திங்கள், 12 ஜூலை, 2021

வாசிப்பனுபவம் - கண்ணாடி நீ கண்ஜாடை நான் - இரா. அரவிந்த்அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கடந்து வந்த பாதை பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


நம்மை உள்ளங்கையில் வைத்துத் தாங்கும் உறவுகள் கிடைப்பதை விட, நம்மை உதறித் தள்ளி விடாத உறவுகள் கிடைப்பதே வரம்.


*****


அன்பின் நண்பர்களுக்கு, இந்த நாளில் நாம் பார்க்கப் போகும் பதிவு ஒரு வாசிப்பனுபவம் பதிவு.  நண்பர் இரா. அரவிந்த் அவர்களின் பார்வையில் ஒரு மின்னூல் - கனவு காதலி ருத்திதா என்பவர் எழுதிய ஒரு நாவல்.  129 பக்கங்கள் கொண்ட இந்த மின்னூலின் விலை ரூபாய் 300/-.  கிண்டில் வெளியீடு என்பதால், கிண்டில் Unlimited கணக்கு வைத்திருப்பவர்கள் இலவசமாக வாசிக்கலாம். மற்றவர்கள் பணம் கொடுத்து தரவிறக்கம் செய்ய வேண்டியிருக்கும். வாருங்கள் மின்னூல் குறித்த நண்பர் இரா. அரவிந்த் அவர்களின் வாசிப்பனுபவத்தினை படிக்கலாம் - வெங்கட் நாகராஜ்.  


*****


கண்ணாடி நீ... கண் ஜாடை நான்: மண உறவு மாயங்களின் தரிசனம்.

உலகின் அனைத்து உயிர்களையும் ஆளும்  மானுடனின் பலத்திற்கான காரணம், உறவு முறைகளால் ஒற்றுமையுடன் பின்னிப் பிணைக்கப்பட்ட சமூக அமைப்பே.

அவ்வுறவு முறைகளில், மிக அடிப்படையானதும், சிக்கலானதுமானது திருமண உறவே. 

எத்தனை அனுபவங்கள் பகிரப்பட்ட போதிலும், எவ்வளவு மனோதத்துவ நிபுணர்கள் விளக்கிய போதிலும், இவ்வுறவைக் கையாளும் ரகசியங்கள், கையில் சிக்காத மாயமானாகவே இருப்பது விந்தையிலும் விந்தை. 

அத்தகைய திருமண உறவின் நெளிவு சுழிவுகளைக் கலகலப்பாகவும், ஆழமாகவும் எடுத்துக் காட்டியிருப்பதே, எழுத்தாளர் திருமதி கனவு காதலி ருத்திதா அவர்களின் 'கண்ணாடி நீ... கண் ஜாடை நான்' புதினம். 

தான் காதலித்து மணந்தவனை ஆறு மாதங்களிலேயே விவாகரத்துச் செய்ய முடிவெடுக்க, முதற்கட்ட கலந்தாய்விற்காக நாயகி ப்ரியாவும் நாயகன் அர்ஜுனும் நீதிமன்றம் நோக்கிப் பயணிப்பதோடு கதை தொடங்குகிறது. 

விவாகரத்துக்காக செல்வோரின் மனநிலைக்கு மாறாக அங்கே, இருவரும் கல்லூரி நண்பர்களைப் போல கலகலப்பாக நடந்துகொண்டு ஆலோசகரை திகைக்க வைத்துக் கொண்டே, விவாகரத்தை விரைவில் பெறுவதில் உறுதியாகவும் உள்ளனர். 

விவாகரத்துக்குப் பின், தாம் கணவன் அர்ஜுனையே தொடர்ந்து காதலிக்கப் போவதாகச் சொல்லி, ப்ரியா, ஆலோசகருக்குத் தலைசுற்றுமளவு குழப்பியும் விடுகிறார். 

அடுத்தகட்ட கலந்தாய்வுகளுக்கு வழக்கு நகர, அவர்கள் மண உறவிலும் வாழ்விலும் படிப்படியாக ஏற்பட்ட சுவாரசியமான திருப்பங்களும் புரிதல்களுமே கதையின் சுருக்கமாகும். 

நாயகியை அதீத கற்பனை கொண்டவளாகவும், தன் தவறை என்றும் ஒப்புக்கொள்ளாத சுயமரியாதை கொண்ட பிடிவாதக்காரியாகவும் காட்டும் கதையின் முதற்பகுதி, அவள் தன் தவற்றை உணரச் செய்வதே கதையின் முடிவாக ஊகிக்கச் செய்கிறது. 

