புதன், 7 ஜூலை, 2021

எழுத்துத் திருட்டு - வாட்ச்மேன் சிதம்பரம்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய மாலை வணக்கம். இந்த நாளின் இரண்டாம் பதிவுடன் மீண்டும் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவையும் இன்று காலை வெளியிட்ட கடந்து வந்த பாதை பதிவையும் படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த பதிவினை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


நீ ஒருவனின் உழைப்பை திருடி மேலே வந்தால்… இன்னொருவன் உன்னை மிதித்து மேலே வருவான் - வாழ்வின் நியதி.


******


எழுத்துத் திருட்டு:புத்தகம் வாசிக்க நேரம் அமைவதே இப்போது பெரிய விஷயமாக இருக்கிறது. திருவரங்கம் வந்த புதிதில் 500 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை வாடகை நூலகத்தில் எடுத்து நான்கே நாட்களில் வாசித்து கொடுத்த நாட்களும் உண்டு. இப்போது கண்களும், நேரமும் ஒத்து வருவதில்லை..:)


அப்படியும் நேரம் கிடைத்து நான்  வாசித்த சில மின்னூல்களின் வாசிப்பனுபவங்களை சில நாட்களுக்கு முன் 'புத்தக வாசிப்பு போட்டி'க்காக ஒரு குழுமத்தில் பகிர்ந்து கொண்டிருந்தேன். 


நேற்று எதேச்சையாக பார்க்கும் போது நான் எழுதிய வாசிப்பனுபவங்கள் வேறொரு குழுமத்தில் வேறொருவர் அவரின் பெயரில் அவரே எழுதியது போல்  பகிர்ந்து கொண்டிருக்கிறார்!!


என் மின்னூலுக்கு கிடைத்த விமர்சனத்தையும் அவரே வாசித்து பகிர்ந்து கொண்டது போல் அச்சு பிசகாமல் பதிவு செய்திருக்கிறார்...:) பிளாகராக இருந்த போதிலிருந்தே இந்த 'காப்பி பேஸ்ட்' அனுபவங்களை பார்த்திருக்கிறேன்...:) 


எங்கள் பகுதியில் பொங்கல் சமயத்தில் வாசலில் போட்ட கோலங்களை ஃபோட்டோ எடுத்து பகிர்ந்து கொண்டிருந்த போது, அந்த ஃபோட்டோவை வேறொரு பக்கத்தில் பார்க்க நேர்ந்தது! அந்த குறிப்பிட்ட நபர் ஒத்துக் கொள்ளவே இல்லை..:) ஃபோட்டோவில் என் மகளின் கால் பாதம் கூட தெரிகிறது என்று சொல்லியும்...:)) 


இன்று காலை அந்த வாசிப்புக் குழுவில் உள்ள என்னுடைய வாசிப்பனுபவங்களில் எல்லாம் "என் எழுத்தை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி" என்று கமெண்ட் செய்திருந்தேன்..:) சில மணிநேரத்தில் அந்தக் குழுவின் அட்மினோ அல்லது அந்தக் குறிப்பிட்ட நபரோ அந்த பதிவுகளை நீக்கி விட்டார்கள். 


உஷாராகத் தான் இருக்க வேண்டும் நட்புகளே! இப்படிக் கூடவா நடக்கும்! என்று தான் தோன்றியது..:) 


******


வாட்ச்மேன் சிதம்பரம்:


அவரது டேபிளில் உள்ள இண்டர்காமில் அழைப்பு மணியின் ஒலி! ட்ரிங்! ட்ரிங்!


இதோ வரேன்னு சொல்றேன்ல! அடிச்சிட்டே இருக்கியே!


இரண்டு நாட்களுக்கு முன் தான் மகளும், நானும் இந்த விஷயத்தை சொல்லி சிரித்துக் கொண்டிருந்தோம்.


இன்று குடியிருப்பு வாட்ஸப் குழுமத்தில் வியாழன் அன்று வாட்ச்மேன் சிதம்பரம் மறைந்து விட்டார் என்று தகவல்...:(


கடந்த ஐந்து வருடங்களாக எங்கள் குடியிருப்பில் பணி செய்திருக்கிறார். கல்லணை அருகேயுள்ள கிராமத்திலிருந்து இரண்டு பேருந்துகள் மாறி தான் பணிக்கு வருவார். ஆனாலும் நேரத்திற்கு வந்து விடுவார். 


இவரைப் பார்த்தாலே நமக்கும் சுறுசுறுப்பு வந்து விடும். நேர்மையான மனிதர். வெள்ளந்தியான கிராமத்து மனிதர். குடியிருப்பை பற்றிய அத்தனை தகவல்களும் இவருக்கு அத்துப்படி..இவ்வளவு வண்டி வெளியே போயிருக்கிறது..இன்னும் அவங்க வரலை! என்று அத்தனையும் இவருக்குத் தெரியும்.


