செவ்வாய், 5 ஜூலை, 2022

நானும் குற்றவாளி தானே - சிறுகதை - ஆதி வெங்கட்

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


இயற்கையின் அழகை அழித்த பிறகு, மீண்டும் அதை எத்தனை விலை கொடுத்தாலும் வாங்க முடியாது - 

 

******



பங்கஜம்! பங்கஜம்!

 

தோ வரேன்!

 

ரெடியாயிட்டியா?? 

 

ம்ம்ம். போலாம் வாங்க!

 

இந்தப் பக்கமா போவோமா? இல்ல அந்தப் பக்கமா??

 

இப்படியே போலாங்க! வயல்வரப்பு, தோப்பெல்லாம் பார்த்துகிட்டே போவோமே!

 

அப்டியா! சரி வா போவோம்!


பங்கஜமும் ராஜாராமும் மாலைநேர நடைப்பயிற்சிக்கு கிளம்பினார்கள். இது அவர்களின் வாடிக்கை தான். இருவரும் பேசிக் கொண்டே சற்று தூரம் நடந்து விட்டு வருவார்கள்.

 

இது என்ன மரம்ங்க ?

 

இது தெரியாதா உனக்கு? இது தான் சப்போட்டா, அது சீதா! இது என்னன்னு சொல்லு பார்க்கலாம்!

 

அதுவா? எலந்த!

 

ஆமா! அது?

 

நடந்து கொண்டே மரம் செடி கொடிகளைப் பற்றி பேசிக் கொண்டு வந்தார்கள்.

ஏய்! இப்படி நடந்து போகும் போது மரத்தெல்லாம் தொடாத பங்கஜம்! அதுல எல்லாம் சின்னச் சின்னதா முள் இருக்கும்! ரெண்டு மூணு நாள் கழிச்சு கூட வலிக்கும் என்ன!

 

அங்க பாருங்க! தூரத்தில மயில் நின்னுட்டு இருக்கு!

 

எனக்கு அவ்வளவு தூரத்துல நிக்கறதெல்லாம் தெரியலே! தோ கிட்டக்க வந்துட்டு இருக்கு!

 

பார்த்துட்டேன்! பார்த்துட்டேன்!

 

எல்லா இடமும் ப்ளாட் போட்டு வித்துட்டே வர்றாங்க  வயல்வெளி, தோப்புன்னு எல்லாமே அபார்ட்மெண்ட்டும், பங்களாவுமா மாறிட்டே  வருது பங்கஜம்!

 

ஆமாங்க! இன்னும் கொஞ்ச நாள்ல இந்த பாதைல நாம விரும்பிப் போனாலும் கண்ணுக்கு பசுமையா எதுவும் தெரியப் போறதில்ல..!

 

ஆமா! இங்க பாரு பாட்டில் எல்லாம் போட்டு ஒடஞ்சிருக்கு! ரொம்ப ஓரமா போகாத! இப்டி வா!

 

சரிங்க!

 

எனக்கென்னமோ குற்ற உணர்ச்சியா இருக்கு பங்கஜம்! நாமளும் ஒரு குத்தவாளின்னு தோணுது!

 

ஏங்க ? என்ன ஆச்சு! ஏன் இப்படி பேசறீங்க ??

 

நாம இப்ப இருக்கோமே அந்த வீடு கூட தோப்பு இருந்த இடத்துல தான் கட்டியிருக்காங்க இல்லையா! 

 

ஆமாங்க! நீங்க சொல்றது வாஸ்தவம் தான்! ஆனா தனக்குன்னு ஒரு கூடு வேணும்னு எல்லா ஜீவராசியும் நினைக்கறது உண்மை தானே! அப்படி எல்லா மனுஷங்களும் நினைக்கும் போது  இடத்துக்கு இது தான் வழி! இத நாம ஒத்துட்டு தான் ஆகணும்!

 

ம்ம்ம்! நீ சொல்றதும் வாஸ்தவம் தான் பங்கஜம்! 

 

ஒவ்வொருத்தரும் தன்னோட வீட்டைச் சுத்தி மரம் செடி கொடிகள வளர்க்கணும்! அதுக்கு இடம் இல்லைன்னா மாடித் தோட்டம் கூட போடலாம்! இயற்கையோடு இணைந்த வாழ்வு தான் நம்ம உயிர்ப்புடன் வெச்சிருக்கும்! நான் சொல்றது சரி தானங்க!!

 

ம்ம்ம்! சரி தான் பங்கஜம்! 

 

அங்க பாரு வானம் இருட்டு கட்டிட்டு வருது! சிலுசிலுன்னு காத்து! இயற்கையின் பசுமை! இதெல்லாம் அடுத்த தலைமுறைகளுக்கும் கிடைக்கணும்!

 

சரி! வாங்க! பேசிண்டே ரொம்ப தூரம் வந்துட்ட மாதிரி இருக்கு! மழைக்கு முன்னாடி வீட்டுக்கு போயிடலாம்!

