அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
பணம் ஆறாம் அறிவு போன்றது; அதில்லாமல் நீங்கள் மற்ற ஐந்து அறிவுகளையும் பயன்படுத்தமுடியாது - பெர்னாட்ஷா.
******
தில்லி நண்பர் சுப்ரமணியன் அவர்களது எழுத்தில் கடந்து வந்த பாதை தொடரின் முந்தைய பகுதிகளை நீங்கள் படித்திருக்கலாம்! படிக்காதவர்கள் வசதிக்காக முந்தைய பகுதிகளின் சுட்டிகளை கீழே இணைத்திருக்கிறேன். படித்து விடுங்களேன்!
கடந்து வந்த பாதை - பகுதி ஒன்று பகுதி இரண்டு பகுதி மூன்று
பகுதி நான்கு பகுதி ஐந்து பகுதி ஆறு பகுதி ஏழு பகுதி எட்டு
பகுதி ஒன்பது பகுதி பத்து பகுதி பதினொன்று
பகுதி பன்னிரெண்டு பகுதி பதிமூன்று
வாருங்கள் நண்பர் கடந்து வந்த பாதையை, தொடர்ந்து அவரது வார்த்தைகளில் படிப்போம் - நட்புடன் - வெங்கட் நாகராஜ்.
******
கடந்து வந்த பாதை - சுப்ரமணியன்
அன்பிற்கினிய நண்பர்களே, தீநுண்மி இன்னும் இந்தியாவைத் தீண்டிக் கொண்டிருப்பதால், எச்சரிக்கையாக இருப்போம். வருமுன் காப்போம்… வளமாய் வாழ்வோம். MASK FIRST SHOE NEXT!
சென்ற பகுதியை முடிக்கும் போது “டம்ளரின் விளிம்புகளில் சாயமிருந்தால்” அது மகளிரின் டம்ளராக இருக்கும். இதை ஒரு வாரம் கூர்ந்து (!) கவனித்து ஆராய்ச்சி செய்தேன் என்று சொல்லி இருந்தேன். அந்த ஆராய்ச்சி என்ன என்பதை பார்க்கலாம் வாருங்கள்!
முடிவைக் கூறுகிறேன். மகளிர் தயை கூர்ந்து மன்னிதருள்க! இது எனது தாழ்ந்த கருத்து மட்டுமே. பன்முகப்படுத்தலோ வேறு பிற காழ்ப்புணர்வுகளோ கிடையாது. என்னடா நெம்ப லெந்த்தா பீடிகை போடறானேன்னு எண்ண வேண்டாம். நான் அன்றைய தினங்களில் அலுவலகங்களில் நிறைய மகளிர் செய்தது இது தான். அவர்கள் - அதாங்க, நான் ஆராய்ந்த மகளிர் ஒரு பெரும் நிறை மாத கர்ப்பிணி போல ஒரு மகளிர் கைப்பை, உணவு மற்றும் பழம், கொறியல்ஸுக்கு ஒரு பை, அலுவலக அடிவாரங்களில் உள்ள கூட்டுறவு கடைகளில் சகட்டு மேனிக்கு வாங்கித் திணிக்க ஒரு பை என வருவார்கள்.
அவர்கள் சுமார் அதிகாலை பத்தரை (10 ½) மணிக்கு அலுவலகம் வந்து சேர்வார்கள். அனைத்து பைகளையும் வைத்துவிட்டு, சாய அடையாளம் கொண்ட கண்ணாடி தம்ளரை எடுத்துக் கொண்டு இயற்கை உபாதை தீர்ப்பு அறை நோக்கி படையெடுப்பர். ஏதோ மகளிர் பேரணி/ஆர்ப்பாட்டம் போல ரகளையுடன் ஒரு டம்ளர் குடிநீருடன் (ஆங்காங்கே குளிர் குடிநீர் இயந்திரங்கள் உண்டு. அதிலிருந்து எடுத்து வருவர்) வருவார்கள். இருக்கையில் அமர்ந்ததும் மகளிர் கைப்பை பிரசவித்து விடும்! எழுது பொருள், தேவையிருப்போரின் கண் கண்ணாடி, சீப்பு, முகம் பார்க்கும் கண்ணாடி இன்ன பிற கைப்பையிலிருந்து பிரசவிக்கும்.
