வெள்ளி, 23 ஜூலை, 2021

வாடகை சைக்கிளில் - யவனராணியைத் தேடி (பகுதி மூன்று) - பத்மநாபன்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட Mesmerising Meghalaya பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


கட்டளையிட விரும்புபவன், முதலில் பணிவதற்குக் கற்றுக் கொள்ள வேண்டும் - அரிஸ்டாட்டில்.


******


தில்லி நண்பர் பத்மநாபன் அவர்களின் ஒரு பதிவினை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி எனக்கு. அலுவலகப் பணிச் சுமைகளின் காரணமாக அவரால் இப்போதெல்லாம் எழுதவோ, வலைப்பதிவுகளை படித்து கருத்திடவோ நேரம் இல்லாமல் இருக்கிறது. தற்போது யவனராணியைத் தேடி என்ற பதிவினை எழுதி அனுப்பி இருக்கிறார். அதன் முதல் இரண்டு பகுதிகளை நீங்கள் படித்திருக்கலாம். படிக்காவிடில் சுட்டி வழி முதலாம் பகுதியையும், இரண்டாம் பகுதியையும் படித்து விடுங்களேன்! இதோ கடைசி பகுதி! படித்து ரசிப்பீர்களாக! - வெங்கட் நாகராஜ், புது தில்லி.


******


வாடகை சைக்கிளில்...





கணேசன் எடுத்துக்கிட்டு போன யவனராணி ரண்டாம் பாகத்தை அவன்கிட்ட இருந்து பறிக்கவா முடியும்? சரி. நண்பர் சசியின் ஊரில் உள்ள லைப்ரரியில் யவனராணி பாகம் ரண்டு இருக்கான்னு கேட்போம்னு யோசிச்சு கிளம்பினேன். ஆனா டக்குன்னு போறதுக்கு பக்கத்திலேயா இருக்கு. நாலு கிலோமீட்டர் போணுமே. சே! இந்த அப்பா வேற வீட்டுல ஒரு சைக்கிளை வாங்கி வைக்கக் கூடாதா! இருந்தா அவருக்கும் ஸ்கூலுக்கு போய்ட்டு வருகதுக்கு வசதியா இருந்திருக்கும் என்ன செய்ய, அப்போ அவருக்கு இருந்த பொருளாதார நிலையில ஒரு சைக்கிள் வாங்கறது ஒரு கார் வாங்கற மாதிரி டாம்பீகம் போல.


ஒண்ணு ரெண்டு கிலோமீட்டருன்னா நடந்து போய்ட்டு வந்துரலாம். சரி, ஒரு சைக்கிளை வாடகைக்கு எடுப்போம். ஒரு மணிக்கூருக்கு அம்பது பைசாவோ என்னமோ. அப்போ எங்க ஊருல மூணு வாடகை  சைக்கிள் கடை இருந்தது. வழக்கமா ராதாண்ணன் கடையிலதான் சைக்கிள் எடுக்கது வழக்கம். ஆனா அவனுக்கு ஒரு மூணு ரூபாய் கொடுக்க வேண்டி இருந்தது. வாடகைக்கு சைக்கிள் எடுத்த கடன்ன்னு தானே நினைக்கிறீங்க! சே , சே. நான் கடனெல்லாம் வைக்கறது கிடையாது. அப்ப இது என்னன்னு கேக்கறீங்களா. இது ஃபைன். ஆமா. சைக்கிள வாடகைக்கு எடுத்துக்கிட்டு போய் கீழே போட்டு காயப்படுத்தி இருந்தாலோ, முள்ளு மேல வண்டியை விட்டுபஞ்சர் கிஞ்சர் ஆக்கியிருந்தாலோ ஃபைன் போடுவாரு சைக்கிள் கடைக்காரரு.  நான் சைக்கிளை  கீழேயும் போடல்ல. வண்டி பஞ்சரும் ஆகல்ல. ஆனா ஃபைன். என்னத்தச் சொல்ல. இப்ப நினைச்சா சிரிப்புத்தான் வருகு. கொஞ்சநாள் முன்னால சைக்கிள் எடுத்தேன். பழைய வண்டிதான். ஆனா ஸீட்டுக்கு புதுக்கவரு, புது பெல்லு,  ஹாண்டில் குஞ்சம் எல்லாம் வச்சு மினுக்கி வச்சுருந்த வண்டி. சைக்கிள் ஸீட்டு வேற கொஞ்சம்  உயர்த்தி வச்சுருந்தது. இந்த ஒசரமான சைக்கிளில என்னை மாதிரி இரண்டும் கெட்டான் வயசுள்ள பயலுகளுக்கு என்ன பிரச்சனையின்னா காலு முழுசா பெடலுக்கு எட்டாது. அதனால சைக்கிளில் ஏறி சவுட்டுணும்னா ஸீட்டில இருந்துக்கிட்டே  வலதும் இடதுமா நளுக்கிக்கிட்டேதான் சவுட்டுணும். 


