சனி, 14 அக்டோபர், 2023

சென்னைக்கு ஒரு பயணம் - பகுதி ஒன்று


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  

 

நேற்று வெளியிட்ட ஸ்ரீ கிருஷ்ண கோவிந்தா பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

YOU LEARN NOTHING FROM YOUR LIFE, IF YOU THINK YOU ARE RIGHT ALL THE TIME.

 

******



 

நெருங்கிய உறவினர் இல்லத்து சுப நிகழ்வில் கலந்து கொள்ள சென்னை நோக்கிய பயணம்! 

 

எங்களை வழியனுப்பிவைக்க வந்த என்னவருக்காக இரயில் நிலையத்தில் இருக்கும் Ticket Counter - இல் ஃப்ளாட்ஃபார்ம் டிக்கெட் கேட்ட போது, அங்கே அமர்ந்திருந்த அரசு ஊழியர் சொன்னது - “இங்க யாருமே ஃப்ளாட்ஃபார்ம் டிக்கெட் வாங்கறதில்லை! நீங்க தான் கேட்கறீங்க! நாளைக்கு நீங்களே கேட்டாலும் நாங்க இருக்க மாட்டோம்..🙂 

 

பரபரப்பாக இயங்கிக்  கொண்டிருந்தது திருவரங்கம் இரயில் நிலையம்.  எங்கேயும்…

 

காபி...காபி...!

 

இட்லி வடை...! இட்லி வடை...! என வியாபாரிகளின் குரல்கள். அவர்களுக்குப் போட்டியாக “பூ, பூவே…” என்று பூ விற்கும் பெண்களின் குரல்கள்…  இத்தனையும் கேட்டபடி அமர்ந்து இருக்க, நாங்கள் பயணிக்க வேண்டிய பல்லவன் வந்து சேர்ந்தது. 

 

******

 

ரயில் பயணத்தில் அருகில் அமர்ந்திருந்த பெண்மணியும் அவரின் மடியில் இருந்த ஒன்றரை வயது குழந்தையும் தான் எங்களின் பொழுதுபோக்காக இருந்தார்கள். எதிரே அந்த பெண்மணியின் மாமனார், மாமியார் மற்றும் கணவர் அமர்ந்திருந்தனர்.

 

ஏறியதிலிருந்து நாங்கள் இறங்கும் வரையிலுமே அந்தக் குழந்தை அழுது கொண்டே இருப்பதும், அதன் அம்மா தாய்ப்பால் கொடுப்பதும், கூழ் ஊட்டி விடுவதும், பிஸ்கட் கொடுப்பதும் என மாற்றி மாற்றி கொடுத்துக் கொண்டே இருந்தார்! அந்தக் குழந்தை ஃபோனில் விளையாடணும் என்று அம்மாவிடம் அடம் பிடிப்பதும், அம்மா சமாதானம் செய்ய முயற்சிப்பதுமாகவும் சென்றது!

 

அருகில் இருந்த என்னுடைய ஃபோனையும் கேட்டு அடம் பிடித்துக் கொண்டிருந்தது குழந்தை! அதன் அம்மா வேண்டாம் என்றால் அம்மாவோடு சேர்ந்து எனக்கும் காலால் உதை கிடைத்தது! 

 

இத்தனை அடத்திலும் அந்த அம்மா தான் எல்லாவற்றையும் சமாளிக்க வேண்டியதாக உள்ளது! உறவினர்கள் யாரும் உதவுவதாக இல்லை! அவர்களிடம் இந்தக் குழந்தையும் செல்வதாக இல்லை! 

 

குழந்தை வளர்ப்பு மிகவும் சவாலான விஷயம் தான்! ஆனாலும் தாய்க்கு மட்டுமே தான் இத்தனை சவால்களுமா??? தந்தைக்கு எந்த பொறுப்புகளும் இல்லையா?? குழந்தையையும் கேட்டதெல்லாம் கொடுத்து இத்தனை செல்லத்துடன் வளர்க்க வேண்டுமா?? என்று தான் கேட்கத் தோன்றுகிறது!

 

******

 

எழுத்தாளருடன் ஒரு சந்திப்பு:


 

மாலை உறவினரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் 'சுந்தரியின் பொண்ணாக' எழுத்தாளர் இரா.முருகன் சாரிடம் அறிமுகப்படுத்தப்பட்டேன். அப்போது அவருடன் ஒரு நிழற்படமும் எடுத்துக் கொண்டதில் மகிழ்ச்சி. 

 

******

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

6 கருத்துகள்:

  1. பயண அனுபவம் நன்று. ஸ்ரீரங்கத்தில் பிளாட்பாரம் டிக்கெட் எடுக்கும் வழக்கம் இல்லையா?!! பாவம் அந்தக் குழந்தையின் தாய்!

    பதிலளிநீக்கு
  2. அவ்வப்போது வெங்கட்டுக்கு லீவு கிடைக்கும் நேரங்களில் ஸ்ரீரங்கம் வரும் வேளையில் விசேஷம் என்று இந்த நேரத்தில் ஒரு சிறு பிரிவு மனதுக்கு சிரமம்தான்.

    பதிலளிநீக்கு
  3. சிறு குழந்தை வளர்ப்பில் தாய்க்கு மட்டும்தான் பொறுப்பா? என்ற கேள்வி சிந்திக்க வைத்தது. ஆண்களுக்கு, சிறு வயதிலிருந்தே இந்தப் புரிதலை ஏற்படுத்த வேண்டும். பள்ளிகளிலும் இருபாலாரும் வேலைகளைச் சம்மாகப் பிரித்துக்கொள்வதைப் பற்றிய தெளிவை ஊட்டவேண்டும் என நினைக்கிறேன். (பெண்களுக்கு பொறுமை அதிகம் என்ற போதிலும்)

    பதிலளிநீக்கு
  4. குழந்தை செய்யும் சேட்டைகளை ரசித்து, அவர்களுடன் விளையாடாமல், அவர்கள் கையில் கொடூரனை கொடுத்து விடுகிறார்கள்...

    பதிலளிநீக்கு
  5. குழந்தைகளின் தவறான செயலுக்கு அலைபேசி பெரிய வழிகாட்டி ஆகிவிட்டது.

    பதிலளிநீக்கு
  6. ஆதி, குழந்தை வளர்ப்பு என்பது மிகவும் கடினமான கலை நீங்கள் சொல்வது போல. ஆண்களும் அதில் பங்கு பெற வேண்டும். கண்டிப்பாக. குழந்தை இவ்வுலகில் வருவதற்கு இருவரும் தானே காரணம்! நானும் கவனித்திருக்கிறேன். பலர் வீடுகளிலும் ஆண்கள் பங்கு பெறுவதில்லை. என் புகுந்த வீட்டில் எல்லா ஆண்களும் குழந்தையை சமாளிப்பதில் வளர்ப்பதில் பங்கு பெற்றதுண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....