புதன், 21 ஜூலை, 2021

கவுரை கவர் செய்வாரா - யவனராணியைத் தேடி (பகுதி இரண்டு) - பத்மநாபன்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கடந்து வந்த பாதை பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


பழம்பெரும் ஞானிகள், ஆசான்களிடம் கற்றுத் தேர்ந்தாலும் கூட உன் வாழ்க்கையில் நீ கண்ட அனுபவங்களே உன்னை ஒரு சிறந்த மனிதனாக மாற்றும் வல்லமை பெற்றது.


******


தில்லி நண்பர் பத்மநாபன் அவர்களின் ஒரு பதிவினை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி எனக்கு. அலுவலகப் பணிச் சுமைகளின் காரணமாக அவரால் இப்போதெல்லாம் எழுதவோ, வலைப்பதிவுகளை படித்து கருத்திடவோ நேரம் இல்லாமல் இருக்கிறது. தற்போது யவனராணியைத் தேடி என்ற பதிவினை எழுதி அனுப்பி இருக்கிறார். அதன் முதல் பகுதியை நீங்கள் படித்திருக்கலாம். படிக்காவிடில் இந்தச் சுட்டி வழி படித்து விடுங்களேன்! இதோ இரண்டாம் பகுதி! படித்து ரசிப்பீர்களாக! - வெங்கட் நாகராஜ், புது தில்லி.


******


கவுரை கவர் செய்வாரா?...


சென்ற பகுதியை முடிக்கும்போது, நண்பர் வெங்கட் எதுக்காக இவ்வளவு சிரத்தையா பஞ்சாபி படிக்கிறார்னு யோசிச்சேன் என்று சொல்லி இருந்தேன்.  வாங்க தொடர்ந்து என்ன யோசித்சேன் என்று பார்க்கலாம்! படம்: இணையத்திலிருந்து...

நான் கூட முதலில் அவர் ஏதோ பஞ்சாபி பொண்ண கணக்கு பண்ணத்தான் இவ்வளவு சிரத்தையா பஞ்சாபி படிக்கிறாருன்னு நினைச்சேன்.  பஞ்சாபி பொண்ணுங்க பேரு வேற சிமரன் கவுர், மஞ்சித் கவுர்ன்னுதான் இருக்கும். ஏதோ கவுரை பஞ்சாபி பேசி கவர் பண்ணறாரோன்னு நினைச்சேன். அப்படியெல்லாம் இல்லை. அவருக்கு பஞ்சாப்  பாசுமதி சாப்பிட பிடிக்கல்ல போல. இயற்கையாகவே அவருக்கு எல்லா மொழிகளையும் கூர்ந்து கவனித்து சரியாக உச்சரிப்பது அவரது இயல்பு. சரி ரொம்ப புகழ்ந்தால் அவருக்கு கூச்சமா இருக்கும். வெங்கடராமனை சங்கடராமன் ஆக்கக்கூடாது. அதனால நிறுத்திப்போம். 


அதே போல பள்ளி நாட்களில் எனக்கு அமைந்த ஒரு நல்ல நட்புதான் சசிகலாதரனின் நட்பு. ஆறாம் வகுப்பு முதல் பதினொன்றாம் வகுப்பு வரை ஒரே வகுப்பு ஒரே பெஞ்ச் என்று தொடர்ந்த நட்பு. புத்தகங்கள் படிப்பது அவருக்கு மிகப் பிடித்த ஒன்று. என்னை சங்கர்லாலில் இருந்து சாண்டில்யனுக்கு மடை மாற்றி விட்டவர் அவர்தான்.


சசியோட ஊர் எங்க ஊருல இருந்து ஒரு நாலு கிலோமீட்டர் இருக்கும். அவர் ஊரிலும் ஒரு லைப்ரரி உண்டு. ஒருநாள் சசி சைக்கிளில் என்ன தேடி வந்தான். "எடே! பத்மநாபன்! உன்னால ஒரு காரியம் ஆகணும் பாத்துக்கடே. நம்ம சாண்டில்யனுக்க கடல்புறா மொதப் பாகத்தை படிச்சு முடிச்சிட்டேன் பாத்துக்க. இப்ப என்னடான்னா ரண்டாம் பாகத்த எடுக்கலாம்னு லைப்ரரிக்கு போனா ஒரு விளங்காதவன் பத்து நாளைக்கு முன்னால எடுத்துக்கிட்டு போய்ட்டான். எப்போ திரும்பி தருவான்னு தெரியல்ல. மூணாம் பாகம் இருக்கு. ரண்டாம் பாகத்த படிக்காம எங்க போட்டு மூணாம் பாகத்த படிக்க."


