அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த
நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக
நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம்
வாருங்கள்.
அனைத்தையும் துறந்து ஒதுங்கி இருப்பவர்கள் துறவியாகத்தான் இருக்கவேண்டும் என்று அவசியமில்லை… துரோகங்களையும் வலிகளையும் அதிகம் அனுபவித்தவர்கள் கூட அனைத்தையும் விட்டு விலகி இருப்பார்கள்.
******
கேரளத்து மரச்சீனி கறி - 23 ஆகஸ்ட் 2023:
வீட்டில் தேவையில்லாத பொருட்கள் அல்லது பேப்பர்
போன்றவற்றை எடைக்குப் போட்டால் அப்போதெல்லாம் மரவள்ளிக்கிழங்கு தான் தருவார்கள்!
மழைநாளில் மரவள்ளிக்கிழங்கை உப்பு, மஞ்சப்பொடி சேர்த்து வேகவைத்து தருவாள் அம்மா!
அல்லது வேகவைத்த கிழங்கை
துண்டங்களாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் தாளித்து தருவாள்!
ஒருநாள் சமையலுக்கும் ஆச்சே! வத்தக்குழம்பு பண்ணுகிற
நாளில் தொட்டுக் கொண்டு சாப்பிட மரவள்ளிக்கிழங்கு கறி ரெடி! இருப்பதை வைத்து
சிறப்பாக செய்து தந்த நாட்கள்! வாரச்சந்தையில் 1/2 கி 20 ரூ தான் அக்கா!
வாங்கிக்கோங்க! என்று சொல்லவும் வாங்கிக் கொண்டேன்! இன்று அம்மாவை நினைத்துக்
கொண்டு பண்ணினேன்!
&*&*&*&**&*&*
பண்டிகைகளும் கொண்டாட்டங்களும் - 26 ஆகஸ்ட் 2023:
பண்டிகைகளும் அதற்கான கொண்டாட்டங்களும் நம்மை
மனதளவிலும் உடலளவிலும் மேலும்
பக்குவப்படுத்துகின்றன என்று தான் சொல்லணும்!
விழா என்றதும் அவற்றுக்கான மெனக்கெடல்களும்,
திட்டமிடல்களும் அதை பக்குவமாக செயல்படுத்துவதும் என்று மனதும் உடலும் அதற்கேற்ற
பக்குவத்துக்கு தன்னை மாற்றிக் கொள்கிறது என்பது ஆச்சரியம்!
"இவ்வளவு சின்ன முகத்துக்கு எப்படி புடவை கட்டி
விட்டீங்க? உங்கள மாதிரியே அம்பாளும் உயரமா இருக்கா! முழுப்புடவை தானா! கலர் அழகா இருக்கு! எங்கே வாங்குனது?
மந்திரம் சொல்லி பூஜை நீங்களே பண்ணிட்டீங்களா? உங்க
வீட்டுக்காரர் இந்த
பண்டிகைக்கெல்லாம் வர மாட்டாரா? சார்! அங்கேயே தான் இருக்காரில்ல! அவர் கூட யார்
இருக்காங்க?"
பலதரப்பட்ட மனிதர்களை சந்திப்பதும், அவர்களின்
மனநிலையை புரிந்து கொள்வதும், நாம் அவர்களின் முன்னிலையில் தனித்து தெரிவதும்,
சிலநேரங்களில் நாம் பெருந்தன்மையாக நடந்து கொள்வதும், நமக்கான பாராட்டில்
மகிழ்வதும் என இந்த மனதிற்கு தான் எத்தனை வேலை!!!
சாலையோர மரத்திலிருந்து சட்டென்று உதிர்ந்து விழும் மலரின் சுகந்தம் அந்தச்
சூழலை மெய்மறக்கச் செய்வது போல நம்மை புத்துணர்வாகவும் புதுப்பித்துக் கொள்ளவும்
அவ்வப்போது வரும் கொண்டாட்டங்களும் அதனால் ஏற்படும் சந்தோஷங்களும் நமக்கான டானிக்!
