ஞாயிறு, 22 அக்டோபர், 2023

கதம்பம் - Seeds Laddoo - நவராத்திரி 2023 - சுற்றும் ரவிக்கைத் துணி - முதல் மூன்று நாட்கள்

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  

 

நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

கடந்து வந்த படிகளை உடைத்து விடாதீர்கள். ஒரு வேளை இறங்குவதற்கு அதே படிகள் தேவைப்படலாம்.

 

******

 

Seeds Laddoo - 10 அக்டோபர் 2023:



தாவர விதைகள் உடலுக்கு நன்மை செய்யக்கூடியது! எடைகுறைப்பில் இறங்கிய பிறகு அதைக் குறித்தான பக்கங்களுக்கு அவ்வப்போது சென்று பார்த்ததில் தாவர விதைகளின் மருத்துவ பயன்களை பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது! இரத்த கொதிப்பு, கொலஸ்ட்ரால், எடைகுறைப்பு என்று பல விஷயங்களுக்கு இந்த விதைகள் உதவுகிறது!

 

நம் அன்றாட வாழ்வில் ஏதேனும் ஒரு விதத்தில் இந்த விதைகளை சேர்த்துக் கொள்வதால் உடலில் நல்ல மாற்றங்களை உணரலாம்! அதெல்லாம் சரி! விதைகள் என்றால் என்னென்ன விதைகள்??? அவற்றை எங்கு வாங்கலாம்??? எப்படி பயன்படுத்தலாம்???

 

சூரியகாந்தி விதைகள், வெள்ளரி விதைகள், பூசணி விதைகள், பரங்கி விதைகள், தர்பூசணி விதைகள், ஆளி விதைகள், சப்ஜா விதைகள், சியா விதைகள் என்று டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களிலும் நாட்டு மருந்து  கடைகளிலும் கிடைக்கின்றன.

 

இவற்றை Dry roast செய்து அப்படியே சாப்பிடலாம். வெந்நீரில் அல்லது பாலில் கலந்து குடிக்கலாம்! இதில் ஆளி விதையை சில வருடங்களாகவே இட்லி மிளகாய்ப்பொடிக்கு அரைக்கும் போது சேர்த்துக் கொள்கிறேன். கோடையில் சப்ஜா விதைகளை நீரில் போட்டு வைத்து ஜூஸ், ஃபலூடா போன்றவற்றில் சேர்த்துக் கொள்வேன். உடல் சூட்டை குறைக்கும்!

 

இப்போது சுவையான விதை லட்டு எப்படி செய்தேன் என்று பார்க்கலாம்!

 

சூரியகாந்தி, வெள்ளரி, தர்பூசணி, ஆளி, பரங்கி என்று விதைகள் எல்லாவற்றையும் சம அளவாக எடுத்துக் கொண்டு வாணலியில் வறுத்துக் கொள்ளவும். அதேபோல பாதாம், முந்திரி, அக்ரூட் போன்றவற்றையும் சம அளவில் எடுத்து வறுத்துக் கொள்ளவும். 

 

இதனுடன் பொட்டுக்கடலை மற்றும்  வேர்க்கடலையும் சேர்த்து வறுத்துக் கொள்ளவும். இதில் வாசனைக்காக சிறிதளவு ஏலக்காயும் சேர்த்துக் கொண்டு ஆறியதும் மிக்சியில் பொடித்துக் கொள்ளவும். விட்டு விட்டு அரைக்கணும் இல்லையென்றால் விதைகளிலிருந்து எண்ணெய் வெளியே வந்துவிடும்! இதனுடன் மக்கானா என்று சொல்லப்படுகிற தாமரை விதைகளும் சேர்த்துக் கொள்ளலாம்!

 

இந்த பவுடரை பாலில் கலந்து குடிக்கலாம்! பாலில் வாழைப்பழமும், நாட்டு சர்க்கரையும் மற்றும் இந்த விதைப்பவுடரையும் சேர்த்து அரைத்து ஸ்மூத்தியாகவும் குடிக்கலாம்! 

