ஷிம்லா ஸ்பெஷல் – பகுதி – 12
இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது
ஓரத்தில் “ஷிம்லா ஸ்பெஷல்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில்
ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!
ஹாதூ பீக், நார்கண்டா, ஹிமாச்சலப் பிரதேசம்
பனிச்சிகரங்கள்...
ஹாதூ பீக், நார்கண்டா, ஹிமாச்சலப் பிரதேசம்
சிகரத்தில் ஒரு புது மணத் தம்பதியர்...
ஹாதூ பீக், நார்கண்டா, ஹிமாச்சலப் பிரதேசம்
ஹாதூ பீக் – ஷிம்லா மாவட்டத்தில்
இருக்கும் உயரமான மலைச்சிகரம் இந்த ஹாதூ பீக். தேவதாரு, பைன், கேதுரு, தளிர்
மரங்கள் நிறைந்த வனப்பகுதிகளுடன் மலைத்தொடர்களும், பனிச்சிகரங்களும் பார்க்கவே
அழகான ஒரு மலைச்சிகரம் இந்த ஹாதூ பீக். அப்படி ஒரு அமைதி அந்த மலைச்சிகரத்தில்.
அப்படி என்ன இருக்கிறது அங்கே என்று சிலர் கேட்கலாம் – அமைதி, அமைதி அப்படி ஒரு
அமைதி – சுற்றிலும் பனிபடர்ந்த மலைகளும், மரங்களும் இருக்கும் அந்த இடத்தில் சில
நிமிடங்கள் இருந்தபோது மனதுக்குள் ஒரு மகிழ்ச்சி. இங்கே ஒரு அழகான கோவிலும் உண்டு –
ஹாதூ மாதா கோவில்! கோவிலின் பிரதான தேவி யார் தெரியுமா – ராவணனின் மனைவியான
மண்டோதரி! இந்தப் பகுதி மக்கள் சிரத்தையுடன் பூஜிக்கும் கோவில் இந்த ஹாதூ மாதா
கோவில்.
குறுகிய பாதையில் ஒரு பயணம் - காணொளி...
நாங்கள் செல்லும்போது எதிரே ஒரு
வாகனம் வர எங்கள் வண்டி பின்னால் வந்து முன்னே சென்றது – இடது பக்கத்தில் பள்ளம் –
இதோ இப்போ விழுந்து விடும் என்று நினைக்கும் அளவு இருந்தது – இருக்கையின் நுனிக்கு
வந்திருந்தேன் நான்! ஓட்டுனர் ரஞ்சித் சிங் என்னைப் பார்த்து புன்னகைத்து, ஒண்ணும்
ஆகாது என்கிறார்! விழுந்தா என் பக்கம் தான் முதலில் விழும் என நினைத்தபடியே நானும்
புன்னகைத்தேன்! அந்த குறுகிய பாதையிலும் அப்படி ஒரு வேகத்தில் வாகனம் செல்கிறது!
பெரும்பாலான வாகன ஓட்டிகள் கீழேயிருந்து வரும்போது ஒரு பகுதி வரை கொண்டு வந்து
விட்டு, மேலே நடந்து போகும்படிச் சொல்லி விடுகிறார்கள். அனுபவசாலிகள் மட்டுமே
இந்தப் பாதையில் மேலும் பயணித்து ஹாதூ மாதா கோவில் வரை வாகனத்தினைச்
செலுத்துகிறார்கள். ரஞ்சித் சிங் கோவில் வரை சென்றார்!
நிறைய வாகன ஓட்டிகள் பயணிகளை
இறக்கிவிட்டு நடந்து போகச் சொல்கிறார்கள் – சுமார் ஒரு கிலோமீட்டர் மலைப்பாதையில்
மேல் நோக்கி நடக்க வேண்டும – இயற்கைக் காட்சிகளை ரசித்தபடியே நடந்து போவதும் ஒரு
வித அனுபவம் தானே. நாங்கள் சென்றபோது ஹிமாச்சல் சுற்றுலாத்துறை ஹாதூ பீக்
பகுதியில் ஒரு கட்டிடம் கட்டிக் கொண்டிருந்தார்கள். அதுவரை சுற்றுலாத் துறையினரின்
எந்தவித நடவடிக்கையும் அங்கே இல்லை. கோவிலும் கோவிலில் இருக்கும் பூஜாரிகள்
மட்டுமே இருக்கிறார்கள் அந்தப் பகுதியில். மிகவும் அழகான கோவில். முற்றிலும்
மரங்களாலேயே கோவில் வெளிப்பகுதி சிற்பங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. கோவில்
நாங்கள் சென்ற போது மூடியிருந்ததால் மண்டோதரியை தரிசிக்க முடியவில்லை.