&*&*&*&**&*&*
சமுத்திரம் - 3 செப்டம்பர் 2023
ஒவ்வொரு நாளும் சலனமில்லாத நீரோடையைப் போன்று
வழக்கமான வேலைகளால் கடந்து செல்கிறது! சிலநேரங்களில் பொழுது போகாமல் இணையத்தில்
ஏதாவது காணொளிகளைப் பார்த்து நேரத்தைக் கடத்துவதாக தான் இருக்கிறது!
வார இறுதிக்களில் மகளுடன் சேர்ந்து சில வருடங்களுக்கு முன் வெளிவந்த திரைப்படங்களை
தேர்வு செய்து
பார்த்து வருகிறேன். ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் ஒவ்வொரு கோணத்தில் பார்க்க
முடிகிறது! எங்களுடைய அனுமானங்களையும், அந்தத் திரைப்படத்தின் பின்னணியில் இருக்கும் அதன்
கதைகளைப் பற்றி பேசிக் கொள்வதுமாக சுவாரஸ்யமாகச் செல்கிறது!
அப்படித்தான் 2001ல் வெளிவந்த 'சமுத்திரம்' என்ற
திரைப்படத்தை இம்முறை யூட்டியூபில் பார்த்தோம்! அண்ணன்கள் தங்கைக்காக தங்கள்
சொத்துக்களை விட்டுத் தருவதும், ஒரு கட்டத்தில் புகுந்த வீட்டினர் செய்யும்
கொடுமைகளை பொறுக்க முடியாத தங்கை அண்ணன்களுடன் வந்துவிடுவதாகவும், சில
நாட்களுக்குப் பின்னர் தங்கையின் புகுந்த வீட்டினர் அவளிடம் மன்னிப்புக் கேட்டு
சேர்வதாகவும் தான் இதுவரை டிவியில் பார்த்திருக்கிறேன்!
ஆனால் இம்முறை புரொடக்ஷன் கம்பெனியின் சேனலிலேயே
நாங்கள் பார்த்ததால் ஒரிஜினல் க்ளைமேக்ஸை தெரிந்து கொள்ள முடிந்தது! என்றாவது
ஒருநாள் தங்கையின் புகுந்த வீட்டினர் அவளைப் புரிந்து கொள்வார்கள் என நினைத்துக்
கொண்டு அண்ணன்களுடனேயே தன் வாழ்நாளை கடப்பதாக வருகிறது!
க்ளைமேக்ஸை முதலில் இப்படி எடுக்கப்பட்டதாகவும்
பின்பு சில காரணங்களால் அது மாற்றப்பட்டதாகவும் தெரிந்து கொள்ள முடிந்தது! இப்படி
ஒவ்வொரு திரைப்படத்துக்குப் பின்னேயும் சொல்லப்படாத கதைகள் பல உள்ளன! பலருடைய
உழைப்பில் உருவாகும் ஒரு திரைப்படத்தை சட்டென்று நாம் மதிப்பிட்டு விடுகிறோம்!!
******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை
பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும்
சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
ஏனோ சர்க்கரை வள்ளிக்கிழங்கு பிடிப்பதில்லை. அதன் தித்திப்பு சுவை காரணமாக இருக்கலாம்!
பதிலளிநீக்குபண்டிகைகள் பற்றி எழுதி இருப்பது மனதைத் தொட்டது.
சமுத்திரம் படத்தில் நீங்கள் சொல்லி இருக்கும் இரண்டாவது க்ளைமேக்ஸ் படம்தான் பார்த்திருக்கிறேன். இரண்டு மூன்று பாடல்கள் நன்றாய் இருக்கும்.
ஸ்ரீராம் இது மரச்சீனிக் கிழங்கு - மரவள்ளிக்கிழங்கு. சர்க்கரை வள்ளிக் கிழங்கு இல்லை.
நீக்குகீதா
இது சர்க்கரை வள்ளிக்கிழங்கு இல்லை சார். மரவள்ளிக்கிழங்கைத் தான் மரச்சீனி என்போம். மரச்சீனி அப்பளம் எனக்கு மிகவும் பிடித்தது!
நீக்குஇரண்டாவது கிளைமேக்ஸ் என்றால் அண்ணன்களுடனேயே வாழ்வதா?? அன்று தான் இந்த கிளைமேக்ஸை முதல்முறையாக பார்த்தேன் சார்.
தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.
