எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, June 18, 2014

ஏண்டி என்ன பெத்த?

அனு….  60 வயது பெண்மணி. தனது அம்மா மற்றும் அக்கா, அக்கா மகள் ஆகியோருடன் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் இருக்கிறார். அவருக்கு அந்த அடுக்கு மாடி குடியிருப்பில் இருக்கும் அத்தனை பேரும்பேசத் தெரிந்த குழந்தைகளிலிருந்து கொள்ளிடக்கரைக்குப் போகக் காத்திருக்கும் பெரியவர்கள் வரை அனைவரையும் தெரியும்.

பெரும்பாலான பகல் பொழுதுகள் தனது வீடு இருக்கும் மாடியில் படிக்கட்டுகள் சந்திக்கும் இடத்தில் தான் இருப்பார். அந்த வழியே வரும் போகும், ஒருவரும் அவரது பார்வையிலிருந்தோ, கேள்விக் கணைகளிலிருந்தோ தப்பவே முடியாது. அவரை நீங்கள் பார்க்காத மாதிரி போனாலும், அவர் பார்வையிலிருந்து நீங்கள் தப்ப முடியாது. “என்ன பார்க்காத மாதிரி போற?” என்று கேட்பார்.

பலரிடம் அவர் கேட்கும் கேள்வி – “எங்கே போற! வரும்போது எனக்கு என்ன வாங்கிட்டு வருவே?” பெண்களாக இருந்தால், “எனக்கு வளையல் வாங்கித் தருவியா?” தப்பித்தவறி யாராவதுவாங்கிட்டு வரேன்என்று சொல்லிவிட்டால், அவர் வளையல் வாங்கித் தரும் வரை விடமாட்டார். ”வளையல் வாங்கித் தரேன்னு சொன்னியே, இன்னும் வாங்கித் தரலையேஎன்று ஒவ்வொரு முறையும் கேட்பார். அடுத்த முறை வெளியே செல்லும் போது பார்த்தால், அவருடைய கேள்விஎங்கே போற?” என்பதிலிருந்துவளையல் வாங்க போறியா?” என்பதாக மாறி விடும்.

வாசலில் நிற்கும் ஆட்டோ ஓட்டுனரிடம்,  நீ மட்டும் ஆட்டோல எங்கியோ போயிட்டே இருக்கே, என்னை எங்காவது அழைச்சிட்டு போயேன்!”

அவர் வளர்ந்து விட்டாலும், அவரது மனதளவில் அவர் குழந்தை தான். இப்போதும் மனதில் சிறு குழந்தை எனும் எண்ணம். அதனால் தன்னை விட உயரமானவர்களாக இருந்தால், அவர் 18 வயது பெண்ணாக இருந்தாலும் அவரைஅக்கா என்று தான் அழைப்பார்…..

தீபாவளி சமயத்தில், தனது புதுப் புடவையைக் கட்டிக்கொண்டு அடுக்கு மாடி குடியிருப்பின் அனைத்து வீடுகளிலும் சென்று காண்பித்துஎன்னோட புதுப்புடவை நல்லா இருக்கா?” என்று கேட்பார். ”உங்க வீட்டுல என்ன பலகாரம்? எனக்குத் தரமாட்டியாஎன்று கேட்டு தரும் வரை அந்த வீட்டிலிருந்து நகரமாட்டார். வாங்கி அதை புதுப் புடவையின் தலைப்பில் முடிந்து கொண்டு அடுத்த வீட்டுக்கு நகருவார். அடுத்த வீட்டிலும் இந்த பலகாரம் சேகரிப்பு தொடரும்அவர் வீட்டுக்குத் திரும்புவதற்குள் புதுப்புடவையின் தலைப்பு முழுவதும் பல வீடுகளின் பலகாரங்கள் நிறைந்திருக்கும்.

தீபாவளி சமயத்தில் என் காமிராவில் புத்தாடைகளில் குடும்பத்தினரை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது எங்கள் வீட்டுக்கு வந்தார் அவர். “எல்லோரையும் ஃபோட்டோ எடுக்கறியே, என்னை எடுக்கக் கூடாதா?” என்று கேட்க, அவரையும் ஒரு புகைப்படம் எடுத்தேன்.  இரு இரு, நான் கொஞ்சம் புடவையெல்லாம் சரி செய்து கொண்டு அழகாயிடறேன், அதுக்கப்பறம் ஃபோட்டோ எடுஎன்றார்.

