திங்கள், 16 அக்டோபர், 2023

கதம்பம் - அன்பு சூழ் உலகு - Aerohub Mall - சிறுவன் - நடை நல்லது


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  

 

நேற்று வெளியிட்ட சென்னைக்கு ஒரு பயணம் - பகுதி இரண்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்க வேண்டிய அடிப்படை நற்குணம் தனக்குத்தானே உண்மையாக இருப்பது.

 

******

 

அன்பு சூழ் உலகு - 13 செப்டெம்பர் 2023:


 

இம்முறை என்னவர் டெல்லியிலிருந்து வந்ததும் மகளிடம் சர்ப்ரைஸ் என்று சொல்லி ஒரு பார்சலைத் தந்தார்! அதில் 'Vegan laptop bag' ஒன்றும் அதனுடன் ஒரு மடலும் இருந்தது! அவருடன் பணிபுரியும் கீர்த்தி சஹாரன் என்ற ராஜஸ்தானிய பெண்மணி ஒருவர் தான் மகளுக்காக இந்தப் பரிசுப் பொருளையும் மடலையும் கொடுத்து அனுப்பியிருக்கிறார்! 

 

&*&*&*&**&*&*

 

Aerohub Mall - 13 செப்டெம்பர் 2023:





 

சமீபத்தில் சென்னை சென்ற போது, திருமண வரவேற்பன்று பகல் பொழுதில் சும்மா தானே இருக்கிறோம்! அப்படியே ஒரு ரவுண்ட் அடித்து விட்டு வரலாமே என்று 12 பேர் ஒன்று சேர்ந்து பாதயாத்திரை போல் அரட்டையடித்துக் கொண்டு சென்றது   மீனம்பாக்கம் விமான நிலைய வளாகத்தின் உள்ளே புதிதாக திறந்திருக்கும் Aerohub mallக்கு! 

 

இரண்டு தளங்களாக அமைத்திருக்கும் mallஐ சுற்றி பார்த்து விட்டு அங்கிருந்து மெட்ரோ ஸ்டேஷனுக்குச் சென்றோம். 12 பேருக்கும் டிக்கெட் எடுத்துக் கொண்டு ஓடி வந்து ரயிலில் ஏறி உட்கார இடம் பிடித்து அமர்ந்து கொண்டோம்! 

 

அப்பாடா! எல்லோருக்கும் சீட் கிடைச்சிடுச்சு! என்று நினைப்பதற்குள் அடுத்த ஸ்டேஷன் வந்துவிடவே இறங்கிக் கொண்டோம்...🙂 ஏன்டா! இதுக்கா இந்த சீன்!! என்று அந்த ரயிலுக்குள் இருந்தவர்கள் நினைத்திருப்பார்கள்...:)) 

 

&*&*&*&**&*&*

 

மனதைப் பிசைந்த சிறுவன் - 13 செப்டெம்பர் 2023:

 

சின்னஞ்சிறு சிறுவன் மூன்று வயதிருக்கும்! லோக்கல் ட்ரெயினில் பயணம் செய்து கொண்டிருந்த என்னைப் பிடித்து இழுத்தான்! ஜன்னலோரம் அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த என் கவனம் அவனிடம் திரும்பியதும் கையேந்துகிறான்...🙁 

 

அவன் அம்மா என்பவள் சற்றுத் தொலைவில் ரயிலின் தரையில் அமர்ந்து கொண்டு இந்தப் பிஞ்சு சிறுவனை பிச்சையெடுக்க அனுப்பியிருக்கிறாள்! அவள் சொல்வதை கேட்காவிட்டால் அடிப்பாள்! அப்படியும் ஒருநாள் பார்த்திருக்கிறேன்! ஹரித்வாரில் கூட ஒரு பாலகன் கையேந்தி நின்றது மனதைப் பிசைய வைத்தது!

 

அந்தக் குழந்தைகள் தெரிந்து கையேந்துவது இல்லை...🙁 ஏண்டா தம்பி உனக்கு இந்த நிலை!! என்று வேதனை அடைந்தேன்..🙁

 

&*&*&*&**&*&*

 

நடை நல்லது - 15 செப்டம்பர் 2023:



 

என்னவருடன் காலை நேர நடைப்பயணம் செல்லும்போது பார்த்த, பேசிய சில விஷயங்கள்…

 

வாவ்! பச்சைபசேல்னு இருக்குல்ல!

 

போன தடவை கம்பு பயிரிட்டிருந்தாங்க. இப்போ வாழை!

 

இங்க மழை பெரிசால்லாம் வரதே இல்ல! ஆனா ஒரு மழை பேஞ்சாலும் வாழையெல்லாம் சாஞ்சு போய்ட்டதா நியூஸ்ல எல்லாம் பார்த்திருக்கிறேன். 

