புதன், 3 அக்டோபர், 2018

ஷிம்லா ஸ்பெஷல் – ராணுவ பாரம்பரிய அருங்காட்சியகம்


ஷிம்லா ஸ்பெஷல் – பகுதி – 6

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ஷிம்லா ஸ்பெஷல்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


அழகிய பூங்கா....
ராணுவ பாரம்பரிய அருங்காட்சியகம், ஷிம்லா...




அருங்காட்சியகம் நோக்கிச் செல்லும் பாதை....

ராணுவ பாரம்பரிய அருங்காட்சியகம், ஷிம்லா...



அருங்காட்சியகத்தில்....

ராணுவ பாரம்பரிய அருங்காட்சியகம், ஷிம்லா...



அழகிய பூக்கள்...


சென்ற பகுதியில் பறவை பூங்கா பற்றிய செய்திகளும், ஷிம்லா நகர் பற்றிய சில செய்திகளும் பார்த்தோம். பறவைப் பூங்காவில் பெரிதாய் ஒன்றுமில்லை என்ற எண்ணத்துடன் புறப்பட்ட நாங்கள் அடுத்துச் சென்ற/எங்களை ஓட்டுனர் ரஞ்சித் சிங் அழைத்துச் சென்ற இடம் ஒரு அருங்காட்சியகம் – ராணுவ பாரம்பரிய அருங்காட்சியகம். ஷிம்லாவின் அன்னாடேல் பகுதியில் மலையடிவாரத்தில் நகரின் சுற்றுலாக் கூட்டத்திற்கு சற்றே தள்ளி அமைதியான சூழலில் அமைந்திருக்கிறது இந்த ராணுவ பாரம்பரிய அருங்காட்சியகம். ஷிம்லா செல்லும் பெரும்பாலானவர்கள் மால் ரோடில் மூழ்கிக் கிடக்க, இங்கே, இந்த அமைதியான இடத்திற்கு வருபவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு தான். நாங்கள் சென்ற போது எங்களைத் தவிர, நுழைவாயில் அருகே வேறு யாரும் இல்லை.










மால் ரோட் பகுதியிலிருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இடம் அன்னாடேல். மலையடிவாரத்தில் இருக்கும் இந்த இடத்திற்கு ”கீழ் காய்த்தூ” கிராமம் வழியாகச் செல்ல வேண்டும். சுற்றிலும் மரங்களும், சலசலவென ஓடும் சில சிற்றோடைகளும் இருக்க, அந்தப் பாதையே மிகவும் அழகாக இருக்கும். நாங்கள் வாகனத்தில் சென்றாலும், அந்தப் பாதையில் நடந்து செல்வது தான் சிறந்தது. என்ன திரும்ப வரும்போது சாலை வழி மலையேற்றம் கொஞ்சம் கடுமையாக இருக்கும்! வாரத்தின் திங்கள் கிழமை தவிர மற்ற நாட்களில் காலை 10 மணி முதல் மாலை ஐந்து மணி வரை திறந்திருக்கும் இந்த அருங்காட்சியகத்தின் உள்ளே செல்ல கட்டணம் ஏதுமில்லை. இந்திய ராணுவத்தினரின் பராமரிப்பில் இருப்பதால் மிகவும் சுத்தமாகவும், அழகாகவும் பராமரிக்கப்பட்டு வரும் அருங்காட்சியகம். நுழைவுக்கட்டணம் இல்லை என்றாலும், உள்ளே செல்ல உங்கள் அடையாள அட்டை வைத்துக் கொள்வது நல்லது.





