அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு
பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட நதிக்கரை நகரங்கள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக
நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன்
தொடங்கலாம் வாருங்கள்.
எதைத்
தொடங்கினாலும் நம்பிக்கையோடு தொடங்குங்கள். நம்பிக்கை உள்ளவர்களால் மட்டும் தான்
வெற்றிக்கனியை ருசிக்க முடியும்.
******
இந்த
வாரத்தின் எண்ணங்கள் - கூட்டுக்குடும்பமும் பாசமும் :
சமீபத்தில் ஒரு நாள் திருவரங்கத்தில் இருந்த போது அரங்கனின் கோவில் உள்
வழியே கடைவீதிக்கு சென்று வந்தேன். திரும்பி வரும்போதும் அப்படியே
கோவிலுக்குள் நுழைந்து பின்பக்க வாயில் வழியாக வெளியேறினேன். அப்போது என் முன்னர் ஒரு முதிய பெண்மணி தனது இரண்டு பேரக்குழந்தைகளுடன்
நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் பேசிய விஷயம் ராஜா காது
கழுதைக்காது பகுதிக்கு உரியது என்றாலும் அவர் பேசிய விஷயம் மனதை நெருடியது. எத்தனையோ குடும்பங்களில் இந்த நிலை தான் என்பதும் மனதுக்குள் தோன்றியது.
முதலில் அவர் பேசியதை கவனிப்போம்.
“இப்பவே
கொஞ்சம் கொஞ்சமாக எல்லாம் மாறிக்கொண்டு இருக்கிறது. ஏதோ இந்த வருடம் லீவுக்கு
பாட்டி வீட்டுக்கு வந்து இருக்கீங்க! அடுத்த வருஷம் வருவீங்களோ மாட்டீங்களோ ! வர
முடியாதுன்னு அப்பா, அம்மா கூடவே இருந்துடுவீங்க!
இப்ப எல்லாம் அப்படித்தானே நடக்குது. “
அந்த முதிய பெண்மணி கூறிய விஷயம் நிச்சயம் சிந்திக்க வேண்டிய ஒரு விஷயம்
தான். பல வீடுகளில் தாத்தா பாட்டிகள் தனியே இருக்கத்தான் ஆசைப்படுகிறார்கள்
என்றால் பல வீடுகளில் தாத்தா பாட்டியை தனது வீட்டில் வைத்துக்கொள்ள மகன்/மருமகள்
விரும்புவதில்லை. எல்லோருமே தனித்தனியே, தத்தமது
விருப்பப்படியே இருக்க ஆசைப்படுகிறார்கள். யாரும் எதற்கும் விட்டுக்கொடுக்க
விரும்புவதில்லை. “நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்”
என்பதெல்லாம் காற்றோடு போன விஷயமாகி விட்டது என்று தான் தோன்றுகிறது.
******
இந்த
வாரத்தின் ரசித்த கவிதை - தவம் :
வல்லமை இணைய இதழில் படித்து
ரசித்த ஒரு கவிதை உங்கள் பார்வைக்கு…
தவம்
எப்போதோ ஓடின ரயில் தடக்கென இன்றோடும்
எந்நாளோ ரணமான காயங்கள் சட்டென வலிக்கும்
தேய்ந்து போய் நின்ற பாடல்கள் செவியில் அலைபாயும்
கொள்ளி வைத்த உடல்களின் அனல் உடலில் அறையும்
கூர்ப்பான மனத்தில் உடல் ரோமம் உயிர்ப்பெடுக்கும்
கனவுகளைத் தின்று விட்டு கட்டில் இருளுக்கு நிற்கிறது .
மரங்களும் செடிகளும் பார்த்தே வளர்ந்துவிட்டன
சுவரில் செருகி நின்ற அட்டைப் பூச்சியும் இடம் மாறியது
எந்த இயக்கமும் எதற்காகவும் செயலைத் தள்ளவில்லை
நானும் நேரமும் சேர்ந்தே நிற்கிறோம் என்றென்றும்
ஆனாலும் அது நகர்வது போல நான் நகர முடியவில்லை
இருளில் கொண்டாட்டம், பகலில் கடிகார முள்ளில் கண்
எந்தக் கூட்டத்திலும் நான் மட்டும் தனியனாக நிற்கிறேன்
நெருங்க முயல முடியாமல் தோற்றுப் போகிறேன்
இழப்பில்லை எனக்கு ஓர் உலகம் எப்போதும் இருக்கிறது
தனித்திருப்பது தவமெனப் புரிந்து,எனக்குள் இருப்பது சுகம்
பாஸ்கர் சேஷாத்ரி
******
பழைய
நினைப்புடா பேராண்டி: ”ஏண்டி என்ன பெத்த?”
