அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த
நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக
நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம்
வாருங்கள்.
IF EVERYONE IS HAPPY WITH YOU, THEN SURELY YOU
HAVE MADE MANY COMPROMISES IN YOUR LIFE; AND IF YOU ARE HAPPY WITH EVERYONE,
THEN SURELY YOU HAVE IGNORED MANY FAULTS OF OTHERS!
******
நடை நல்லது - 5 அக்டோபர் 2023:
ஐயா! இது ஆவாரையா??
இல்லங்க! அதோட பூவு சிகப்பா இருக்கும்!
நடைப்பயிற்சியின் போது வழியில் தென்பட்ட மனிதரிடம்
கேட்டோம்!
இல்ல! இல்ல! நான் கூகிள்ல பார்த்தேனே! கூகிள் லென்ஸ்
பொய் சொல்லாது..🙂 வீடியோல எல்லாம் கூட காமிச்சு அதோட மருத்துவ பயன்கள்
பத்தியெல்லாம் சொன்னாங்களே!
அம்மாவும், பெரிம்மாவும் கூட 'இலை திலகம் மாதிரி
இருக்கும்! காய் கொத்தவரங்கா மாதிரி இருக்கும்'னு சொன்னாளே!
நாம யூஸ் பண்றோமோ இல்லையோ நான் இதுபத்தி நிறைய
தெரிஞ்சிண்டேன்!
இதுக்கு பேரு பொன் ஆவாரை! இதை தகரை, நிலவாரை,
பேயாவரைன்னு கூட சொல்வாங்க! இது மதுரை, திருச்சி, திருநெல்வேலி இந்தப் பக்கங்கள்ல
தான் ரோட்டோரமா இருக்குமாம்!
இதோட இலையும், பூவும் சேர்த்து அரைச்சு தோல்
நோய்களுக்கு போடலாம்! முடக்குவாதத்துக்கு கூட பயன்படுத்துவாங்களாம்!
அதெல்லாம் சரி! என்னை பரிசோதனை எலியா மாத்துவேன்னு
முடிவு பண்ணிட்ட.... இப்ப ஒரு அம்மா நடந்து வராங்களே அவங்க கிட்ட கேட்போம்!
அம்மா! இது ஆவாரை தானே?
ஆமா! ஆவாரை தான்!
இதை எப்படி உபயோகிப்பாங்கன்னு தெரியுங்களா?
அதுவா! இந்த இலைய காய வெச்சு தலைக்கு சாயம் கூட
போட்டுப்பாங்களே!!?
சரிம்மா!
இல்ல! இல்ல! இந்தம்மா கன்ஃப்யூஸ் ஆயிட்டாங்க! தலைக்கு
போடற செடி வேற! அதோட பேரு....???
அ...ல தான் ஆரம்பிக்கும்! மூணு எழுத்து! வாய்ல
இருக்கு! சட்டுனு வர மாட்டேங்கறதே!!
ஒண்ணு பண்ணு! அத துப்பிடு...🙂
என்ன பார்த்தா எப்படியிருக்கு!
நா அத கண்டுபிடிச்சிடுவேன்! இதோ இப்ப சொல்லிடறேன்!
ம்ம்ம்ம்!
ஆங்! அதோட பேரு அவுரி! இந்தம்மா ஆவாரையையும்
அவுரியையும் கன்ஃப்யூஸ் பண்ணிக்கிட்டாங்க..🙂
இன்னிக்கு நம்ம ஆவாரை பறிச்சிண்டு போறோம்! அதோட
மஞ்சள் சேர்த்து மம்ஜாஸ்ல ( இடி கல்) இடிச்சு அதோட சாறை கழுத்து பக்கத்துல மிளகு
மாதிரி மரு இருக்கே அதுல போட்டு விடறேன்! விழறதான்னு பார்ப்போம்! Itching இருந்தா
நிறுத்திடுவோம்! என்ன!
என்னவோ பண்ணுடீ!!
அப்புறம் இன்னொரு விஷயமும் இருக்கு!
என்ன! என்ன வெச்சு அடுத்த பரிசோதனையா??
ஆமாம்! அந்தம்மா அவுரின்னு சொன்னதும் தான் ஞாபகம்
வந்தது! இந்த உப்பும் மிளகுமா இருக்கிற தலைல இப்ப உப்பு ஜாஸ்தியா தெரியறதுல்ல! அதனால....!
சரி! சரி! அப்புறம் பேசலாம்! சீக்கிரம் நட!
&*&*&*&**&*&*
கஞ்சி மாவு - 7 அக்டோபர் 2023:
பெரும்பாலான நாட்களில் எங்களுடைய காலை ஆகாரமாக
சத்துமாவு கஞ்சி தான் இடம்பெறுகிறது! காலை வேளையில் தோசையோ, இட்லியோ, உப்புமாவோ
சாப்பிடுவதை விட கஞ்சி எளிதாக இருக்கிறது! செரிமானத்திற்கும் ஏற்றதாக உள்ளது!