இந்திய ராணுவம் பற்றிய வரலாறும், பாரம்பரியமும் பரம்பரை பரம்பரையாக சொல்லப்பட்டு வந்த கதைகள், பாடல்கள், நாட்டிய நடனங்கள் மூலமும் தான் நமக்குத் தெரியும். பிற்கால வரலாறு பெரும்பாலும் ஆங்கிலேயர்களால் எழுதி வைக்கப்பட்டவை. இந்திய ராணுவம் பற்றிய நிறைய வரலாற்றுத் தகவல்கள் தவறாகவும் இருக்க வாய்ப்புண்டு. அவற்றை மொத்தமாக மாற்றுவது முறையாகவோ, சரியாகவோ இருக்காது. சரியான விவரங்களை மக்களுக்கு வழங்க, சில தவறான வரலாற்றுத் தகவல்களை மாற்ற ஒரு முயற்சியாக இந்த ராணுவ பாரம்பரிய அருங்காட்சியகத்தினை இந்திய ராணுவம் ஷிம்லாவில் தொடங்கி இருக்கிறது. இந்த அருங்காட்சியகத்தில் நமக்குக் காணக் கிடைக்கும் விஷயங்கள் நிறையவே இருக்கின்றன. இந்திய ராணுவம் பற்றிய தகவல்களை மக்களுக்கு எடுத்துச் சொல்ல ஒரு கருவியாக இந்த அருங்காட்சியகத்தினைத் திறந்திருக்கிறார்கள்.





ராணுவ வீரர்கள் பயன்படுத்தும் பொருட்கள், கருவிகள், ஆயுதங்கள், பல பிரிவுகளின் உடைகள், அவர்களுக்குக் கொடுக்கப்படும் மெடல்கள், இசைக்கும் கருவிகள் என வரிசையாக பல அறைகளில் வைத்து அனைத்திற்குமான விளக்கங்களும் சிறப்பாக எழுதி வைத்திருக்கிறார்கள். குதிரையேற்றத்தின் போது பயன்படுத்தும் பொருட்கள், பனிப்பிரதேசமான இந்திய எல்லையில் பயன்படுத்தும் உடை, கருவிகள் கூட இங்கே பார்க்க முடியும். அந்த கருவிகளைப் பார்க்கும்போதே எத்தனை கடுமையான பணி இந்திய ராணுவ வீரர்களுடையது என்பது புரியும். அவர்களைப் பற்றிய எந்தவித புரிதலும் இல்லாமல் பல இந்தியர்கள் இருப்பது ஒரு சாபக்கேடு. பல நாடுகளில் இராணுவ வீரர்கள் என்றாலே மதிப்பும் மரியாதையும் கொடுப்பார்கள்.





பூக்களும் பசுமையும் நிறைந்த பூங்காவிற்கு நடுவே இந்த அருங்காட்சியகம் அமைந்திருக்கிறது. தவிர ஒரு Cactus பூங்காவும் இங்கே உண்டு. ஏகப்பட்ட வகை Cactus செடிகளை இங்கே பார்க்க ஒரு வாய்ப்பு. எத்தனை எத்தனை வகைகளில் இந்தச் செடிகள் – ஒவ்வொன்றின் பெயரும் அழகே அவற்றின் அருகில் எழுதி வைத்திருக்கிறார்கள்.  இந்தப் பூங்காவின் அருகிலேயே ஒரு சிறு Snack Bar-உம் உண்டு. தேநீர், பிஸ்கெட் போன்றவை இங்கே கிடைக்கிறது. அருங்காட்சியகத்தினையும் பூங்காவையும் பார்த்த பிறகு இந்த இடத்தில் தேநீர் அருந்தினோம். அந்த இடத்திலிருந்து பார்த்தால் அருங்காட்சியகத்தினை அடுத்த அன்னாடேல் பகுதியில் இருக்கும் ராணுவத்தினரின் Nine Hole Golf Course தெரிகிறது. பசுமையான அந்த இடத்தினையும் பார்த்தபடியே தேநீர் அருந்தினோம். அங்கே தான் வேறு சில சுற்றுலா பயணிகளையும் பார்த்தோம் – ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் குடும்பத்தினர் அவர்கள்.





