புதன், 18 அக்டோபர், 2023

கதம்பம் - நடை நல்லது - சிறுதானிய தோசை - வீதி பிரதக்ஷிணம்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  

 

நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

அமைதியாகச் செல்லும் நதியைப் போல நல்லதையே நினைத்து நல்லதையே செய்வோம்; தீயவை அனைத்தும் குப்பைகள் போல தானாகவே ஓரத்தில் ஒதுங்கி விடும்.

 

******

 

நடை நல்லது - 20 செப்டெம்பர் 2023:


 

இந்த நாளின் நடைப் பயணத்தில் பார்த்ததும் பேசியதும்…

 

கண்ணா! எழுந்திரு! மணி ஆறு! திரும்பவும் தூங்கிடாத! 

 

நாங்க வாக்கிங் போயிண்டிருக்கோம்! முடிச்சிட்டு வர்றதுக்குள்ள ப்ரெஷ் பண்ணிட்டு குளிச்சு ரெடியாயிடு என்ன!

 

ஓகேம்மா! 

 

அவள எழுப்பி விட்டுட்டேன்! வரும் போது புளி ஊற வெச்சிட்டு வந்திருக்கேன்! 

 

அன்னிக்கு ஈவினிங் வாக்ல ஒரு பாட்டி கிட்ட சுண்டக்கா வாங்கினோமே! இன்னிக்கு அத போட்டு வத்தக்குழம்பும், வாழைத்தண்டு கறியும், ரசமும் பண்ணிடப் போறேன்! சரியா!

 

சரி! வா! சீக்கிரம் நடக்கலாம்! முடிச்சிடலாம்!

 

எருக்கஞ்செடி இவ்வளவு இருக்கே! இதைக்கூட வெப்பாங்களா?

 

இல்ல! இல்ல! எருக்கஞ்செடி, அப்புறம் இந்த முள்ளு செடி கூட ஒண்ணு இருக்குமே! அதுவும் தானாகவே முளைக்கிறது தான்! 

 

கருவேல மரமா?

 

ஆமா!

 

அது நிலத்தடி நீர எல்லாம் உறிஞ்சிடும்னு அதையும் யூகலிப்டஸ் மரத்தையும் ban பண்ணிட்டாங்க! 

 

சாலையின் எதிர்புறத்தில் நாங்கள் தினமும் பார்க்கும் தம்பதிகள்! 

 

கணவன் வேஷ்டி சட்டையிலும், மனைவி புடவையிலுமாக தோளில் ஒரு ஹேண்ட்பேகில் தண்ணீர் பாட்டில், செல்ஃபோன், வீட்டுச்சாவி எல்லாம் எடுத்துக் கொண்டு சற்றே நிதானமான நடையில் குடும்பக்கதைகளை பேசிக் கொண்டு  செல்வார்கள்!

 

இன்னும் ஒரு பத்து வருஷம் போனா நாமும் இப்படித்தான் இருப்போம் போலிருக்கு! என்று அவர்களை பார்த்ததும் எனக்குள் தோன்றியது.

 

அவர்களும் எங்களிருவரையும் பார்த்துக் கொண்டே கடந்து சென்ற போது....

 

நாமளும் இப்படித்தான் இருந்தோம்! இப்போ கடமைகள முடிச்சிட்டதால கொஞ்சம் ரிலாக்ஸா பொறுமையா நடக்கிறோம்!

 

என்று என்னைப் போலவே அவர்களும் நினைத்திருப்பார்களோ என்று தோன்றியது...🙂

 

&*&*&*&**&*&*

 

சிறுதானிய தோசை - 21 செப்டெம்பர் 2023:



சில நாட்களுக்கு முன்னர் புரோட்டீன் இட்லியைப் பற்றி பகிர்ந்து கொண்டது நினைவிருக்கலாம்! அந்தப் பதிவில் Selvi Shankar அக்கா தான் பின்பற்றும் சிறுதானிய இட்லி/தோசை மாவின் ரெசிபியை பகிர்ந்து கொண்டிருந்தார். இம்முறை அக்காவின் செய்முறையில் சிறுதானிய தோசைக்கு அரைத்து செய்து பார்த்தேன்.

 

வரகு, தினை, சாமை, குதிரைவாலி, சிவப்பரிசி, கறுப்பு உளுந்து, இட்லி அரிசி, ராகி, கம்பு என்று எல்லாவற்றிலும் சம அளவு எடுத்து கலந்து வைத்துக் கொள்ளவும். அந்தக் கலவையுடன் 4:1 என்ற அளவில் உளுந்து ஊறவைத்து தனித்தனியாக அரைத்து புளிக்க விட்டு தோசை வார்க்க வேண்டியது தான்! 

