திங்கள், 6 ஜூன், 2022

வாசிப்பனுபவம் - இரா. அரவிந்த் - உலகை ஆள்வோரின் ஆற்றல் ஊற்றுகளை எடுத்துக் காட்டும் சேப்பியன்ஸ்

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட யாரிவள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

BEST EXERCISE IS WALKING - WALK AWAY FROM ARGUMENTS THAT LEAD TO ANGER; WALK AWAY FROM THOUGHTS THAT STEAL YOUR HAPPINESS; THE MORE YOU WALK AWAY FROM THINGS THAT DESTROY YOUR SOUL, THE HAPPIER YOUR LIFE WILL BE! 


******


அன்பின் நண்பர்களுக்கு, இந்த நாளில் நண்பர் அரவிந்த் அவர்களின் வாசிப்பனுபவம் ஒன்றினை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.  வாருங்கள் அவரது வாசிப்பனுபவத்தினை வாசிக்கலாம்! - வெங்கட் நாகராஜ், திருவரங்கத்திலிருந்து.


******


உலகை ஆள்வோரின் ஆற்றல் ஊற்றுகளை எடுத்துக் காட்டும் சேப்பியன்ஸ்மனிதனே, தற்போது உலகை ஆள்பவனாகவும், உலகின் எதிர் காலத்தைத் தீர்மானிப்பவனாகவும் இருக்கிறான். அவனை விட உடல் ரீதியாகப் பல மடங்கு சக்தி வாய்ந்த விலங்குகளும், பெரிய மூளையைக் கொண்ட உயிரினங்களும் இருக்க, உலகை ஆளும் ஆற்றல் எப்படி மனிதனுக்குக் கிடைத்தது என்பது பலருக்கும் விளங்காத விந்தையாகவே இருக்கிறது. 


நாம் சார்ந்துள்ள குடும்பம், உறவுகள், சமூகம், சாதி, மதம், கிராமங்கள், நகரங்கள், பேரரசுகள், நிறுவனங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகளின் உருவாக்கம் குறித்தும்,  அவை செயல்படும் விதங்கள் குறித்த தெளிவும் இல்லாமையே பலரைத் தவறான பாதையை நோக்கித் தள்ளவும் செய்கிறது. 


மேற்குறிப்பிட்ட குழப்பங்களுக்கான  தெளிவான விளக்கங்களோடு, நம் எதிர்காலச் சவால்களை எதிர்கொள்ளும் சாத்தியமான வழிவகைகளை விவாதிப்பதே, இஸ்ரேலிய வரலாற்று ஆசிரியர் திரு யுவால் நோவா ஹராரியின் "சேப்பியன்ஸ்" என்னும், தொடராக வந்த, புகழ்பெற்ற மூன்று நூல்கள். 


'மனிதனுக்குக் கற்பனை சக்தி மிச்சமிருக்கும் வரை, இந்த மாய உலகம் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டுக் கொண்டேதான் இருக்கும்' என்றார் வால்ட் டிஸ்னி.


அதற்கேற்ப, நம் மூளையின் அளவு மாறாதபோதிலும், சில ஆயிரம் ஆண்டுகளிலேயே, மனிதனின் ஆற்றல் எப்படி அபரிதமாகப் பெருகியது என்பதை 'அறிவுப் புரட்சி, வேளாண் புரட்சி, அறிவியல் புரட்சி' என்னும் மூன்று கட்டங்களாக விளக்கியிருப்பதே தொடரின் முதல் நூலான 'சேப்பியன்ஸ்'. 


வறுமை, மூப்பு, நோய்கள், மரணம் அனைத்தையும் வெறும் தொழில்நுட்பச்சிக்கலாகப் பார்க்கும் ஆற்றல் மிகு இன்றைய மனிதன், எதிர்காலத்தில் இயந்திரங்களுடன் சேர்ந்த அதிமனிதனாக மாறி, இப்பிரபஞ்சத்தையே புரட்டிப் போடக் கூடிய பிரம்மாண்டத்தை விவாதிப்பதே, இத்தொடரின் இரண்டாம் நூலான 'ஹோமோ டியஸ்'. 


மனிதனின் உடனடிப் பிரச்சனைகளான, தன்னியக்கமாக்கத்தாலும் உயிர் வேதித் தொழில்நுட்பத்தாலும் வேகமாகக் குறைந்துவரும் வேலைவாய்ப்புச் சந்தை, சூழியல் சீர்கேட்டுடன் கூடிய போர்ச்சூழல், தீவிரவாதம், போலிச் செய்திகளால் நிறைந்துள்ள ஊடகங்கள் உள்ளிட்ட சவால்கள் அனைத்தையும் கையாண்டு மீண்டெழும் வழிவகைகளை விளக்கியிருப்பதே, தொடரின் மூன்றாம் நூலான '’21 ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்'. 


