வெள்ளி, 12 அக்டோபர், 2018

ஷிம்லா ஸ்பெஷல் – செக்கச் சிவந்த வானம் - மால் ரோடில் ஒரு உலா – சாக்லேட் பான்



ஷிம்லா ஸ்பெஷல் – பகுதி – 10

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ஷிம்லா ஸ்பெஷல்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


மால் ரோடு, ஷிம்லா....


ஜாக்கூ மந்திர் சென்று அங்கே 108 அடி உயர ஹனுமனையும் ப்ராச்சீன் ஹனுமனையும் தரிசித்த பிறகு ஓட்டுனர் ரஞ்சித் சிங் எங்களை தங்குமிடத்திற்கு அருகில், எங்கேயிருந்து அழைத்துச் சென்றாரோ அதே இடத்தில் கொண்டு விட்டார். ஒரு நாள் வாடகையாக 1500 ரூபாயும் அவருக்கான ஓட்டுனர் பேட்டாவாக 200 ரூபாயும் கொடுத்து அடுத்த நாள் எங்கே வரவேண்டும் என்பதை பிறகு சொல்கிறோம் என்று சொல்லி வழியனுப்பி வைத்தோம். நாளைக்கு கொஞ்சம் அதிக தூரம் பயணிக்க வேண்டும் என்பதால் வேறு வண்டி எடுத்து வருகிறேன் என்று சொல்லி புறப்பட்டுச் சென்றார். அன்றைக்கு எடுத்து வந்திருந்த வண்டி 4 + 1 – சிறிய வண்டி என்பதால் நான்கு பேர் அமர்ந்து செல்ல கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது – அதுவும் பின் சீட்டில் மூன்று பேர் நெருக்கித் தான் உட்கார முடியும்! நீண்ட தூரப் பயணத்திற்கு அது சரி வராது!


ஷிம்லா மால் ரோடில் அடியேன்.......


ஷிம்லா மால் ரோடிலிருந்து ஜாக்கூ மலை ஹனுமன்.......

நாள் முழுவதும் சுற்றியதில் கொஞ்சம் அலுப்பு. அறைக்குச் சென்று சற்றே ஓய்வெடுத்த பின்னர் ஷிம்லாவின் மால் ரோடுக்குச் செல்ல வேண்டும். ஆனால் மலைப்பகுதியில் மேல் நோக்கி ஏறிச் சென்று, அதன் பிறகு நான்கு மாடி ஏறிச் செல்ல வேண்டும் என்ற நினைப்பே அலுப்பு தந்தது. ஆனாலும் கொஞ்சம் ஓய்வு தேவையாகவே இருக்க – வேறு வழியில்லை என அறைக்குத் திரும்பினோம். சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டோம். மாலை நேரம் என்பதால் அறைக்குத் தேநீர் வரவழைத்துக் குடித்தோம். கடற்கரையில் சூரிய உதயமும், அஸ்தமனமும் பார்ப்பது எவ்வளவு ஸ்வாரஸ்யமோ அதே அளவு ஸ்வாரஸ்யம் அவற்றை மலைப்பகுதிகளில் பார்ப்பது. நாங்கள் இருந்த அறை சற்றே பெரிய அறை – இரண்டு அறைகள் கொண்டது. வாயிலில் வராண்டா வேறு.


ஷிம்லா மால் ரோடில் 100 அடி கொடிக்கம்பமும் கொடியும்.......


ஷிம்லா மால் ரோடில் ஆங்கிலேயர் கால விளக்குகள்.......

வராண்டாவிலிருந்து பார்த்தால் மலைமுகட்டில் சூரிய அஸ்தமனம் ஆரம்பித்திருந்தது – செக்கச் சிவந்த வானம் – மணிரத்தினம் படம் பற்றி சொல்ல வில்லை! வானத்தின் வர்ணஜாலத்தினைச் சொல்கிறேன்! ஜன்னல்களைத் திறந்து அங்கிருந்தே சூரியனின் அஸ்தமனக் காட்சிகளைக் கேமராக் கண்களில் சிறைபிடித்தோம். நான் ஒரு பக்கத்தில் நின்று எடுக்க, நண்பர் மற்றொரு பக்கத்தில் எடுத்துக் கொண்டிருந்தார். சில நிமிடங்கள் படங்கள் எடுத்த பிறகு மால் ரோடு உலா செல்ல ஒவ்வொருவராக தயாரானோம். ஷிம்லாவின் மால் ரோடு மாலை நேரங்களில் உலா வர ரொம்பவே பிரபலமானது. மொத்த சுற்றுலா பயணிகளும் மாலை நேரத்தில் அங்கே தான் இருப்பார்கள். நாள் முழுவதும் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்களுக்குச் சென்ற பிறகு மாலையில் மால் ரோடு உலா தான். ஜகஜ்ஜோதியாக இருக்கும்.


