செவ்வாய், 14 ஜூன், 2022

ராசாவே உன்ன நான்… - சிறுகதை - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

யாருடைய அன்பையும் பெற்றுவிட்டதாக பெருமை கொள்ளாதீர்கள்… மாறும் குணம் மனிதர்களுக்கே உரித்தானது!  

 

****** 

அம்மா!   அம்மா!

 

டங் டங் டங்…!

 

வீட்டுக் குப்பைகளை சேகரிக்கும் வண்டியின் சப்தம் கேட்டது.

 

இந்தாம்மா குப்பை!

 

தெனமும் சொல்றேனேம்மா! இன்னும் ஒத்துழைக்க மாட்டேங்கிறீங்களே!

 

அது..! அது..! 

 

நா மட்டும் புரிஞ்சுகிட்டா போதுமா! வீட்டுல யாரும் கேட்க மாட்டேங்கிறாங்க! என்ன செய்ய!

 

அப்புறம் வீட்டுக்கு வர விருந்தாளிங்க கிட்டல்லாம் சொல்லிட்டிருக்க முடியுமா! கோச்சுக்க மாட்டாங்களா!!

 

சரி! உன் பேச்சுக்கே வரேன்! நாங்களே பிரிச்சு கொடுத்துட்டா அப்புறம் உனக்கு என்னம்மா வேல?? எதுக்கு உனக்கு சம்பளம்??

 

பதிலேதும் சொல்லாமல் புன்னகையுடன் கடந்தாள் மீனா!

 

மீனா துப்புரவு பணியாளராக பணிபுரிகிறாள். அவள் கணவன் சரவணனும் துப்புரவு பணியில் தான் இருந்தான். பணிபுரியும் இடத்தில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட மாரடைப்பில்  இறந்து விட மீனாவுக்கு இந்த வேலை தரப்பட்டது.

 

இவர்களின் குழந்தை தினேஷுக்கு இரண்டு வயது.  கணவனின் மறைவுக்கு பின்னர் அம்மா வீட்டில் வசிக்கும் மீனா, அங்கே தன் அம்மாவிடம் தினேஷை விட்டுவிட்டு தான் வேலைக்கு வருவாள்!

 

வேலைக்கு சேர்ந்த நாள் முதலாக இப்படி எத்தனையோ விதமான மனிதர்களை பார்த்து வருகிறாள். தன் தவறை உணர்ந்து கொள்ளாதவர்களும், அலட்சியமாக இருப்பவர்களும், விழிப்புணர்வு இல்லாதவர்களும் என விதவிதமான மனிதர்கள்.

 

அம்மா! அரசாங்கம் சொல்ற வழிமுறைய ஃபாலோ பண்ணுங்கம்மா! 

 

மக்கும் குப்பைன்னா உங்க வீட்டு காய்கறி, பழங்களோட தோல், சாமிக்கு சாத்துன பூவு இப்படி..

 

மக்காத குப்பைன்னா பிளாஸ்டிக் கவர்கள், பேப்பர், பிளாஸ்டிக் டப்பா இதெல்லாம்..

 

குழந்தைங்க டயப்பர், லேடீஸ் நாப்கின் இதெல்லாம் தனியா போடணும்மா!

 

கண்ணாடிப் பொருட்களையும் தனியா குடுக்கணும்மா!

 

இப்படி பிரிச்சு குடுத்தீங்கன்னா அரசாங்கம் அதை உரமா மாத்தறதுக்கும், மறுசுழற்சி செய்யறதுக்கும் உதவியா இருக்கும்! நம்ம மண்ணுக்கும் நல்லதும்மா!

 

என்று வாய்ப்பு கிடைக்கும் இடங்களிலெல்லாம் மக்களுக்கு சொல்லிக் கொண்டே தான் இருப்பாள் மீனா. 

 

அதைப் புரிந்து கொண்டு பின்பற்றுவோரும் உண்டு! காதிலேயே வாங்கிக் கொள்ளாதோரும் உண்டு! 

 

கணவனின் இழப்பு, தன்னந்தனியே ஓட்ட வேண்டிய வாழ்க்கை, அதிலிருக்கும் சவால்கள், செலுத்த வேண்டிய கடன் தொகைகள், குழந்தையின் எதிர்காலம் என வாழ்வின் சிக்கல்கள் ஏராளமாய் இருந்தாலும் அதையெல்லாம்  ஒரு ஓரமாய் வைத்து விட்டு புன்னகையுடன் பணிக்கு வந்துவிடுவாள் மீனா.

 

ராசாவே உன்ன நான் எண்ணித் தான்! பல ராத்திரி மூடல கண்ணத் தான்! ஏ பூ வெச்சேன் பொட்டும் வெச்சேன் வாழத் தான்! நா பூவோடு நாரப் போல சேரத் தான்!

 

மனசுக்கு மட்டும் கேட்கும் படி அவளுக்கு பிடித்த பாடல்களை பாடிய படி வேலையை செய்து கொண்டிருப்பாள்.

 

ரோட்ட சுத்தம் செய்யறதோட என் வேலை முடிஞ்சிடாது! என்னால முடிஞ்ச அளவு எல்லார் மனசையும் கூட சுத்தப்படுத்தணும்! ஒத்துழைப்பு குடுக்க வெக்கணும்!

 

அம்மா! அம்மா!

 

டங்..டங்..டங்!

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

14 கருத்துகள்:

 1. நல்ல கதை.  இதுதான் ஆரம்பத்தில் பேஸ்புக்கில் எழுதிய முதல் கதையோ..  பின்னர் நிறைய வந்து விட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஃபேஸ்புக்கில் இன்னமும் சில கதைகள் முன்னரே வந்திருக்கிறது ஸ்ரீராம். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

   நீக்கு
 2. குட்டிக்கதை சிறப்பாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 3. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி தனபாலன்.

   நீக்கு
 4. உண்மை அருமை. மனதையும் சுத்தப்படுத்தத்தான் வேண்டும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சுத்தமான மனது இருந்து விட்டால் எல்லாம் சுகம்! தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 5. கதை அருமை. முகநூலில் படித்து இருக்கிறேன்.
  கதையை எளிமையாக சொல்லிய விதம் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முகநூலிலும் இங்கேயும் கதையைப் படித்து கருத்துரைத்த உங்களுக்கு மனம் நிறைந்த நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 6. வணக்கம் சகோதரி

  வாசகம் அருமை. பதிவின் கதையும் நன்றாக உள்ளது. மனதின் சுத்தமும் முக்கியம். அதை நன்றாக தெளிவுபடுத்தும் மாதிரி தாங்கள் எழுதிய கதைக்கு மனமார்ந்த வாழ்த்துகள். கதை பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி. வாசகமும் கதைப் பகிர்வும் உங்களுக்கும் பிடித்ததாக அமைந்ததில் மனம் மகிழ்ச்சி கொண்டது. நன்றி.

   நீக்கு
 7. குட்டிக்கதை முக்கியத்துவமும் கூட. அழகாக சொல்லியுள்ளீர்கள் மனசுத்தம் வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மனதில் சுத்தம் இருந்தால் எல்லாம் நன்மையே... தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி மாதேவி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....