திங்கள், 9 அக்டோபர், 2023

கதம்பம் - ப்ரோட்டீன் இட்லி - கேழ்வரகு உப்புமா - ரோஷ்ணி கார்னர் - வரலக்ஷ்மி விரதம்

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  

 

நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

ஒரு கட்டத்தில் நாம் கடந்து வந்த காலங்களைத் திரும்பிப் பார்த்தால்… எல்லோரும் நம்மை உபயோகப்படுத்திக் கொண்டார்களே தவிர யாரும் நமக்கு உதவவில்லை என்று புரிகிறது. 

 

******

 


ப்ரோட்டீன் இட்லி - 19 ஆகஸ்ட் 2023:


 

எடைக்குறைப்பு, சர்க்கரை போன்ற பல காரணங்களுக்காக அரிசி உணவை தவிர்க்க நினைக்கிறோம்! அரிசிக்குப் பதிலாக சிறுதானியங்களை பயன்படுத்தலாம்! அரசு சார்பில் இந்த ஆண்டை சிறுதானிய ஆண்டாக அறிவித்திருக்கிறது! சிறுதானியத்தில் அடை, பொங்கல், கிச்சடி, பாயசம் என்று சிலவற்றை செய்து இங்கே நானும்  பகிர்ந்திருக்கிறேன்.

 

சைவ உணவை எடுத்துக் கொள்பவர்களுக்கு அன்றாடத் தேவையில் ப்ரோட்டீனுக்கு பெரும் பங்கு உண்டு! உடலுக்குத் தேவையான ப்ரோட்டீன் சத்து பருப்புகள் மூலம் கிடைக்கின்றது! அந்த பருப்புகளை வைத்து ஒரு காலை உணவு எடுத்துக் கொள்வது என்பது உடலுக்கு நன்மை செய்யக்கூடியது!

 

பயத்தம்பருப்பும், உளுந்தும் சம அளவில் எடுத்துக் கொண்டு மூன்று மணிநேரம் ஊறவைத்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். அதனுடன் உப்பு சேர்த்து கலந்து புளிக்க விடவும்.  மாவு நன்கு பொங்கி வந்ததும் இட்லியாக வார்க்கலாம்! மாவில் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து விட்டும் செய்யலாம். நம் விருப்பம் தான்!

 

தொட்டுக்கொள்ள காரச் சட்னி!

 

வெங்காயம் தக்காளி சட்னி செய்ய வதக்கிய பின்னர் அதனுடன் சிறிதளவு இட்லி மிளகாய்ப் பொடியும், சிறிதளவு தேங்காயும் சேர்த்து அரைத்து தாளித்திருக்கிறேன்.

 

&*&*&*&**&*&*

 

கேழ்வரகு உப்புமா - 20 ஆகஸ்ட் 2023


 

கேழ்வரகு உடலுக்கு நன்மை செய்யக்கூடியது! அவ்வப்போது ஏதேனும் ஒருவிதத்தில் நாம்  சேர்த்துக் கொள்ள வேண்டும்! 

 

சுட்டிபெண்ணாக இருந்த போது ராகிக்கூழ் அதில் பால் எதுவும் சேர்க்காமல் கெட்டியாக ஸ்பூனில் எடுத்து சாப்பிடும் விதமாகத் தான் சாப்பிடுவேனாம்! அதுவும் ஒரு குறிப்பிட்ட கிண்ணம் முழுவதும் தான் வேண்டும் எனச் சொல்லி அடம் பிடித்திருக்கிறேன்...🙂 

 

பக்கத்து வீட்டு லில்லி சேச்சி அவ்வப்போது ராகிமாவில் பெரிய உருண்டைகளாக செய்து உள்ளே தேங்காயுடன் இனிப்பு சேர்த்து ஸ்டஃப் செய்து இட்லி பானையில் வைத்து தயாரிப்பதை பார்த்திருக்கிறேன். 

 

அவரின் மகன்கள் அலெக்ஸுக்கும், தாமஸுக்கும் கொடுப்பது போல தம்பிக்கும் எனக்கும் கூட கொடுப்பார்! அது பசுமை நிறைந்த காலம்! பக்கத்து வீட்டினரின் அன்பும் உரிமையும் நமக்கு உணர வைத்த நாட்கள்!

 

இன்றைய காலை உணவாக கேழ்வரகு என்னும் ராகியில் உப்புமா செய்து சாப்பிட்டோம்! ராகிமாவுடன் சம அளவு ரவை கலந்து வறுத்துக் கொண்டு வழக்கமான ரவை உப்புமா செய்முறையில் செய்ய வேண்டியது தான்! இதை சட்னியுடனோ, சாம்பார் உடனோ சுவைக்கலாம்!

 

&*&*&*&**&*&*

 

ரோஷ்ணி கார்னர் - 23 ஆகஸ்ட் 2023:



வெள்ளியன்று வரும்  வரலஷ்மி நோன்புக்கான பணியில் அம்பாளுக்கு பின்னே வைக்கும் திருவாசியைப் போல் மகள் அட்டையில் வெட்டி செய்திருக்கிறாள்! இன்னும் வர்ணம் கொடுத்து அலங்கரிக்கணும்!

 

திருவாசி தயார் - 24 ஆகஸ்ட் 2023:


மகளின் கைவண்ணத்தில் திருவாசி தயார்…


 

&*&*&*&**&*&*

 

அம்பாள் அலங்காரம் - 24 ஆகஸ்ட் 2023:

 

ஓரளவிற்கு அலங்காரம் முடிந்தது…


 

வரலக்ஷ்மி பூஜை - 25 ஆகஸ்ட் 2023:

 

வரங்களை அருளும் வரலஷ்மியை பூஜித்து இன்றைய நாள் இனிதானது!