2014-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - ”ஏண்டி என்ன பெத்த?” - அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.
தீபாவளி
சமயத்தில், தனது புதுப் புடவையைக் கட்டிக்கொண்டு அடுக்கு மாடி குடியிருப்பின்
அனைத்து வீடுகளிலும் சென்று காண்பித்து “என்னோட புதுப்புடவை நல்லா இருக்கா?” என்று
கேட்பார். ”உங்க வீட்டுல என்ன பலகாரம்? எனக்குத் தரமாட்டியா” என்று கேட்டு தரும்
வரை அந்த வீட்டிலிருந்து நகரமாட்டார். வாங்கி அதை புதுப் புடவையின் தலைப்பில்
முடிந்து கொண்டு அடுத்த வீட்டுக்கு நகருவார். அடுத்த வீட்டிலும் இந்த பலகாரம்
சேகரிப்பு தொடரும் – அவர் வீட்டுக்குத் திரும்புவதற்குள் புதுப்புடவையின் தலைப்பு
முழுவதும் பல வீடுகளின் பலகாரங்கள் நிறைந்திருக்கும்.
தீபாவளி
சமயத்தில் என் காமிராவில் புத்தாடைகளில் குடும்பத்தினரை புகைப்படம் எடுத்துக்
கொண்டிருந்தபோது எங்கள் வீட்டுக்கு வந்தார் அவர். “எல்லோரையும் ஃபோட்டோ
எடுக்கறியே, என்னை எடுக்கக் கூடாதா?” என்று கேட்க, அவரையும் ஒரு புகைப்படம்
எடுத்தேன்.
“இரு இரு, நான் கொஞ்சம் புடவையெல்லாம் சரி செய்து கொண்டு அழகாயிடறேன்,
அதுக்கப்பறம் ஃபோட்டோ எடு” என்றார்.
இப்படி
எல்லோரிடமும் பழகும் அவருக்கும் அவரது அம்மாவிற்கும் எப்போதும் சண்டை தான். “ஏன்
இந்த மாதிரி வீடு வீடா போய் எதையாவது வாங்கிட்டு வரே?, எனக்கப்புறம் உன்னை யார்
பார்த்துக்கப் போறாங்களோ தெரியலை” என்று வருத்தப் படுவார் வயதான அவரது அம்மா.
கொஞ்சம் மனநிலை சரியில்லாத/ரெண்டுங்கெட்டான் பெண்ணை இத்தனை வருடம் காப்பாற்றி
விட்டாலும் தனக்குப் பிறகு என்ன செய்வது என்ற கவலை அவருக்கு…..
முழு பதிவினையும் மேலே உள்ள சுட்டி வழி படிக்கலாம்!
******
இந்த
வாரத்தின் ரசித்த நிலைத்தகவல் - அன்பு :
எப்போதும்
மறக்காமல் இருப்பது அன்பு அல்ல; என்ன நடந்தாலும் வெறுக்காமல் இருப்பது தான்
உண்மையான அன்பு.
******
இந்த
வாரத்தின் தகவல்கள் - திருவரங்கத்தில் விழாக்கள் - அக்காரவடிசல்
Vs பால் பாயசம்:
திருவரங்கத்தில் இருந்த சமயத்தில் தொடர்ந்து ஏதாவது அழைப்புகள் வந்த வண்ணமே
இருந்தது. அவரவர் வீட்டு திருவிழாக்களுக்கு அழைப்பு வந்தால், அதுவும் நான் இருந்த
சமயத்தில் அழைப்பு வரும்போது செல்லாமல் இருப்பது எப்படி… விழாவில் பங்கு கொண்டதோடு உணவும் அங்கேயே! என்னதான் வடக்கில்
நண்பர்களின் வீட்டு விழாக்களில் பங்கெடுத்தாலும் அங்கே கிடைக்கும் உணவு வடக்கும்
தெற்கும் சேர்ந்ததாக இருக்கும்! வற்றல் குழம்பும் அரிசி அப்பளம் போல, புளியோதரையும்
பனீர் சப்ஜியும் சரியான காம்போ அல்லவே! திருவரங்கத்தில் விழா என்பதால்
பெரும்பாலும் இனிப்பு என்பது பாயாசமாக வாய்ப்பில்லை! எல்லா விழாக்களிலும்
அக்காரவடிசல் தான்! என்னதான் அக்காரவடிசலும் பிடிக்கும் என்றாலும் அவ்வப்போது பால்
பாயசமும் கிடைத்தால் சந்தோஷம் தானே! என் மனதில் ஓடிய இந்த எண்ணம் வீட்டில் சத்தமாக
கேட்டு விட்டதோ என்னமோ, “ஒரு பாயாசத்தை போட்டுட வேண்டியது தான்!” என்று திருமண
நாள் அன்று பால் பாயசம்!