கடைகளில் கிடைக்கின்ற இந்த சத்துமாவு என்று
சொல்லப்படுகிற கஞ்சிமாவில் ராகி, கம்பு போன்றவை இடப்பட்டுள்ளதாக தான்
குறிப்பிட்டுள்ளார்கள்! ஒவ்வொரு பிராண்டுக்கும் ஏற்றாற் போல் அதன் விலையும்
மாறுபட்டு தான் இருக்கின்றன!
சில நாட்களாகவே இதை நாமே செய்து கொண்டால் என்ன? என்ற
கேள்வி என்னுள் அவ்வப்போது தோன்றிய வண்ணமே இருந்தது!
எனக்கு திருமணமான நாள்முதலாக இட்லிமாவு, வெண்ணெய்,
நெய், சாம்பார் பொடி, தோசை மிளகாய்ப்பொடி, பருப்புப் பொடி, வத்தல்/வடாம், ஊறுகாய்,
புளிக்காச்சல், இனிப்புகள், பட்சணங்கள் என்று எல்லாவற்றையும் நானே தான் செய்து
கொள்கிறேன்!
சிறுவயது முதலே எனக்கும் தம்பிக்கும் அம்மா ராகி
கஞ்சி தயாரித்து தருவாள்! பால் சேர்க்காத கூழாகவும் நான் விரும்பி
சாப்பிட்டிருக்கிறேன்! பள்ளி விட்டு வீடு திரும்பும் எங்களுக்கு இந்த சத்துமாவில்
வெல்லம் மற்றும்
தேங்காய்த்துருவலுடன் பால் தெளித்து பிசைந்து உருண்டையாக சாப்பிடத் தருவாள்!
அன்றைய ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் இதுவே!
ராகி, கோதுமை, பாசிப்பயறு என்று ஒவ்வொன்றாக
குறிப்பிட்ட அளவு சேர்த்து வாணலியில் வறுத்து அதை மிஷினில் கொடுத்து அரைத்து வருவாள். இந்த மாவு ஒரு
பெரிய தூக்கு நிறைய வைத்திருப்பாள்! அன்று அம்மா என்னவெல்லாம் சேர்த்தாள்? எவ்வளவு
சேர்க்க வேண்டும்? என்றெல்லாம் அப்போது எனக்குக் கேட்கத் தெரியவில்லை!!
இப்போது இணையம் தான் எனக்கு அம்மா போல் உதவிடுகிறது!
அதில் பார்த்து தான் இந்த ரெசிபியைத் தெரிந்து கொண்டேன்! 25 பொருட்களை ஒவ்வொன்றாக
வாணலியில் வறுத்து சேர்த்து அரைத்த சுத்தமான அதேசமயம் சத்தான கஞ்சிமாவு தயார்!
பெரும்பாலான பொருட்களை மகள் தான் எனக்கு வறுத்துத் தந்தாள்!
இதில் சேர்த்திருக்கும் பொருட்களாக - கம்பு, ராகி,
வரகு, சாமை, தினை, குதிரைவாலி, ஜவ்வரிசி, சிகப்பரிசி, கறுப்பு உளுந்து, இட்லி
அரிசி, பச்சைப்பயறு, கொண்டக்கடலை, வேர்க்கடலை, பொட்டுக்கடலை, பயத்தம்பருப்பு,
கோதுமை, சிவப்பு அவல், வெந்தயம், முந்திரி, பாதாம், மிளகு, சீரகம், கசகசா, எள்,
ஏலக்காய் மற்றும் சுக்கு இடப்பட்டுள்ளது!
பெரும்பாலான வீடுகளில் இப்போது இட்லிமாவு, தயிர் கூட
கடைகளில் தான் வாங்கப்படுகிறது! முடிந்தவரை நாமே செய்து கொண்டால் மனதுக்கு
திருப்தியாகவும் இருக்கும்! சுகாதாரமாகவும் இருக்கும்!
&*&*&*&**&*&*
உலக தபால் தினம் - 9 அக்டோபர் 2023:
இன்றைக்கு (9 அக்டோபர்) உலக தபால் தினமாம்!
அம்மா! போஸ்ட்! என்று வாசலில் வந்து அழைத்த
தபால்காரர்! யாருகிட்ட இருந்து வந்திருக்கும்?? என்ற யோசனையுடன் அதை வாங்கிப்
பிரித்து படித்த போது வந்த உணர்வுகளின் குவியல்கள்!
உங்களுக்கு ஊரிலிருந்து மணியார்டர் வந்திருக்கு என்று
சொல்லி பலரின் முகங்களில் ஆனந்தத்தை வரவழைத்த நினைவுகள்!