தேநீர் அருந்தி, சற்றே ஓய்வெடுத்து, இயற்கையில் ஒன்றியிருந்த பிறகு அருங்காட்சியகத்தின் மற்ற பகுதிகளையும் சுற்றிப் பார்த்தோம். அழகான புல்வெளிகள், நடுநடுவே இருக்கும் சிறு கூடங்கள், தொடர்ந்து பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் வீரர்கள் என ஒவ்வொன்றாகப் பார்த்த படியே அருங்காட்சியத்தினை ஒரு சுற்று சுற்றி வந்து விட்டோம். இந்த அருங்காட்சியகத்தில் சில நினைவுப் பொருட்களும் விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள் – Coat Pins, Ties, கடிகாரங்கள் என பலவும் விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள். வேண்டுமென்பவர்கள் இங்கேயே இருக்கும் சிப்பந்தியிடம் கேட்டு வாங்கிக் கொள்ளலாம். சில ரொம்பவே அழகாக இருந்தன என்றாலும் எதையுமே தேவை இல்லாமல் வாங்குவது எனக்குப் பழக்கமில்லை என்பதால் எதுவும் வாங்கவில்லை.





தேவதாரு மரங்கள் நிறைந்த இந்த இடம் ஷிம்லா செல்லும் பலரும் செல்வதில்லை. நீங்கள் செல்லும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் சென்று பார்க்க வேண்டிய இடம். இங்கே எடுத்த படங்கள் இன்னும் நிறைய இருக்கின்றது என்றாலும் சில படங்கள் மட்டுமே பகிர்ந்து கொள்ள முடியும் என்பதால் இங்கே அவை மட்டும். அழகிய சூழல் கொண்ட இந்த இடத்தினை விட்டு வர மனமே இல்லை என்றாலும் இங்கிருந்து புறப்பட்டுத்தானே ஆக வேண்டும்! ஆகையால் அங்கிருது புறப்படும் முன்னர் அங்கே இருந்த இராணுவ வீரர்களுக்கு வாழ்த்துகள் சொல்லி, சிறப்பாக பராமரிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் சொல்லி அங்கிருந்து விடை பெற்றோம். அடுத்ததாய் நாங்கள் சென்றது எங்கே? வரும் பகுதியில் சொல்கிறேன்.

பயணம் நல்லது. ஆதலினால் பயணம் செய்வீர்!

மீண்டும் ச[சி]ந்திப்போம்…

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

34 கருத்துகள்:

  1. குட்மார்னிங் வெங்கட்.

    கீழ்நோக்கிய பூக்கள் வெகு அபூரவம் இல்லை? அல்லது மிளகாய்ப்பூ தவிர நான் அதிகம் பார்த்ததில்லை!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் ஸ்ரீராம்.

      இந்தப் பூக்களின் மொட்டுக்கள் மேல் நோக்கியே இருந்தாலும் பூவானதும் தலைகவிழ்ந்து விடுகிறது! இந்தப் பூவிற்கு அப்படி ஒரு நாணம் போலும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    2. ஸ்ரீராம் அண்ட் வெங்கட்ஜி....மொட்டு மலரும் போது தலை கவிழ்ந்து விடுகிறது என்பது பெண்கள் ஒரு வயதுக்கு வரும் போது நாணம் வந்து தலையைக் கவிழ்ந்து கொள்வார்கள் என்று கதையில் குறிப்பாக சரித்திரக் கதைகளில் எல்லாம் வருமே அது நினைவுக்கு வந்தது க

      கூடவே தலையைக் குனியும் தாமரையே என்ற பாடலும்....! பூ அழகோ அழகு

      கீதா

      நீக்கு
    3. தலையை குனியும் தாமரை பாடல் எனக்கு பிடித்த பாடல்களில் ஒன்று.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.