 

இந்தப் பவுடருடன் இனிப்புக்கு தகுந்தாற்போல் நாட்டுச்சர்க்கரை சேர்த்து கலந்து சிறிதளவு நெய்யை காய்ச்சி விட்டு லட்டுவாக பிடித்திருக்கிறேன்! நெய்யை தவிர்க்கணும் என்று நினைப்பவர்கள் வெல்லத்தை பாகாக காய்ச்சி உருண்டையாக பிடித்துக் கொள்ளலாம்!

உடலுக்கு நன்மை செய்யும் இந்த ரெசிபியை நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்.

 

&*&*&*&**&*&*

 

நவராத்திரி 2023:

 

நவராத்திரி 2023 நாட்கள் ஆரம்பித்து கோலாகலமாக நடந்து கொண்டிருக்கிறது.  ஒவ்வொரு நாளும் சுண்டல் போன்ற நிவேதனங்களும் ஏற்பாடுகளும் என சிறப்பாகச் சென்று கொண்டிருக்கிறது. நவராத்திரி குறித்து முகநூலில் எழுதிய இற்றைகள் சில சேர்த்து கடந்த வாரத்தில் ஒரு நாள் மாலை நேரத்தில் பதிவாக வெளியிட்டு இருந்தேன். ஏனோ அப்பதிவு பலரது பார்வைக்கு வரவில்லை. நவராத்திரி ஏற்பாடுகள் குறித்து எழுதிய பதிவு உங்கள் பார்வைக்கு வரவில்லை என்றால் இங்கே படிக்கலாம்! 

 

&*&*&*&**&*&*

 

நவராத்திரியும் ரவிக்கைத் துணியும்: 



 

பொதுவாக வெற்றிலை பாக்குடன், பழம், பூ, மஞ்சள் குங்குமம் இவற்றுடன் ஒரு நாணயமோ அல்லது ரவிக்கைத் துணியோ வைத்து கொடுப்பது தான் வழக்கம்! இவற்றுடன் கண்ணாடி, சீப்பு, வளையல், பொட்டு, மருதாணி என்று சேர்த்தும் தரலாம்! 

 

இதில் ரவிக்கைத்துணியை மேட்சிங் இல்லாமல் போனால் யாரும் தைத்துக் கொள்வதில்லை! அதுபோக  புடவையுடனே வரும் அட்டாச்டு பிளவுஸ்களும் சில வருடங்களாக உடன் வந்துவிடுவதாலும் இந்த மாதிரி தாம்பூலத்தில் வைத்துத் தரும் ரவிக்கைத்துணிகளுக்கு வேலையில்லாமல் மீண்டும் மீண்டும் சுற்றி ஒருநாள் நாம் வைத்துத் தந்த துணி நமக்கே வந்து சேர்ந்து விடுகிறது...🙂

 

இதற்கு மாற்று வழியாக பிளாஸ்டிக்கை கொண்டு வந்தார்கள்!அதுவும் காலப்போக்கில் எல்லோர் வீட்டிலும் இடம்பெற்று விதவிதமாய் தொடர்ந்து கொண்டிருந்தது! அதையும் தவிர்க்க எண்ணி சற்றே யோசித்து பெண்களுக்கு உபயோகமான பொருளாகவும், அதேசமயம் பூமிக்கு கெடுதல் விளைவிக்காததாகவும் இருக்கணும் என்று திட்டமிட்டேன்!

 

கடந்து சென்ற வருடங்களில் வைத்துத் தந்த பொருட்கள் மிகவும் பிடித்திருந்ததாகவும், தங்களுக்கு உபயோகமாக இருப்பதாகவும் தோழிகள் சொல்லும் போது சந்தோஷமாக இருக்கிறது! நாமே விதவிதமாய் வைத்துக் கொள்வதை விட மற்றவர்களுக்கு கொடுப்பதில் தானே உண்மையான மகிழ்ச்சியும் நிறைவும்!