நூற்று ஐம்பது தனிநபர்களுக்கு மேல் ஒருவரையொருவர் நெருக்கமாக அறிந்திருப்பதற்கான திறன், எந்த உயிருக்கும் இல்லை என்பதே அறிவியல் உண்மை. 


இந்நிலையில், நம் ஆளுமையின் அடிப்படை ரகசியமான, கோடிக்கணக்கான அந்நியர்கள் நம்பிக்கையோடு இணைந்து செயல்படும் பிரம்மாண்ட சாதனையின் பின்னுள்ள கற்பனைப் படைப்புகளான மொழிகள், மதங்கள், அரசாங்கங்கள், வியாபாரம், பணம், கடன், நிறுவனங்கள், பங்குச்சந்தைகள், பெருந்தரவு படிமுறைத் தீர்வுகள் உள்ளிட்ட அனைத்தையும் குறித்த தர்க்கரீதியான விளக்கங்களே இந்நூல்களின் சிறப்பான அம்சங்களாகும். 


தர்க்கத்தோடு, வரலாற்றில் நியாயம், சக உயிர்களிடம் பேணப்படும் அறநெறி, வாழ்வின் பொருள், மகிழ்ச்சியின் திறவுகோல் உள்ளிட்ட தத்துவங்களும் பல கோணங்களில் விவாதிக்கப்பட்டிருப்பது இப்படைப்பை அடுத்த தளத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. 


பொருளியல் கொள்கைகளில், பொது உடைமைக் கொள்கையை தாராளவாதம் வென்ற விதமும், இன்றைய சூழியல் சிதைவுறும் சவாலைச் சமாளிக்கத் தேவையான  உலகளாவிய பேரரசை உருவாக்குவதில் உள்ள சவால்களையும் விவாதிக்கும் இந்நூல்களின் பகுதிகள், ஆன்றோர், அறிஞர் அனைவரையும் கவர்ந்தவை. 


மேற்குறிப்பிட்ட அனைத்தையும், தலைமுறை தலைமுறையாகக் கடத்தும் ஆற்றலை நமக்கு அளித்த எழுத்துவடிவத்தின் பிறப்பிடம் 'கணிதம்' என்னும் அதிசயத் துறையே என்பதையும், நம் உடல் உட்பட்ட இப்பிரபஞ்ச விதிகள் முழுவதும் கணிதம் என்னும் மொழியால் எழுதப்பட்டிருப்பதையும் உணரும் இந்நூலின் வாசகர்களுக்கு, கணிதம் மீதான ஆர்வம் பிரம்மிப்புடன் பெருகுவது இயல்பே. 


அக்கணிதத்தால் உயிர்பொறியியலோடு, செயற்கை நுண்ணறிவும் இணைய, அறிவுசார் வேலைகளும் மறைந்து, அதிமனிதர்களை உள்ளடக்கிய சிறு வர்க்கமாகவும், பயனற்றவர்கள் என்ற ஒரு மிகப் பெரிய தாழ்ந்த வர்க்கமாகவும் மனிதம் பிளவுபடும் அபாயத்தைக் கையாள்வதற்கு நூல் கூறும் வழிவகைகள், உலகோர் அனைவரிடமும் உடனடியாகச் சேரவேண்டியவை. 


இங்ஙனம், வரலாற்றை அறிவியல் கண்ணோட்டம், அரசியல் கண்ணோட்டம், தத்துவக் கண்ணோட்டம், உளவியல் கண்ணோட்டம் உள்ளிட்ட மனித அறிவின் அனைத்து துறைகளோடும் ஒருங்கிணைத்து நம் எதிர்கால சாத்தியங்களை விவாதித்திருப்பது, உலக நடப்புகள் குறித்த நம் புரிதலை பிரம்மாண்ட உணர்வோடு விரிவடையச் செய்யவல்லது. 


செரிப்பதற்கு எளிமையான சுவையான உணவு அனைவராலும்  விரும்பப்படுவது போல, மேற்குறிப்பிடப்பட்ட சிக்கலான கருத்துக்களை, அனைவரும் புரிந்துகொள்ளும் வண்ணம் விவாதித்திருப்பதே, இப்புத்தகங்கள் உலகளவில் பலரால் பற்பலத் தளங்களில் ஆர்வத்துடன் விவாதிக்கப்படுவதற்கானக் காரணம் ஆகும். 


