ஞாயிறு, 8 அக்டோபர், 2023

கதம்பம் - சிந்தனைச் சிதறல்கள் - எழுத்துப் பிழைகள் - மூன்றாம் பிறை


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  10 ஆகஸ்ட் 2023 அன்று வெளியிட்ட பதிவிற்குப் பிறகு இங்கே பதிவுகள் வெளியிடவே இல்லை. பெரிய இடைவெளிதான். என்னாலோ, இல்லை என்னவராலோ இங்கே பதிவுகளை வெளியிட இயலவில்லை. மீண்டும் ஒரு பதிவுடன் உங்களைச் சந்திக்க இதோ வந்திருக்கிறேன்.  இங்கே தொடர்ந்து சில நாட்கள் வெளியிடப்போகும் அனைத்தும் கடந்த சில நாட்களாக, இரண்டு மாதங்களாக முகநூலில் எழுதப்பட்டவையே - இங்கே ஒரு சேமிப்பாகவும், எனது முகநூலில் என்னைத் தொடராதவர்கள் படிக்க வசதியாகவும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.   

 

இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

பழகும் எல்லோர் மீதும் பரிதாபப்படுவதும் ஒரு விதமான பலவீனமே! போலிகள் யாரென்று தெரியாமலேயே போய்விடும்...

 

******

 

சிந்தனைச் சிதறல்கள்!


 

இந்த மனதுக்கு தான் எத்தனை வேகம்!! நினைத்த மாத்திரத்தில் இறக்கை கட்டிக் கொண்டு பறந்து விடுகிறது! கடிவாளமில்லா குதிரையைப் போல ஒரே சமயத்தில் பல விஷயங்களுக்குத் தாவி விடுகிறது! இதனால் தான் 'மனம் ஒரு குரங்கு! மனித மனம் ஒரு குரங்கு! என்று பாடினார்களோ..🙂

 

ஆண்களால் ஒரு சமயத்தில் ஒரு விஷயத்தை பற்றி மட்டும் தான் சிந்திக்க முடியுமாம்! ஆனால் Multi tasking கொண்ட பெண்களால்  பலவித விஷயங்களை மனதில் சிந்திக்க முடியும், செயல்படுத்தவும் முடியும் என்று சொல்கிறார்கள்! 

 

அடுப்பில் தோசை வார்த்துக் கொண்டே அருகில் இருக்கும் சிங்க்கில் போட்ட பாத்திரங்களை சுத்தம் செய்து கொண்டிருப்போம்! மனதில் நாளைய திட்டமிடல்களும், இன்றைய நிகழ்வுகளின் ஓட்டமுமாக சிந்தனைகள் கிளைக்கு கிளை தாவிக் கொண்டிருக்கும்..🙂

 

நேற்றைய மாலைப் பொழுதில் நடைப்பயிற்சியை முடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்ததும் புழுக்கத்தினால் வியர்வை ஆறாக பெருகிக் கொண்டிருக்கும் சீதோஷ்ணத்தை நினைத்து புலம்பியவாறு, 'ஒரு மழை வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்'? என்று மகளிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்.

 

மழை என்றதும் 'ஹைய்யா! நாளைக்கு லீவ் விட்டுருவாங்க! என்று சொல்பவள்...! நேற்று வழக்கத்திற்கு மாறாக, மாங்கு மாங்குன்னு அசைன்மெண்ட் பண்ணியிருக்கேன்! இதை சப்மிட் பண்ணனும்! லீவெல்லாம் விட்டுடக் கூடாது! என்றாள்! அந்த சமயம் பார்த்து அத்தி பூத்தாற் போல சற்று நேரம் மழையும் வந்தது!

 

நிஜமாகவே அந்த நிமிடம் உணர்வுப்பூர்வமாக நான் சிறுபிராயத்திற்கு சென்று விட்டேன்! ஒரு மழைநாளில் மாலை வேளையில் என் பள்ளியில் இருந்ததும், மழையில் நனைந்து கொண்டே வீட்டிற்கு வந்ததும், தம்பியும் நானும் ஓடிச் சென்று கப்பல்களை ஓடும் நீரில் மிதக்க விட்டதுமாக காட்சிகள் கண்முன்னே விரிந்தன! 