நானும் அதை ஆமோதிச்சுக்கிட்டே "ஆமா, அவ்வளவு முரட்டு புத்தகத்தை எப்படிடே படிக்கே. ரொம்ப பொறுமை வேணுமேடே! எனக்கு இந்த சரித்திர நாவல் படிக்க பொறுமை இல்ல, பாத்துக்கோ" உடனே சசி "என்னடே நீ! ஒருக்கா சாண்டில்யன படிச்சுப்பாரு. இந்த கடல்புறா, யவனராணில்லாம் படிச்சு பாரு.  என்னமா எழுதியிருக்காரு தெரியுமா. அதுவும் போர்க்காட்சில்லாம் மனுஷன் கிண்டி கிழங்கெடுத்திருப்பாரு. அது இருக்கட்டும். நீ உங்க லைப்ரரியில கடல்புறா இரண்டாம் பார்ட்டு இருக்கும். எடுத்து கொடு. இரண்டு நாளுல படிச்சுக்கிட்டு கொடுத்துருவேன்."


"எடே! எங்க லைப்ரரியில புத்தகத்தை எடுத்து வெளியில கொடுத்தேன்னு தெரிஞ்சா எங்க கோலப்பபாட்டா கொண்ணே போடுவாரு." பின்னர் எங்கள் லைப்ரரியில் இருந்து கடல்புறா இரண்டாம் பாகத்தை எடுத்து யார் கண்ணுக்கும் படாமல் சசிக்கு கொடுத்ததும் அவன் கண்ணில் தெரிந்த ஆனந்தம் இருக்கிறதே. இதைப்பார்த்த எனக்கும் சாண்டில்யனில் அப்படி என்னதான்  இருக்கிறது என்று தோன்ற, ஒருநாள் எங்கள் நூலகத்தில்  யவனராணி கண்ணில் பட்டாள். இப்படித்தான் சாண்டில்யனை படிக்க ஆரம்பித்தேன்.


யவனராணி என்கிற யெளவனராணியை படிக்க ஆரம்பித்ததுமே நானும் அடிமையாகிப் போனேன். யவனராணிக்கு மட்டுமல்ல. சாண்டில்யனுக்கும். வழக்கமாக கல்கி, ஆனந்தவிகடன் இவற்றில் வரும் தொடர்கள் அனைத்தையும் தொகுத்து அருமையாக புத்தகமாக்கி வைத்திருப்பார் கோலப்ப வாத்தியார். ஆனால் யவனராணியை பதிப்பக புத்தகமாக படித்ததாக நினைவு. அதுவும் இந்த வானதி பதிப்பகமாக இருந்தால், அதன் எழுத்தமைப்பும், வடிவமைப்பும் புத்தகத்தை கீழே வைக்காமல் படிக்கச் செய்யும்.


பள்ளி விடுமுறை சமயம் ஆதலால் யவனராணி முதல் பாகம் கையில் வந்ததும் இரண்டே நாளில் படித்து முடித்து விட்டேன். பள்ளிக்கூடம் தொறக்க இன்னும் ஒரு வாரம் இருக்கு. கையோட இரண்டாம் பாகத்தையும் படிச்சு முடிச்சுருவோம்ன்னு லைப்ரரிக்கு போனேன். கோலப்ப வாத்தியார், "என்னடே! முந்தாநேத்துத்தானடே எடுத்துக்கிட்டு போனே. அதுக்குள்ள படிச்சு முடிச்சுட்டியாக்கும்."


"ஆமா பாட்டா! கீழே வைக்காம படிச்சு முடிச்சுட்டனாக்கும். ரண்டாம் பாகம் எடுக்க வந்தேன்."


"யவனராணி ரண்டாம் பாகத்தை நேத்தைக்குத்தானடே நம்ம கணேசன் எடுத்துக்கிட்டு போனான்.  அவன் சட்டுன்னு திரும்பி தரமாட்டானேடே. ஒரு பத்து நாளாவது ஆகுமேடே."


இப்ப என்ன செய்ய. கணேசன்கிட்ட போய் புத்தகத்த பறிக்கவா முடியும். 