நீங்கள் சொல்லியிருப்பது மரச்சீனிக் கிழங்கு இல்லையா? (சர்க்கரைவள்ளி வேறு. இளம்சிவப்பு தோல். மரவள்ளி ப்ரௌன் தோல்,). சில தடவைகள் ஆசையில் வாங்கிவந்து, செய்ததில்லை.
பதிலளிநீக்குபண்டிகைகள்... அனைவருடனும் சேர்ந்து கொண்டாடுவதே அலாதியானதுதான். ஒவ்வொருவரின் நிலை அறியாமல் கேள்வி கேட்பது சங்கடமான விஷயம்தான்.
ஆ!!! நெல்லை...உங்களுக்குமா மரச்சீனிக் கிழங்குதான் மரவள்ளிக் கிழங்குன்னு தெரியாம போச்சு!!! கேரளத்துல மரச்சீனி - இங்கு மரவள்ளி!
நீக்குகீதா
ஓ... குழம்பி விட்டேன்!
நீக்குமரச்சீனி என்றால் மரவள்ளிக்கிழங்கு! மரச்சீனியில் சிப்ஸ், அப்பளம் இரண்டும் எனக்கு பிடித்தமானது! அதில் புட்டு, வடை என்று கூட செய்கிறார்கள்.
நீக்குகேள்வி கேட்பவர்க்ள் அடுத்தவரின் மனதை பற்றியெல்லாம் எங்கே யோசிக்கிறார்கள்...:)
தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லை சார்.
விழாக்கள் என்றும் மகிழ்வு தரும்...
பதிலளிநீக்குஆமாம் சகோ. விழாக்கள் என்றும் மகிழ்வையே தரும்.
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன் சகோ.
வாசகம் அருமை
பதிலளிநீக்குகதம்ப மாலை அழகாக தொகுத்து இருக்கிறீர்கள்.
தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்.
நீக்குகதம்பம் அருமை.
பதிலளிநீக்குமரவள்ளிக் கிழங்கு இங்கும் அதிகமாகக் கிடைக்கும்.
அருமை. மரவள்ளிக்கிழங்கை வேகவைத்து சாப்பிட்டாலே போதும். வயிறே நிரம்பி விடும்! இல்லையா!
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க மாதேவி.
மரச்சீனிக் கிழங்கு கறி ஆஹா நம் வீட்டில் செய்வதுண்டு. கறியாகவும் சிலப்போ மரச்சீனிக் கிழங்கு புழுக்காகவும், காரக் கறியாகவும் செய்வதுண்டு. மரச்சீனிக்கிழங்கு புட்டும்....
பதிலளிநீக்குபடங்கள் பார்ப்பது ரொம்ப அபூர்வம். பார்க்க நினைத்தாலும் டக்கென்று அமைவதில்லை.
பண்டிகைகள் - முன்பு போல் இப்போது நம் வீட்டில் இல்லை. பல உணவுக் கட்டுபாடுகள். எனவே எல்லாமே சுருங்கிவிட்டது
கீதா
சூப்பர். மரச்சீனி கறியை சுடச்சுட சாப்பிட அமிர்தம்.
நீக்குஉணவு கட்டுப்பாடுகள் எல்லோர் வீட்டிலுமே வந்து விட்டது. அக்கம்பக்கம் வினியோகமும் நின்று விட்டது!
தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.
பதிவு அருமை.
பதிலளிநீக்குமரச்சீனீக் கிழங்கு முன்பு செய்வேன் , இப்போது வாங்குவதே இல்லை.
பண்டிகை வீட்டில் அனைவரும் இருக்கும் போது உற்சாகம் தான்.
உங்களின் மனம் என்ன பாடு படும் என்று அறியாமல் கேட்கப்படும் கேள்விகளை பற்றி என்ன சொல்வது? இப்படியும் சில மனிதர்களுடன் தான் நாம் வாழ வேண்டி உள்ளது.
மரச்சீனி அம்மா அடிக்கடி செய்து தருவார். நான் என்றாவது தான் வாங்குகிறேன்.
நீக்குஉண்மை தான் அம்மா. அடுத்தவர் மனதைப் பற்றியெல்லாம் யார் யோசிக்கிறார்கள்.
தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.