இப்படி எல்லோரிடமும் பழகும் அவருக்கும் அவரது அம்மாவிற்கும் எப்போதும் சண்டை தான். “ஏன் இந்த மாதிரி வீடு வீடா போய் எதையாவது வாங்கிட்டு வரே?, எனக்கப்புறம் உன்னை யார் பார்த்துக்கப் போறாங்களோ தெரியலைஎன்று வருத்தப் படுவார் வயதான அவரது அம்மா. கொஞ்சம் மனநிலை சரியில்லாத/ரெண்டுங்கெட்டான் பெண்ணை இத்தனை வருடம் காப்பாற்றி விட்டாலும் தனக்குப் பிறகு என்ன செய்வது என்ற கவலை அவருக்கு….. 

ரொம்பவே முடியாத சமயங்களில் அவரது அம்மா திட்டிவிட, அப்போது கேட்கும் கேள்வி தான் இப்பதிவின் தலைப்பு – “ஏண்டி என்ன பெத்த?” அந்த கேள்விக்கு பதில் அவரிடம் கிடைக்காது. ஒவ்வொரு முறை அவரை பார்க்கும் போது அவரது கேள்வி தான் எனது மனதிலும் – இப்போது போல அக்காலத்தில் கருவிலேயே குழந்தையின் குறைபாடுகளை தெரிந்து கொள்ளும் வசதி இல்லாத போது, அம்மா என்ன செய்ய முடியும்.....

படைத்த ஆண்டவனின் குற்றமா இல்லை பெற்றுக் கொண்டவர்களின் குற்றமா?

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


62 comments:

 1. உண்மைதாங்க... என்னோட உறவினர் ஒருவர் கூட இப்படித்தான் இருக்கிறார்.... அவரது தாய் எனக்கு முன்னாடி நீ போயிடணும்டி என்பார் எவ்வளவு கொடுமையான நேரம் அது என்று நினைக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   Delete
 2. இந்த மாதிரி மனிதர்களைச் சந்திக்கும் போதெல்லாம் எனக்கும் எப்படி இவர்கள் சமாளிப்பார்கள் என்ற கவலை வரும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 3. அமைதியில்லா நேரத்திலே ஆண்டவன் இவர் போன்றோரை படைத்திட்டான், எனவே அன்னாரை காத்திடவும் "அவன்" ஒரு திட்டமதனை நிச்சயம் ஏற்கனவே வகுத்திருப்பான்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நடராஜன் சித்தப்பா....

   Delete
 4. Replies
  1. வேதனை தான்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கணேஷ்.

   Delete
 5. உருக்கமான பதிவு... என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 6. ரொம்ப சங்கடம் வெங்கட். பெற்றோருக்கு எவ்வளவு பாரம்.நமக்கு அப்புறம் என்கிற கேள்வி இராப்பகலாய்த் தூங்கவிடாது. இதுவரைக்கும் அந்தப் பெண்ணுக்கு ஆதரவாய் எல்லோருமே இருக்கிறீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....

   Delete
 7. அந்தத் தாயின் நிலை
  மனதை மிகச் சங்கடப்படுத்திப்போகுது

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 8. Replies
  1. தமிழ் மணம் மூன்றாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 9. //படைத்த ஆண்டவனின் குற்றமா இல்லை பெற்றுக் கொண்டவர்களின் குற்றமா?//

  யாருடைய குற்றமும் இல்லை இவ்வாறு உள்ளவர்களை கடவுளின் குழந்தைகள் என்பார்கள். இவர்கள் எப்போதும் குழந்தையின் மன நிலையில் இருப்பதால் இவர்களை கடைசி வரை தாயின் அன்பு காட்டி அரவணைக்கவேண்டும்.வசதி இல்லாதவர்கள் இதற்கேன உள்ள விடுதியில் சேர்க்க வேண்டியதுதான். அரசும் இது போன்றவர்களுக்காக உதவிசெய்யவேண்டியது அவசியம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 10. அந்தத் தாயின் நிலையும் சரி, அந்த 60 வயது பெண்மணியின் நிலையும் சரி, மிகவும் வேதனை படக்கூடியது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 11. இந்த மாதிரி மனநிலை சரியில்லாத பெண்ணின் தாயர் ஒருவர் தன் பெண்ணுக்கு பாக்குமட்டையில் தட்டு செய்யவும் , ஒயர் கூடை போன்ற கைவேலைகளிலும் பழக்கி வைத்திருக்கிறார்..

  அவருக்கு மகளிர் தினத்தில் விருது வழங்கியும் , அவரது தயாரிப்புகளை வாங்கியும் உற்சாகப்படுத்தி கௌரவித்தோம் ..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   தனக்கென்று ஒரு வேலையைச் செய்ய பழக்கி, நல்ல பணி தான் செய்திருக்கிறார் ....

