புதன், 10 அக்டோபர், 2018

ஷிம்லா ஸ்பெஷல் – மலையுச்சியில் ஜாக்கூ மந்திர் – முன்னோர்கள் கூட்டம்



ஷிம்லா ஸ்பெஷல் – பகுதி – 9

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ஷிம்லா ஸ்பெஷல்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


ஜாக்கூ மந்திர் 108 அடி ஹனுமன்...
ஜாக்கூ மந்திர், ஷிம்லா



புராதன ஹனுமன் கோவில்...

ஜாக்கூ மந்திர், ஷிம்லா
 

உணவகத்தில் மதிய உணவினை திருப்தியாக உண்ட பிறகு நாங்கள் புறப்பட்டுச் சென்ற இடம் ஜாக்கூ மந்திர் – இது மலையுச்சியில் இருக்கும் ஒரு ஹனுமன் கோவில். ஷிம்லா நகரில் எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் ஒரு வானுயர்ந்த ஹனுமன் சிலை உண்டு. அந்தச் சிலை நிறுவி இருப்பது இந்த மலையுச்சிக் கோவிலில் தான். கடல் மட்டத்திலிருந்து சுமார் 8100 அடி உயரத்தில் இருக்கிறது இந்தக் கோவில். ஜாக்கூ மலை என்று அழைக்கப்படும் மலையின் உச்சியில் அமைந்திருக்கும் கோவில் பகுதியில் 108 அடி உயர அனுமன் சிலை ஒன்றும் இருக்கிறது. கோவில் புராதனமானது என்றாலும், இந்த 108 அடி உயர சிலை சில வருடங்களுக்கு முந்தையது தான்.  ஷிம்லா நகரின் எந்தப் பகுதியிலிருந்து பார்த்தாலும் இந்த ஹனுமனை தரிசிக்க முடியும். ஷிம்லா நகரின் மால் ரோடு பகுதியிலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது இந்த ஜாக்கூ மந்திர்.


கோவில் வளாகத்தில் கேரள நண்பர்களுடன்....

ஜாக்கூ மந்திர், ஷிம்லா



படிகளில் ஏறிச்செல்லும் நண்பர்கள்...

ஜாக்கூ மந்திர், ஷிம்லா
 

உணவினை சாப்பிட்ட பிறகு எங்கள் வாகனத்தில் மலையின் மீது இருக்கும் வாகன நிறுத்தம் வரை வாகனத்திலேயே அழைத்துச் சென்று விட்டார் ஓட்டுனர் ரஞ்சித் சிங்.  அதன் பிறகு நடந்து தான் செல்ல வேண்டும். படிக்கட்டுகள் மீது ஏறிச் செல்ல வேண்டும். ஆனால் எங்களை பயமுறுத்தியது அந்தப் படியேற்றம் அல்ல! அங்கிருந்த நூற்றுக்கணக்கான வானரங்கள். கைகளில் உணவுப் பொருட்கள் ஏதும் இல்லை என்றாலும் கைகளில் கேமரா உண்டு – என்னிடமும் நண்பர் பிரமோத்-இடமும். அதைத் தவிர நண்பர் கண்ணாடி வேறு அணிந்திருந்தார். உத்திரப் பிரதேசத்தில் உள்ள மதுரா, விருந்தாவன் ஆகிய இரண்டு இடங்களிலுமே இருக்கும் குரங்குகள் கண்ணாடி அணிந்திருந்தால் பிடுங்கிக் கொண்டு போய்விடும். இங்கேயும் அப்படி கண்ணாடி, தொப்பி போன்றவற்றை பிடிங்கிக் கொள்ளும் என எச்சரித்து அனுப்பினார் ரஞ்சித் சிங்.


கோவில் வளாகத்தில் பூங்கா...
ஜாக்கூ மந்திர், ஷிம்லா


கோவில் வளாகத்திலிருந்து இயற்கை எழில்...
ஜாக்கூ மந்திர், ஷிம்லா
 
குரங்குகளை விரட்ட கைகளில் குச்சி எடுத்துச் செல்கிறார்கள். அந்தக் குச்சிகள் அடிவாரத்தில் பத்து ரூபாய் கொடுத்து வாடகைக்கு வாங்கிக் கொள்ளலாம்! திரும்பி வரும்போது கொடுத்து விடவேண்டும்! நாங்கள் குச்சியெல்லாம் எடுத்துக் கொள்ளவில்லை. எல்லாம் ஒரு தைர்யம் தான் – இந்த மனிதக் குரங்குகளை ஒரிஜினல் குரங்குகள் என்ன செய்து விடப் போகிறது என்ற எண்ணம். கேமராவில் புகைப்படங்கள் வேறு எடுக்க வேண்டும். நண்பர் குரங்குகளை நிறையவே படம் எடுத்தார். சுமார் 100 படிகளுக்கு மேல் ஏறிச் சென்றால் கோவில் – குரங்குகளைப் பார்த்தபடியே – எப்போது பாய்ந்து விடுமோ என்று பார்த்தபடியே – படங்களும் எடுத்தபடியே சென்றதால் அந்தப் படிகளின் எண்ணிக்கையை கவனிக்கவில்லை. வேகமாக படிகளில் ஏறிவிட்டதாகத் தான் தோன்றியது. நாங்கள் மேலே சென்று கொண்டிருந்த போது மேலிருந்து கீழே வந்த ஒரு பெரியவர் பை நிறைய தின்பண்டம் வைத்துக் கொண்டு குரங்குகளை அழைத்துக் கொடுத்துக் கொண்டே வந்தார். அதனால் எல்லா குரங்குகளும் அவரை மட்டுமே கவனித்தன!


