சனி, 4 ஜூன், 2022

காஃபி வித் கிட்டு - 153 - சங்கீதாவில் ஒரு சந்திப்பு - டாஸ்மாக் போதை போல - பதிவர் சந்திப்பு - ஆனது ஆச்சு போனது போச்சு - எதிர்வினை - 37 அடி அனுமன் கோவில்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட நதிக்கரை நகரங்கள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


நீங்கள் சந்திக்கும் அனைத்து விஷயங்களிலும் நேர்மறையான பக்கத்தை மட்டுமே பார்க்க முடிந்தால், மற்றவர்கள் அனைவரையும் விட நீங்கள் மிகவும் பணக்கார வாழ்க்கையை வாழ முடியும்.


******


நண்பர்களுடன் சந்திப்பு - திருச்சியில் திடீர் சந்திப்பு - சங்கீதா உணவகம் :  


கல்லூரி கால தோழி ஒருவர் அமெரிக்காவிலிருந்து தமிழகம் வந்திருக்கிறார்.  அது சமயம் சென்னையில் எல்லோரும் சந்திக்கலாம் என்று கேட்க, எங்களில் பலரால் கலந்து கொள்ள முடியாத சூழல்.  நான் தில்லியிலிருந்து வருவதாக முதலில் சொல்லி பின்னர் வர இயலாது என்று சொல்லி விட்டேன்.  ஆனால் சந்தர்ப்ப சூழல்களால் சந்திக்க வேண்டிய அதே மே 7-ஆம் தேதி சென்னை வழியே திருச்சி வந்து சேர்ந்து விட்டேன்.  ஆனாலும் அவரை சந்திக்க இயலவில்லையே என்று நினைத்து, திருச்சி வரும் வாய்ப்பு இருந்தால் சந்திக்கலாம் என அவருக்கு தகவல் அனுப்பி இருந்தேன்.  ஒரு நாள் மாலை அவர் குடும்பத்துடன் திருச்சி வர, நானும் திருச்சியில் இருக்கும் இன்னுமொரு நண்பரும் திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் சங்கீதா உணவகத்தில் சந்தித்தோம்.  திருச்சியில் இருக்கும் அமெரிக்க தோழியின் உறவினர்களும் வந்திருக்க சிறப்பானதொரு சந்திப்பாக அமைந்தது.  இரவு உணவு உண்டு, சில பல நிழற்படங்கள் எடுத்துக் கொண்டு, நீண்ட நேரம் பேசி இனிமையாகக் கழிந்தது அன்றைய மாலை.  சந்திப்பிற்கு அழைத்த தோழிக்கும் அவரது இணைக்கும் மனம் நிறைந்த நன்றி!  படங்கள் எடுத்தோம் என்றாலும் இங்கே பகிர்வதற்கு இல்லை! 


******


ராஜா காது கழுதைக்  காது - டாஸ்மாக் போதை :காலை நேரம் - அதிகப்படி பால் வேண்டுமென்று வீட்டில் கேட்க, கடைக்குச் சென்றிருந்தேன்.  அண்ணாச்சி கடையில் அவருடைய இல்லத்தரசி தான் இருந்தார்.  “இன்னும் பால் வரல பாருங்க! இது தான் கடைசி பாக்கெட்” என்று ஒரு பெரியவரிடம் கொடுக்க, அந்தப் பெரியவர் காலையில் உதிர்த்த முத்து! 


குடிகாரனுக்கு டாஸ்மாக் சரக்கு மீது போதை போல, எனக்கு காப்பி மீது போதை.  காலைல ஒரு வாய் காப்பி ஊத்தலன்னா கைகால் எல்லாம் நடுங்கற மாதிரி ஒரு உணர்வு – என்ன பண்ண? இரண்டு மூணு கடையில் கேட்டு இல்லைன்னு இங்கே வந்தா, நல்லவேளை பால் கிடைச்சுது. பால் லேட்டா வந்தா என்ன மாதிரி ஆளுங்க என்ன செய்யறது? யாரை குத்தம் சொல்ல! இங்கே ஒண்ணும் சரியில்ல போங்க! 