ஆசிரியரின் தனிப்பட்டக் கற்றலோடு, அவரின் கருத்துக்கள், பொதுமக்களுடனான விவாதங்களில் எழுந்த கேள்விகளால் மேலும் செம்மைப்படுத்தப் பட்டிருப்பதாலேயே, தத்தம் சொந்தப் படைப்பாகவே மக்கள் கொண்டாடும் உயர் நிலையை இப்படைப்பு எட்டியுள்ளது. 


எனவேதான், ஹராரி எழுதிய ‘சேப்பியன்ஸ்: மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு’, ‘ஹோமோ டியஸ்: வருங்காலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு’, ’21 ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்’ ஆகிய மூன்று நூல்களும் உலகம் நெடுகிலும் சுமார் இரண்டு கோடி எழுபது இலட்சம் பிரதிகள் விற்பனையாகிப் பெரும் சாதனைகளைப் படைத்துள்ளன. 

இம்மூன்று நூல்களும், தமிழ் வாசகர்களுக்காக திருமதி நாகலட்சுமி சண்முகம் அவர்களால் உயர் தரத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, கலைச்சொற்கள் பட்டியலோடு மஞ்சள் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. 


இவற்றை, மின்புத்தக வாசகர்களும் பின்னுள்ள சுட்டியில் வாங்கி வாசித்து மகிழலாம். 

 

Sapiens (Tamil Edition) eBook : Yuval Noah Harari, Nagalakshmi Shanmugham: Amazon.in: Kindle Store

 

நட்புடன்,

 

இரா. அரவிந்த்

 

******

 

இந்த நாளின் வாசிப்பனுபவம் குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கலாமே! மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து.

 

12 கருத்துகள்:

 1. இந்தப் புத்தகம் வைத்திருக்கிறேன் - பி டி எஃப்பாக !  படிக்க ஆரம்பித்து ஆரம்பத்திலேயே நிற்கிறது.  படிக்க வேண்டும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்துப்பகிர்விர்க்கும் மனமார்ந்த நன்றிகள் ஸ்ரிராம் சார்.
   இயலும்போது நூலை வாசியுங்கள்.

   நீக்கு
 2. பதில்கள்
  1. மிக்க நன்றி கில்லர்ஜி சார்.
   இயலும்போது நூலை வாசித்து மகிழுங்கள்.

   நீக்கு
 3. //நாம் சார்ந்துள்ள குடும்பம், உறவுகள், சமூகம், சாதி, மதம், கிராமங்கள், நகரங்கள், பேரரசுகள், நிறுவனங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகளின் உருவாக்கம் குறித்தும், அவை செயல்படும் விதங்கள் குறித்த தெளிவும் இல்லாமையே பலரைத் தவறான பாதையை நோக்கித் தள்ளவும் செய்கிறது. //

  உண்மை, அருமையான விமர்சனம். புத்தகத்தை படிக்க தூண்டும் விமர்சனம்.

  //நூற்று ஐம்பது தனிநபர்களுக்கு மேல் ஒருவரையொருவர் நெருக்கமாக அறிந்திருப்பதற்கான திறன், எந்த உயிருக்கும் இல்லை என்பதே அறிவியல் உண்மை. //

  அறிவியல் உண்மை சொல்வதும் சரிதான். உடன் வாழ்பவர்களையே சிலரால் புரிந்து கொள்ள முடியவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி கோமதி அரசு மேடம்.
   இயலும்போது நூலை வாசியுங்கள்.

   நீக்கு
 4. ஆம் கணக்கு தான், அனைத்தும் கணக்கு தான்... திருக்குறள் நூலும் கணக்கு நூல் தான்... உலகில் அது போல், எழுத்துகளின் எண்ணிக்கையில் கட்டமைக்கப்பட்ட ஒரே அறநூல், முப்பால் மட்டுமே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் ஐய்யா, அனைத்தும் கணக்கால் ஆனதே.
   தங்களின் வருகைக்கும் கருத்துப்பகிர்விர்க்கும் உளம் நிறைந்த நன்றிகள் திண்டுக்கல் தனபாலன் சார்.

   நீக்கு
 5. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள புத்தகங்கள் இளைஞர்களால் படிக்கப்பட வேண்டியவை. அறுபதைக் கடந்தவர்கள் தொட்டுப்பார்த்தால் போதும். ஆனால் அச்சுப் புத்தகமாகப் படிக்கும்போதுதான் கருத்து மனத்ர்குல் புகும். பிடிஎஃப் வேலைக்கு ஆகாது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் கருத்துப்பகிர்விர்க்கு மிக்க நன்றி இராய செல்லப்பா சார்.

   நீக்கு
 6. நல்லதோர் புத்தக அறிமுகம் விரிவாக தந்துள்ளார்.

  பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....