மரங்களுடன் போட்டியிடும் ஹனுமன்...
ஜாக்கூ மந்திர், ஷிம்லா


கோவில் வளாகத்திலிருந்து இயற்கை எழில்....
ஜாக்கூ மந்திர், ஷிம்லா
 
மலையுச்சியை சென்றடைந்து எங்கள் காலணிகளை கோவில் அருகே இருக்கும் அதற்கான அறையில் வைத்து விட்டு கோவிலுக்குள் சென்றோம். சிறு கோவில் தான் என்றாலும் புராதனமான கோவில். கோவில் என்றாலே கதைகள் உண்டு தானே. இக்கோவிலுக்கும் கதை உண்டு. ராமாயண காலம் – போரில் லக்ஷ்மணன் அடிபட்டு கிடக்க, சஞ்சீவி மூலிகையைக் கொண்டு வரச் சொல்கிறார்கள் ஆஞ்சனேயரிடம். எது சஞ்சீவி மூலிகை என்று தெரியாத நம்ம ஆஞ்சி பறந்து வருகிறார். அப்படி வரும்போது இந்த மலையில் ஒரு யக்ஷி தபஸ் செய்து கொண்டிருக்கிறார் – அவர் பெயர் யாகூ – யாகூ தான் நாளடைவில் உருமாறி ஜாகூ என்றாகி இந்த மலைக்கே ஜாக்கூ என்ற பெயர் வந்து விட்டது. சரி இந்த யாகூவிடம் சஞ்சீவி மூலிகை பற்றிக் கேட்போம் என எண்ணி இங்கே கால் பதிக்கிறார்.


வீர நடை போடும் குரங்கார்...
ஜாக்கூ மந்திர், ஷிம்லா


கோவில் வளாகம் - ஒரு காட்சி...
ஜாக்கூ மந்திர், ஷிம்லா
 
அவரது பிரம்மாண்ட உருவத்துடன் காலை பதிக்க, மலை பாதிக்கு மேல் பூமிக்குள் சென்றதாம்! இன்றைக்கும் இங்கே ஹனுமனின் காலடித் தடம் உண்டு. கோவிலுக்குப் பின்னே ஒரு அறைக்குள் அந்தக் காலடித் தடங்களை பாதுகாத்து பூஜிக்கிறார்கள். இங்கே வாசம் செய்து கொண்டிருந்த யாகூ முனிவரிடம் மூலிகை பற்றிய விவரங்கள் கேட்டுக்கொண்ட பிறகு, திரும்பி வரும் வழியில் நான் வருவேன் என்ற வாக்களித்துவிட்டு அதிவிரைவில் மூலிகையைக் கண்டுபிடித்து கொண்டு செல்கிறார் ஹனுமன்.  வருகிறேன் என்று சொல்லிச் சென்ற ஹனுமன் வரவில்லையே என்ற கவலையில் யாகூ இருக்க, அப்போது அசரி்ரீ ஒலிக்கிறது. தான் விரைவாகச் செல்ல வேண்டியிருந்ததால் வரமுடியவில்லை என்று வருந்துகிறார்.  அசரீரி ஒலித்த பின் அங்கே ஒரு சிலை – ஹனுமன் சிலை ஸ்வயம்புவாக உருவாகிறது. அந்தச் சிலையைக் கொண்டு யாகூ அமைத்த கோவில் தான் இந்தக் கோவில் என்கிறது கோவில் பற்றிய வரலாற்றுப் பதாகை.


இலைகளை இழந்த இரு தேவதாரு மரங்கள்...
ஜாக்கூ மந்திர், ஷிம்லா


படிகளின் அருகே கேரள நண்பர்கள்...
ஜாக்கூ மந்திர், ஷிம்லா

அதே மலையில் அமைக்கப்பட்டிருக்கும் வானுயர்ந்த 108 அடி ஹனுமன் சிலை உலகிலேயே உயரமான சிலை – அதாவது மலைமீது அமைக்கப்பட்ட சிலைகளில் உயரமானது இந்தச் சிலை தான். 8100 அடி உயரம் கொண்ட மலையில் 108 அடி சிலை – இதற்கு முன்னர் உலகில் அதிக உயரத்தில் – அதிக உயரமான சிலையாக இருந்தது ப்ரேசிலில் ரியோ டி ஜெனரோ வில் இருந்த Christ the Redeemer சிலை – 2296 அடி மலையுச்சியில் 98 அடி சிலை. இந்த ஹனுமன் சிலை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது ஒரு ஹனுமத் ஜெயந்தி நாளில் – 26 அக்டோபர் 2008. நவம்பர் 2010-ல் இந்தச் சிலை அமைக்கும் பணி முழுவதும் முடிந்து மாநில முதல்வர், தொழிலதிபர் நந்தா மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது. சிலை உருவாக்கத்தில் முக்கியப் பங்கு ராஜஸ்தானின் பிலானியைச் சேர்ந்த நரேஷ் குமார் வர்மா அவர்களுடையது. சிலை அமைக்க ஆன மொத்த செலவு ரூபாய் 1.5 கோடி!