******

 

பழைய நினைப்புடா பேராண்டி: ”தமிழகத்தில் தில்லி பதிவர்கள்: ஏக், தோ, தீன்!”


2012-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - ”தமிழகத்தில் தில்லி பதிவர்கள்: ஏக், தோ, தீன்!” - அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.  

 

வெளிமாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு ஒரு வலைப்பதிவர் வந்தாலே அமளிதுமளிப்படும். அதிலும் மூன்று பதிவர்கள் என்றால் அதகளம் ஆகிவிடுமே! மேலே இருக்க மாதிரி பேனர் யாராவது வச்சிட்டா? எனவே முன்னரே அறிவித்தால் சென்னை மாநகரமே பரபரப்பாகி பொது மக்களுக்கு தொந்தரவு ஆகிவிடும் என்பதால் சில நட்பு வட்டாரத்திற்கு மட்டும் அறிவித்துவிட்டு வந்தார்கள் அந்த மூன்று தில்லி பதிவர்களும். 

 

அட ஆமாங்க, நான், மனைவி மற்றும் மகளுடன் தமிழகம் வந்திருந்தேன். மே மாதம் ஐந்தாம் தேதி தமிழகம் வந்து இருபத்தி எட்டாம் தேதி திரும்பினேன். பயணம் என்றால் சில பதிவுகள் அது பற்றி இல்லாமலா? ஒரே பதிவிலேயே எல்லாவற்றையும் சொல்லி விட்டால் விறுவிறுப்பு ஏது… ஐந்தாறு பதிவுகளாவது தேத்த வேண்டாமா? அப்பதானே நம்மையும் பதிவர்னு ஒத்துப்பாங்க!

 

இந்தப் பயணத்தில் நிறைய பதிவர்களை சந்திக்க முடிந்ததில் மிகுந்த மகிழ்ச்சி. சென்னையில் இருந்த இரண்டு நாட்களில் வீடு திரும்பல் மோகன்குமார், மன்னை மைனர் ஆர்.வி.எஸ்., கற்றலும் கேட்டலும் ராஜி, மின்னல் வரிகள் கணேஷ் ஆகியோர்! திருச்சியில்  ரிஷபன்,  ஆரண்யநிவாஸ் ஆர். ராமமூர்த்தி, வை. கோபாலகிருஷ்ணன், திருமதி கீதா சாம்பசிவம்! அனைவரும் காட்டிய அன்பிற்கும் வரவேற்புக்கும்  என்ன கைம்மாறு செய்து விடமுடியும்?

 

சென்னையில் இருக்கும் சில உறவினர்களைப் பார்க்க வேண்டியிருந்ததால் நண்பர் மோகன்குமாரை நெடுநேரம் காக்க வைத்திருக்க வேண்டியதாயிற்று. அதற்கு முன்பாக  'கற்றலும் கேட்டலும்' ராஜியை அவர்கள் வீட்டில் சந்தித்தோம். மாங்கோ மில்க்‌ஷேக் செய்து வைத்திருந்தார்கள். ”தில்லிக்காரங்களாச்சே!” என ”சாச்” வாங்கி வைத்திருந்தார் அவரின் கணவர். வென்றது மகளிர் அணியே என்பதில் சந்தேகமென்ன?  

 

இப்படி பதிவர் சந்திப்புகள் அடிக்கடி நிகழ்ந்த அந்த நாட்கள் இனிமையானவை. இப்போது பதிவுலகம் பெரும்பாலும் முகநூல் பக்கம்! முழு பதிவினையும் மேலே கொடுத்திருக்கும் சுட்டி வழி படித்து ரசிக்கலாம்! 

