சில
நாட்களாகவே தமிழகத்தின் சென்னை, கடலூர், காஞ்சீபுரம், திருவள்ளூர் என பல
மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழையும், ஏரிகளிலிருந்து திறந்து விடப்பட்ட
தண்ணீருமாகச் சேர்ந்து அந்த மாவட்டங்கள் முழுவதையும் மூழ்கடித்து இருக்கிறது.
இயற்கையின் சீற்றத்துடன் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக நம்மை ஆண்டுவரும் கழகங்கள்,
அவற்றின் தலைவர்களின் பேராசை மற்றும் தவறான திட்டங்களும் சேர்ந்து இன்று இந்த
நிலைக்கு உள்ளாகியிருக்கிறோம்.
திணறும்
மக்களுக்கு உதவி செய்யும் பேரிடர் குழு, ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை
ஊழியர்களுக்கு இணையாக தன்னார்வக் குழுக்களும், சக மனிதர்களும் தங்களாலான உதவிகளைச்
செய்து வருவதைப் பார்க்கும் போது மனிதம் இன்னும் மரிக்கவில்லை என்பதை உணர்ந்து
கொள்ள முடிகிறது. மதமோ, ஜாதியோ எதுவுமே இந்த பேரிடர் சமயத்தில் தடையாக இல்லாது
மனிதம் தழைத்திருக்கிறது என்பதைப் பார்க்கும் போது மனதில் கொஞ்சம் மகிழ்ச்சியும்
வருகிறது. சாதாரண மனிதர்கள் என்றைக்குமே சக மனிதர்களை, மதம், ஜாதி ஆகிய துவேஷம்
இல்லாது சாதாரணமாகத் தான் பார்த்து வருகிறார்கள் என்பதையும் உணர்ந்து கொள்ள
முடிகிறது. அரசியல் வாதிகளும், சந்தர்ப்ப வாதிகளும் மட்டுமே இவ்விஷயங்களை தூபம்
போட்டு வளர்த்து வருகிறார்கள் என்பதையும் அனைவரும் புரிந்து கொள்ள
முடிந்திருக்கிறது.
எத்தனை
பேர் களத்தில் இறங்கி தங்களால் ஆன உதவிகளைச் செய்து வருகிறார்கள் என்பதை
ஊடகங்களில் பார்க்கும் போதும், செய்திகளைக் கேட்கும் போதும் நானும் அங்கே வந்து
களத்தில் இறங்கி பணி செய்ய முடியவில்லையே என்ற ஏக்கம் வருகிறது. தில்லியில் இருந்தபடியே என்னால் முடிந்த சில
உதவிகளைச் செய்தாலும் களப்பணி செய்ய முடியவில்லை என்ற எண்ணம் தொடர்ந்து
கொண்டிருக்கிறது.
சோதனையான
நேரத்தில் இத்தனை நல்ல விஷயங்கள் நடந்து வருவதை நினைத்து திருப்தி அடையும் அதே
வேளையில், இந்த மாதிரி பேரிடர் சமயத்திலும் அரசியல் செய்யும் மாக்களை நினைத்தால்
கோபம் கொப்பளிக்கிறது. ஏற்கனவே சாக்கடை நீரும் ஏரி நீரும் கலந்திருக்க இந்த
அரசியல் சாக்கடையும் இதிலே கலக்க வேண்டுமா என்று ஆதங்கம் கொள்ள வைக்கிறது. மக்கள்
அனைவரும் அதிகமான வேதனையில் வீழ்ந்திருக்க, அதையும் சில சதிகாரர்கள் சாதகமாக்கிக்
கொண்டு திருட்டு, கொள்ளை போன்றவற்றில் ஈடுபடுவதையும் கேட்டால் ஆத்திரம் வருகிறது.
அத்தியாவசியமான பொருட்களை அநியாய விலைக்கு விற்று லாபம் பார்க்க நினைக்கும்
மட்டமானவர்களை என்ன சொல்வது! போகும் போது கோவணத்தினைக் கூட உருவி விடுவார்கள்
என்பதை அவர்கள் உணரவில்லையே......
தமிழக
மக்கள் இப்படி வெள்ளத்தினால் தத்தளித்துக் கொண்டிருக்கும் அதே வேளையில் தலைநகர்
தில்லியின் மக்களும் திணறிக் கொண்டிருக்கிறார்கள். Smog
என்று சொல்லக்கூடிய புகை மூட்டம் தில்லியைச் சூழ்ந்து கொண்டிருக்கிறது. சில
வருடங்களுக்கு முன்னர் பேருந்துகள், ஆட்டோக்கள் அனைத்தும் CNG மூலம் இயக்கத் துவங்கியபோது இருந்த சூழல் இப்போது முற்றிலும்
மாறிவிட்டது. பகல் நேரத்திலேயே இரவு போல இருட்டும், கரும்புகையும் சூழ்ந்து தில்லி
வாசிகளை திணறடித்துக் கொண்டிருக்கிறது.