சென்ற வருடம் ஆரம்பிக்கப்பட்ட கேபிள் கார் வசதி.....
ஜாக்கூ மந்திர், ஷிம்லா
படம்: இணையத்திலிருந்து....


கோவிலில் தரிசனம் முடிந்த பிறகு சில பல நிழற்படங்களை எடுத்துக் கொண்டு கீழ் நோக்கி நடக்கத் துவங்கினோம். இப்போதும் எங்களைச் சுற்றி நிறையவே குரங்குகள். நல்ல வேளையாக எங்களை ஒன்றும் செய்யவில்லை. எங்களிடம் பறித்துக் கொள்ள கோவில் பிரசாதமும் இல்லை! பொதுவாகவே கோவில்களுக்குச் செல்லும்போது தேங்காய் உடைப்பது, பிரசாதம் வாங்குவது போன்ற பழக்கம் எனக்கில்லை. பிரசாதம் வாங்கினாலும் அங்கேயே சாப்பிட்டு ஏப்பம் விட்டு விடுவேன்! குரங்குகளை படம் எடுத்தபடியே கீழே வந்து சேர்ந்தோம். சென்ற வருடத்தில் புதிதாக இங்கே உடன் கடோலாவும் அறிமுகப் படுத்தி இருக்கிறார்கள் – அதாவது கேபிள் கார் – கேபிள் கார் மூலம் மலையடிவாரத்திலிருந்து மலையுச்சிக்கு செல்லும் வசதி. பெரியவர்களுக்கு 250 ரூபாயும், 3-12 வயதுவரை உள்ளவர்களுக்கு 200 ரூபாயும் கட்டணம்.



அடுத்ததாக எங்கே? என்ன அனுபவங்கள் என்பதை வரும் பகுதியில் சொல்கிறேன்.

பயணம் நல்லது. ஆதலினால் பயணம் செய்வீர்!

மீண்டும் ச[சி]ந்திப்போம்…

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

17 கருத்துகள்:

  1. காலை வணக்கம் வெங்கட். 108 அடி ஆஞ்சனேயர்... அடேங்கப்பா... கோவிலைப் பார்த்தால் நவீனமாக்கப்பட்டு புராதனமாகத் தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் 🙏. எல்லா கோவில்களும் நவீனமயமாக்கம் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. மரங்களுக்கு மத்தியில் ஆஞ்சநேயர் அழகு. நம்மூரிலும் அழகர் கோவில், சோளிங்கர் உள்ளிட்ட இடங்களில் வானர நண்பர்கள் தாக்குதல் உண்டே....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். இப்படி சில இடங்களில் வானர நண்பர்களின் தாக்குதல் உண்டு. அய்யர் மலை சென்றபோது இப்படி வானரங்களுடன் சில நிமிடங்கள் தனியே இருந்த அனுபவம் உண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. இந்தக் கோயில் பத்தியும் ஆஞ்சி பத்தியும் இப்போத் தான் கேள்விப் படறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழைய கோவில் தான். உங்களுக்கு தெரியாதா?

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  4. மலையுச்சியில் கோயில் அழகாக தூய்மையாக இருக்கின்றது ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தூய்மை நல்ல விஷயம். எல்லா இடங்களிலும் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  6. இப்போதெல்லாம் மிகப் பெரிய சிலைகள் அமைப்பதில் போட்டியே இருக்கும்போல் இருக்கிறதே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். திருவரங்கம் அருகில் கூட இப்படி ஒரு 108 அடி சிலை அமைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்
      பி. ஐயா.

      நீக்கு
  7. குரங்கை விரட்டும் குச்சிக்கு வாடகையா?! சூப்பர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். இப்படி சில இடங்களில் வாடகை உண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  8. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குட்டிக்கோயில் அழகாக இருக்கிறது. படங்கள் எழில் கொஞ்சுகின்றன.
      கொடைக்கானலில் நான் இரண்டாவது படிக்கும்பொழுது என்று நினைக்கிறேன், சில்வர் கேஸ்கேடிற்கு ஒரு நாள் பிக்னிக், பள்ளியிலிருந்து. ஒரு குரங்கு என் வாழைப்பழத்தைப் பறித்தோட நான் அதைத் துரத்தி ஓட ஆரம்பித்துவிட்டேன். என் ஆசிரியை என்னைப் பிடித்து இழுத்துவிட்டார். ஹாஹஹா மறக்கவே முடியாது

      நீக்கு
    2. ஆஹா.... நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் வருகை. மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தேன்மதுரத் தமிழ் கிரேஸ்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....