 

******

 

இந்த வாரத்தின் ரசித்த பாடல் - ஆனது ஆச்சு போனது போச்சு :

 

பழைய பாடல்கள் அர்த்தமுள்ளதாக இருப்பது உங்களுக்கும் தெரிந்திருக்கும்.  அந்நாட்களில் வேறு விதமான பாடல்கள் இருந்தாலும், பெரும்பாலானவை அர்த்தமுள்ளதாகவே இருக்கும்.  மிதமான இசையுடன் கூடிய அந்த பாட்டுக்களை கேட்பது எப்போதும் பிடித்தமானது. அப்படி சமீபத்தில் ரசித்து கேட்ட ஒரு பாடல் மஞ்சள் மகிமை எனும் படத்திலிருந்து ஒரு பாடல்… கேளுங்களேன்!

 

மேலே உள்ள காணொளி வழி பார்க்க இயலவில்லை என்றால் கீழே உள்ள சுட்டி வழி பார்க்கலாம். 


AANATHU AATCHU PONATHU POTCHU SSKFILM005 SCK,JK@ MANJALL MAGHIMAI

 

******

 

இந்த வாரத்தின் முகநூல் இற்றை - எதிர்வினை :


சமீபத்தில் முகநூலில் படித்த ஒரு இற்றை.  இது போன்ற நிகழ்வுகள் நடக்க வாய்ப்பு இருக்கிறது! ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை இருக்கவே செய்கிறது. படித்துப் பாருங்களேன். மனைவி; என்னங்க உங்கம்மாவை முதியோா் இல்லத்தில் சோ்க்கப் போனீங்களே என்னாச்சு...?


கணவன்; "அதெல்லாம் சேர்த்தாச்சு".

 

மனைவி ; "எங்கம்மா சொன்னது சாிதாங்க.

 

கணவா் ; "என்ன சொன்னாங்க"

 

மனைவி ; "நீங்க தங்கமானவங்களாம் ஆம்பளைனா உங்களை போல தான் இருக்கனும்பாங்க".

 

கணவா்; "ஏனாம்.??

 

மனைவி; "மனைவி சொல்ல தட்டாம கேட்கிறீங்கனுதான்."

 

கணவா்; " சொல்ல மறந்துட்டேன். வயசான காலத்தில் பேச்சுத் துணைக்கு தொிந்தவர்கள் யாரும் இல்லாமல் அம்மா எப்படி இருப்பாங்கன்னு யோசனையா இருந்தேன்"

 

மனைவி ; "பேச்சு துணைக்கு ஆள் கிடைச்சுட்டாங்களா.?"

 

கணவா்; "கிடைச்சுட்டாங்க".

 

மனைவி ; "அப்படியா யாரு..?"

 

கணவா் : "உங்கம்மா. இப்பத்தான் உன் அண்ணன் வந்து உங்கம்மாவை சேர்த்துட்டு போனான்".

 

மனைவி : "என்னது..? பொண்டாட்டி பேச்சை கேட்டு பெத்த அம்மாவை அனாதை ஆஸ்ரமத்தில் சோ்த்துட்டானா? அவன் எல்லாம் ஒரு ஆம்பளையா.? அவன் உருப்புடுவானா.? பெத்த தாயிக்கு மூணுவேளை கஞ்சி ஊத்த அவனுக்கு வக்கில்லையா.? அப்படி என்னதான் அவன் பொண்டாட்டி தலையணை மந்திரம் ஓதினாளோ? பெத்த தாயை காப்பாத்த முடியாத அவனெல்லாம் வெளங்கவே மாட்டான்.


அவள் ஆவேசம் வந்தவளாய் ஆத்திரத்தை அடக்கமுடியாமல் ஓ'வென்று கத்தி கதறத் தொடங்கினாள். எந்த வினைக்கும் அதனை ஒத்த எதிா்வினை உண்டு. இதுதான் பிரபஞ்ச நியதி. இதில் எவரும் தப்பவே முடியாது.