தொடர்ந்து அடுத்த பகுதியில் சொல்கிறேனே!


நட்புடன்பத்மநாபன்

புது தில்லி.


******


நண்பர்களே, தில்லி நண்பர் பத்மநாபன் அவர்களின் யவனராணியைத் தேடி பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். நாளை வேறு ஒரு பதிவின் வழி உங்களைச் சந்திக்கும் வரை…


நட்புடன்வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…


18 கருத்துகள்:

 1. என்னுடன் சசிதரன் என்றொரு நண்பன் படித்தான்.  சசிகலாதரன் பெயர் புதுசு!

  வெங்கடராமன் சங்கடராமன் - ஹா...ஹா..  ஹா..   வெங்கட் ஸ்கூலில் முதல் பெஞ்ச் மாணவர் போலிருக்கு.

  என்னைப் பொறுத்தவரை சாண்டில்யன் கதைகளில் யவனாராணிதான் பெஸ்ட்.     .அப்புறம்தான் கடல்புறா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சசிகலாதரன் - கொஞ்சம் மலையாள வாடை அடிக்கிறது இல்லையா ஸ்ரீராம்.

   முதல் பெஞ்ச் மாணவர் - ஹாஹா... என் உயரத்திற்கு முதல் பெஞ்ச் - “வாய்ப்பில்ல ராஜா!” தான்! ஹாஹா....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. சரித்திரக் கதை படித்த மஹாத்மியம் நன்றாக இருக்கு.

  கோலப்ப வாத்தியார், உங்கிட்ட தானடே ரெண்டாம் பாகம் இருக்கு னு சொல்லுவாரோன்னு நினைத்தேன் (நண்பருக்காக எடுத்துக் கொடுத்தது)

  தில்லி வெங்கட் மெடிகுலஸ். நிறைய வட இந்திய மொழி தெரியும் என்பது பெரிய ப்ளஸ் பாயின்டுதான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. பதில்கள்
  1. முரட்டு புத்தகம் - ஹாஹா... ரசித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

   நீக்கு
 4. நல்ல சுவாரஸ்யமான நடை ஜி
  தொடர்கிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் வழி சொன்ன விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

   நீக்கு
 5. உங்கள் நண்பர்களும் படிப்பதிலும்,எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பது ஆச்சர்யம்தான்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பர்கள் ஒரே எண்ணம் கொண்டவர்களாக இருப்பது மகிழ்ச்சியான விஷயம் தானே பானும்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. வணக்கம் சகோதரரே

  நல்ல எழுத்து நடையுடன் தங்கள் நண்பர் ஆரம்பித்திருக்கும் "யவனராணியை தேடி" நன்றாகச் செல்கிறது.யவனராணி முன்பு நானும் விடாமல் படித்துள்ளேன். அப்போதெல்லாம் எடுத்த புத்தகத்தை கீழேயே வைக்காமல், இரவு, பகல் பார்க்காமல் படித்த காலம். இப்போது பகலில் நேரமும் இல்லை. சரியென இரவு வெளிச்சத்தில் நீண்ட நேரம் படித்தால் கண்களுக்கும் சோர்வு வருகிறது.

  உங்களைப்பற்றி உங்கள் நண்பர் சிறப்பாக கூறுவது மகிழ்ச்சியை தருகிறது. நீங்கள் வட இந்திய மொழிகளை கற்று தேர்ந்ததற்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

  சென்ற பகுதியையும் இப்போதுதான் படித்து வந்தேன். இன்றைய பகுதியும், நகைச்சுவையுடன் நன்றாக உள்ளது. இனித் தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

   நண்பரின் பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. வட இந்திய மொழிகள் - புரிந்து கொள்ளவும் கொஞ்சம் பேசவும் தெரியும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. யுவராணி, கடல் புறா
  இரண்டுமே அவசியம் படிக்க வேண்டிய கதைகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படிக்க வேண்டிய நூல்கள் தான் கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. 'பஞ்சாபி பெண்ணை கணக்குப் பண்ண....' ...ஹா....ஹா...


  ரசனை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. //சரி ரொம்ப புகழ்ந்தால் அவருக்கு கூச்சமா இருக்கும். வெங்கடராமனை சங்கடராமன் ஆக்கக்கூடாது. அதனால நிறுத்திப்போம். //

  ரசித்தேன்.

  யவன ராணி கவர்ந்த விதம் அறிந்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....