******
இந்த
வாரத்தின் கதை மாந்தர் - பச்சைப் பொய் :
தெரிந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் உண்டு. அவரை அழைத்து காலை எட்டே முக்கால்
மணிக்கு வர வேண்டும் என்றும் ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்று சொல்லி
இருந்தேன். தயாரானவுடன் அழையுங்கள் என்று சொல்லி இருந்தார். தயாரானவுடன் வீட்டு வாயிலுக்குச் சென்று, அவரை அழைக்க, “கீழே வாங்கண்ணா,
நான் கீழே தான் காத்திருக்கிறேன் என்றார்” - அவரை நான் அழைத்ததே கீழே சென்ற பிறகு
தான் என்பது அங்கே இல்லாத அவருக்கு எப்படி தெரியும்! பல சமயங்களில் இப்படித்தான்
பச்சையாக பொய் சொல்கிறார்கள் சிலர்!
******
இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை
பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன். மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள்
அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட்
நாகராஜ்
புது
தில்லியிலிருந்து….
கூட்டுக்குடும்பம் மறையும் சோகம்.. தாத்தா பாட்டிகளின் வருடக்காதிருப்புகள்..
பதிலளிநீக்குபாஸ்கர் சேஷாத்ரியின் கவிதை என்ன சொல்ல வருகிறது என்று யோசிக்கிறேன்.
மனநிலை சரியில்லாத பெண் மனதில் சோகம்.
ஆட்டோக்காரர்கள் பொய் நாடறிந்தது, நானுமறிந்தது!!
பதிவின் பகுதிகள் குறித்த தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு மனம் நிறைந்த நன்றி ஶ்ரீராம்.
நீக்குபாஸ்கர் சேஷாத்ரியின் 'தவம்' கவிதை நன்கு ரசிக்க முடிகிறது.
பதிலளிநீக்குகவிதை குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நெஞ்சார்ந்த நன்றி இராய செல்லப்பா ஐயா.
அனைத்து பகுதிகளும் அருமை...
பதிலளிநீக்குகாஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.
நீக்குநிலைத்தகவல் சிறப்பு...
பதிலளிநீக்குமகிழ்ச்சி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளங்கனிந்த நன்றி தனபாலன்.
நீக்குஇன்றைய கதம்பம் அருமை (கவிதை படிக்கவில்லை). கூட்டுக்குடும்பம்.... அப்பா அம்மாக்கே இடம் இருக்கான்னு தெரியலை... பச்சைப்பொய்-தேவையில்லாத்துக்கெல்லாம்...
பதிலளிநீக்குபதிவின் பகுதிகள் குறித்த தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நெல்லைத்தமிழன்.
நீக்குகவிதை படிக்கவில்லை - ஹாஹா.....
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
பாட்டி சொன்னது மனதை கனக்க வைத்தது ஜி
பதிலளிநீக்குஆட்டோக்காரர்கள் இப்படித்தான் இதோ பக்கத்திலே வருகிறேன் என்பார்கள் அதாவது ஐந்து கி.மீ
பதிவு குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கில்லர்ஜி.
நீக்குஐந்து கிலோ மீட்டர்..... :)
அனைத்து பகுதிகளும் அறுமை.
பதிலளிநீக்குபாட்டியின் வேதனை பலருக்கும் இருக்கிறது.
ஆட்டோகாரர்கள் உன்மை பேசினாலே பல நல்ல வாடிக்கையாளர்கள் கிடைப்பர்.
கதம்பம் அருமை.
பதிலளிநீக்குபாட்டியின் புலம்பல் பல வீடுகளில் கேட்பதுதான். காலம் மாறி விட்டது உண்மை.
எப்போதும் மறக்காமல் இருப்பது அன்பு அல்ல; என்ன நடந்தாலும் வெறுக்காமல் இருப்பது தான் உண்மையான அன்பு. //
அருமை.