மேடம்! போன மாசம் தான டேங்க் சுத்தம் பண்ணோம்! இனி அடுத்த....க்கு தான் பண்ணனும் மேடம்! உனக்கு மறந்துடுச்சா??


மேடம்! கார்ப்பரேஷன்ல இருந்து அந்த சார் வந்திருக்காரு! உட்கார சொல்லியிருக்கேன்! நீ நிதானமா கீழே இறங்கி வா மேடம்!


அவ்வப்போது, கோவுச்சுக்காதே மேடம்! இன்னைக்கு சாப்பாடு வேணும் மேடம்!


தரேன் வாட்ச்மேன்! இதுக்கு எதுக்கு கோவம்! பாப்பாகிட்ட குடுத்து விடறேன்.


சாப்பிட்டு முடித்ததும் தட்டை சுத்தம் செய்து திருப்பி தரும் போது  கையெடுத்து கும்பிடுவார். 


இவரைப் போல நல்ல மனிதரை இழந்தது மிகவும் வருத்தமான விஷயம். அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.


******


நண்பர்களே, இந்த நாளில் வெளியிட்ட இரண்டாம் பதிவு குறித்த உங்கள் கருத்துகளை, பின்னூட்டம் வாயிலாகச் சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவு வழி உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்ஆதி வெங்கட்


22 கருத்துகள்:

 1. விமர்சனம் கூடவா 'காப்பி பேஸ்ட்'...? அட கொடுமையே...

  வாட்ச்மேன் சிதம்பரம் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விமர்சனமும் காப்பி பேஸ்ட் - கொடுமை தான். நூலைப் படிக்காமலேயே படித்ததாக எழுதுகிறார்கள் - அதுவும் ஒரு வாசிப்புப் போட்டிப் பதிவில். ஒன்றும் சொல்வதற்கில்லை தனபாலன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. Copy Paste - கொடுமை. இப்படியெல்லாமா திருட்டுத்தனம் செய்வார்கள்? அவங்களுக்கே வெட்கமாக இருக்காதா?

  இரண்டாவது பகுதி நெகிழ்ச்சி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெட்கம் - இல்லையே! குறிப்பிட்ட அந்த நபர் நிறைய பேரின் வாசிப்பனுபவங்களை தனதாக அப்படியே முகநூல் குழுக்களில் வெளியிட்டு இருக்கிறார் நெல்லைத் தமிழன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. இந்த மாதிரி எழுத்துத் திருடர்களை என்னதான் செய்ய? வெட்கமே இருக்காது போல...


  இரண்டு பதிவுகளையும் பேஸ்புக்கில் படித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒன்றும் செய்வதற்கில்லை ஸ்ரீராம். முகநூல் குழுமத்தில் தகவல் சொல்ல, சில பதிவுகளை நீக்கினார். இப்போது வேறு ஒரு வாசிப்புக் குழுமத்தில் பதிவு செய்து கொண்டிருக்கிறார்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. வாட்ச்மான் சிதம்பரம் நற்கதி பெறட்டும்.

  எழுத்துத் திருட்டை என்ன செய்வது!!
  அனியாயமாக இருக்கிறது.
  சில எழுத்துகளை மேற்கோள் காட்டக் கூட
  எடுக்க முடியாமல்
  செய்து வைத்திருக்கிறார்கள். நீங்களும் அது போல செய்து விடுங்கள் வெங்கட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வலைப்பூவில் செய்யலாம் வல்லிம்மா. முகநூலில் இப்படிச் செய்ய வசதி இருக்கிறதாக தெரியவில்லை.

   வாட்ச்மேன் சிதம்பரம் - நல்ல மனிதர்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. எழுத்துத் திருட்டு தொடர்ந்து கொண்டே இருப்பது வேதனைதான்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தொடரும் வேதனை - உண்மை தான் கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. இரண்டு செய்திகளும் முகநூலில் படித்தேன்.
  என் பதிவுகளை நிறைய தளங்களில் அப்படியே பகிர்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
  அது பத்திரிக்கை போல இருக்கிறது. என் பேருடன் வருகிறது.

  ஆனால் ஆதியின் எழுத்தை தன் பேருடன் பகிர்ந்து கொள்வதை என்ன சொல்வது!

  வாட்ஸ்மேன் சிதம்பரம் அவர்கள் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
  இப்போதும் இவரை மாதிரி நல்ல மனிதர் கிடைத்து இருப்பார் என்று நினைக்கிறேன்.


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நம்மில் பலருடைய பதிவுகள் இப்படித்தான் கோமதிம்மா. சில விஷயங்களைச் சகித்துக் கொள்ள முடிவதில்லை. இப்படி எழுதி ஆதங்கத்தினை வெளிப்படுத்துவது தவிர!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. எழுத்துத் திருடர்களுக்கு எதுவும் பெரிதில்லை...