      நீக்கு
  2. ஆங்கிலேயர்கள் பரப்பியிருக்கும் பொய்த்தகவல்களை மாற்ற இதைத் தொடங்கி இருக்கிறார்கள் என்பது சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை ஸ்ரீராம். பல தவறான தகவல்களை நம்மிடம் விட்டுச் சென்றிருக்கிறார்கள். கொஞ்சமாவது அவற்றை சரியாக்க இவர்கள் செய்திருக்கும் முயற்சி சிறப்பு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. தேவை இல்லாமல் எதையும் வாங்குவது உங்களுக்குத் பழக்கமில்லை என்கிற வரிகள் எனக்கு நம் வாட்ஸாப் குழுமத்தில் அப்பாஜியின் கேள்வியை நினைவூட்டியது! (அவசரத்தேவை, அவசியத்தேவை எதை முதலில் வாங்குவீர்கள்?!!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவசரத் தேவையா, அவசியத் தேவையா - மூன்றாவதான அத்தியாவசியத் தேவை! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. தங்களால் நாங்களும் அருங்காட்சியகத்தைப் பார்த்தோம்
    பிரமித்தோம்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  5. அருங்காட்சியகப் புகைப்பங்கள் ஸூப்பர் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  6. wow ..wow என்று தான் மனம் கூவியது ஒவ்வொரு படத்தையும் காணும் போது..

    மிக சிறப்பான இடம்...அழகு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா பிரேம்குமார் ஜி.

      நீக்கு
  7. ராணுவ பாரம்பரிய அருங்காட்சியகம் அழகு.
    ஜிமிக்கி பூ என்று சொல்கிறார்கள் ஊட்டியில் ஒரு ஓட்டலில் முதல் முதல் இந்த பூவைப் பார்த்தேன்.
    அழகான படங்கள். கள்ளிச்செடிகள் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  8. //எதையுமே தேவை இல்லாமல் வாங்குவது எனக்குப் பழக்கமில்லை என்பதால் எதுவும் வாங்கவில்லை.//

    நல்ல பழக்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  9. சூப்பர் மிக அழகாக வைத்திருக்கிறார்கள்.. முக்கியமாக எவ்வளவு நீட்டாக இருக்கு.

    அந்த அழகிய பூக்கள்தான் நானும் படம் போட்டிருந்தேன். எங்கள் வீட்டில் உள்ள பியூஸியா:) மலர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

      நீக்கு
    2. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

      நீக்கு
  10. அழகிய புகைப்படங்களும் சிறப்பான‌ தகவல்களும் மிக அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

      நீக்கு
  11. இந்த இடங்களுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்குமானால் இப்பதிவு உபயோகமாகும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  12. தேவதாரு மரம் தேவலோகத்திலிருக்கும் கற்பனையானதுன்னு நினைச்சுட்டு இருந்தேன்ண்ணே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா. மலைப்பகுதிகளில் நிறைய இருக்கின்றன.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  13. துளசிதரன்: உங்கள் முந்தைய பகுதியும் வாசித்துவிட்டேன்..இப்பகுதியும். நல்ல விவரணங்கள் ம்யூஸியம் ரொம்ப அழகாக இருக்கிறது தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம். தொடர்கிறோம்.

    கீதா: வெங்கட்ஜி அன்னால் டே பகுதி சென்றிருக்கிறோம் இந்த அருங்காட்சியகம் உட்பட. வேக் மெமரிஸ்....பல வருடங்கள் ஆகிவிட்டது என்பதால்...நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. படங்கள் அருமை. கேக்டஸ் எல்லாம் வெகு அழகு. அந்தப் பூ ரொம்ப அழகு!!! தொடர்கிறோம் ஜி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி.

      நீக்கு
  14. இதை நிதானமாய் வந்து பார்த்துப் படிக்கணும்."கடமை" இரு முறை அழைத்தாகி விட்டது. பின்னர் வரேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  15. பரம்வீர் சக்ரா வாங்கிய வீரர்களின் சிலைகளும் உண்டா? இந்திய ராணுவத்தைப் பெரிதும் அவமானம் செய்வது தமிழர்கள் மட்டுமே! மற்ற மாநிலங்களில் ராணுவம் ஓரளவுக்குக் கௌரவமாகவே பார்க்கப்படும். அருமையா இருக்கு இந்தப் பூங்கா. என்னிக்காவது ஷிம்லா போனால் பார்க்கலாம். ராணுவக் குடியிருப்புகளிலேயே இருந்த எங்களுக்கு நகரத்துக்கு வந்து அந்தச் சூழ்நிலையோடு ஒத்துப் போவதற்குக் கொஞ்சம் கஷ்டமாவே இருந்தது! :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....