 

கொலுவிற்கு மஞ்சள் குங்குமம் வாங்கிக் கொள்ள வருபவர்களுக்கு தாம்பூலத்தில் வைத்துக் கொடுப்பதற்காக இம்முறை என்னவர் டெல்லியிலிருந்து வாங்கி வந்தது! பைகளும், பர்ஸ்களும் எவ்வளவு இருந்தாலும் சரியாகத் தான் இருக்கும் இல்லையா! 

 

&*&*&*&**&*&*

 

இன்றைய பதிவில் நவராத்திரி கொண்டாட்டங்களின் முதல் மூன்று நாட்கள் குறித்து பார்க்கலாம்! 

 

நவராத்திரி 2023 - முதல் நாள்: 15 அக்டோபர் 2023:



 

நவராத்திரி முதல் நாள் நைவேத்தியமாக இன்று  ரோஸ்மில்க் கேசரி - உங்களுக்கும் தான்! 🙏

 

&*&*&*&**&*&*

 

நவராத்திரி 2023 - இரண்டாம் நாள்: 16 அக்டோபர் 2023:






 

நவராத்திரி இரண்டாம் நாள் நைவேத்தியமாக இன்று வெள்ளை பட்டாணியில் சுண்டல் செய்திருந்தேன்.

 

பாரம்பரியமிக்க Gopaldas jewellersஇலிருந்து Golu Contestக்காக வந்திருந்தார்கள். கொலுவை வீடியோ எடுத்ததோடு லோக்கல் சேனலான ஜெயம் டிவிக்காக பேட்டியும் எடுத்துச் சென்றார்கள்.

 

அக்கம்பக்கம் உள்ள நட்புகளும், முகநூல் தோழிகளான Uma Sundar & Rajeswari Periyaswamy மகள் shyamala உடன்  வருகை தரவே இன்றைய நாள் இனிதே கடந்தது. 

 

&*&*&*&**&*&*

 

நவராத்திரி 2023 - மூன்றாம் நாள்: 17 அக்டோபர் 2023:



நவராத்திரி மூன்றாம் நாள் நைவேத்தியமாக இன்று  தட்டைப்பயறு சுண்டல் செய்தேன்!

 

மாலை லலிதா சகஸ்ரநாமம் சொல்லி அம்பாளை பிரார்த்தித்துக் கொண்டேன்! சென்ற வருட நவராத்திரியில் தினமும் லலிதா சகஸ்ரநாமம் சொன்ன போது மனதில் பதிய வைக்கணும் என்று நினைத்தேன். இன்னும் முழுதாக பதியவில்லை! 

 

அதற்குள் ஸ்கந்த குரு கவசம், சண்முக கவசம், பகை கடிதல், கோளறு பதிகம், சிவபுராணம் எல்லாம் மனதில் பதிந்து விட்டது! அன்றாடம் சமைக்கும் போது எல்லா ஸ்லோகங்களையும் சொல்லிக் கொண்டே இருப்பேன்! விரைவில் கந்தர் அனுபூதியையும், லலிதா சகஸ்ரநாமமும் மனனம் செய்யணும்!

 

******

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

பின் குறிப்பு:  எனது முகநூல் பக்கத்தில் எழுதிய இற்றைகள், வலைப்பூவில் எனக்கான சேமிப்பாகவும் முகநூலில் வாசிக்காதவர்கள் வசதிக்காக இங்கே ஒரு பகிர்வாகவும்…

 

24 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை. படங்கள் அனைத்தும் மிக நன்றாக உள்ளது. நீங்கள் வீட்டில் வைத்திருக்கும் கொலு மிகவும் நன்றாகவும், அழகாகவும் உள்ளது. உங்களுக்கும் மனநிறைவான நவராத்திரி வாழ்த்துகள்.