 

இப்போது சொல்லுங்கள்! எத்தனை அழகான தருணங்கள் இவை! அதை  நினைத்த மாத்திரத்தில் பறந்து சென்று காட்சிகளை கண்முன்னே ஒளியிட்டுக் காண்பிக்கிறது! அந்த உணர்வை ஸ்பரிசிக்க வைக்கிறது! அந்த நேரத்தை இனிமையாக்குகிறது!

 

மனம் என்னும் மந்திரச்சாவி கொண்டு ஒவ்வொரு நாளையும் அழகாக்குவோம்!

 

&*&*&*&**&*&*

 

எழுத்துப் பிழைகள் - 15 ஆகஸ்ட் 2023


 

எத்தனையோ பேர் பாடுபட்டு போராடி பெற்றுத் தந்த சுதந்திரம்! நம்மால்  இன்று நினைத்ததை பேச முடிகிறது! எழுத முடிகிறது என்றால் அதற்குப் பின்னால் போராடியவர்கள் ஏராளம்! 

 

கிடைத்த சுதந்திரம் என்ற சொல்லைக் கூட பிழையோடு எழுதினால் என்னவென்று சொல்வது?? 

 

ஊடகங்களில் பிழைதிருத்தம் செய்யாமல் எப்படி பகிர்ந்து கொள்கிறார்கள் என்று புரியவில்லை! முதலில் யார் பகிர்ந்து கொள்கிறார்கள் என்பதில் போட்டிகள் இருக்கலாம்! கொட்டை எழுத்தில் பிழைகளை பார்க்கும் போது வேதனையாய் இருக்கிறது! வரும் தலைமுறைக்கு உதாரணமாய் இருக்க வேண்டிய ஊடகங்கள் இதை கவனிக்க வேண்டும்!

 

'செய்வன திருந்தச் செய்'! என்பதை நினைவில் கொண்டு இனி எழுத்து பிழை இல்லாமல் தமிழை எழுதவும் பகிர்ந்து கொள்ளவும் முயற்சி செய்வோம்!

 

&*&*&*&**&*&*

 

மூன்றாம் பிறை - 18 ஆகஸ்ட் 2023:


 

மூணாம் பிறை பார்த்தேன்...! என்று தொடங்கும் ஒரு பாட்டின் நாலு வரிகளை அப்பா எப்போதும் சொல்வார். 

 

பிறையைப் பார்த்ததும் நாம போட்டுண்டு இருக்கிற துணியில இருந்து ஒரு நூலை உருவிப் போட்டா புதுத்துணி கிடைக்கும்னு எங்க தாத்தா சொல்லுவா! என்று சொல்லியவாறு அப்பா தன் மேல் போர்த்திக் கொண்டிருக்கும் மேல்துண்டிலிருந்து ஒரு நூலை உருவிப் போடுவார்! இப்படி தன்  சிறுபிராயத்தில் தெரிந்து கொண்டதையெல்லாம் எனக்கும் தம்பிக்கும் கதை போல சொல்வார்!

 

இன்றைய மாலை நடைப்பயிற்சியின் போது மூன்றாம் பிறையைப் பார்த்ததும் அப்பாவுடனான நினைவுகள் மனதில் பசுமையாய் நிறைந்து நின்றது! 

 

******

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

24 கருத்துகள்:

  1. எவ்வளவு பெரிய இடைவெளி எடுத்துக்கொண்டுவிட்டீர்கள். நிறைய தடவை இதைப்பற்றி நினைத்திருக்கிறேன். Welcome back

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் சார். நீண்ட இடைவெளியாகி விட்டது. எங்களை நினைத்துக் கொண்டது குறித்து மிக்க மகிழ்ச்சி.

      தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன் சார்.

      நீக்கு
  2. நீண்ட இடைவெளி.. மீண்டும் வந்ததில் மகிழ்ச்சி. இந்த எண்ணங்களை முகநூலில் படித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சார். நீண்ட இடைவெளியாகி விட்டது. முகநூலில் தொடர்ந்து வாசித்து வருவது குறித்து மிக்க மகிழ்ச்சி!

      தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  3. வணக்கம் சகோதரி

    நலமா? பதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை.

    நீண்ட நாட்கள் கழித்து பதிவுலகில் வந்திருக்கும் தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். நானும் நீண்டதொரு இடைவெளிக்குப் பின் இப்போதுதான் அனைவரின் பதிவுகளுக்கும் வந்து கொண்டிருக்கிறேன்.