 

இருவரும் நல்லது நடக்கணும் என்ற எண்ணத்தோடு தங்கள் கூட்டுக்குத் திரும்பினார்கள்.

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

11 கருத்துகள்:

  1. கிராமப்புற வீடுகளுக்கு சரி, சுற்றிலும் மரம் வளர்த்து பரிகாரம் செய்யலாம்!  நகரங்களில்?  பெருகிக்கொண்டே போகும் நெருக்கமான அபார்ட்மெண்ட் வீடுகள் கவலையைத் தருகின்றன.  இத்தனை பேருக்கு தண்ணீர் எங்கிருந்து வரும் என்கிற கவலையும் கூடவே வரும்!

    பதிலளிநீக்கு
  2. கதை நல்ல விஷயத்தைச் சொல்கிறது.

    //நாம இப்ப இருக்கோமே அந்த வீடு கூட தோப்பு இருந்த இடத்துல தான் கட்டியிருக்காங்க இல்லையா! //

    அதேதான். இது நான் அடிக்கடிசொல்லிக் கொள்வதுண்டு. குற்ற உணர்வும் வரத்தான் செய்கிறது. நாம் பேசுவது எழுதுவது ஒன்று ஆனால் நடைமுறையில் வேறு என்று தோன்று நான் உட்பட....எனக்குத் தோன்றுவதுண்டு.

    குடியிருப்பு வீடுகள் பெருகிக் கொண்டு வருவதில் மனம் மிகவும் வேதனைப்படுவதுண்டு. அதுவும் சில வருடங்களுக்கு முன் குருகிராமம் (புதியது) சென்றிருந்த போது யம்மாடியோவ் என்று வாய்விட்டே சொல்லிவிட்டேன். முழுவதும் அடுக்குமாடிக் குடியிருப்பு காடுகள்!!! முதலில் தோன்றியது இத்தனைக்கும் எங்கிருந்து தண்ணீர் கிடைக்கும் என்று....இதை என் கதையிலும் சொல்லியிருந்த நினைவு..

    இப்போது இங்கு பங்களூரிலும் கிட்டத்தட்ட அதே நிலைதான். சில பகுதிகளில். இங்கும் தனி வீடுகள் பெரும்பாலும் அடுத்த வீடுகளோடு ஒட்டி கட்டப்படுவதால் செடிகள் வளர்ப்பதில் சிரமங்கள் இருக்கின்றன. வீட்டின் சொந்தக்காரர் என்றால் மாடித்தோட்டம் போடலாம்...இல்லை என்றால் அதுவும் கஷ்டம்தான்.

    கீதா

    பதிலளிநீக்கு
  3. வாசகம் அருமை. ஆனால் யதார்த்தம் வேறாகி இருக்கிறதே. ஆதி!

    கீதா

    பதிலளிநீக்கு
  4. ம்ம்ம்ம். நாங்க இப்போ இருக்கும் குடியிருப்பு வளாகமும் முன் காலத்தில் நவாப் தோட்டம் என்ற பெயரில் இருந்தது தான், நாங்க வந்தப்புறம் பக்கத்தில் உள்ள கல்யாண மண்டபம் ஒரு பெரிய தோப்பை அழித்துக் கட்டியது தான். எதிரே இருக்கும் நக்ஷத்திர விடுதியும் அப்படித் தான். :( இப்போ இன்னும் சில தோப்புகள் அழியப்போவதாகச் சொல்கின்றனர். என்னோட கவலை எல்லாம் பறவைகள் குடி இருக்க இடம் எங்கே கிடைக்கும்? ஆடும் தென்னைமரக்கிளையில் ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும் பறவைகளை இனி பார்க்க முடியுமா? என்னவோ! :(

    பதிலளிநீக்கு
  5. வாசகமும் கதையும் சமூகத்திற்கு தேவையான செய்தியை சொல்கிறது.
    ஜப்பான் ரீதியில், புதுவகை தாவர வளர்ப்பு முறைகளை நம் நாட்டில் விரைவில் காண்போம் என்னும் எதிர்ப்பார்ப்பு உள்ளது.

    பதிலளிநீக்கு
  6. வீட்டை சுற்றி மரம் செடி வளர்க்கவேண்டும் பசுமையை போற்றுவோம். பெருகிவரும் அப்பாட்மண்ட்களில் மாடித் தோட்டம்தான் ஒரே வழி என்பதை சொல்லும் கதை . காலத்தின் அவசியமும் கூட.

    பதிலளிநீக்கு
  7. சிறப்பான சிறுகதை.. பசுமையைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தைச் சொல்கின்றது..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  8. ஆளுக்கு ஒரு வீடு . தனக்கொரு கூடு என்று எல்லோரு நினைப்பதுதான்.
    மரங்கள் வெட்டப்படுவது போல நடவும் வேண்டும்.
    கதை அருமை.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....