திங்கள், 5 ஜூலை, 2021

வாசிப்பனுபவம் - வானத்திலிருந்து விழுந்த புத்தகம்



அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கடந்து வந்த பாதை பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


வாழ்வின் வலிகளைக் கண்டு வருந்தினால், நல்ல வழிகள் நமக்குத் தெரியாமலேயே போகும்! எல்லாம் சில காலம் தான். அனைத்தும் நிச்சயம் மாறும்!


******





சஹானா இணைய இதழின் வாசிப்புப் போட்டிக்காக நான் படித்த ஒரு மின்னூல் மரு. இராஜேஷ் இராமு அவர்கள் எழுதிய “வானத்திலிருந்து விழுந்த புத்தகம்” எனும் கவிதைத் தொகுப்பு!  அந்த மின்னூல் குறித்து இன்றைய பதிவில் பார்க்கலாம் வாருங்கள்! 


வெளியீடு: அமேசான் கிண்டில்

பக்கங்கள்: 159

விலை: ரூபாய் 69/-

மின்னூல் தரவிறக்கம் செய்ய சுட்டி கீழே:


வானத்திலிருந்து விழுந்த புத்தகம் (Tamil Edition) eBook: Ramu, Rajesh


பள்ளிப் பருவத்திலிருந்தே கவிதைகள் மீது தனி விருப்பம் தனக்கு உண்டு என்று முன்னுரையில் சொல்லும் ஆசிரியர் மேலும் இப்படிச் சொல்கிறார் - “நமக்கென ஒரு தனித்துவத்தை, சுயத்தை அடைவதற்கு ஒரு மிகப் பெரிய முதிர்ச்சி தேவைப்படுகிறது.  இந்தச் சுயத்தை நோக்கிய தேடலின் துவக்கமாக இது வரை நான் எழுதி வைத்திருந்த சில கவிதைகளைத் தொகுத்து ஒரு மின்னூலாக வெளியிடுகிறேன்!”.  இந்த கவிதைத் தொகுப்பு நல்லதொரு முயற்சி. பரந்துபட்ட பல விஷயங்களை கவிதைகள் வழி சொல்ல முயற்சி செய்திருக்கும் இவருக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும். 


கிராமத்து வாழ்க்கை பற்றிய கவிதையில் சொல்லி இருக்கும் புளியமரம் எனது நெய்வேலி நினைவுகளை மீட்டெடுக்க உதவியது.  அதே கவிதையில், கருவை மர உச்சியில் இருக்கும் தேன்கூடு பற்றிச் சொல்லும்போது “நத்தைக்குத் தேன் பிடிக்குமா? பிறகெதற்கு இவை ஓடாய்க் காய்ந்து கிடக்கிறது!  மரத் தண்டுகளில் ஏறித் தோற்றபடி…?” என்று கேள்வி எழுப்புவது நல்லதொரு ரசனை. 


ஒவ்வொரு கவிதையிலும் ஒரு சிறப்பான செய்தியையும் சொல்லும் இவரது பாணி நன்று.  ”பட்டாம்பூச்சி வளர்க்கும் அப்பா” என்ற கவிதையும் அந்த ரகம் தான்.  மகளுக்கும் தந்தைக்கும் இடையேயான சம்பாஷணைகளில் அந்த தந்தை மகளுக்காகச் செய்யும் தியாகம் - சிறிதெனிலும் பெரிய விஷயம். ஒரு தந்தையாக உணர்ந்து கொள்ளக் கூடிய விஷயம் அது. 


சாலை மார்க்கமாக…” என்ற கவிதையில், “நல்ல நினைவுகளை மறக்க மறுத்துச் சுமந்து திரிவது போலவே, முந்தா நாள் மழையை இன்னும் சுமந்து நிற்கிறது சாலைக் குழிகள்” என்ற எடுத்துக்காட்டு மிகச் சிறப்பு.


அதே கவிதையில் “நின்று போன மழையின் ஈரத்தைத் தேடி, மணலைச் சுரண்டி குழியாக்கி படுத்துக் கொள்கிறது தெருநாய் ஒன்று; அந்தச் சுகம் கோடி ரூபாய் ஆண்டு வருமானம் கொண்டவனுக்கும் கிடைத்திருக்காது.  இந்த மனிதன் எதற்குத் தான் இப்படி நாய்ப்பாடு படுகிறான் என நொடிப்பார்வையில் எனைக் கேட்டுத் திரும்புகிறது அந்நாய்” என்று சொல்வது அர்த்தமுள்ள கவிதை.  எதையோ தேடி ஓடிக்கொண்டே இருக்கும் நபர்கள் எத்தனை எத்தனை பேர்!