 

அவ்வளவு லேசானதா வாழை?

 

ஆமா! அதுக்கு தான் பக்கத்துல கம்பு வெச்சு கட்டுவாங்க! அதோ பாரு! அங்க கம்பெல்லாம் அடுக்கி வெச்சிருக்காங்க! பார்த்தியா!

 

அட! ஆமா!

 

வாழை இன்னும் கொஞ்சம் பெரிசானதும் கட்டிடுவாங்க!

 

சரி! இந்த எருக்க இலைய நாலஞ்சு பறிச்சுட்டு போவோம்! கால் வலின்னு சொல்ற இல்லையா! அடுப்புல வாட்டி சூட்டோட கால்ல போட்டு விடறேன்! வீக்கம் இருந்தாலும் வத்திடும்! சரியா!

ம்ம்ம்...!

 

நாளைக்கு காலைல சீக்கிரமே கிளம்பி அந்தப் பக்கமா நடப்போம்! 

 

******

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்


பின் குறிப்பு:
 
கடந்த செப்டம்பர் மாதம் எனது முகநூல் பக்கத்தில் எழுதிய இற்றை, வலைப்பூவில் எனக்கான சேமிப்பாகவும் முகநூலில் வாசிக்காதவர்கள் வசதிக்காக இங்கே ஒரு பகிர்வாகவும்…

6 கருத்துகள்:

  1. ரோஷ்ணிக்கு பாராட்டுகள்.  வெற்றிகள் தொடர எங்கள் வாழ்த்துகளும்.

    மீனம்பாக்கத்துக்குள் மாலா?  கேள்விப்பட்டதில்லை.  மெட்ரோவில் பாஸ் ஏறியதில்லை என்பதால் நீண்ட நாட்களாக ஒரு ஞாயிறில் கிளம்பி இரண்டு வழித்தடங்களில் ரிட்டர்ன் டிக்கெட் வாங்கி சென்று வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருக்கிறோம்.  இன்னும் செயல்படுத்தவில்லை.

    பதிலளிநீக்கு
  2. குழந்தைத்தொழிலார்களை தடை செய்வதைப்போல குழந்தைகள் யாசகம் கேட்டதையும் தடை செய்ய வேண்டும் என்று எழுத நினைத்தாலும் மனம் பிசைகிறது.

    வாழை இலை விவரங்கள் சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
  3. வெற்றிகள் தொடரணும். நான் சென்றுபார்க்காத மால்.

    சென்னை இரயிலில் நீண்ட பயணம் இருந்திருந்தால் மகிழ்ச்சி அதிகரித்திருக்கும்.

    வாழைத் தோட்டங்கள்.... விவசாயகளின் கஷ்டமே பொதுவாக இயற்கை சார்ந்ததுதான்.

    குழந்தைகளைப் பிச்சைக்கார்ர்களாக்குவது கொடுமை

    பதிலளிநீக்கு
  4. ரோஷ்ணியின் வெற்றிகள் தொடர வாழ்த்துகள். வாழ்த்துமடல் அருமை.
    மால், ரயில் பயணம் அருமை.
    குழந்தைகள் கையேந்துவது கொடுமை,மனதுக்கு வருத்தம் தரும் தான்.
    ஆனால் என்ன செய்வது குழந்தைகளை காட்டிதான் அவர்கள் பசியை போக்குகிறார்கள்.
    கை குழந்தையுடன் பிச்சை கேட்பார் சிலர்.

    பதிலளிநீக்கு
  5. ரோஷ்ணிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! கீர்த்தி சஹாரன் வாழ்த்துகளுடன் எங்கள் வாழ்த்துகளும்! நிஜமாகவே இது எதிர்பாரா சர்ப்ரைஸ்!

    ஆஹா விமானநிலைய வளாகத்துக்குள் மால்!! விமானப்பயணத்திற்காக விமான நிலையத்துக்குப் போறவங்க உள்ள போவதற்குள் லக்கேஜ் இல்லைனா இங்க சுத்திட்டு கூடப் போலாம் போல!

    சின்னப் பசங்க யாசகம் செய்வது பெருங்குற்றம் என்று சட்டம் கொண்டு வந்து அரசு ஆவன செய்தால் நல்லது.

    வாழைத்தோட்டம் அழகு. ஆமாம் கம்பு நடுவாக சரியாம இருக்க...அது போல குலை வந்ததும் அது தழைந்துவிடாம இருக்கவும். ஊரில் இருந்தப்ப நம்ம வீட்டுல கூட இப்படிக் கட்டி விடுவதுண்டு இல்லைனா அடுத்திருக்கும் மரத்தோடு கயிறு கட்டி இதை நிக்க வைச்சு கட்டுவாங்க.

    கீதா

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....