ஷிம்லா மால் ரோடில்.......


ஷிம்லா மால் ரோடில்.......

ஆங்கிலேயர்கள் காலத்தில் அமைத்த விளக்குக் கம்பங்கள், கட்டிடங்கள், தேவாலயம், விதம் விதமான கடைகள், மலைப்பகுதிகளில் ஆங்காங்கே ஒளிர்விடும் விளக்குகள் என அனைத்தும் அழகு – புது மணம் புரிந்த ஜோடிகள் கைகளுக்குள் கைகளை பிடித்தபடி வாழ்க்கையை ரசிக்க, பழைய ஜோடிகள் வாரிசுகளை முன்னர் நடக்கவிட்டு கைகளைப் பிடித்துக் கொண்டு பழைய நினைவுகளை மீட்டெடுக்க, அத்தனையும் ரசனை – இதில் எங்கள் போன்று தனிக்கட்டைகளாகச் செல்பவர்கள் – அவர்களைப் பார்த்து – ஆஹா “நல்லா இருங்கடே” என்று வாழ்த்தியபடி காட்சிகளை ரசித்தபடிச் செல்வது ஒரு அழகு! எத்தனை எத்தனை காட்சிகள் அங்கே. பார்க்கப் பார்க்க பரவசம் – சாலையோரக் கடைகளிலிருந்து அழைப்புகள் – அவர்களிடம் இருக்கும் பொருட்களை வாங்கச் சொல்லி அழைப்புகள்.


ஷிம்லா மால் ரோடில்.......


ஷிம்லா மால் ரோடில் தேவாலயமும் மலையில் ஹனுமனும்.......

குளிர்காலம் என்பதால் தேநீர் எவ்வளவு குடித்தாலும் இன்னும் தேவை என்றே தோன்றும். மால் ரோடு பகுதியில் நடக்கும்போது எங்காவது தேநீர் – கட்டஞ்சாய் [கேரளத்தினருக்கு அது தான் தேவை!] கிடைக்குமா எனக் கேட்டால் எங்களை மேலும் கீழும் பார்த்து இங்கே எல்லாம் கிடைக்காது என்று சொல்லிவிட்டார்கள். நான்கு ஐந்து கடைகளில் கேட்டபிறகு சரி வேறு வழியில்லை என தேநீர் குடித்தோம். ஓகே ரகம் என்றாலும் குளிருக்கு இதமாக இருந்தது. சில கடைகளில் விதம் விதமாக பான் வைத்திருந்தார்கள். இரவு உணவினை முடித்த பிறகு வந்திருந்தால் பான் சுவைத்திருக்கலாம் – சாக்லேட் பான் கூட கிடைத்தது! வடக்கில் கிடைக்கும் பான் வகைகள் நிறையவே – ஃபையர் பான் என்று கூட ஒன்று உண்டு – அப்படியே நெருப்புடன் வாயில் போடுவார்கள்!






இந்த மால் ரோடு பகுதியில் இருக்கும் தேவாலயம் மிகவும் பழமையானது. ஆங்கிலேயர்கள் இந்தப் பகுதியை தங்களது கோடைக்கால தலைநகராக வைத்திருந்ததால், இங்கே தங்களுக்கு ஒரு வழிபாட்டுத் தலம் தேவை என்று உருவாக்கியது அந்த தேவாலயம். 9 செப்டம்பர் 1844 அன்று அடிக்கல் நாட்டப்பட்டாலும், இந்த தேவாலயம் கட்டி முடிக்க கிட்டத்தட்ட 13 வருடங்கள் ஆனதாம்! 1857-ஆம் ஆண்டு தான் தேவாலயம் திறக்கப்பட்டது. தேவாலயம் கட்ட ஆன மொத்த செலவு ரூபாய் 50,000/-. அதில் ரூபாய் 12,000/- மட்டும் அரசு கஜானாவிலிருந்து மீதி தனியார் நபர்களிடம் வசூலித்ததாம். அழகிய இந்த தேவாலயம் இன்றும் மால் ரோடு பகுதியில் ரிட்ஜ் என அழைக்கப்படும் இடத்தில் அமைந்திருக்கிறது. 


