சனி, 24 ஜூலை, 2021

காஃபி வித் கிட்டு-120 - கடவுள் இருக்கிறாரா - ஹாண்ட்வோ - தொல்லைகள் - கலாப்ரியா - நம்பிக்கை - விடை - லூ


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட வாடகை சைக்கிள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


வென்றவனுக்கும் தோற்றவனுக்கும் வரலாறு உண்டு. வேடிக்கை பார்த்தவனுக்கும் விமர்சனம் செய்தவனுக்கும் வாழ்க்கை புத்தகத்தில் ஒரு வரி கூட கிடையாது!


******


இந்த வாரத்தின் உணவு - ஹாண்ட்வோ





சுரைக்காய் வைத்து செய்யப்படும் ஒரு உடனடி உணவு. இந்த ஹாண்ட்வோ.  குஜராத் மாநிலத்தில் பிரபலம் இந்த உணவு.  மோர், துருவிய சுரைக்காய், சில பல பருப்புகள், மிளகாய் என சில பொருட்களை வைத்து செய்யப்படும் உணவு இது.  விருப்பமிருப்பவர்கள் இந்தத் தளத்திலும் கூகிள் வழி தேடி மற்ற தளங்களிலும் பார்த்து, செய்ய விருப்பம் இருந்தால் செய்து சுவைக்கலாம்! 


******


இந்த வாரத்தின் எண்ணம் - அலைபேசி அழைப்பு: 


அலுவலகத்தில் எங்களுக்கென அலைபேசி இணைப்புகள் கொடுப்பதில்லை. இருப்பது எங்களுடைய தனிப்பட்ட அலைபேசி/தொடர்பு எண்.  அலுவலகத்தில் இருப்பவர்கள் எங்களைத் தொடர்பு கொள்ள இந்த அலைபேசி எண்ணைப் பயன்படுத்தினாலும், வெளி நபர்களுக்கு/பொது மக்களுக்கு, அலுவலக சம்பந்தமாக பேச அலைபேசி எண்ணைத் தரக்கூடாது என்பது ஒரு எழுதக்கூடாத ஒப்பந்தம்.  ஆனால் சில நபர்கள் வெளி நபர்களுக்கு/பொது மக்களுக்கு அலைபேசி எண்ணைத் தந்துவிட அவர்கள் தங்களது வேலைகளுக்காக தொடர்ந்து தொந்தரவு செய்வது நடக்கிறது.  சமீபத்தில் ஒரு மனிதர் தொடர்ந்து இப்படி அழைத்து என்னை மிகவும் அவதிக்குள்ளாக்கினார்.  இத்தனைக்கும் எனது வேலையை வந்த சில நிமிடங்களில் முடித்து விடுகிறேன். அரசு அலுவலகங்களில் எல்லா வேலைகளுக்கும் சில நடைமுறைகள் இருக்கிறது. அதை எல்லாம் செய்து முடித்த பிறகு சம்பந்தப்பட்டவரின் வேலையை முழுவதாக முடிக்க முடியும்.  எனது தொடர்பு எண்ணைக் கொடுத்த நபரிடம் கேட்க, “என்னைத் தொடர்பு கொள்ள, என் எண்ணை வேறொருவர் கொடுத்தார்! அதனால் நான் உனது தொடர்பு எண்ணைக் கொடுத்தேன்” என்கிறார்! 


******


இந்த வாரத்தின் பின்னோக்கிப் பார்க்கலாம் பதிவு - கடவுள் இருக்கிறாரா?:


2015-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - ஃப்ரூட் சாலட் – 139 – கடவுள் இருக்கிறாரா? – பல்பு - படிப்பு


பதிவிலிருந்து சில வரிகள் இங்கே! முழு பதிவினையும் படிக்க, மேலே உள்ள சுட்டியைச் சொடுக்கலாம்!


“அப்பா, நம் வாகனத்தினை அந்த வாகனம் முந்திச் செல்கிறது. நீங்களும் வேகமாக ஓட்டி, அந்த வாகனத்தை முந்திச் செல்லுங்கள்” என்று சொல்ல, தந்தை சொன்னார், மகனே “நம் வாகனம் அந்த வாகனத்தினை முந்திச் செல்வது கடினம்.”


மகனும் ஒன்றும் சொல்லாமல் இருந்தான். மீண்டும் வேறொரு வாகனம் இவர்களை முந்திச்செல்ல, மகன் பொறுமை இழந்து அப்பா வேகமா ஓட்டுங்கப்பா....  ஒவ்வொருத்தரா நம்மை விட வேகமா போறாங்க!” என்று சொல்ல, தந்தை கோபத்துடன் சொன்னார் – “நமக்கு முன்னால் வேகமாக போகும் வாகனங்களை மட்டும் பார்க்கறியே, நமக்கு பின்னாடி கூட தான் நிறைய வண்டி வருது! இன்னும் வேகமா ஓட்டினா, நம்ம வண்டி கெட்டுப் போயிடும்”.