படம்: இணையத்திலிருந்து....
மாசுத்
துகள்களின் அதிகரிப்பால் பள்ளிக் குழந்தைகளுக்கு விடுமுறை விட்டு விடலாமா என்று
யோசனை செய்து கொண்டிருக்கிறது தில்லி அரசு. இரண்டு நாட்களுக்கு முன்னர் வேறு ஒரு
யோசனையும் வெளியிட்டிருக்கிறது. சாலையில் இருக்கும் அதீதமான வாகன எண்ணிக்கையைக்
குறைக்கும் வழியாக ஒற்றைப்படை, இரட்டைப் படை எண்களைக் கொண்ட வாகனங்கள் ஒரு நாள்
விட்டு ஒரு நாள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று ஆணை பிறப்பித்து இருக்கிறது. அதாவது
ஒன்றாம் தேதி ஒற்றைப் படை பதிவு எண் கொண்ட வாகனங்களை பயன்படுத்தினால், இரண்டாம்
தேதி அவற்றை பயன்படுத்தக் கூடாது – அரசு பேருந்துகளோ, அல்லது தில்லி மெட்ரோவையோ
தான் பயன்படுத்த வேண்டும்.
இப்போது
இதைக் கொஞ்சம் மாற்றி திங்கள், புதன், வெள்ளிக் கிழமைகளில் ஒற்றைப் படை பதிவு எண்
கொண்ட வாகனங்களும், செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இரட்டைப் படை எண்
கொண்ட வாகனங்களும் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என சொல்லி
இருக்கிறார்கள். ஞாயிற்றுக் கிழமைகளில்
எல்லா வாகனங்களையும் தடை செய்யவும் யோசித்து வருகிறார்கள். ஏற்கனவே ஒவ்வொரு
மாதமும் 22-ஆம் தேதி Car Free Day என அறிவித்து சில
பகுதிகளில் கார்கள் இயங்குவதை தடை செய்திருக்கிறார்கள்.
இப்படிச்
செய்தால் ஒவ்வொரு நாளும் சாலைக்கு வரும் வாகனங்களை பாதியாக குறைத்து விடலாம் என்று
சொல்லி இருக்கிறது தில்லி அரசு. நல்ல யோசனையாக இருந்தாலும், இதைச் செயல்படுத்துவது
மிகப்பெரிய சவாலான விஷயம். தில்லியில்
சாலை விதிகளை மீறும் வாகனங்களையே சரிவர கட்டுப்படுத்த முடியாத நிலையில் இந்த புதிய
திட்டத்தினை எப்படி செயல்படுத்த முடியும் என்று புரியவில்லை. அரசு என்னதான் முயற்சி
செய்தாலும், மக்களும் கொஞ்சமாவது ஒத்துழைக்க வேண்டும். சாதாரணமாகவே தில்லிவாசிகள்
விதிகளை மீறுவதில் புகழ் பெற்றவர்கள்..... போலவே இவர்களுக்கு தங்கள் சுகம் மட்டுமே
குறிக்கோள். ஒரு வீட்டில் நான்கு பேர் இருந்தால், நான்கு கார்களை வைத்துக் கொண்டு
ஒரே திசையில் பயணித்தாலும், தனித் தனி வாகனங்களை பயன்படுத்துபவர்களை பார்க்க
முடியும்.
தில்லியில்
இருக்கும் மாசு மக்களுக்கு பல வித பிரச்சனைகளைத் தருகிறது. நெஞ்சு எரிச்சல்,
மூச்சடைப்பு, ஆஸ்துமா தொல்லைகள் என அனைத்தும் அதிகரித்து வருகிறது. வாகனப் புகை
மட்டுமல்லாது, குளிர் காலம் என்பதால் பலரும் சாலைகளில் பிளாஸ்டிக் பேப்பர்களையும்,
வாகன டயர்களையும் கொளுத்தி குளிருக்கு இதமாய் அதைச் சுற்றி அமர்ந்து கொள்வதைப்
பார்க்க முடிகிறது. அதிலிருந்து வரும் புகை அவர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து தில்லி
வாசிகளுக்கும் எமனாக மாறும் நிலை.
இப்படி
சில நாட்களாகவே, இருக்கும் நிலை காரணமாக எதுவுமே எழுதும் மன நிலை இல்லை.
பதிவுலகத்தில் அனைவருடைய நிலையும் இது தான் என்பது திண்ணம்.
மழை,
வெள்ளம், மாசுபட்ட சுற்றுச்சூழல் என அனைத்தும் நமக்கு எதிராக அமைந்துவிட்டாலும்,
அத்தனை தடைகளையும் தகர்த்து, மீண்டு எழுவோம்...... மதம் மறப்போம்..... மனிதம் காப்போம்.....
நட்புடன்
வெங்கட்.
புது
தில்லி.