தலையைக் கோதிவிட்டு, ஒரு சாயக்குப்பியைத் திறந்து அதில் மூடியுடன் கூடிய துடைப்பம் போன்ற பகுதியை உள்ளே திணித்து எடுத்து, இடது கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரலால் உதட்டை பிடித்து, சாலையில் தாருக்கு மேல் அடிக்கும் வெள்ளை மஞ்சள் கோடுகளைப் போல வலது கையால் துடைப்பத்தை உதட்டின் தேய்ப்பர். இரு உதடுகளுக்கும் பூச்சு முடிந்ததும் விரல்களில் ஒட்டியுள்ள சாயத்தை காகிதத்தால் துடைத்து குப்பையில் போடுவர். பின்னரே நீர் பருகுவார்கள். இதனால் அவர்களது டம்ளர்களில் கமலஹாசனின் காதல் சின்னமான சாய உதடுகள் தினந்தோறும் ஒட்டும்.
இந்தக் காட்சிகள் எல்லாம் நான் மறைந்திருந்து பார்த்ததில்லை! அனைவர் முன்பும் இந்தக் காட்சிகள் அனுதினமும் அரங்கேறும் அழகுக் கலைகள் தான். அதன் பின்னர் கூட்டமாய் உணவகம் சென்று தேநீர் அருந்தி வருவார்கள். மதிய இடைவேளையாய் தாரளமாக இரண்டு மணி நேரம் வரை எடுத்துக் கொள்வார்கள். மாலை தேநீருக்குப் பின்னர் அனைத்தும் மூட்டை கட்டும் படலம். இடையில் கீழே கடைகளில் “ஸ்கீம் க்யா ஹே?” என்று கேட்டுக் கொண்டே நுழைவார்கள். அதாவது “தள்ளுபடித்திட்டங்கள் என்ன இருக்கிறது?” என்ற கேள்வி தான் அது. கடைக்காரர் சொன்ன மாத்திரத்தில் அது என்னவாக இருந்தாலும் வாங்கப்படும். ஆண் நண்பர்களுடன் நாங்களும் மதிய உணவிற்குப் பின்னர் ஒரு சிறுநடை பயில்வோம். அப்போது கண்ட விந்தை இது.
சரி அடுத்து அலுவலகத்தில் சில ஆண்களின் அலப்பறைகள் குறித்து பார்க்கலாம். என்னடா மகளிரின் செய்கைகளை விலாவரியாகக் கூறிவிட்டு ஆண்களை விட்டுவிட்டானே என எண்ண வேண்டாம். காரணம் குளிர் காலம் வந்த பின்பு தான் தெரிந்தது வட இந்தியாவில் ஆண்களின் அட்டகாசங்கள். ஆண்களில் பலர் அதற்கென்றே வடிவமைத்தது போல ஒரு சிறிய கைப்பெட்டி (Brief Case) வைத்திருப்பார்கள். திறந்தால் (ஒரு படத்தில் வடிவேலுவிடம் தரப்படும் நாவிதர் பெட்டி போல) சில பல காகிதங்கள், நாளிதழ் ஒன்று, பேனா, பென்சில், ஒரு சிறு டப்பாவில் சப்ஜி, சாப்பாட்டு மூட்டை (துணியில் சுற்றப்பட்ட ரொட்டி) இவையே இருக்கும். ஒரு கோப்பை (File) திறந்து அதன் மேல் கண்ணாடி உருண்டை (Glass Paper Weight) ஒன்றை வைப்பார்கள்.
