ஞாயிறு, 15 அக்டோபர், 2023

சென்னைக்கு ஒரு பயணம் - பகுதி இரண்டு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  


நேற்று வெளியிட்ட சென்னைக்கு ஒரு பயணம் - பகுதி ஒன்று பதிவினையும், வந்து விட்டது நவராத்திரி - ஏற்பாடுகள் - 2023 பதிவினையும் படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


ஒவ்வொரு நாளும் எதிர்பார்ப்புகளுடன் தொடங்கினாலும், முடியும் போது நமக்கு சில அனுபவங்களைத் தந்து செல்கிறது! அவ்வளவு தான் வாழ்க்கை! அதனால் இந்த நாளை இனிதே கடப்போம்!


******



செங்கல்பட்டு ஏரி…

இந்த சென்னை பயணம் குறித்து நேற்றும் எழுதி இருந்தேன்.  அதன் தொடர்ச்சியாக பயணம் குறித்த மேலும் சில தகவல்கள் இந்தப் பதிவில்/பகுதியில்! 


Blossom friends!



நான், மங்கா, லஷ்மி, சுபா என நாங்கள் நால்வருமே உறவினர்கள் தான்! ஒருவருக்கொருவர் நேரடி சொந்தம், ஒண்ணு விட்ட சொந்தம் என்று இருந்தாலும் நாங்கள் நான்கு பேருமே சம வயதுடையவர்கள்! அதனால் நெருங்கிய தோழிகளாகத் தான் பழகியிருந்தோம்! 


அப்போது எங்களுக்கு 15 அல்லது 16 வயதிருக்கலாம்! ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஊரில் இருந்தபடியால் உறவினர்கள் கூடும் நிகழ்வுகளில் தான் பார்த்துக் கொள்வோம்! அந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் அந்த பருவத்துக்கேற்ற கதைகளை பேசி கலாட்டா செய்து கொள்வோம்!


கால ஓட்டத்தில் ஒவ்வொருவராக திருமணமாகி வாழ்வில் செட்டிலாகி அவரவரின் குடும்பம், குழந்தைகள் என்று மாறிப் போனதால் நான்கு பேரும் சேர்ந்து சந்தித்துக் கொள்வதற்கான சந்தர்ப்பங்களே அமையாமல் போய்விட்டது! மனதின் எங்கோ ஒரு ஓரத்தில் நிழலான காட்சிகளாக தான் நினைவில் நிற்கும்!


இத்தனை வருடங்களுக்குப் பின் அப்படியொரு சந்தர்ப்பம் அமைந்து  அந்த நான்கு தோழிகளும் மீண்டும் சந்தித்துக் கொள்வது என்பது எத்தகைய இனிய தருணம் என்று எங்களால் மட்டுமே உணர்வுப்பூர்வமாக உணர்ந்து கொள்ள முடியும்! ❤️ ❤️


இந்தத் திருமண நிகழ்வில் ஒவ்வொருவராக பார்த்து, ஆனந்தத்துடன் கட்டியணைத்து அன்பை பகிர்ந்து கொண்டோம்! அன்றைய நாளில் பதிவு செய்து வைக்கக் கூட தோன்றாத காட்சியை இப்போது எப்படியேனும் படம்பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பது மட்டுமே எங்களின் எண்ணமாக இருந்தது! பொக்கிஷமல்லவா! ❤️


திருமண நிகழ்வில் இதை தவற விடக்கூடாது என முயற்சித்தால், ஒருத்தி இங்கே இருந்தால் இன்னொருத்தி எங்கேயாவது சென்று விடுகிறாள்! இப்படியே இருவராக மூவராக என புகைப்படங்கள் எடுத்துக் கொண்டே வந்தோம்! எப்போது அந்த சந்தர்ப்பம் அமையும்??

ஒரு கட்டத்தில் மூவர் ஒன்று கூடி இன்னொருத்தியை தேடி அலைந்து ரூமிற்குள் இருந்தவளை சீக்கிரம் வெளியே வாடி! இங்கேயே ஃபோட்டோ எடுத்துப்போம்! என்று இழுத்து எடுத்துக் கொண்டோம்....🙂 ❤️ ❤️ மீண்டும் இப்படியொரு சந்தர்ப்பம் எப்போது அமையுமோ!! அந்த சமயத்தில் எங்களில் யாருக்கும் எங்களைச் சுற்றி என்ன நிகழ்கிறது என்று கூட தெரிய வாய்ப்பில்லை..🙂


இனியேனும் தொடர்பில் இருப்போம்! பேசிக்கலாம்! என்று சொல்லிக் கொண்டோம்! ரொம்ப வருஷம் கழிச்சு திரும்ப டான்ஸ் ஆடறேன் என்றாள் ஒருத்தி! நான் நவராத்திரி டைம்ல பாட்டு பாடறேன் என்றாள் ஒருத்தி! இப்படி அவரவரின் தனித்திறமைகள் மிளர்ந்து, ஆரோக்கியமாக, குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கணும் என்று மனதார பிரார்த்தித்துக் கொண்டேன்.