 

எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கணும்! 




 

******

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்



24 கருத்துகள்:

  1. சற்றே நிறம் மங்கிய ஆனால் ப்ரோடீன் பொருந்திய இட்லி.  கொரகொரவென்று வந்ததா, மென்மையாகி வந்ததா?  சட்னியில் இட்லி மிளகாய்ப்பொடியுமா?

    வரலக்ஷ்மி பூஜை ஏற்பாடுகளும், பூஜை விவரங்களும் சுவாரஸ்யம்.  ரோஷ்ணிக்கு பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இட்லி மென்மையாக தான் இருந்தது சார்! மாவும் மையாக தான் அரைத்து எடுத்திருந்தேன்.

      சட்னிக்கு வெங்காயம் தக்காளியுடன் இட்லி மிளகாய்ப்பொடியும் தான் சேர்த்து அரைத்திருந்தேன்.

      தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  2. இன்றைய இரண்டு உணவு வகைகளும் நன்று. வித்தியாசமானவை.

    மகளின் கைத்திறனுக்குப் பாராட்டுகள். ஓவியம் ஏதேனும் வரைந்தாரா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டு உணவு வகைகளுமே அதன் சுவையைக் காட்டிலும் உடலுக்கு நன்மை தருவது என்று சொல்லலாம்!

      நேரமின்மையால் மகள் தற்சமயம் ஓவியங்கள் பெரிதாக வரைவதில்லை சார்! பிள்ளையார் சதுர்த்திக்கு roughஆக வரைந்திருந்தாள். விரைவில் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

      தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லை சார்.

      நீக்கு
  3. /// ஒரு கட்டத்தில் நாம் கடந்து வந்த காலங்களைத் திரும்பிப் பார்த்தால்… எல்லோரும் நம்மை உபயோகப்படுத்திக் கொண்டார்களே தவிர யாரும் நமக்கு உதவ வில்லை என்று புரிகிறது. ///

    சிறப்பு.. சிறப்பு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜு சார்.

      நீக்கு
  4. இன்றைய வாசகம் வெகு அருமையாக உள்ளது.

    பலரது வாழ்வில் பொருந்தும். மற்ற கதம்ப செய்திகள் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  6. நிர்மலா ரெங்கராஜன்9 அக்டோபர், 2023 அன்று 1:34 PM

    ப்ரோட்டீன் இட்லி பார்க்கவே அசத்தல் 👍
    நிச்சயமாக செய்து பார்க்க வேண்டும்.
    இன்றைய பதிவுகள் அனைத்தும் அருமை👍💐

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுவையைக் காட்டிலும் உடலுக்கு நன்மை தருவது. செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள்!

      தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி நிர்மலா ரெங்கராஜன் ஜி.

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன் சகோ.

      நீக்கு
  8. முகநூலில் பகிந்த போது படித்தேன்.
    ப்ரோட்டீன் இட்லி நன்றாக இருக்கிறது.
    ரோஷ்ணி செய்த திருவாசி அருமை, அழகு.
    அம்மன் அருமையாக இருக்கிறார். பிரசாதங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்தான அத்தனை கருத்துகளுக்கும் மிக்க நன்றிம்மா.

      தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  9. வெங்கட் அவர்களும் விரைவில் எழுத ஆரம்பிக்கவேண்டும் என்பதைப் பதிவு செய்கிறேன். அவர் பயணப் பதிவுகள் பாதியில் நிற்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் அதையே தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நம்புகிறேன். பார்க்கலாம்.

      நீக்கு
  10. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. வாசகமும் அருமை. புரோட்டின் இட்லி, கேள்வரகு உப்புமா இரண்டின் படங்களும் செய்து பார்க்க தூண்டுகின்றன. அதன் செய்முறைகள் அருமையாக உள்ளது.

    தங்கள் மகளின் கை வேலைகள் சிறப்பாக உள்ளது. அம்மன் பின்னால் வைப்பதற்காக செய்த திருவாச்சி அழகாவும். பொறுமையாகவும் தயாரித்திருக்கிறார். தாங்கள் அலங்கரித்து பூஜை செய்த வரலட்சுமி அம்மன் அலங்காரம் நன்றாக உள்ளது. உங்களுக்கும், உங்கள் மகளுக்கும் அன்பான பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகளைக் குறித்தான உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி கமலா ஜி!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றிகள்.

      நீக்கு
  11. மகளின் கைவண்ணம் , அம்மன் அலங்காரம் சூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க மாதேவி.

      நீக்கு
  12. ரோஷ்ணி - கைவண்ணம் செம!! ரொம்ப அழகா செய்திருக்காங்க. வாழ்த்துகள்!

    ப்ரோட்டின் இட்லி - நல்லா வந்திருக்கு ஆதி! நம்ம வீட்டுல இப்படித்தனே பெரும்பாலும்
    டயட்!

    பச்சைப்பயறு ம் உளுந்தும் கலந்தும் இப்படிச் செய்வதுண்டு. அதில் தோல் இருக்கிறது இல்லையா அதனால். அது போல தோசை என்றால் தொலி உளுந்து உடைத்தது அதைச் சேர்ப்பதுண்டு.

    வரலக்ஷ்மி மிக அழகு! அழகா அலங்கரிச்சிருக்கீங்க. அதுவும் ரோஷ்ணியின் கைவண்ண திருவாச்சியுடன்! செம..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் எல்லா பகுதிகளையும் வாசித்து கருத்து தெரிவித்தது குறித்து மிக்க மகிழ்ச்சி.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....