   Delete
 12. படிக்க மன கஷ்டமாகத்தான் இருக்கிறது. அந்த அம்மா முடிந்தால் ஏதாவது ஆசிரமத்தில் கொண்டு போய் சேர்ப்பது நல்லது. காரணம் அம்மா இறந்துவிட்டால் அந்த பெண் குழந்தைக்கு நல்ல பாதுகாப்பு கிடைக்கும் இல்லையெனில் கயவர்களின் கண்ணில் பட்டால் பலாத்காரம் செய்துவிடுவார்கள் இந்த அறியாப் பெண்ணை...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 13. உங்களின் பனீர் சாம்பார் என்ற பதிவை படிக்க க்ளிக் பண்ணினால் அது ஜம் ஆகி எந்து பதிவிற்கே வந்து விடுகிறது....படிக்க முடியவில்லை

  ReplyDelete
  Replies
  1. பனீர் சாம்பார் - சென்ற மாதம் எழுதிய பதிவு..... சுட்டி கீழே....

   http://venkatnagaraj.blogspot.com/2014/05/blog-post_6.html

   Delete
 14. எங்க உறவுகளிலேயே இப்படி இருக்கின்றனர். வயதான பெற்றோரும் இறந்து போய் அண்ணன், அண்ணிக்கும் வயதாக இதற்கென இருக்கும் ஆசிரமத்தில் சேர்த்து விட்டார்கள். கைவேலைகள் கற்றுக் கொடுத்து, அதிலேயே கொஞ்சம் பணமும் வரும்படியாக ஏற்பாடு செய்திருக்கின்றனர். இரண்டு சகோதரர்கள் இம்மாதிரி. ஒருவரை மதுரைக்கருகேயும், இன்னொருவரைச் சென்னையிலும் சேர்த்திருக்கிறார்கள். பெங்களூரிலும் இம்மாதிரி நபர்களுக்கான ஆசிரமம் இருக்கிறது. மொத்தமாக ஒரு தொகையைக் கட்ட வேண்டும் என எண்ணுகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete
 15. என்றாலும் பெற்றோருக்குக் கஷ்டம் தான். மருத்துவத்தில் முன்னேற்றம் கண்ட இன்றைய நாட்களில் மட்டும் இம்மாதிரிக் குழந்தைகள் பிறக்காமலா இருக்கிறது? இதெல்லாம் ஆண்டவன் லீலை! :( அவனுக்கு இப்படி ஒரு விளையாட்டும் பிடிக்கிறது போலும். :(

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete
 16. இப்படிப் படைத்த ஆண்டவனின் குற்றமா?..
  இல்லை.. பெற்றுக் கொண்டவர்களின் குற்றமா?..

  என்ன என்று கூறுவது.. மனம் நெகிழ்கின்றது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 17. உண்மையிலேயே பாவம்தான்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 18. இக்குழந்தைகளின் பெற்றோர்களின் முதல் கவலை இதுதான், “எனக்குப் பிறகு...” வளர்ந்தும் குழந்தைகளாக இருக்கும் இவர்களைப் பராமரிப்பதற்கு இமாலயப் பொறுமை வேண்டும். இறைவன் காப்பானாக.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஹுசைனம்மா..

   Delete
 19. கருவிலேயே குழந்தையின் குறைபாடுகள் தெரிந்து விடுகிறதா....?

  இந்த மாதிரி மூளை வளர்ச்சி குன்றி இருப்பதும் தெரிந்தால் எவ்வளவோ நன்றாக இருக்கும்.

  அந்த இருவருமே பாவம் தான் நாகராஜ் ஜி.
  இராஜராஜேஸ்வரி அம்மா சொன்னது போல கைவேலை பழகி வைப்பது தான்
  அவர்களுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய உதவி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

   Delete
 20. மனதை பாதித்தது..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி.

   Delete
 21. ஒரு ஆறுதல். பெண்ணாய்ப் பிறந்துவிட்ட அவரை யாரும் தவறாக உபயோகிக்க வில்லை என்று நம்புகிறேன். கருவில் குறைபாடுகளைத் தெரிந்து கொள்ள முடியாவிட்டாலும் மேடம் இராஜராஜேஸ்வரி சொல்லி இருப்பது போல் அவளையும் ஒரு பொறுப்பு மிக்கவராக வளர்த்திருக்கவேண்டும் . காலம் கடந்துபோய் அழுவதில் பலனில்லை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   Delete
 22. இந்த பெண்ணுக்கே 60 வயது என்றால், அவர்களின் அம்மாவிற்கு குறைந்தது 80 வயதாவது இருக்க வேண்டும்.
  இந்த தள்ளாத வயதிலும் பாரம் சுமக்க வேண்டிய நிலை அந்த தாய்க்கு, மிகவும் வேதனை அளிக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஷ் பிரபு.