அதற்கேற்ப 'புத்தியைக் கடன்கொடுத்துவிட்டு தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் தான் எனப் பிடிவாதம் செய்தால் பேசுவதற்குக் கூட யாரும் இருக்கமாட்டார்கள்; மைன்ட்வாய்சில் தான் பேசியாக வேண்டும்!!' போன்ற நாயகியின் எண்ண ஓட்டங்களும், அவள் தோழி மாதவியின் அதிரடி வார்த்தைகளும் வாசகர்களை அதையே ஊகிக்கச் செய்கிறது. 

ஆனால், கதை செல்லச்செல்ல, தம் பெருந்தன்மையால் உண்டாகும் அகந்தையே, தன் மீது மற்றோர் கொள்ளும் காதலையும், அவர் மனம் திருந்த முயல்வதையும் உணர இயலாமல் செய்யும் நாயகனின் பலவீனமும் காட்டப்பட, கதை அடுத்த தளத்திற்கு நகர்ந்து சுவாரசியமான முடிவை வாழ்வின் பல புரிதல்களோடு தருகிறது. 

எளிதில் சகஜமாகப் பழகக்கூடிய நாயகி முதல், பெண்களிடமே பேச அஞ்சும் உள் ஒடுங்கிய நாயகன் வரை பலதரப்பட்ட மனிதர்களின் உள்ளச் சிடுக்குகளை, உற்சாகமான எழுத்து நடையில் வெளிப்படுத்தியிருப்பதே புதினத்தின் சிறப்பான அம்சம். 

தம்பதியரிடையே பகிரக் கூடியவை, நண்பர்களிடம் மட்டுமே பேசக்கூடியவை, மண உறவின் விரிசல்களை சரிப்படுத்தும் நண்பர்கள் மற்றும் பெரியோரின் பலம் மற்றும் அவர்களின் எல்லை போன்ற நம் வாழ்வில் உணரவேண்டிய நாசுக்கான அம்சங்களை அநாயாசமாக எடுத்துக் காட்டியிருக்கிறார் கதாசிரியர்.  

நாயகியின் மாமியார் இந்திராவின் தலைகீழ் மனமாற்றத்திற்கான காரணம் மட்டும் தர்க்கரீதியாக விளக்கப்படாததுபோல் சிலருக்குத் தெரியக் கூடும் என்ற போதிலும், மேற்குறிப்பிட்ட புதினத்தின் சிறப்புகளால் இக்குறை வெளியே தெரியவில்லை என்பேன். 

செல்லக் குழந்தையாகக் கேட்பவை எல்லாம் கிடைக்க, பெறும் கனவுகளோடு வளர்பவர்கள், தம் மண வாழ்வில் எதிர்கொள்ளும் சவால்களும் அதற்காக அவர்கள் தம் மனதளவில் செய்ய வேண்டிய மாற்றங்களும் நாயகி பாத்திரம் மூலம் காட்டப்பட்டுள்ளது. 

'அடுத்தவங்களோட பக்கத்தை யோசிக்காம அவங்களுக்கு தண்டனை கொடுக்கிறதுக்கு நெனைக்காத' என்ற மாதவியின் கூற்று, ப்ரியாவிற்கு மட்டுமல்லாமல், தம் பெருந்தன்மையால் தண்டிக்க முயலும் நாயகனுக்கும் பொருந்தக்கூடியதே. 

ஊராரிடம் நல்ல பெயர் வாங்குவதற்கும், தம் இல்லாள் கண்களின் குறிப்பு மொழியை அறிந்து, அவரின் கண்ஜாடையாக மாறி மனதைக் கவர்வதற்கும் இடையிலான நுனுக்கமான வேறுபாடுகள், அர்ஜுனைப் போன்ற உள் ஒடுங்கிய இன்றைய சில வாலிபர்கள் இப்புதினம் மூலம் உணரவேண்டியவை. 

வாழ்வில் தவறே செய்யாதவர் எவரும் இல்லை என்பதையும், தவற்றை உணர்ந்த சிலர் மன்னிப்பைச் சொற்களால் கேட்கத் தயங்கி தம் செயல்களில் காட்டக்கூடும் என்பதையும் வாசிப்போர் உணர்ந்தால் இப்புதினம் தன் இலக்கை அடைந்துவிட்டதாகக் கொள்ளலாம். 