எங்கள் ஆட்டோக்காரர் அம்மா கீழே வந்து விடுங்கள் பக்கத்தில் வந்து விட்டேன் என்பார்.
2014 ல் போட்ட பதிவு படிக்கும் போதே நினைவுக்கு வந்து விட்டது.
தனக்குப் பிறகு என்ன செய்வது என்ற கவலை அவருக்கு//
அந்த வார்த்தைகள் மனதை கனக்க வைத்தது அன்றும், இன்றும்.
பாட்டியின் புலம்பல் பல வீடுகளிலும் உள்ளதுதான் சிறு குழந்தையாக இருக்கும்போது உதவிக்கு வைத்துக்கொள்வார்கள் குழந்தைகள்வளர்ந்ததும் ...... காலம் மாறிவிட்டது அவர்களுக்கும் நேரமின்மை என்பது உண்மையே.
பதிலளிநீக்குஆட்டோக்காரரின் பொய் இந்தா வந்து விட்டோம் என்பது.
சுவையான கதம்பம் ! கவிதை சிறப்பு! ஆட்டோக்காரர் சொன்ன பொய்.. வியாபார தந்திரம்.
பதிலளிநீக்குபல பெயரன் பேத்திகள் தாத்தா பாட்டியைக் காண இயலாமல், அறிய இயலாமல்தான் வாழ்கிறார்கள். வேதனை
பதிலளிநீக்குகூட்டுக் குடும்பத்தில் வளர்ந்த எனக்கு அந்நாளைய அனுபவங்களே இன்றும் எதையும் எதிர்கொள்ளும் திறனைத் தருவதாகத் தோன்றும். அந்தக் கட்டமைப்பு கால ஓட்டத்தில் கலைந்து வருவது வருத்தமே.
பதிலளிநீக்குபகிர்ந்த கவிதை அருமை.
தொகுப்பு நன்று.
கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்த எனக்கு நிறைய அனுபவங்கள். அந்த அனுபவங்கள்தான் இப்போது வரை கை கொடுக்கிறது. அதன் பின்னும் பெரிய குடும்பம். ஆனால் இப்போது சிறிதாகி, ஏதோ போன்று இருக்கிறது.
பதிலளிநீக்குதவம் கவிதை - ஏதோ ஒன்று புரிபடவில்லை.
ஏண்டி பெத்த என்ன - வாசிக்கிறேன். நல்ல கதைக்கான கருவாகத் தெரிகிறது...
பால் பாயாசம் - ஆஹா....திருவரங்கம் என்றாலே அக்காரவடிசல்தானோ?
அன்பு - நிலைத்தகவலின் இரண்டாவது பகுதி ஆமாம் அது தான் ஆகச் சிறந்தது ஆனால் பின்பற்றுவது என்பதும் கடினம்.
வெங்கட்ஜி, இது என்ன? ஆட்டோக்காரர் தெரிந்தவராக இருந்தும் இப்படிச் செய்கிறாரே,
கீதா
(துளசியும் கருத்துகள் பல தளங்களின் பதிவுகளுக்கு அனுப்பியிருக்கிறார். கருத்துகள் போவதில் சிரமம் இருப்பதால் நேரம் எடுப்பதால், இனி வரும் பதிவுகளுக்கு அவர் தரும் கருத்துகளைப் போடுகிறேன்.
கீதா
உண்மை தான். இக்காலத்தில் பலரும் தனிமை விரும்பிகளே! அவரவர் ருசி, பழக்கங்களைப் பிறருக்காக என்னதான் பெற்றோராக இருந்தாலும் மாற்றிக் கொள்ள விரும்புவதில்லை. இம்மாதிரித் தான் செல்கின்றன பலருக்கும். ஏண்டி என்னைப் பெத்தே! பெண்மணி மாதிரி ஒரு அறுபது வயது மாத்வப் பெண் நாங்க ரங்கநாதர் கோயிலுக்கு வரும்போதெல்லாம் அவர் குடும்பத்தோடு வருவார். அந்த வயதுக்கும் பொருந்தாதபடி பாவாடை சட்டை அணிந்திருப்பார். அவரைப் பார்க்கும்போதும் எனக்குக் கவலையாக இருக்கும். எங்க குடும்பத்திலேயே இருவரை இதற்கென இருக்கும் காப்பகங்களில் சேர்த்திருக்காங்க.
பதிலளிநீக்கு