அதன் பின்னர் தட்டச்சு இயந்திரத்தில் இரண்டு தாள்களை உள்ளனுப்பி அமைச்சகம் மற்றும் பிரிவு/துறை/பகுதி பெயர்களை அடித்து, தேதியைக் குறிப்பிட்டு அலுவலக குறிப்பாணை/நினைவுக் குறிப்பு (Office Memorandum) என பிரதான எழுதுகளில் அடிக்கோடிட்டு (Capital Letters, Underlined) தட்டச்சு செய்வார்கள். அதன் பிறகு சில/பல மணி நேரம் காணாமல் போய்விடுவார்கள். கேட்டால், நான் நேரத்திற்கே வந்து பணிகளை துவக்கிவிட்டு தான் சென்றேன் என்று இறுமாப்புடன் கூறுவார்கள். ஆண்டவா… என்னே அவர்களது கடமை உணர்வு!
அடுத்து குளிர் காலம் வந்ததும் கடைநிலை ஊழியர் முதல் அதிகாரி வரை அனைவரும் கோட் (Coat) அணிந்து வருவார்கள். அந்நாளில் அலுவலக வாயிலில் கிடைக்கும் ஐம்பது ரூபாய் கோட் வாங்கி அணிந்து வருவார்கள். இது தெரியாத நானோ, “என்னடா இது திடீரென்று இவ்வளவு அதிகாரிகளா?” என வியந்தேன். சற்று நேரத்தில் கோட் பாக்கெட்டுக்குள் கைவிட்டு சர்வ சாதாரணமாய் விலை மலிவு புகைப்பான்களை (பீடிகளை) வலிக்க (புகைக்க துவங்குவார்கள். பிறகு தான் எனக்குப் புரிந்தது, அவர் எல்லோரும் குளிர் நாட்களில் வலம் வரும் கடை நிலை “அதிகாரிகள்” என்று. அந்த கோட் குளிர் தாங்காது என்றாலும் போட்டுக் கொண்டு உள்ளே ஸ்வெட்டர் போட்டுக் கொள்வார்கள். நான் என் திருமணத்திற்காக ஒரே ஒரு கோட் தைத்தேன். அதனை சில வருடங்கள் வரை ஒவ்வொரு ஆங்கிலப் புத்தாண்டன்றும் அணிந்து சென்றேன் - அத்தோடு சரி!
அது தவிர பெரும்பாலான வட இந்திய ஊழியர்கள் எந்த ஒரு வேலையையும் ஒத்துக் கொள்ள தயாராக இருப்பதே இல்லை. எந்தப் பணி கொடுக்கப்பட்டாலும் “ஏ மேரா காம் நஹி ஹே” (இது எனது பணி அல்ல!) என்றே நிர்தாட்சண்யமாக கூறி விடுவார்கள். பிரிவுத் தலைவர்கள் (Section Officer) இவர்களிடம் மன்றாடியபடியே தலைவலியுடன் அலைவார்கள்.
அடுத்த பகுதியில் மேலும் சில பல ஸ்வாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொள்வேன். தொடர்ந்து கடந்து வந்த பாதையில் பயணிப்போம்.
நட்புடன்
சுப்ரமணியன்
புது தில்லி
******
நண்பர்களே, இந்த நாளில் வெளியிட்ட, நண்பரின் கடந்து வந்த பாதை பதிவு குறித்த உங்கள் கருத்துகளை, பின்னூட்டம் வாயிலாகச் சொல்லுங்களேன். மீண்டும் வேறொரு பதிவு வழி உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லியிலிருந்து...
இன்றைய பகுதி வெகு சுவாரஸ்யம். நல்ல அவதானிப்பு!
பதிலளிநீக்குபதிவு பிடித்திருந்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
//கமலஹாசனின் காதல் சின்னமான சாய உதடுகள்//
பதிலளிநீக்குஹா... ஹா... ஹா... மிகவும் இரசித்தேன் நண்பரே...
பதிவு ரசிக்கும்படி இருந்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
சுவாரசியமான தகவல்கள்...
பதிலளிநீக்குதகவல்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அனுபவ பகிர்வு அருமை.நன்றாக சொல்லி வருகிறார்.