******


பயண முடிவும் ஒரு பிரபலத்துடன் ஆன சந்திப்பும்:



“உன்னோட எழுத்துக்கு நாங்க எல்லாரும் ரசிகைகள்! உன்னைப் பார்த்து தான் டெம்ப்ட் ஆகி பட்சணம் பண்ணேன்! உன்னோட  தமிழ் அழகா இருக்கு! உன் பொண்ணோட ட்ராயிங் எல்லாம் அழகா இருக்கு!” என்று மனதுக்கு நிறைவான கருத்துக்களை கேட்க முடிந்தது ஒருபுறம்!


உங்க சிஸ்டர் லாவண்யா ரொம்ப சமத்து! எல்லாமே ரொம்ப அழகா பண்றா! உங்க அம்மாவோட ஸ்வீட் ரெசிபி தேங்காய் திரட்டிப்பால் தான் கோகுலாஷ்டமிக்கு பண்ணினேன்! சூப்பரா இருந்தது! என்று மனம் நிறைந்து பாராட்டினேன் சரண்யாவிடம்! இவரது ட்வின் சிஸ்டர் தான் lavanya's cooking corner சேனல்  லாவண்யா! இதில் சரண்யா எனது உறவினர்!



உறவினரின் திருமண நிகழ்வு முடிந்ததும் மூத்த பதிவரான Padma Mani  அம்மாவை குடும்பமாக சென்று சந்தித்து உரையாடி அவரது ஆசிகளைப் பெற்று வந்தோம்! பன்முகத் திறமை வாய்ந்தவர்! தனது வாழ்வின் அனுபவங்களின் சில பக்கங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டு உரையாடினார்! அவரைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி!


மூன்று நாட்களாக உறவினர்களோடு மகிழ்ந்திருந்து விட்டு இதோ கூட்டை நோக்கி பயணித்தது இந்தப் பறவை! மனது நிறைய சேர்த்து வைத்த சந்தோஷத் தருணங்கள் உடன்! அன்பு சூழ் உலகு!  ரசித்து உண்ட உணவுகள் என்று இனியதொரு நினைவுகள்!


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்


பின் குறிப்பு: கடந்த செப்டம்பர் மாதம் எனது முகநூல் பக்கத்தில் எழுதிய இற்றை, வலைப்பூவில் எனக்கான சேமிப்பாகவும் முகநூலில் வாசிக்காதவர்கள் வசதிக்காக இங்கே ஒரு பகிர்வாகவும்…


6 கருத்துகள்:

  1. பயண விவரம் மகிழ்ச்சியைத் தந்தது. வாழ்க்கையின் ஓட்டத்தில் அபூர்வமாக பழசை அசைபோடும் தருணங்கள்.

    பதிலளிநீக்கு
  2. இனிமையான நினைவுகள், சுவாரஸ்யமான பொழுதுகள்.  அடடே..   உங்களுடன் வெங்கட்டும் வந்திருந்தாரா?  நல்லது.  நேற்றைய பதிவில் நீங்கள் மட்டும் விழாவுக்கு வந்தது போல் நினைத்து பின்னூட்டம் இட்டிருந்தேன்.

    பதிலளிநீக்கு
  3. சந்திப்பு மகிழ்வான விஷயம். இனிய நினைவுகள்.

    சென்னை பயணத்தில் செங்கல்பட்டு ஏரி படம் அழகு.

    என் தங்கைகள் நாங்கள் எல்லாரும் ஒரே கூரையின் கீழ் வளர்ந்தவங்க. பெரிய குடும்பமாக....எனவே இப்போது வரை தொடர்பில் எல்லாம் பகிர்ந்துகொண்டு ....எல்லோருமே ரொம்ப அன்பானவங்க. தோழிகள் போலதான்.

    பயணமும் சந்திப்பும் எல்லாமே சிறப்பு. படங்களும் colourful !!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  4. அன்பு சூழ் உலகு! ரசித்து உண்ட உணவுகள் என்று இனியதொரு நினைவுகள்!//

    ஆமாம், எண்ணி எண்ணிப் பார்க்க மனதுக்கு இனிய நினைவுகள்.
    உறவுகள், நட்புகள் சந்திப்பு உற்சாகம் தரும்.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை. படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளன. தங்கள் உறவுகளாகிய தோழிகளை சந்தித்து, தாங்கள் சென்றிருந்த அந்த திருமண நிகழ்வில் அனைவரும் சந்தோஷமாக இருந்தமைக்கு மகிழ்ச்சி. சிறு வயது நட்புகள் கூடி சந்திக்கும் போது இனியதொரு நினைவாக மனதுக்கு மிகவும் மகிழ்வாக த்தான் இருந்திருக்கும். உங்கள் அனைவருக்கும் அன்பான வாழ்த்துக்கள். . பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....