது என்ன என்று விளக்கினார்.
பதிலளிநீக்குகாலையில் எண்ணைய் சார்ந்த உணவுளைத் தவிர்ப்பது நல்லதுதான்.
நான் பதிவு வாசிக்க பல சமயங்களில் உடனே வர இயலாமல் கொஞ்சம் தாமதமாகத்தான் வாசிக்க முடியும் என்றிருந்தாலும், இப்போது நீங்கள் எழுத மனமில்லை என்று சொல்லியதை அறிந்தேன். நன்றாக எழுதும்நீங்கள் (உங்கள் மனைவியும்) நிறுத்தியது கொஞ்சம் வருத்தம்தான்.
துளசிதரன்