பதிலளிநீக்குபதிவின் வழி சொன்ன விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ஹா ஹா... பதிவில் நகைச்சுவை.....
பதிலளிநீக்குஅது சரி... அலுவலகத்தில் அப்போ, யார்தான் வேலை செய்வாங்க?
பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.
நீக்குயார் தான் வேலை செய்வாங்க? - அதான் இருக்கவே இருக்கிறார்களே - மற்ற மாநிலத்தவர்கள் - குறிப்பாக தென்னிந்தியர்கள்! அவர்கள் நிறைய வேலை செய்வார்கள்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
சுவாரசியமாக எழுதுகிறார்.
பதிலளிநீக்குபொருப்பிலிருந்து நழுவுபவர்கள் இன்றும் ஏறாளமாக இருக்கிறார்கள்.
பொறுப்பிலிருந்து நழுவுபவர்கள் - அதிகமாகவே இருக்கிறார்கள் அரவிந்த். அடிக்கடி இப்படியானவர்களை சந்திக்கிறேன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. உங்கள் நண்பரின் எழுத்துகளில் அவரது கட்டுரை சுவாரஸ்யமாக செல்கிறது. பல இடங்களில் நகைச்சுவையுடன் உள்ளதை நிறையவே ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.
நீக்குபதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அலுவலகத்தில் நடப்பதை வேதனையோடு பகிர்ந்தவிதம் சிறப்பு. இத்தகைய சோதனைகளை நான் அலுவலகத்தில் அனுபவித்துள்ளேன். அலுவலகம் வருவோரில் சிலரே பணிக்கு முக்கியத்துவம் தருகின்றனர். மதிக்கின்றனர்.
பதிலளிநீக்குதங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நீங்கள் வர்ணித்திருப்பது அந்த கால அரசு அலுவலகங்களாக இருக்கலாம், இப்பொதெல்லாம் ஆப்பு வைத்து விட்டார்கள் என்ரு கேள்வி.
பதிலளிநீக்குஎந்தக் காலமாக இருந்தாலும் இப்படியானவர்கள் உண்டு. தற்போது அத்தகைய அலுவலர்கள் குறைவு என்பதே உண்மை பானும்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அலுவலங்களின் நேர்முக வர்ணனை பிரமாதம்
பதிலளிநீக்குபதிவின் வழி சொன்ன விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி இராமசாமி ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வெங்கட் சொல்லி இருப்பது உண்மைதான்.
பதிலளிநீக்குஅங்கே பணிபுரிகிற மெட்ராஸி கள் நன்றாக
உழைப்பாளர்கள். இது அப்பட்டமான
அந்த நாளைய உண்மை.
திரு சுப்ரமணியம் சொல்வதைப் பார்த்தால் 70கள் எண்பதுகளிலும் இதைப்
போலவே இருந்ததைக் கணிக்க முடிகிறது.
நீங்களும் அதையே இப்போதும் உணர்ந்திருப்பீர்கள்.
மாமா எனக்கு வாரம் ஒரு கடிதம் அனுப்புவார்.
அலுவலக வேலைகள் பற்றியும்
நிறைய அனுபவங்கள் இருக்கும்.
என் எழுத்து வலிமை பெற வேண்டும் என்பதற்காகவே
எழுதச் சொல்வார்.
திரு.சுப்ரமணியமும்
நல்ல தமிழில் எழுதுகிறார்.
சுவையான அனுபவங்கள். வாழ்த்துகள் மா.அவரிடம் சொல்லவும்.
உழைப்பவர்கள் மட்டுமே உழைத்துக் கொண்டிருக்க, மற்றவர்கள் உழைப்பில் குளிர் காய்பவர்கள் இப்போதும் இருக்கிறார்கள் - எப்போதும் இருப்பார்கள்.
நீக்குபதிவு குறித்த உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி வல்லிம்மா.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ரசித்தேன் ஐயா
பதிலளிநீக்குபதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நகைச்சுவையாக தந்துள்ளார்.
பதிலளிநீக்குபதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.