இப்படி நளுக்கி நளுக்கி சைக்கிள் ஓட்டுனதுல புதுசா போட்டுருந்த  ஸீட்கவரு நழுவி எங்கேயோ விழுந்துட்டுது. நான் கவனிக்கல்லை. சைக்கிளை திருப்பி கொண்டு விடும்போது ராதாண்ணன் கரெக்டா கண்டு பிடிச்சுட்டாரு. எங்கே ஸீட் கவருன்னாரு. நான் கோழிக் கள்ளன் மாதிரி திரு திருன்னு முழிக்க மூணு ரூபான்னு தீர்ப்பு சொன்னாரு. நம்ம கிட்டே ஏது மூணு ரூபா. அப்போ மூணு ரூபான்னா மூணு நாளு ஓட்டிருவோம். மூஞ்சியை பாவம்போல வச்சுக்கிட்டு, அண்ணே! வீட்டில போய் எடுத்துக்கிட்டு வாரேன்னு வந்தவன்தான், ஒரு வாரமா அந்தப் பக்கமாட்டே போகல்ல. ஆனா எத்தனை நாள் தலைமறைவா இருக்கது. ஒரு வழியா மூணுரூபாயை ஒப்பேத்தி ராதாண்ணன்கிட்ட கொடுத்தது தனிக்கதை.


இன்னைக்கு சைக்கிள் எடுக்க வேண்டி வந்துட்டுது. ராதாண்ணன் கடை இருந்த பக்கம் தலைகாட்டாம செல்வம் அண்ணன் கடையில எடுப்போம்ன்னு அங்க போனேன். புதுக்கடை. எல்லாம் புதுப்புது சைக்கிளு. பளபளன்னு மினுக்கி வச்சிருக்கு. குஷியாப் போச்சு. பின்னே, புது சைக்கிள் ஓட்டுகதுன்னா சும்மாவா. சைக்கிளை எடுத்துக்கிட்டு ஆலன்கோட்டைக்கு சசியைப் பாக்கப் போனேன். நல்ல வேளை. வீட்டில இருந்தான். யவனராணியை தேடி வந்த கதையை சொன்னேன். அவன் சொன்னான், எங்க ஊரு லைப்ரரியில யவனராணி இல்லே. ஒண்ணு பண்ணுவோம். அம்மாண்டிவிளை பக்கத்துல உள்ள சாத்தன்விளையில ஒரு லைப்ரரி இருக்கு. அங்க நம்ம அய்யாத்துரைதான் இன்சார்ஜ். உங்க அப்பாட்ட படிச்சவன்தான். அதனால உனக்கு புக் தருவான் பாத்துக்க. சரின்னு சாத்தன்விளை போயாச்சு. அங்க அய்யாதுரை அண்ணன்கிட்ட ஐஸ் வச்சு யவனராணி ரண்டாம் பாகத்தை கையகப் படுத்தியாச்சு. இனி ஊருக்கு சைக்கிளில திரும்பணும். சசிக்கும் அய்யாதுரை அண்ணனுக்கும் ஒரு டாங்ஸ் சொல்லிக்கிட்டு திரும்ப சைக்கிளில ஏறி உக்காந்ததும் ஏதோ சாதிச்சது போல இருந்தது. அதோட ஒழுங்கா சைக்கிள சவுட்டி வீட்டுக்கு வந்துருக்கணும். ஆனா விதி யாரை விட்டது.