இது கேட்டவுடன் மகன் சொன்னான், “அப்பா, நீங்க கூட தான் என் வகுப்பில் என்னை விட அதிக மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களைப் போலவே என்னையும் மதிப்பெண் எடுக்க கட்டாயப்படுத்தறீங்க, என்னை விட குறைவாக மதிப்பெண் எடுப்பவர்களோட என்னை ஒப்பீடு செய்யலையே...  என்னை விட புத்திசாலிகளுடன் ஒப்பீடு செய்து அவங்களைப் போல நானும் மதிப்பெண் எடுக்கணும் சொல்றீங்களே!” அது மட்டும் சரியா?


******


இந்த வாரத்தின் வாட்ஸப் நிலைத்தகவல் - நம்பிக்கை





எதை இழந்தாலும் நம்பிக்கையை மட்டும் இழக்கக் கூடாது என்று சொல்வதுண்டு.  மேலே இருக்கும் படம் அதனையே சொல்கிறது இல்லையா?.  


******


இந்த வாரத்தின் வாசிப்பு   - மாக்காளை - கலாப்ரியா:


BYNGE APP வழி சில தொடர்களை படித்து வருவது முன்பும் சொல்லி இருந்தேன்.  அந்த வரிசையில் தற்போது கலாப்ரியா அவர்களின் மாக்காளை எனும் தொடரை படித்து வருகிறேன். நெல்லை வட்டார மொழியில் படிக்க ஸ்வாரஸ்யமாகச் செல்கிறது அவரது தொடர்.  இந்த செயலி இருப்பவர்கள், விரும்பினால் இந்தத் தொடரையும் படிக்கலாமே! 


******


இந்த வாரத்தின் சிறுகதை   - விடை


பிறகு அப்படியே அந்தச் சுனையில் நடந்து நீர்விழுச்சியில் உள்ளே செல்லச் சொன்னார்கள். உள்ளே நீர்த் திரை விலகிய இடத்தில் ஒரு குகை வாயில் தெரிந்தது. தயங்கிய படி அந்தக் குகைக்குள் சென்றார்கள். உள்ளே இருட்டாக இருந்தது, எங்கிருந்தோ மெல்லிய வெளிச்சம் கசிந்து வந்தது. அருவியின் ஓசை உருவமற்றுக் கேட்டது. முதலில் குகை குறுகலாக இருந்தாலும், செல்லச் செல்ல விரிந்தது. சற்று உள்ளே சென்றபின் ஒரு பெரிய கூடம் மாதிரியான இடம் வந்தது. அங்கே சூரியக் கதிர்கள் ஒரு சில இடங்களில் விழுந்து ஒரு மாய உலகத்தை உருவாக்கின.


சொல்வனம் இணைய இதழை அவ்வப்போது வாசிப்பது வழக்கம். சில நல்ல சிறுகதைகள், கவிதைகள் போன்றவற்றை அங்கே படிக்க முடிகிறது என்பது முதலும் முடிவுமான காரணம்.  கருணாதித்தன் என்பவர் எழுதிய விடை எனும் கதையைச் சமீபத்தில் படித்தேன். மேலே உள்ள வரிகள் அக்கதையிலிருந்து தான். நண்பர் அப்பாதுரைக்கு இந்த கதை பிடிக்கலாம்! மற்றவர்களுக்கும் பிடிக்கலாம்! நன்றாகவே இருக்கிறது கதை. படித்துப் பாருங்களேன். 


******


இந்த வாரத்தின் தில்லி தகவல் - லூ எனும் அனல் காற்று: 


தலைநகர் தில்லியின் கடும் கோடையிலிருந்து சில நாட்கள் தப்பித்தாலும், தற்போது வீசிக்கொண்டிருக்கும் “லூ” எனும் அனல் காற்றின் கொடுமையை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். மாலை ஆறு மணிக்கு அலுவலகத்திலிருந்து புறப்பட்டாலும், அடிக்கும் அனல் காற்று காது வழி உள்ளே போக, காது வலிப்பதுபோன்ற ஒரு உணர்வு.  முகத்தில் அனல் காற்று அடிக்கும்போது ஜிவ்வென்று ஒரு எரிச்சல்!  கொடுமையாக இருக்கிறது.  ஒரு ஏசிப் பெட்டியை/உடுப்பை உடலுடன் இணைத்து வைக்க வேண்டும் போலிருக்கிறது! என்ன இருந்தாலும் அனுபவித்தே ஆக வேண்டிய விஷயம் இந்த கோடையும் குளிரும்! வேறு வழியில்லை! 