தந்தியா?? யாருக்கு என்னாச்சுன்னு தெரியலையே! கடவுளே
ஏன்ப்பா எங்க குடும்பத்துக்கு இந்த சோதனை! என்று பதறி துடித்து புலம்ப வைத்த
தருணங்கள்!
நம் உணர்வுகளை எழுத்தால் உருவேற்றி எழுதிய கடிதங்கள்
தான் எத்தனை சுகமானது! அந்நாட்களில் எத்தனையோ இதயங்களிடம் அன்பும், காதலும், நேசமும் கடிதங்களால்
மலர்ந்திருக்கிறது!
மணிமணியான கையெழுத்தால் எழுதுவதும், அதை பத்திரமாக
தபால் பெட்டியில் சேர்த்து அதை யாருக்கு எழுதினோமோ அவருக்கு கிடைத்ததோ! இல்லையோ!
என்று தெரியாமல் தவித்து, பின்பு அவரிடமிருந்து வரும் பதில் கடிதத்தால் அடையும்
ஆனந்தத்தை எழுத்தால் வடிக்க இயலாது!
இப்படி நம் உணர்வுகளோடு பின்னிப் பிணைந்த
கடிதங்களும், மணியார்டரும், தந்தி சேவையும் தந்த உணர்வை இன்றைய மின்னஞ்சலும், குறுஞ்செய்தியும்,
பணப்பரிமாற்றமும் தருவதில்லை என்பதை ஒத்துக் கொள்ளத் தான் வேண்டும்!
பின்குறிப்பு - சமீபத்தில் சிறப்பாக நடைபெற்ற என்
மாமா பிள்ளையின் திருமணத்திற்கு பத்திரிக்கையுடன் தன் கைப்பட எழுதிய லெட்டரும்
மாமா அனுப்பி வைத்திருந்தார். இந்த விஷயம் என்னை மிகவும் கவர்ந்தது!
இப்படி நமக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்குமானால்
எழுதுவோமா ஒரு கடிதம்!
******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை
பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும்
சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
பின் குறிப்பு: அக்டோபர்
மாதம் எனது முகநூல் பக்கத்தில் எழுதிய இற்றைகள், வலைப்பூவில் எனக்கான சேமிப்பாகவும்
முகநூலில் வாசிக்காதவர்கள் வசதிக்காக இங்கே ஒரு பகிர்வாகவும்…
தபால்காரர் இப்போதும் வருகிறார். சில இடங்களுக்கு மட்டும் கல்யாணப்பத்திரிகையோ வேறு ஏதாவது அழைப்போ தந்து செல்கிறார். அவரிடம் இப்போது இருப்பது இளைத்துப் போன தபால் கட்டு.
பதிலளிநீக்குகதம்பத்தை ரசித்தேன். இட்லி தோசை மாவு... கடைகளில் வாங்கினால் பிடிப்பதே இல்லை. அதனால் வீடுதான்.
பதிலளிநீக்குதபால்கார்ர் - நினைவு 89-90 க்குச் செல்கிறது. கையால் எழுதுவது என்பதே அனேகமாக 25 ஆண்டுகளுக்குமேல் கிடையாது. 93லிருந்தே தமிழ் எழுத்துருவில், கணிணியில்தான்
ஆவாரை பற்றிய தகவல்கள் அருமை...
பதிலளிநீக்குதகவல்கள் அனைத்தும் சுவாரஸ்யமாக இருந்தது சகோ
பதிலளிநீக்குபற்பல விஷயங்களையும் தொட்டுச் சென்றது கதம்பம்..
பதிலளிநீக்குஅருமை..
ஆவாரம் பூ - என்ன சோதனை என்றாலும் அதைப் பற்றி நன்கு தெரிந்தவர்களிடம் கேட்டுக்கோங்க ஆதி. கை வைத்தியமாக இருந்தாலும்.
பதிலளிநீக்குநானும் இப்படிப் பொருட்கள் போட்டுத்தான் கஞ்சி மாவு செய்வது. ஜவ்வரிசி மட்டும் தவிர்க்கிறேன். எல்லா சிறு தானியங்களூம் சேர்ப்பதுண்டு. ரொம்பப் பிடிக்கும். தபால்காரர் வருகிறார். எங்கள் பகுதிக்கு என் வீட்டிற்காக ஒரு புத்த்கம் அனுப்பப்படும் அது வரும்
கதம்பம் ரசித்தேன். உரையாடல்களையும்
கீதா
கதம்பம் அருமை.
பதிலளிநீக்குநானும் கஞ்சி மாவு பல வருடம் தயார் செய்தேன். இப்போது கடையில் வாங்கி கொள்கிறேன்.
தபால்காரர் வருகைக்கு காத்து இருந்த காலங்கள் அருமையான காலங்கள்.