யவனராணி  2.0 கையில கிடச்ச சந்தோஷத்தில சைக்கிளில வித்தை காட்டிக்கிட்டே வாரேன். வாயிலே பாட்டு வேற. ரோடு காலியா கிடக்கு.  கொண்டையான் கோயில் இறக்கம் வருது. ஏதோ யவனராணியோடவே டூயட் பாடற மாதிரி ரண்டு கையையும் விட்டு விட்டு சைக்கிள் ஓட்டறேன். ஐயோ எங்கேயிருந்து வந்தா இந்த பொம்பளை. இடுப்புல புள்ளை வேற. அவசர அவசரமா இரண்டு பிரேக்கையும் பிடிச்சு சைக்கிள நிறுத்தினா, இறக்கத்தில வேகமா வந்த சைக்கிளு ரோட்டை விட்டு இறங்கி காய்ஞ்சு கிடந்த வாய்க்கால்ல போய் கிடந்தது. நல்ல வேளை, குறுக்க வந்த பொம்பளை தப்பிச்சிட்டா. நான் வாய்க்காலுக்கு வெளியில பப்பரப்பான்னு கிடக்கேன். யவனராணி எம்பக்கத்திலேயே குப்புறக் கிடக்கா. ஒருவழியா எழுந்திருச்சு கையக் காலை உதறிவிட்டு சைக்கிளை வாய்க்காலிலே இருந்து மீட்டு சைக்கிளை எடுத்தா முனகிக்கிட்டு கிடந்தது. சமாதானப்படுத்தி ஓட்டுனா பெடலு பென்ட் ஆகி மக்கர் பண்ணிற்று. ஒருவழியா சைக்கிள்கடைக்கு வந்து சைக்கிள விட்டா ஒத்த பார்வையிலேயே கடை க்காரரு கண்டுபிடிச்சுட்டாரு, பயபுள்ள சைக்கிளுக்கு  காலை முறிச்சிட்டான்னு. என்னை ஒரு மொற மொறச்சு புது சைக்கிள இப்படி பண்ணி கொண்டு வந்தா நாங்க எப்படிடே தொழில் நடத்துகது அப்படி இப்படின்னு புலம்பறாரு. நானோ மனசுக்குள்ள இவரு எக்கச்சக்கமா ஃபைன் போடப் போறாரேன்னு பயந்துக்கிட்டே நிக்கேன்.


பயந்த மாதிரியேதான் ஆச்சு. கடைக்காரரு கணக்குப் போட்டு இருபது ரூபா ஃபைன் போட்டாரு. மூணு ரூபாய்க்கே முக்கிக்கிட்டு கிடந்த எனக்கு இருவது ரூபாய்னதும் கண்ணை கட்டிக்கிட்டு வந்துட்டுது. மூணு ரூபாய் ஃபைனுக்கே மூணுநாள் தலை மறைவா சுத்த வேண்டி இருந்தது. இப்போ இருபது ரூபாய்க்கு இருபது நாள் தலை மறைவா இருக்க முடியுமா.


வேற வழியே இல்லை, அப்பா காலிலே விழுந்துற வேண்டியதுதான். பெத்த கடனேன்னு இருபது ரூபாயையும் அதுக்கு இலவச இணைப்பா அவரு தந்த நாலு வசவையும் பாக்கட்டுல போட்டுக்கிட்டு போய் இருபது ரூபாய் ஃபைனை கட்டிக்கிட்டு வந்தேன். 


இப்படி வீரதீீரம் காட்டி படிச்சதால இரண்டாம் பாகம் ரொம்ப சுவையாக இருந்தது.

 

என்னது, யவனராணி கதை சொல்லணுமா! கொஞ்சம் வேலை இருக்கு. வரட்டா.


நட்புடன்



பத்மநாபன்

புது தில்லி.


