செவ்வாய், 17 அக்டோபர், 2023

கதம்பம் - நடை நல்லது - பிள்ளையார் சதுர்த்தி ஏற்பாடுகள் - ரோஷ்ணி கார்னர் - பிள்ளையார் சதுர்த்தி


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  

 

நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

மனிதர்களின் புத்தி இரண்டே விதம் தான்… தேவை என்றால் தேன் மாதிரி பேசுவார்கள்; தேவை இல்லை என்றால் தேள் கொட்டுவது போல பேசுவார்கள்.

 

******

 

நடை நல்லது - 16 செப்டெம்பர் 2023:


 

பச்சை பசேலென்ற வயல்வெளி, கண்ணுக்கு குளிர்ச்சியான தென்னந்தோப்பு, பல வண்ணப் பூக்கள், பறவைகளின் கீச்சிடும் குரல்கள், மேய்ச்சலுக்கு புறப்பட்டு விட்ட மாடுகள், அகவலிடும் மயில்கள் என்று காலைநேர நடைப்பயிற்சியை அழகாக்கிய காட்சிகள்!

 

நேற்றைய பொழுது 7 கிமீ நடையுடன் கடந்தது! இன்றைய பொழுதில் காலைநேரத்து நடைப்பயிற்சியாக 3 கீமீ தூரத்தினை கடந்துள்ளோம்.

 

&*&*&*&**&*&*

 

நடை நல்லது - 17 செப்டெம்பர் 2023:



குளிர்ந்த காலைப் பொழுதினில் இயற்கையின் அழகை ரசித்துக் கொண்டே புத்துணர்ச்சியுடன் காலை நடைப்பயிற்சியை முடித்து வந்தோம்! நாளைய பிள்ளையார் சதுர்த்தியில் பிள்ளையாருக்கு அணிவிக்க எருக்கம் பூ மாலை செய்ய பூக்களும், காலில் வாட்டிப் போட அதன் இலைகளும், கஷாயம் போட்டு குடிக்கலாமென்று பவளமல்லியின் பூக்களும், இலைகளும் பறித்து வந்தோம்!

 

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!

 

நல்லதே நடக்கும்!

 

&*&*&*&**&*&*

 

பிள்ளையார் சதுர்த்தி ஏற்பாடுகள் - 17 செப்டெம்பர் 2023:




 

“அக்கா! ஆட்டோ வேணுங்களா?”

 

சாதாரணமாக அவசர வேலையாக எங்கேயாவது செல்ல வேண்டும்  என்கிற போது ஒரு ஆட்டோ கூட கண்ணுக்கு தட்டுபடாது! இன்று மாலை நடைபயிற்சி செய்யும் போது அருகில் வண்டியை நிறுத்தி அக்கா! ஆட்டோ வேணுங்களா? என்று கேட்டால் என்னவென்று சொல்வது...🙂

 

ராஜகோபுரத்தின் அருகில் பிள்ளையார் சதுர்த்திக்குத் தேவையான மண்ணாலான பிள்ளையார்கள், வர்ணம் தீட்டப்பட்டவை, குடைகள், மாவிலை தோரணம், பழங்கள், மலர்கள் என்று அந்தச் சூழலே விழாக்கோலம் கொண்டு ஜொலித்தது!

 

நாங்களும் அந்தக் கடைத்தெருவில் மண்ணாலான பிள்ளையார், அருகம்புல், மாவிலைத் தோரணம், பழங்கள், அர்ச்சனைக்கு பூக்கள், பாகு வெல்லம் என்று எல்லாவற்றையும்  வாங்கிக் கொண்டோம்! 

 

வழியெங்கும் புதிதாக அமைக்கப்பட்ட மேடைகளில் பெரிய பெரிய பிள்ளையார் விக்கிரகங்கள் அலங்கரிக்கப்பட்டு  வைக்கப்பட்டுள்ளன! தற்சமயம் ட்ரெண்டில் உள்ள பாட்டுகளை ஸ்பீக்கரில் அலறவிடாமல் இருந்தால் எல்லோருக்குமே நல்லது!

 

வழியில் ஒரு பிள்ளையார் கோவிலில் பாலாபிஷேகம் நடைபெற்றுக் கொண்டிருந்தது! நின்று கண்குளிர தரிசித்து பிரார்த்தனை செய்து கொண்டேன். மழையும் எங்களுடன் தொடரத் துவங்கியது!