வெளியிலிருந்தே பார்த்து வர வேண்டியிருந்தது.
இந்தப் பகுதியில் இன்னுமொரு
விசேஷமும் உண்டு! அது தனிக் கதை – பாண்டவர்கள் சம்பந்தப்பட்ட கதை – பாண்டவர்கள் அஞ்ஞாதவாசத்தின்
போது இந்தப் பகுதியில் சில நாட்கள் இருந்தார்கள் என்றும் இங்கே சமைத்துச்
சாப்பிட்டார்கள் என்றும் சொல்கிறார்கள். இப்போதும் இங்கே அந்த அடுப்பு போன்ற
அமைப்பு, ஹாதூ மாதா கோவில் பகுதியில் இருக்கிறது என்றும் சொல்கிறார்கள். நாங்கள் சென்ற
போது கோவில் பூட்டியிருந்ததால் எங்களால் அந்த அமைப்பினைப் பார்க்க முடியவில்லை.
ஆனாலும் கோவில் பகுதியில் இருந்த சிலரிடம் கேட்கவும் தோன்றவில்லை. நாங்கள்
சென்றபோது ஷிம்லாவில் பனிப்பொழிவு இல்லை. ஹாதூ பீக் பகுதியில் முந்தைய நாள்
மாலையில் பனிப்பொழிவு இருந்தது என்று சொல்லி மலைப்பகுதியில் உறைந்து கிடந்த
பனியைக் காண்பித்தார்கள்.
கேரளத்திலிருந்து வந்திருந்த
இரண்டு நண்பர்கள் முதல் முறையாக வடக்கே வந்திருந்தார்கள் – அவர்களுக்கு இந்தப்
பனிப்பொழிவு பார்த்ததிலேயே அவ்வளவு மகிழ்ச்சி. இன்னும் சில நாட்கள் கழித்து இங்கே
வந்திருந்தால் இன்னும் அதிகப் பனிப்பொழிவு பார்த்திருக்கலாம் என்று சொல்லிக்
கொண்டிருந்தோம். ஒரு பகுதியில் நண்பர் பிரமோத் கால் வைக்க, பனியில் சறுக்கி
தடுமாறி விழப்போய் ஒரு வழியாக சமாளித்துக் கொண்டார். ஆனாலும் கொஞ்சம் தோலை
வழட்டிவிட்டிருந்தது! பனிப்பொழிவு அதிகம் இருந்திருந்தால் இங்கே வரை நிச்சயம்
வாகனத்தில் வந்திருக்க முடியாது. நடக்கவும் முடியாது. ரொம்பவே அதிகம் பனிப்பொழிவு
இருக்கும் சமயத்தில் கோவிலும் மூடி விடுவார்கள் என்று தெரிகிறது.
ஹாதூ பீக் – கடல் மட்டத்திலிருந்து
3400 மீட்டர் அதாவது 11152 அடி உயரத்தில் இருக்கிறது இந்த மலைச்சிகரம். ஏற்கனவே
16500 அடி உயரச் சிகரத்திற்கு நான் சென்றிருக்கிறேன் என்றாலும் இங்கே கிடைத்த
அனுபவங்களும் நன்றாகவே இருந்தது. ஹாதூ பீக் பகுதியில் மூன்று பெரிய பாறைகள்
தனித்தனியே நிற்க அதன் அருகே நின்று கொண்டு நிறைய நிழற்படங்கள் எடுத்தோம். சிறிது
நேரம் அங்கே அமர்ந்து அந்த குளிரில் பனிபடர்ந்த சிகரங்களையும் மலைமுகட்டில் இருந்த
மரங்களையும் இயற்கைக் காட்சிகளையும் ரசித்துக் கொண்டிருந்தோம். எவ்வளவு நேரம்
அப்படி அமர்ந்திருப்போம் என்று தெரியவில்லை. அப்படியே அங்கே இன்னும் கொஞ்ச நேரம்
இருக்கலாம் என்றும் தோன்றியது.