******


நண்பர்களே, தில்லி நண்பர் பத்மநாபன் அவர்களின் யவனராணியைத் தேடி பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். நாளை வேறு ஒரு பதிவின் வழி உங்களைச் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…


16 கருத்துகள்:

  1. இந்த வகையில் பார்க்கும்போது தஞ்சாவூரில் எனக்கு வாய்த்த சைக்கிள்கடை நண்பன் ரொம்ப நல்லவன்.. சைக்கிள் கற்றுக்கொள்ள உதவியதோடு, சைக்கிளுக்கு ஏற்படும் காயங்களை பொருட்படுத்தமாட்டான். அவனோடு சினிமா எல்லாம் சென்றிருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாடகை சைக்கிள் பயணங்கள், அனுபவங்கள் எனக்கு வாய்த்ததில்லை. வீட்டிலேயே சைக்கிள்கள் இருந்ததால் இந்த அனுபவங்கள் கிடைத்ததில்லை. உங்கள் அனுபவங்களை, பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    இன்றைய வாசகம் பதிவும் அருமை.

    யவனராணி கதையும் நன்றாக இருந்தது. (நான் யவனராணி கதையை சொல்லவில்லை.. அதுதான் தங்கள் நண்பர் சொல்லாமல் முடித்து விட்டாரே. ஹா. ஹா. அவர் யவனராணியை தேடிச் சென்ற கதை நன்றாக இருக்கிறது என்றேன்.)

    நல்ல நகைச்சுவையுடன் தனது குதிரையில் (சைக்கிளில்) யவனராணியை தேடி வென்று கைப்பற்றி வந்த கதையை சொல்லியிருக்கிறார்.சைக்கிளில் சென்ற அனுபவங்களை அவர் நகைச்சுவையாக கூறியது மிகவும் நன்றாக இருக்கிறது.

    இன்னும் மூன்றாம், நான்காம் பாக கதையையும் சொல்லியிருக்கலாம்.:) நகைச்சுவை ஆற்றலோடு எழுதும் அவரின் எழுத்து திறமைக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். நன்றிகள். பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      வாசகமும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      யவனராணியைத் தேடிச் சென்ற கதை - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. தொடர்ந்து எழுதி இருக்கலாம்! :) வேறு சில பதிவுகளும் எழுதச் சொல்லி இருக்கிறேன். தொடர்ந்து எழுதுவார் என நம்புகிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. ரொம்ப நல்லா எளுதறதுல பத்நாபன் அண்ணாச்சியை மிஞ்சிக்கிண ஆளுவ கிடையாது.

    இதுக்கு பேசாம யவனராணி புக்கவே வாங்கியிருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுக்கு பேசாம யவனராணி புக்கவே வாங்கியிருக்கலாம். ஹாஹா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  4. பதில்கள்
    1. வீரதீர அனுபவம் - ஹாஹா... உண்மை தான் தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் வருகை - மகிழ்ச்சி துளசி டீச்சர்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. எங்கள் கிராமத்தில் வாடகை சைக்கிள் ஓட்டிய அனுபவம் உண்டு. சிறிய சைக்கிள் ஒரு கடையில்தான் இருந்தது.இரண்டு மணி நேரமாக காத்திருந்தால்தான் அந்த சைக்கிள் கிடைக்கும்.சிலசமயங்களில் சைக்கிள் கிடைக்காமலே விடுதிரும்பிய அனுபவம் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வாடகை சைக்கிள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி இராமசாமி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. இதுவல்லவோ யவனராணியை தேடும் பயணம்.:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யவனராணியைத் தேடும் பயணம் - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. அண்ணாச்சியின் அனுபவங்கல் அருமை.
    அடிக்கடி எழுத நேரம் ஒத்துழைக்க வாழ்த்துக்கள்.
    யவனராணி நன்றாக தேடி படிக்க வைத்து இருக்கிறாள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேரம் கிடைத்து அவர் மேலும் எழுத வேண்டும் என்பதே எனது ஆசையும் கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....