 

மழையே மழையே வா வா!

மண்ணை நனைக்க வா வா!

மனதை குளிர்விக்க வா வா!

 

என்று சொல்லியவாறே மழையோடு கைகோர்த்து வீட்டுக்குத் திரும்பினோம். நாளைய பிள்ளையார் சதுர்த்தி எல்லோருக்கும் நல்ல விதமாக அமைய வாழ்த்துகள்!

 

நல்லதே நடக்கட்டும்!

 

&*&*&*&**&*&*

 

ரோஷ்ணி கார்னர் - ஓவியம் - 18 செப்டம்பர் 2023:


 

நேற்றைய இரவுப் பொழுதினில் மழை பெய்திருந்ததால் குளிர்ச்சியுடன் இருள் சூழ்ந்து விடிந்த இன்றைய காலை வேளையில் 3 கிமீ நடைப்பயிற்சியை முடித்து விட்டு வந்தோம். அர்ச்சனைக்கும், கஷாயம் போடவும் கொய்யா இலைகளை மட்டும் பறித்துக் கொண்டோம். இனி! குளித்து விட்டு பூஜைக்கான ஏற்பாடுகளை கவனிக்க வேண்டும்!

 

மகள் பிள்ளையார் சதுர்த்திக்காக Roughஆக வரைந்த ஓவியம்! அனைவருக்கும் பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள்!

 

&*&*&*&**&*&*

 

பிள்ளையார் சதுர்த்தி - 18 செப்டெம்பர் 2023:


 

எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கணும்! நல்லதே நடக்கணும்!அரிசி தேங்காய் பாயசம், மோதகங்கள் மற்றும் சுண்டலுடன் எங்கள் வீட்டு கணேஷா இன்றைய பூஜையில் மகிழ்ச்சி அடைந்தார்

 

******

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்


பின் குறிப்பு:
 
கடந்த செப்டம்பர் மாதம் எனது முகநூல் பக்கத்தில் எழுதிய இற்றை, வலைப்பூவில் எனக்கான சேமிப்பாகவும் முகநூலில் வாசிக்காதவர்கள் வசதிக்காக இங்கே ஒரு பகிர்வாகவும்…

8 கருத்துகள்:

  1. வண்ணக் குடைகளும், பிள்ளையார் பொம்மைகளும் வெகு அழகு.  ரோஷ்ணி ஓவியமும் அழகு.

    பதிலளிநீக்கு
  2. ஓவியம் அழகு.

    ஒன்றரை மணி நேர நடையா? மிக நல்லது.

    மற்ற பகுதிகளையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  3. ஓவியம் அழகு.
    கதம்பம் சிறப்பு சகோ.

    பதிலளிநீக்கு
  4. நடை மிக நல்லது. அந்தப் படங்கள் செம அழகு. ரசித்துப்பார்த்தேன்

    பிள்ளையார் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்குத் தயாரான தினத்துக் கடைகளின் பொருட்கள் கவர்கின்றன பிள்ளையார்களும் வண்ண வண்ணக் குடைகளுமாக. ஜொலிக்கின்றன. இங்கும் அருகருகே உள்ள இடங்களில் பல வித வடிவங்கள் பிள்ளையார்கள் வைக்கப்பட்டிருந்தார்கள்.

    ரோஷ்ணி வரைந்திருக்கும் ஓவியம் அழகு.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை. ஓரெழுத்து வித்தியாசத்தில் மனம் மாறும் இயல்புடைய மனிதர்கள்.

    பிள்ளையார்கள், குடைகள் மலர்கள் என படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. சாலையின் பசுமை நிறைந்த காட்சிகள் அருமை. தினமும் நடைப்பயிற்சி செய்து வருவது நல்ல பழக்கம்.

    தங்கள் வீட்டில் பிள்ளையார் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடியமைக்கு வாழ்த்துகள். விழா படங்கள் நன்றாக உள்ளது. தங்கள் மகள் ரோஷிணியின் வரைந்த பிள்ளையார் ஓவியம் நன்றாக உள்ளது. தங்கள் மகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவியுங்கள். இன்றைய அத்தனைப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. சிறப்பு..
    பிள்ளையார் ஓவியம் அழகாக உள்ளது..

    ரோஷ்ணிக்கு நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  7. ரோஷிணியின் ஓவியம் அருமை.
    மற்ற படங்களும் அருமை.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....