இந்த நார்கண்டா பகுதியில் சில
காட்டேஜ்/ரிசார்ட்கள் இருக்கின்றன. ஹாதூ பீக் போன்ற சில மலைச்சிகரங்களுக்கு
ட்ரெக்கிங் வசதிகள் இங்கே இருக்கின்றன. அப்படி இருந்த ஒரு ரிசார்ட் பெயர் –
அஞ்ஞாத் வாஸ்! அங்கேயே சில நிமிடங்கள் இருந்தோம். கேரள நண்பர்கள் இருவரும்
பனித்துகள்களை எடுத்து வீசி விளையாடினார்கள். மலைப்பகுதியில் எங்கெல்லாம் நடக்க
முடியுமோ நடந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு இந்த அனுபவம் புதியது
என்பதால் மிகவும் ரசித்துக் கொண்டிருந்தார்கள். ஷிம்லா நகர் கூட எங்களுக்கு
அவ்வளவாகப் பிடிக்கவில்லை. ஆனால் இந்த இடம் ரொம்பவே அழகு என்று திரும்பத் திரும்ப
சொல்லியதோடு, அங்கிருந்து நகர மனமே இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஒரு
வழியாக அங்கேயிருந்து நடந்த போது வேறு ஒரு குடும்பத்தினர் அங்கே வந்தார்கள் – ஒரு புதுமணத்
தம்பதியும் குடும்பத்தினரும் – அந்தத் தம்பதியினரை ஏற்கனவே இத்தொடரின் முன்னோட்டப்
பதிவில் பார்த்திருக்கிறோம்.
அழகான இடத்திலிருந்து வர மனதே
இல்லாமல் புறப்பட்டு நடந்து வாகனம் நிறுத்தியிருந்த இடத்திற்கு வந்தோம். ஓட்டுனர்
ரஞ்சித் சிங் சுகமான உறக்கத்தில் இருந்தார். அவரை எழுப்பி, மீண்டும் அந்த குறுகிய
மலைவழிப்பாதையில் பயணத்திற்கு தயாரானோம். அங்கிருந்து எங்கே சென்றோம், கிடைத்த
அனுபவங்கள் என்ன என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன். நார்கண்டா, ஹாதூ பீக்
பகுதியில் எடுத்த படங்களில் சிலவற்றை மட்டுமே பகிர்ந்து கொள்ள முடிந்தது. மற்றவை
பிறிதொரு சமயத்தில் பகிர்ந்து கொள்கிறேன்!
பயணம் நல்லது. ஆதலினால் பயணம்
செய்வீர்!
மீண்டும் ச[சி]ந்திப்போம்…
நட்புடன்
வெங்கட்
திருவரங்கத்திலிருந்து...
குட்மார்னிங் வெங்கட்.
பதிலளிநீக்குஉச்சியில் புதுமணத் தம்பதியினரைப் பார்க்க காமாக உள்ளது. "வாராய்... நீ.. வாராய்...!"
ஆமாம்... எப்படி ஏறிப் போயிருப்பார்கள்?!! ஒழுங்கான வழியே இல்லை போலிருக்கே...
ஒழுங்கான வழி இல்லை. பாறையின் நடுவே ஒரு சிறு வழி இருந்தது. அதன் வழியே ஏறிச் சென்று விட்டார்கள்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
சில நிமிடங்கள் அங்கு இருந்தபோது மனதுக்குள் ஒரு மகிழ்ச்சி சரி, சில நாட்கள் இருந்தால்?!!! பாறையில் அமர்ந்திருக்கும் உங்களை படமெடுத்தவர் தன் நிழலைக் கவனிக்க மறந்துவிட்டார்!
பதிலளிநீக்குசில நாட்கள் இருக்கலாம். அதிக நாட்கள் இருப்பது நமக்கு ஒத்து வராது.
நீக்குநிழல் - :))))
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
காணொளி ஓடவில்லை எனக்கு. பாதை பற்றிய நீங்கள் சொல்லி இருப்பதை பார்க்கும்போதும், பனிமலைகளைப் பார்க்கும்போதும் மனதில் தோன்றுவது 'பயங்கரமான அழகு!
பதிலளிநீக்குஅன்றைய தினம் யூட்யூபில் ஏதோ பிரச்சனை. மதியம் தான் சரியானது......
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
காணொலி சர்வர் எரர் என்று காட்டுகிறது ஐயா
பதிலளிநீக்குஒவ்வொரு படமும் அற்புதம்
தங்களால் தாங்கள் கண்ட காட்சியை நாங்களும் கண்டோம்
மண்டோதரிக்கு கோயில்
வியப்பாக இருக்கிறது ஐயா
அன்றைய தினம் யூட்யூபில் ஏதோ பிரச்சனை. மதியம் தான் சரியானது......
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!
காணொளி அசர வைத்தது... அனைத்து படங்களும்...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குபுதுமண தம்பதிக்கு தைரியம் ஜாஸ்திதான். அந்த நுனில இருக்காங்களே!
பதிலளிநீக்குஒரு அசட்டு தைரியம்னு தான் சொல்லணும்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.
காணக்கிடைக்காத காட்சிகளை உங்களால் நாங்கள் காண்கிறோம். அருமை.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.
நீக்குகாட்சிகள் அருமை. சில்லென்ற அமைதியான இடங்கள்....
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
நீக்கு