கண்ணாடித் தாத்தா, தீபாவளி பலகாரம், பூனைக்குட்டி, புத்தனாகிறேன் என ஒவ்வொரு கவிதை வழியேயும் சொல்ல வருகின்ற விஷயங்கள் அனைத்தும் சிறப்பு.  “சமூகத்தின் அங்கங்க” என்ற தலைப்பிட்ட கவிதையில், ஆற்றங்கரையில் துணி துவைக்கும் பெண்மணி பற்றிச் சொல்லும்போது “உப்புச் சோப்பு படிந்துப் படிந்து சொரசொரத்துப் போன உள்ளங்கையூடே தப்பித்து ஓடும் ரேகைகள்” என்று சொல்லும்போது அந்தக் கைகள் நம் கண் முன்னே தெரிவது போல இருக்கிறது.  இப்படி ஒவ்வொரு கவிதை வழியே அவர் சொன்ன விஷயங்கள் நன்றாகவே இருக்கின்றன.  சில குறைகள் இருந்தாலும் நல்லவை மட்டுமே அதிகம் என்று சொல்ல வேண்டும்.  எனக்குக் குறை என மனதில் பட்டதையும் சொல்லி விடுவதே நல்லது!


“பிழைகளுடன் கவிதை எழுதாதே என தமிழ் தெரிந்த நண்பர்கள் பலர் கோபித்துக் கொள்ளத் தான் செய்கிறார்கள்.  எனக்கும் பிழையுடன் கவிதை எழுதக் கூச்சம் தான். ஆனால் கவிதை எழுதாமல் இருக்க அதைவிடக் கூச்சம். முடிந்தவரை இந்தத் தொகுப்பில் பிழைகளை நீக்கியிருக்கிறேன் என நினைக்கிறேன்” என்று முன்னுரையில் சொல்லி இருந்தாலும் நீக்காத பிழைகள் நிறையவே உண்டு! நண்பர் நீச்சல்காரன் அவர்களின் “வாணி” போன்ற பிழை திருத்திகளை பயன்படுத்துவது நல்லது.  போலவே மின்னூலில் காணும் இன்னுமொரு குறை - கவிதைகளில் சில வரிகள் வண்ணங்களில் இருப்பது - கிண்டில் கருவிகளில் படிக்கும்போது அவை கருப்பு வெள்ளையில் படிக்கும்போது கடினமாக இருக்கும்.  முடிந்தால் இவற்றை வரும் மின்னூல்களில் கருப்பு வண்ணத்திலேயே இருக்கும்படிச் செய்வது நல்லது - தனியாகக் காட்ட Bold எழுத்துகளை கையாளலாம்.  குறை என்று சொல்லவில்லை - இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணத்தினைப் பகிர்ந்து கொள்கிறேன் - அவ்வளவே!


மருத்துவர் இராஜேஷ் இராமு அவர்கள் மேலும் பல மின்னூல்களை வெளியிட மனம் நிறைந்த வாழ்த்துகள்.  தொடரட்டும் அவரது சிறப்பான கவிதைகள். 


நண்பர்களே, இந்த வாரத்தின் வாசிப்பனுபவம் குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டம் வாயிலாகத் தெரிவிக்கலாமே! நாளை வேறொரு பதிவின் வழி உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து...



18 கருத்துகள்:

  1. ​ரசனையான வரிகளைக்கொண்ட கவிதைகளை பகிர்ந்து அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள். குறைகளையும் மென்மையாகச் சுட்டிக் காட்டி இருப்பது சிறப்பு. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசிப்பனுபவம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. நூலை படிக்க ஆர்வத்தைத் தூண்டும் விமர்சனம்.
    மேற்கோள் காட்டிய கவிதைகள் அறுமை.
    விரைவில் வாசிக்கிறோம்.
    மிக்க நன்றி சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது வாசியுங்கள் அரவிந்த்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. ஆவலைத் தூண்டும் விமர்சனம் ஜி
    ஆசிரியருக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      நீக்கு
  5. வரிகள் அருமை... எப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்பதும் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. வாசிப்பு அனுபவம் அருமை. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசிப்பனுபவம் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி நாகேந்திர பாரதி ஜி.

      நீக்கு
  7. மருத்துவர் ஒரு நல்ல கவிஞராக மாறியிருப்பதற்கு அவரது கவிதை வரிகளே சான்று! தங்களது நூல் விமர்சனம் அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசிப்பனுபவம் தங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மனோம்மா.

      நீக்கு
  8. நூலினை வாசிக்கத் தூண்டும் அறிமுகம்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    இன்றைய வாசகம் அருமை. கவிதை நூலைப்பற்றி தங்கள் விமர்சனமும் நன்றாக இருக்கிறது. இதில் வந்த கவிதைகள் படிக்கும் போது சிறப்பாக இருக்கின்றன. நூலை மின்னூலாக வெளியிட்ட எழுத்தாளருக்கும் வாழ்த்துகள். அதை அழகாக விமர்சித்த தங்களுக்கும் பாராட்டுகள். பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      வாசகமும் பதிவின் வழி சொன்ன விஷயங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....