இவ்வாறு வாழ்வின் பல அற்புதங்களை, நகைச்சுவையாகவும், எளிய நடையிலும் விளங்க வைக்கும் சிறப்பான இப்புதினத்தைக் கீழ்காணும் சுட்டியில் வாங்கி வாசிக்கலாம். 

'புரியாத உறவில் எவ்வளவு அன்பு இருந்தாலும் நிலைப்பது இல்லை. புரிந்த உறவில் எத்தனை சண்டை வந்தாலும் பிரிவது இல்லை!' என்ற பெரியோர் கூற்றிற்கேற்ப நம்மை விரும்புவோர் கண்களின் கண்ஜாடையாக மிளிர்வோம். 

கண்ணாடி நீ... கண்ஜாடை நான்... (Tamil Edition) eBook: Ruthitha, Kanavu Kadhali: Amazon.in: Kindle Store 

நட்புடன்,

இரா. அரவிந்த்

******


நண்பர்களே, இந்த நாளில் வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவினை நீங்களும் ரசித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.  பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை, பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்கள்.  மீண்டும் வேறு ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து...


12 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. தங்களிந் வருகைக்கும் கருத்துப்பகிர்விர்க்கும் மிக்க நந்றி ஸ்ரீராம் ஐய்யா.
   கலகலப்பான இந்நூலை முடியும்போது வாசித்துப் பாருங்கள்.

   நீக்கு
 2. சிறப்பாக இருக்கிறது விமர்சித்த விதம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களிந் வருகைக்கும் கருத்துப்பகிர்விர்க்கும் மிக்க நந்றி கில்லர்ஜி ஐய்யா.
   கலகலப்பானதும் ஆழமானதுமான இந்நூலை முடியும்போது வாசித்துப் பாருங்கள்.

   நீக்கு
 3. பதில்கள்
  1. தங்களிந் வருகைக்கும் கருத்துப்பகிர்விர்க்கும் மிக்க நந்றி திண்டுக்கல் தனபாலன் ஐய்யா.
   கலகலப்பானதும் ஆழமானதுமான இந்நூலை முடியும்போது வாசித்துப் பாருங்கள்.

   நீக்கு
 4. நன்றாக விமர்சனம் செய்திருகிறீர்கள். படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி மேடம்.
   நேரம் அமையும்போது நூலை வாசித்து மகிழுங்கள்.

   நீக்கு
 5. நம்மை உள்ளங்கையில் வைத்துத் தாங்கும் உறவுகள் கிடைப்பதை விட, நம்மை உதறித் தள்ளி விடாத உறவுகள் கிடைப்பதே வரம்.//
  வாசகம் அருமை.

  //'புத்தியைக் கடன்கொடுத்துவிட்டு தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் தான் எனப் பிடிவாதம் செய்தால் பேசுவதற்குக் கூட யாரும் இருக்கமாட்டார்கள்; மைன்ட்வாய்சில் தான் பேசியாக வேண்டும்!!'//
  அருமை.

  //புரியாத உறவில் எவ்வளவு அன்பு இருந்தாலும் நிலைப்பது இல்லை. புரிந்த உறவில் எத்தனை சண்டை வந்தாலும் பிரிவது இல்லை!' என்ற பெரியோர் கூற்றிற்கேற்ப நம்மை விரும்புவோர் கண்களின் கண்ஜாடையாக மிளிர்வோம். //

  அருமை.

  அருமையான விமர்சனம்.  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நூல் அறிமுகத்தை பொருமையாக வாசித்து மேற்கோள்களை ரசித்ததற்கு மிக்க நன்றி கோமதி அரசு மேடம்.

   நீக்கு
 6. வணக்கம் சகோதரரே

  வாசகம் மிக அருமையாக உள்ளது. நல்ல நூலைப் பற்றிய அருமையான விமர்சனம் முழுதுமாக படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது. இடையிடையே மேற்கோள் காட்டி வரும் வாக்கியங்கள் நூலின் சிறப்பைப் சொல்கிறது. இந்நூலை எழுதிய ஆசிரியருக்கும். விமர்சித்த உங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்துப்பகிர்விர்க்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன். மேடம்.
   மேற்கோள்கள் வெறும் சேம்பிள்கள் தான்.
   நூலை முடியும்போது வாசியுங்கள், சிறப்பாக இருக்கும்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....