ஷிம்லா மால் ரோடில் தேவாலயம்.......


ஷிம்லா மால் ரோடில்.......

மால் ரோடு பகுதியில் இருக்கும் கட்டிடங்கள் விளக்கொளியில் ரொம்பவே அழகு.  சில வருடங்கள் முன்னர் இந்த மால் ரோடு பகுதியில் 100 அடி உயர கம்பம் நிறுவப்பட்டு அதில் இந்திய தேசத்தின் கொடி பட்டொளி வீச பறக்க விட்டிருக்கிறார்கள். நம் தேசத்தின் கொடி அங்கே பறந்த வண்ணம் இருப்பது சிறப்பு. இந்தியாவின் பல பகுதிகளில் இப்படியான கம்பங்களை SAIL நிறுவனம் வைத்திருக்கிறது. தலைநகர் தில்லியில் கூட இப்படியான கொடிக்கம்பங்கள் உண்டு. ஏற்கனவே படமும் என் பதிவில் வெளியிட்டது நினைவில் இருக்கலாம். இப்படியான அழகு மிகு மால் ரோடு பகுதியில் சில நிமிடங்கள் செலவழித்த பிறகு எங்கள் தங்குமிடம் நோக்கி நடந்தோம்.


ஷிம்லா மால் ரோடில் - சாக்லேட் பான்.......


ஷிம்லா மால் ரோடில் - மீட்டா பான்.......

தங்குமிடத்திலேயே ஹல்திராம் உணவகம் இருக்கிறது. ஒரு வழியாக சாப்பிட்ட பிறகே அறைக்குச் செல்வோம் என முடிவு செய்து ஹல்திராம் சென்றோம். அறைக்குச் சென்று மீண்டும் இறங்கி ஏற யாருக்கும் இஷ்டமில்லை! ஹல்திராமில் சிம்பிளாக தால், சப்பாத்தி, சப்ஜி என சாப்பிட்டு அறைக்குத் திரும்பினோம். ஷிம்லா நகரில் முதலாம் நாள் நல்லபடியாக கழிந்தது. அடுத்த நாள் ஷிம்லா நகரின் அருகில் இருக்கும் சில இடங்களுக்குச் செல்வதாக உத்தேசம். அடுத்த நாள் என்ன செய்தோம் என்பதை வரும் பகுதியில் சொல்கிறேன்.

பயணம் நல்லது. ஆதலினால் பயணம் செய்வீர்!

மீண்டும் ச[சி]ந்திப்போம்…

நட்புடன்

வெங்கட்
திருவரங்கத்திலிருந்து....

14 கருத்துகள்:

  1. காலை வணக்கம் வெங்கட். மால் ரோடு சுவாரஸ்யமாக இருந்திருக்கும் என்று தெரிகிறது. அங்கு எடுத்த மற்ற படங்கள் பிறிதொரு நாளில் தனிப்பதிவாகப் போடும் எண்ணத்தில் இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மால் ரோடு ஸ்வாரஸ்யம் தான். அங்கே இருந்த இரண்டு தினங்களும் மாலை நேரம் மால் ரோடில் தான்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. எனக்கு சாக்லேட் பிடிக்காது (!) என்பதால் சாக்லேட் பான் கவரவில்லை. அதுவும் நெருப்புடன் உள்ளே போடுவதா? ஐயோ...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். நெருப்புடன் பான் உண்டு - தில்லியில் இப்படி கொடுக்கும் சில பான் கடைகள் உண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. அந்த உணவகத்துக்குள் ஒரு படம் எடுத்திருக்கலாமோ! அங்கெல்லாம் தால் அல்லது சப்ஜிகளில் ஒரு அசட்டுத் தித்திப்புதான் இருக்கும் இல்லையா? காரம் எதிர்பார்க்க முடியாது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குஜராத்தி சப்ஜிகள் தான் கொஞ்சம் இனிப்பு இருக்கும். இங்கே கொஞ்சம் காரம் இருக்கும்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. நெருப்போடு பான் போடுவதை ட்விட்டர்ல பார்த்திருக்கேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  5. எத்தனை எத்தனை காட்சிகள்! அதை விவரித்த விதம் அருமை.
    படங்கள் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.....

      நீக்கு
  6. படங்களைப்பார்த்து திருப்தி அடைய வேண்டியதுதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா....

      நீக்கு
  7. தேவாலயம் வித்தியாசமான அழகுடன் திகழ்கிறது. மற்ற புகைப்படங்களும் அழகு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்....

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....