   Delete
 23. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   Delete
 24. சங்கடமான கேள்விதான்! வலிக்கவைத்த பதிவு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 25. வணக்கம்
  ஐயா.

  பதிவை படிக்கும் போது மனசு கனத்தது மிகவும் உருக்கமாக உள்ளது பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ஐயா

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 26. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 27. மனதில் வஞ்சமில்லாத உயர்ந்த நிலை. தேவைகள் குறைந்த உண்மையில் மனிதர்கள் இருக்க வேண்டிய நிலை. அனால் அவரை பார்த்து நம்மை போல அவர் இல்லையே என்று அங்கலாய்கிறோம். குழந்தை மனதோடு ஒருவர் வாழ்ந்தால் அது அவருக்கு இறைவன் கொடுத்த வரம். குழந்தைகளுக்கே கள்ளம் கபடம் கிடையாது. அந்த நிலையை பெறவே ஞானிகள் பலரும் முயற்சி செய்கிறார்கள். புத்தரும் ஞானம் பெற்ற பிறகே இந்த நிமிடத்தில் வாழுங்கள் என்று போதித்தார். இந்த அம்மையார் இந்த நிமிடத்தில் வாழ்கிறார். அதுவே உண்மையான வாழ்க்கை. நாமெல்லாம் போலியாக வாழ்கிறோம். இந்த புரிதல் கடினமாக தோன்றினால் இதுவே நிதர்சனம்.
  அன்புடன்
  நக்கினம் சிவம்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சிவம்..[பெயர் அற்றது}

   தங்களது முதல் வருகை. மிக்க மகிழ்ச்சி.

   Delete
 28. 'இவர்களின் அம்மாக்களுக்கு இறைவன் எவ்வளவு பொறுமையைக் கொடுத்திருக்க வேண்டும்' என நினைப்பதுண்டு. அம்மாவுக்குப் பிறகான இவர்களின் நிலையை நினைத்தால்தான் வேதனையாக இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. தஙக்ளது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்....

   Delete
 29. மிகவும் வேதனை தரும், மனதைப் பாதித்த ஒரு பதிவு! அந்தப் பெண்ணை சென்னையில், இருக்கும் இது போன்ற மன நிலை பாதிக்கப்பட்டப் பெண்களைப் பாதுகாக்கும் அமைப்பில் சேர்த்து விடலாம். அவர்கள் தங்கள் வீட்டருகில் என்றால் சொல்லிப் பார்க்கலாம்! இந்த அமைப்பு ஆதரவற்றப் பெண்களைப் பாதுக்காத்து அவர்களால் சிறி சிறு வேலைகள் செய்ய முடிந்தால் செய்யப் பழக்கி வாழவும் வழி செய்கின்றார்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   Delete
 30. மனம் கனத்தது சகோ...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

   Delete
 31. மனம் கலங்குகிறது...
  இது போன்ற மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளை சுற்றியிருக்கும் கிராமங்களில் இருந்து அழைத்துவந்து அவர்களுக்குத் தங்கள் வேலையை அவர்களே செய்யவும், இன்னும் இசை, விளையாட்டு, கல்வி என்று கற்றுக்கொடுத்தும்
  வருகின்றனர் எனக்குத் தெரிந்த சகோதரியும் அவருடன் இருப்பவர்களும், மதுரை திருமங்கலத்தில். உயர்படிப்பிற்கும் தகுந்த பள்ளிகளை நாடி சேர்த்துவிடுகிறார். அவர்களுக்கான மாநில அளவிலான போட்டிகளுக்கும் சுற்றுலாவிற்கும் கூட அழைத்துச் செல்கின்றனர். அந்தக் குழந்தைகளுக்குத் தான் எவ்வளவு மகிழ்ச்சி! அந்தச் சகோதரியால் கிராமங்களில் இது போன்ற குழந்தைகள் பலருக்கு ஒரு நல்வாழ்வு அமைகிறது. அவர்களின் தளத்தையும் இங்கு பகிர்கிறேன், தேவைபடுபவர்களுக்கும் உதவும் உள்ளங்களுக்கும் உதவலாம் என்பதற்காக.. http://www.sjtmadurai.org/
  அவர்களின் சேவையை நன்கு அறிந்ததாலேயே பகிர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிரேஸ். நீங்கள் கொடுத்த தகவல்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....