    பதிவில் நீங்கள் சொல்லியிருக்கும் அத்தனை விஷயங்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். கொலுவுக்கு நீங்கள் செய்திருந்த நிவேதனங்கள் அருமை. பரிசு பொருட்களும் நன்றாக உள்ளது.

    விட்டுப்போன உங்களின் பழைய பதிவுகளை படிக்கிறேன். அத்தனை பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களின் விரிவான கருத்துக்களுக்கு மிக்க நன்றி கமலா ஜி.

      நீக்கு
  2. கொலு அழகாக இருக்கிறது. நிவேதனங்களும் அப்படியே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லை சார்.

      நீக்கு
  3. நாங்கள் கொலு வைப்பதில்லை.  வரலக்ஷ்மி நோன்புக்கும்,  பொதுவாகவும் எங்கள் வீட்டில் பாஸ் எப்போதும்   பாத்திரங்கள், ,ஹேண்ட் பேக், உள்ளிட்ட வெவ்வேறு பொருள்களை வைத்துக் கொடுப்பார்.  ஆண்களுக்கும் பெர்பியூம், கர்சீப் செட் போன்றவை கொடுத்த வழக்கமும் உண்டு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆண்களுக்கும் பரிசுப் பொருட்களை வைத்து தருவது நல்ல விஷயம்.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  4. கொலுவும் அழகு, சுண்டலும் அழகு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்.

      நீக்கு
  7. அருமை!

    அதிலும் அந்த ரோஸ்மில்க் கேசரியும் பட்டாணி சுண்டலும் பார்க்கவே அழகு.

    நவராத்திரிக்கு கிடைக்கும் ரவிக்கை துணிகளை தைக்க ஆரம்பித்தால் அரசு தனியாக உரிமைத் தொகை அறிவிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..ஹா..ஹா.. உண்மை தான். தையல் கூலி கொடுத்து கட்டுப்படியாகாது!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் சார்.

      நீக்கு
  8. மிக அருமையான பதிவு மீண்டும் பார்த்து படித்து மகிழ்ந்தேன்.
    படங்கள் எல்லாம் அருமை. பரிசுகள் நல்ல தேர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  9. கொலு சூப்பர், ஆதி, படம் எடுத்துக் கொண்டு போயிருக்காங்க பரிசு கிடைக்கும். வாழ்த்துகள். கோபியர் செட் ரொம்ப அழகா இருக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எத்தனையோ பேர் தீமெல்லாம் வைத்து கொலு அவ்வளவு அழகாக வைக்கிறார்கள். எங்களுடைய கொலு சிறியது தான். பரிசெல்லாம் நான் நினைப்பதே இல்லை! அதான் அழகான கீ ஹோல்டர் கொடுத்திருக்கிறார்களே!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  10. வைத்துக் கொடுக்க வெங்கட்ஜி வாங்கி வந்த பர்ஸ்கள், குட்டிப் பைகள் ரொம்ப அழகு. கவர்கின்றன.

    பிரசாதங்கள் எல்லாம் Yummy! ரோஸ் மில்க் கேசரி ஆஹா!!!

    ரோஷ்ணி அன்று போட்டுக் கொண்டிருந்தடிசைன் படம் போட்டிருந்தீங்க இப்ப படத்தில் முழுவதும்வ் அரைந்த சட்டி ரொம்ப அழகா இருக்கு.

    நானும் பல வருடங்களாக இந்த தாவர விதைகள் பயன்படுத்திவருகிறேன். சப்ஜா சியா போட்ட ஜூஸ் ரொம்பப் பிடிக்கும். சப்ஜா ஒரு வகை துளசிவிதை.

    முடிந்தால் basil வளருங்க ஆதி. எளிதாக வளரும். துளசி குடும்ப வகைதான்.

    எல்லாமே ரசித்தேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கு எங்கள் பால்கனியில் வெயில் பெரிதாக வராது என்பதால் செடிகள் எதுவும் வைப்பதில்லை!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  11. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன் சகோ.

      நீக்கு
  12. நவராத்திரி படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமசாமி ஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....