 

இதில் ராகியும் கம்பும் தற்சமயம் என்னிடம் இல்லாததால் அவற்றை தவிர்த்து விட்டு செய்திருக்கிறேன். பொதுவாக பிணக்கு கொண்ட இருவர் முகத்தை திருப்பிக் கொண்டு போவதைப் போல இந்த சிவப்பரிசி குழம்பு, ரசம் என்று எதனோடும் சேராமல் வீராப்பாக இருக்கும்! ஆனால் இந்த செய்முறையில் சிவப்பரிசி இருக்குமிடம் தெரியாமல் சாந்தமாக இருக்கிறது...🙂

 

இந்த செய்முறையில் செய்த தோசை நாம் சாதாரணமாக நாம் செய்யும் தோசை போலவே முறுவலாகவும் அதேசமயம் ருசியாகவும் இருந்தது! உடலுக்கு நன்மை தரக்கூடியது! இரண்டு தோசை சாப்பிட்டாலே வயிறும் நிரம்பிய உணர்வைத் தருகிறது! எடைகுறைப்பு பற்றிய எண்ணம் கொண்டவர்கள் தாராளமாக இந்த ரெசிபியை பின்பற்றலாம்!

 

அருமையான ரெசிபியை பகிர்ந்து கொண்ட செல்வியக்காவுக்கு அன்பான நன்றிகள்.❤️ 

 

&*&*&*&**&*&*

 

வீதி பிரதக்ஷிணம் - 22 செப்டெம்பர் 2023:




 

மாலை நடைப்பயிற்சியில் இன்று உத்திர வீதியை பிரதக்ஷிணம் செய்தோம். மாலை நேரத்தில் திருவரங்கத்து வீதிகளின் அழகும், வீடுதோறும் வாசலில் கோலமிட்டு சுவாமி புறப்பாட்டை எதிர்நோக்கும் மக்களும், தொலைதூரத்திலிருந்து ரங்கனைக் காண ஓடி வரும் பக்தியில் திளைக்கும் மனிதர்களும் என எல்லாவற்றையும் பார்க்கும் போது மனமும், உடலும் குளிர்ந்து தான் போகிறது.

 

பின்குறிப்பு - படங்கள் அனைத்தும் என்னவர் எடுத்தது தான்.

 

******

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்


பின் குறிப்பு:
 
கடந்த செப்டம்பர் மாதம் எனது முகநூல் பக்கத்தில் எழுதிய இற்றை, வலைப்பூவில் எனக்கான சேமிப்பாகவும் முகநூலில் வாசிக்காதவர்கள் வசதிக்காக இங்கே ஒரு பகிர்வாகவும்…

6 கருத்துகள்:

  1. கோவில் அழகு.  கோவிலைப் பார்பபது அழகு.  கோவிலைச் சுற்றி நடப்பது பேறு.  சிறு தானிய தோசைக் குறிப்புகள் சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
  2. சிறுதானிய தோசை சுட்டி இருக்கிறதா?

    நடைப்பயிற்சி - இரண்டு வேளையுமா?

    கோபுர படங்கள் அழகு. கோயிலின் உள்ளே நவம்பரிலிருந்து செல்போன் கொண்டுபோக முடியாது போலிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. படங்கள் அழகு..
    செய்திகள் சிறப்பு..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  4. கோயில் கோபுரப் படங்கள் அழகோ அழகு!

    சிறுதானிய தோசை சூப்பர், ஆதி. இதே விகிதம் தான் நான் போடுவதும் ஆதி. சிறுதானிய தோசை, இட்லி அடிக்கடி , அதாவது முக்கால்வாசி நாட்கள் செய்வதுண்டு. நீங்கள் சொல்லியிருபப்து போல் எல்லாம் கலந்து கட்டியும், இல்லைனா இருப்பதை வைத்து....ரொம்ப நன்றாக வருகிறது. அல்லது தனி தனியாகவும் உளுந்தோடு (கறுப்பு உளுந்துதான் நானும் பயன்படுத்துகிறேன்!)

    இப்படியானதில் அடையும் செய்யலாம். பருப்பு போட்டுக் கொண்டு. குழிப்பணியாரம், புட்டு, காஞ்சிபுரம் இட்லி ஸ்டைல் சேவையும்/இடியாப்பமும், ஆப்பமும் , கொழுக்கட்டை (உப்புமா கொழுக்கட்டை போல) , பொங்கல், செய்யலாம் வழக்கமா செய்யறது எல்லாமே செய்யலாம். நன்றாக இருக்கிறது. தேங்குழல் தட்டை எல்லாமும் நன்றாக வருகின்றன.

    ஆமாம் சிவப்பரிசி தனியாக முழித்துக் கொண்டு இருக்கும் ஆனால் அரைச்சு செய்வதில் தெரியாது. சிவப்பரிசி புட்டு நன்றாக இருக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. கோயில் படங்கள் அனைத்தும் அருமை.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....