    தங்கள் சிந்தனைகள் அனைத்தையும் ரசித்தேன். தங்கள் மகளின் எண்ணங்களும் அருமை. தங்களின் அன்பு மகள் ரோஷிணிக்கு வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கு எல்லோரும் நலமே!
      தாங்களும் நலமோடு இருக்க இறைவன் அருளட்டும்! உண்மை தான் தவிர்க்க முடியாமல் நீண்ட விடுப்பு எடுத்துக் கொள்ள வேண்டியதாக இருந்து விட்டது!

      தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஜி!

      நீக்கு
  4. வெகு நாட்களுக்குப் பிறகு பதிவு..

    வாழ்க.. வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சார். வலைப்பூவிற்கு நீண்ட விடுப்பு!

      தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜு சார்.

      நீக்கு
  5. /// பழகும் எல்லோர் மீதும் பரிதாபப்படுவதும் ஒரு விதமான பலவீனமே! ///

    உண்மை..
    உண்மை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜு சார்.

      நீக்கு
  6. இன்றைய வாசகம் அருமை சகோ. பதிவில் பல விடயங்கள் தந்தமைக்கு நன்றி.

    ஜி பதிவுகள் எழுதவில்லையே ஏன் ? நேற்று முன்தினம் அவரது நினைவு வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில நாட்களாக அவருக்கு அலுவலக ஆணிகள் அதிகம் இருந்தன! அதுவும் போக வலைப்பூ பக்கம் வருவதிலும் சுணக்கமும் உள்ளது! சொல்லிக் கொண்டே தான் இருக்கிறேன் சார். விரைவில் மெருகேறிய எழுத்துடன் வருவார் என எண்ணுகிறேன்.

      தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்.

      நீக்கு
  7. வாசகம் அருமை, ஆதி. ரொம்ப நாளைக்கப்புறம் பதிவு.

    நானும் எழுதவில்லை. பணிகள். வலைக்கு வந்து போவதோடு இருக்கு.

    எண்ணச் சிதறல்கள்....அதை ஏன் கேக்கறீங்க. அது எனக்குப் பதிவுக்கு உதவினாலும் அதுவே என் காலை வாரிவிடுவதாகவும் இருக்கு. பின்ன நடக்கும் போது, குளிக்கும் போது அடுக்களையில் பணியில் இருக்கறப்ப மனம் சிறகடித்துப் பறக்கும்....ஆஹா பதிவுன்னு நினைச்சுக்குவேன் ஆனா அப்புறம் அது காற்றோடு போய்விடும். அடுத்த பணி வரும் போது ஒடியே போய்விடும்.
    ஆனால் அப்படித் தோன்றுவது ஒரு வேளை நினைவில் இருந்தா எழுதி வைத்து ஹிஹிஹிஹி அப்படியே கிடக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிலநேரங்களில் அப்படியும் நிகழ்வதுண்டு. எண்ணங்கள் எழுத்தாவதற்குள் மறந்து போய்விடுகிறது! அப்போதைக்கு அப்போது எழுதுவதற்கு ஒத்து வருவதில்லை...:)

      தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  8. அந்த மந்திரச் சாவி மனம் பல சமயங்களில் புதிரோடு இருக்கிறது! என்ன மந்திரம் சொல்லணுமோ!!

    வாசகம் உண்மை..நம் எல்லோருக்கும் இதில் நிறைய அனுபவங்கள் இருக்கும்தான்.

    மழையும் அதன் தொடர்பாக உங்கள் நினைவுகள் அதுவும் இனிய நினைவுகள். ரோஷ்ணிக்கு அவரது கவலை. ரோஷ்ணிக்கு வாழ்த்துகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்தான தங்கள் கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன் சகோ.

      நீக்கு
  10. நீண்ட இடைவெளிக்கு பிறகு தங்கள் பதிவினை பார்த்ததில் மகிழ்ச்சி 🤗
    இன்றைய வாசகமும் பதிவும் அருமை 👍

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி நிர்மலா ரெங்கராஜன் ஜி.

      நீக்கு
  11. மனம் என்னும் மந்திரச்சாவி கொண்டு ஒவ்வொரு நாளையும் அழகாக்குவோம்!//
    அருமை.

    நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் வந்து அருமையான நினைவலைகளை பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  12. நீங்கள் கூறியது போல நினைவுகளுக்கு குறைவேது .அதிகமாக அவையே நாட்களை வழிநடத்தி செல்லுகிறது எனலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். நினைவுகளுடன் தான் பொழுதுகள் கடந்து செல்கிறது.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....