  எனது பதிவுகள் பலவும் வேறு வேறு பெயர்களில் Fb ல் வெளியாகி இருக்கின்றன... முக்கிய பதிவு ஒன்று குழாய்க் காணொளி பதிவாக வாசிக்கப் பட்டிருக்கின்றது..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எழுத்துத் திருடர்களுக்கு எதுவும் பெரிதில்லை - உண்மை துரை செல்வராஜூ ஐயா.

   பல பதிவுகள் இப்படி உங்களுடையதும் வேறு பெயர்களில் வெளியாகி வருவது வேதனை தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. வாட்ச்மேன் சிதம்பரம் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
  இப்படிப்பட்ட நல்ல மனிதர்கள் இறந்தும் வாழ்கிறார்கள்.
  வாசிப்புப் பழக்கத்தை வழக்கமாக்கிவிட்டாலே நல்ல நூல்களால் இயல்பாகவும் கண்ணியமாகவும் சிந்தித்து எழுதும் திறன் வந்துவிடும்.
  அதை உணராத எழுத்துத்திறுடர்களை நினைத்தால் வேதனையாகத்தான் இருக்கிறது.
  படைப்பை திறுடலாம், அதை உருவாக்கிய ஆற்றலைத் திறுடுவது அசாத்தியம்.
  திறுடியவருக்கும் முழு திருப்தி இருக்காது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //நல்ல மனிதர்கள் இறந்தும் வாழ்கிறார்கள்// - உண்மை தான் அரவிந்த்.

   படைப்பை திருடலாம். அதை உருவாக்கிய ஆற்றலைத் திருடுவது அசாத்தியம் - உண்மை.

   உங்களுடைய விமர்சனம் ஒன்றும் அதில் அப்படியே காப்பி பேஸ்ட் செய்திருந்தார்கள். தகவல் தந்த பின் நீக்கி விட்டார்கள். பானும்மா/கீதா ஜி புத்தகத்திற்கான உங்கள் விமர்சனம் தான் அது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
  2. ஆம் சார். கீதா மேடம் கூட சொன்னார்கள்.

   நீக்கு
  3. நானும் அவர்களிடம் பதிவு வந்ததைச் சொல்லி இருந்தேன் அரவிந்த்.

   தங்களது மீள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. நானும் எனது விமர்சனம் ஒன்றை இப்படி பார்த்தேன் சகோ. என்னடா, நாம் எழுதியது போலவே இருக்கிறதே என்று Facebook scroll செய்கையில் எண்ணினேன். அது யாரென்று பார்க்கக் கூட இல்லை.இத்தனைக்கும், நான் எனது ஒரு புத்தக விமர்சனத்தை பல வாசிப்பு குழுக்களில் பகிர்வதுண்டு. அப்படி இருந்தும், மீண்டும் நான் பதிவு செய்ததையே மீண்டும்,அதே குழுவில் வேறு பெயரில் பகிர்கிறார்கள். என்னவென்று சொல்வது?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் தமிழ்முகில் பிரகாசம். இவர்களை என்ன சொல்ல? ஒரு குழுவில் பகிர்ந்து கொண்டிருந்தார். இப்போது அவரது சில விமர்சனங்கள் வேறு ஒரு குழுவிலும் வருகிறது.

   தங்களது வ்ருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 10. பத்தாண்டுகளுக்கும் மேலாகவே இது போன்ற எழுத்து, பதிவுகள் மற்றும் படங்களின் திருட்டுக்களைப் பார்த்து வருகிறோம். இணையத்தில் தவிர்க்க முடியாததாகி விட்டது. ஆரம்பத்தில் சொல்லிப் பார்த்து பிறகு விட்டு விட்டேன் மற்ற பலரையும் போலவே. பயணக்கட்டுரைகளை அப்படியே பல பாகங்களாக எடுத்துப் போட்டிருக்கிறார்கள். படங்களில் வாட்டர் மார்க்கை சாமர்த்தியமாக ஃபோட்டாஷாப் வைத்து அழித்தும் பயன்படுத்துகிறார்கள். ஃப்ளிக்கரில் டவுன்லோடிங் தடுக்க முடிகிறது.ப்ளாகில் காப்பி செய்வதைத் தடுக்கும் வழி உள்ளது. ஆனால் ஃபேஸ்புக்கில் இல்லை.

  வாட்ச்மேன் சிதம்பரம் போன்ற எளிய மனிதர்கள் தங்கள் பண்புகளால் மனதில் நின்று விடுகிறார்கள். அஞ்சலிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எழுத்துத் திருட்டு தொடர்ந்து நடந்து வருவது உண்மை தான் ராமலக்ஷ்மி. ஃபோட்டோஷாப் செய்து பயன்படுத்தும் படங்கள், பதிவுகள் என அனைத்தும் நடந்த வண்னமே இருக்கிறது. ஒன்றும் செய்வதற்கில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....