******

 

இந்த வாரத்தின் கோயில் உலா - மேலூரில் 37 அடி ஹனுமன்  :

 

திருவரங்கத்தினை அடுத்த மேலூர் கிராமத்தில் அனுமன் தோப்பு என்ற இடத்தில், சமீபத்தில் (24.10.2021) 37 அடியில் ஒரு பிரம்மாண்ட ஹனுமன் சிலை வைத்திருக்கிறார்கள்.  கோவில் பெயர் தென் அயோத்தி ஸ்ரீ ராம பட்டாபிஷேக ஸ்ரீ சஞ்சீவன ஆஞ்சநேயர் ஆலயம். கூடவே ராமபட்டாபிஷேகம், தாயார், சக்கரதாழ்வார், நரசிம்மர் சன்னதிகளும் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.  அழகான சூழலில் அமைந்திருக்கும் இந்தக் கோவிலுக்கு, வாய்ப்பிருந்தால் சென்று வரலாமே!  கோயில் அமைந்திருக்கும் இடம் வரை பேருந்து வசதி இல்லை. மேலூர் கிராமம் வரை 1F பேருந்து செல்லும்.  இல்லை என்றால் திருவரங்கத்திலிருந்து ஒரு ஆட்டோ/வாகனம் அமர்த்திக்கொண்டு செல்வது நல்லது. நாங்கள் குடும்பத்துடன் ஒரு மாலை நேரம் சென்று நிறைவான, நிம்மதியான தரிசனம் பெற்றோம்.  

 

******

 

இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து….

 

14 கருத்துகள்:

 1. காபி குடித்துக் கொண்டே காபி பதிவைப் படித்தேன்!  முதியோர் இல்லம் நிகழ்வு புன்னகைக்க வைத்தது.  தில்லி பதிவர்களின் சென்னை வருகையைக் கூறும் அப்பழைய பதிவும் அங்ஙனமே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஶ்ரீராம்.

   நீக்கு
 2. இந்தவார பதிவு நன்று. பல பதிவர்கள் இப்போது எழுதுவதில்லை போலிருக்கு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எழுதிய பலர் இப்போது முகநூலில் மூழ்கி விட்டார்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.

   நீக்கு
 3. எல்லாம் ரசிக்க வைத்தது.
  நகைச்சுவை அருமை.

  தனக்கொரு நீதி, பிறருக்கு ஒரு நீதி இதுதான் இன்றைய சமூகம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கில்லர்ஜி.

   நீக்கு
 4. கதம்பம் அருமை...

  இந்த பாடல் கேட்டு ரொம்ப நாளாச்சி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 5. மாலை காஃபிக்கு வந்துவிட்டேன் !!!

  ஆஞ்சு! கோயில் பற்றி அறிகிறேன்.

  எதிர்வினை ஊகிக்க முடிந்தது. இப்படித்தான் உலகம் குடும்பங்கள்.

  பதிவர் சந்திப்பு இனிமை. பழைய சந்திப்பும் கூட. வாசித்தேன்.
  //நான் வாயைத் திறந்தால் நிச்சயம் காகம் கொத்தி உணவு உட்கொண்டிருக்கும்! அதனால் அது கான்சல். // ஹாஹாஹாஹா சிரித்துவிட்டேன்.

  பழைய பதிவர்கள் பலரையும் இப்போது காணவில்லை, நாங்கள் வந்த போது இருந்தவர்கள் உட்பட.

  காணொளி பார்த்து பாட்டும் கேட்டேன். பழைய படங்கள் காட்சிகள் தனிதான். பாட்டும் இப்போதுதான் கேட்கிறேன்.

  அனைத்தும் ரசித்தேன் ஜி

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.

   நீக்கு
 6. தோழி சந்திப்பு மகிழ்ச்சியான நேரமாக அமைந்திருக்கும்

  . அன்றைய பதிவர் சந்திப்புகளையும் நினைவு படுத்தியுள்ளீர்கள்

  காலைக் காப்பி அனைவருக்கும் போதைதான்.

  முக நூல் இற்றை எதிர்வினை ஹா...ஹா...தனக்கு வரும்போது தான் புரிகிறது.

  அனுமார் தரிசனம் பெற்றோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   நீக்கு
 7. மிக அருமையான கதம்பம் .
  முகநூல் இற்றை அருமை.
  பதிவர்கள் சந்திப்பு காலங்கள் மிக அருமையான காலங்கள்
  பாடல் பகிர்வு அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....