புதன், 11 அக்டோபர், 2023

கனவுகள் சொல்ல வருவதென்ன?


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  

 

நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

தன்னுடைய ரகசியம் என்றால் வாயைப் பூட்டி வைக்கிறார்கள்; பிறரது ரகசியம் என்றால் காதைத் தீட்டி வைக்கிறார்கள்.

 

******

 

கனவுகள்…


 

நம் அன்றாட நிகழ்வுகளிலிருந்து தான் கனவுகளுக்கான கதைகள் உருவாகிறது என்று சொல்வதுண்டு! சில நேரங்களில் வரும் கனவானது நம் கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருக்கும்! நிகழ்காலத்தில் அவை நடைபெறுவதற்கான சாத்தியக்கூறே இல்லை என்று சொல்லும் விதமாக இருக்கும்! பெரும்பாலான கனவுகள் விழிப்பு வந்த பிறகு மறந்தே போய்விடும்!

 

சில கனவுகள் மனதில் பசுமையாக  பதிந்து போய்விடும்படியாக இருக்கும்! அந்த கனவின் தொடர்ச்சியைத் தேடிக் கொண்டிருக்கும் நம் மனம்! கனவுகளுக்கான காரணமும், அது சொல்ல வரும் கருத்தையும் சிந்தித்து பார்த்தால் சில புரிதல்கள் தென்படலாம்!

 

நேற்றைக்கும் அதற்கு முதல்நாளும் எனக்கு வந்த கனவுகளைப் பற்றி நான் வெகுநேரமாய் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்! எதை உணர்த்துகிறது இந்தக் கனவுகள்??

 

உறவினர்கள் சூழ்ந்திருக்கும் தருணம்! புழக்கடையில் குவிந்திருக்கும் பாத்திரங்களை புடவையை எடுத்து சொருகிக் கொண்டு குத்துகாலிட்டு ஒரு கல்லின் மீது அமர்ந்த வாக்கில் நான் தேய்த்துக் கொண்டிருக்கிறேன்!! (சே! கனவிலும் பாத்திரம் தான் தேய்க்கணுமா!) 

 

மலை போல் குவிந்திருக்கும்  பாத்திரங்கள்! எல்லோரும் என்னிடம் பேசிக் கொண்டிருக்கிறார்களே தவிர்த்து யாரும் எனக்கு உதவுவதாக இல்லை..🙂 நானும் தேய்த்துக் கொண்டே இருக்கிறேன்!! ஒரு கட்டத்தில் தான் என் சின்னஞ்சிறு மகள் அந்தக் கூட்டத்தில் தொலைந்து விட்டாள் என்று தெரிய வருகிறது! பதறியடித்துக் கொண்டு நுரை ததும்பிக் கொண்டிருக்கும் கைகளுடன் சுற்றிப் பார்க்கிறேன் அங்கு யாருமே இல்லை!!!

 

*****

 

உறவினர்களும் நட்புவட்டமும் நிறைந்திருக்கும் நேரத்தில் உணவு சாப்பிட என்னவரை அங்கு அழைக்கவும், என்னை இங்கிருந்து வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்கும் சொல்ல வேண்டி அந்த நிகழ்விலிருந்து கிளம்பி விடுகிறேன்! இரவு வேளை! சற்று தூரம் நடந்து செல்கிறேன்! ஓரிடத்தில் பாதையை மறைத்து சாரம் கட்டியுள்ளார்கள்!

 

அந்த சாரத்தை பற்றிக் கொண்டு ஏழெட்டு கறுப்பு நிற நாய்கள் நிற்கின்றன! மனதுள் பதட்டம்! என்ன செய்வேன்?? ஒருவழியாக அவற்றிடமிருந்து தப்பிக்கவும், நான் செல்ல வேண்டிய இடத்தை நோக்கியும் போக அப்போது பார்த்து ஒரு பேருந்து வரவே அதில் ஏறி அமர்ந்து விட்டேன்! அந்த வேளையிலும் பேருந்தில் நல்ல கும்பல்!!

 

சற்று தூரம் போன பின்பு தான் நினைவுக்கு வருகிறது என்னிடம் டிக்கெட் வாங்க காசு இல்லை! எதுவுமே கையில் எடுத்துக் கொள்ளாமல் கிளம்பியிருக்கிறேன் என்று உணர முடிந்தது!! வீட்டிலிருந்தே செல்ஃபோனில் அழைத்து அவரிடம் கேட்டிருக்கலாம் அல்லது என்னை அழைத்துப் போகச் சொல்லியிருக்கலாம்! எதற்கு இப்படி கிளம்பி வந்தேன்!

 

என்னையே நான் நொந்து கொண்டு அடுத்த ஸ்டாப்பிங்கிலேயே இறங்கி விட்டேன்! சரி! வந்த வழியே திரும்பிச் சென்று விடலாம் என்று பார்க்கிறேன்! பேருந்து வந்த  பாதையே அங்கு இல்லை!! முற்றிலும் தெரியாத ஒரு இடத்தில் நான் தொலைந்து போகப் போகிறேன்!! மனதில் அந்த கறுப்பு நாய்கள்!!

 

*****

 

நிதானித்து செயல்படணும் என்று சொல்ல வருகிறதா?? அல்லது ஒரு செயலைச் செய்யும் போது நம்மைச் சுற்றி என்ன நிகழ்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறதா??