******


நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்கள் எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக பகிர்ந்து கொள்ளுங்கள்.  நாளை வேறொரு பதிவுடன் உங்களைச் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…


18 கருத்துகள்:

  1. நமது வேலைகளில் தொந்தரவு செய்பவர்கள் சம்பந்தப்பட்ட மக்கள் மட்டும் என்றாலும் பரவாயில்லை.  நம் துறையோடு கொஞ்சமாக சம்பந்தப்பட்ட இன்னொரு துறையும் விவரம் தெரியாமல் கேள்விகள் கேட்கும் அனுபவம் எனக்கு உண்டு!  

    காரோட்டும் தண்டபிஹைக்கும் பிள்ளைகளுக்குமான உரையாடல் புன்னகைக்க வைத்தது.  வாட்சாப் படம் ஏற்கெனவே பார்த்து எழுந்தது.  மறுபடி நெகிழ வைத்தது.

    அந்த மொபைல் ஆப்பில் இணைந்திருக்கிறேன் என்றாலும் அதில் எதுவும் படிக்கச் ஓடவில்லை!

    விடை பின்னர் படிக்கவேண்டும்.  லிங்க் எடுத்து வைத்துக் கொள்கிறேன்.  

    சென்னை இப்போது குளிர்ந்திருக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. இன்றைய பதிவை ரசித்தேன். உணவை ரசிப்பேன்னு தோன்றவில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.

      உணவு - எல்லோராலும் ரசிக்க முடியாது தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    இன்றைய காஃபி வித் கிட்டு எப்போதும் போல் நன்றாக உள்ளது.

    உணவு.. சுரைக்காய் இதுவரை உணவில் சேர்த்தே இல்லை.

    அலைபேசி பேச்சுக்கள் தர்ம சங்கடந்தான். இப்படியெல்லாம் கூடவா பிறரை தொந்தரவு செய்து சந்தோஷப்படுகிறார்கள். வேதனைதான்..

    ப்ரூட் சால்ட் படித்து வந்தேன். அருமையாக உள்ளது. அதில் படித்ததில் பிடித்தாக வந்த பகுதியில் தந்தை மகன் படிப்பு பற்றி பேசும் பேச்சுக்கள் சிந்திக்க வைத்தது.

    நெகிழ்ச்சியூட்டும்படியான வாட்சப் புகைப்படம் நன்றாக உள்ளது நம்பிக்கைதானே எல்லோருக்கும் வாழ்வின் அச்சு.

    சிறுகதைகளை பிறகு கண்டிப்பாக படிக்கிறேன். தில்லியில் அனல் காற்றா? இங்கு ஒரே மழை, குளிர். ஒரே தேசத்தில் இயற்கையில்தான் எத்தனை வேறுபாடுகள்... இன்றைய அருமையான தொகுப்பிற்கு மிக்க நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      பின்னோக்கிச் சென்று முந்தைய பதிவினையும் படித்ததற்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. தந்தையும் மகனும் பேசிக்கொள்வது அருமை
    புகைப்படம் ஸூப்பர் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. இந்த முறை பல்சுவையான காஃபி... அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. தந்தை மகன் உறையாடல் சூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி இராமசாமி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. பல்சுவைப் பகுதியாக இந்த காஃபி வித் கிட்டு சுகமாக இருந்தது.

    லூ காற்றின் அனல் வேகத்திலிருந்து தப்பிக்க
    ஏஸி ஆட்டோக்கள் வரக் கூட்டதோ:(
    நலமாக இருங்கள் அப்பா.

    அலுவலக அலைபேசித் தொந்தரவுகள் தீராத சங்கடம் ஆகாமல்
    நின்றுவிடப் பிரார்த்திக்கிறேன்.
    நல்ல படியாக வேலை செய்பவர்களைக்
    கெடுக்கக் கூடாதே,.

    சுரைக்காய் நான் சாப்பிடுவதில்லை மா.
    செய்பவர்களுக்கு உதவியாக இருக்கும்.

    மெஷினைத் தலையில் சுமந்து,
    வெள்ளத்தக் கடக்கும் முதியவரின் புன்னகை
    நம்பிக்கையின் ஆதாரம். நலமாக இருக்கட்டும்.

    எல்லோரும் வளமுடன் இருக்க வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. வெகு நாட்களுக்குப் பிறகு வந்திருக்கின்றேன்...

    தந்தை மகன் உரையாடல் தத்துவம்...
    காஃபி அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சற்றே இடைவெளிக்குப் பிறகு உங்கள் வருகை துரை செல்வராஜூ ஐயா.

      காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. கதம்பம் அருமை.
    தந்தை , மகன் உரையாடல் அருமை. நம்பிக்கை நம்பிக்கை ஊட்டுகிறது.
    விடை முன்பே படித்து இருக்கிறேன், சொல்வனத்தில் மீண்டும் படித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....