 

******

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

பின் குறிப்பு:  கடந்த செப்டம்பர் மூன்றாம் தேதி அன்று எனது முகநூல் பக்கத்தில் எழுதிய இற்றை, வலைப்பூவில் எனக்கான சேமிப்பாகவும் முகநூலில் வாசிக்காதவர்கள் வசதிக்காக இங்கே ஒரு பகிர்வாகவும்…

 

18 கருத்துகள்:

  1. கனவுகள் நம் ஆழ்மனதின் பிரதிபலிப்புகள் என்று சொல்வார்கள். கனவுகளுக்கான பலன் என்று சென்றோமானால் நமக்கு அது ஒத்து வராது. பம்மல் படத்தில் கமல் சொல்வது போல, கனவுகளை அனுபவிக்கனும், ஆராயக்கூடாது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் சார். அதை ஆராய்ந்து நம்முடைய மனதை குழப்பிக் கொள்வதை விட அதை இயல்பாக எடுத்துக் கொண்டு கடந்து செல்வதே நல்லது!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  2. கனவுகள் பல நேரங்களில் அர்த்தமற்றவையாக அமைந்துவிடுகிறது. சில நேரங்களில் நம் தூக்கத்தைக் கலைப்பதற்கு மட்டும் எனத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் சார். பெரும்பாலும் அர்த்தமில்லாத கனவுகள் தான். தூக்கமும் அதோடு கலைந்து விடுகிறது!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லை சார்.

      நீக்கு
  3. கனவுகள் தூக்கத்தை மட்டுமல்ல, சில நேரங்களில் நிம்மதியையும் குலைத்துவிடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஐயா. அர்த்தமற்ற கனவுகளை ஆராய்ந்தால் நிம்மதி தொலைந்து விடும்.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  4. ஆழ் மனதின் எண்ணங்களே கனவுகளாக வருவதாக, மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியும் சொல்லலாம்!எதைப் பற்றி நினைத்துக் கொண்டே இருக்கிறோமோ அது தான் கனவுகளாக வரும்.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்.

      நீக்கு
  5. பதில்கள்
    1. மாணவ மணிகளுக்கு அப்படியான கனவு தான் இருக்கணும்!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன் சகோ.

      நீக்கு
  6. //எல்லோரும் என்னிடம் பேசிக் கொண்டிருக்கிறார்களே தவிர்த்து யாரும் எனக்கு உதவுவதாக இல்லை.//

    எல்லா வேலைகளையும் நாமே செய்ய வேண்டி உள்ளதே ! என்ற எண்ணத்தில் ஏற்பட்ட கனவாய் இருக்கும்.

    இந்திரா செளந்திர ராஜன் கதை படித்து இருப்பீர்களோ! அதுதான் கறுப்பு நாய் வந்து இருக்குமோ!

    கனவு எனக்கும் நிறைய வரும் கனவுக்கு அர்த்தம் தேடி யாராவது ஏதாவது சொல்லி விட்டால் மனம் மேலும் சஞ்சலம் படும் தூக்கம் தொலையும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கு சென்றாலும் என்னுடன் வேலைகளும் உடன் வரும் அம்மா. அது என்னுடைய ராசி..:) ஒருவேளை அதன் விளைவாகவும் இருக்கலாம்.

      சமீபத்தில் இந்திரா சாரின் புத்தகம் எதுவும் வாசிக்கலையே அம்மா...:)

      ஆமாம். யாராவது ஏதாவது சொல்லி விட்டால் கவலை தான் மிஞ்சும்.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  7. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை.

    கனவுகள் சில சமயம் இப்படி அர்த்தங்களின்றி வந்து நம்மை தொந்தரவிக்கும். சில நாட்கள் வரை அதைப் பற்றியே மனது அசை போடும். அதன் பின் நம்மோடு கரையும் பொழுதுகளில் அதுவும் கரைந்து விடும்.

    நம் ஆழ்மனதில் எதையாவது அடிக்கடி நினைப்பதுதான் கனவு எனவும் சொல்கிறார்கள். இந்த மாதிரி கனவு வந்து திடுக்கென்ற விழிப்பு வந்தால், அன்று முழுவதும் மனதுக்கு கஸ்டமாகத்தான் இருக்கும். இன்றைக்கு கனவுகளில் தொல்லை ஏதும் இல்லாமல் இருக்க வேண்டுமென்று இறைவனை தொழுது விட்டு படுத்து உறங்குங்கள். இறைவனைத் தவிர நமக்கு உற்ற துணை ஏது? பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். தாங்கள் சொல்வது அனைத்தும் உண்மை தான். அதை ஆராயாமல் கடந்து செல்வது தான் நல்லது.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஜி.

      நீக்கு
  8. நம் ஆழ்மனதில் புதைஞ்சு கிடைப்பவைதான் கனவுகளாக.....முதல் கனவு கதைக்கு வித்து. அதை பேஸ் பண்ணி கதை எழுதுங்க ஆதி. நல்ல கதைக்குத் தொடக்கம் ப்ளாட். அதை வாசித்ததும் என் மனதில் கதை மெதுவாக விரியத் தொடங்கியது ஆனா இருக்கறதையே முடிக்க்கலை..

    இரண்டாவதும் நல்ல ப்ளாட்.....கதைக்கானது. த்ரில்லர் போல இருக்கு.

    கனவுகளை இப்படி எல்லாம் வேணா பயன்படுத்திக்கலாம் நீங்கலே கூட தை
    எழுத்ல்லம்

    கெதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கனவுகளை கதைகளாக மாற்றுவது! நல்ல யோசனை தான்...:)

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  9. கனவுகள் தூங்கிய பிறகு பார்க்கும் சீரியல் !!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..ஹா..ஹா.. உண்மை தான் சார். திடீர் திருப்பங்களும் விறுவிறுப்பான காட்சிகளும் நிறைந்தது!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமசாமி ஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....