செவ்வாய், 13 ஜூலை, 2021

சுஜாதா எழுதிய பயணக் கட்டுரை

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


அடைய வேண்டிய இலக்கு அவசியம் என்றால், பாதை கடினமானாலும் பயணிக்கத் தான் வேண்டும்.


*****

சமீபத்தில் மின்னூல்கள் தரவிரக்கம் செய்ய, தேடிக் கொண்டிருந்த போது, அமேசான் கிண்டிலில் விகடன் வெளியிட்ட ”விகடன் சுஜாதா மலர்” கிடைத்தது.  உடனேயே தரவிறக்கம் செய்து படிக்க ஆரம்பித்து விட்டேன். இந்த மின்னூல், புத்தக வடிவில் வெளிவந்தது. அமேசான் தளத்தில், Paperback, E-book இரண்டுமே கிடைக்கின்றன.  மின்னூலை தரவிறக்கம் செய்து படித்தேன்.  சுஜாதா குறித்து அவரது மனைவி சுஜாதா, சுஜாதா தேசிகன் மற்றும் பலரும் எழுதிய கட்டுரைகள், சுஜாதா விகடனில் அவ்வப்போது எழுதிய விஷயங்கள், சிறுகதைகள், கட்டுரைகள், ஒரு குறு நாவல் என பல விஷயங்கள் அடங்கிய மலர் இது.  மொத்தம் 353 பக்கங்கள்.  விலை:  அச்சுப் புத்தகம் - ரூபாய் 159/- மின்னூல் - ரூபாய் 121 80 பைசா (அது என்ன எண்பது பைசாவோ?).  சிறுகதைகள், குறுநாவல் என அனைத்தும் ரசித்துப் படித்தேன்.  


இதில் இருக்கும் சிறுகதைகள் (மஹாபலி, முதல் மனைவி, கறுப்புக் குதிரை, கரைகண்ட ராமன், நட்பு) மற்றும் குறுநாவல் (மலை மாளிகை) ஆகியவை முன்னரே படித்தவை என்றாலும் மீண்டும் ஒரு முறை படித்தேன். சுஜாதா பற்றி கவிஞர் வாலி, மனுஷ்ய புத்திரன், இரா.முருகன், அமுதவன், ஓவியர் ஜெயராஜ், மருத்துவர் சங்கர சரவணன், சுஜாதா தேசிகன் ஆகியோர் எழுதி இருக்கிறார்கள். இவற்றைத் தவிர சுஜாதா எழுதிய கட்டுரைகளும் உண்டு.  இவற்றில் நான் ரசித்துப் படித்தது, சுஜாதா எழுதிய பயணக் கட்டுரையான “கடவுள்களின் பள்ளத்தாக்கு - புனித யாத்திரை” என்பது தான். பயணக் கட்டுரையிலும் ஆங்காங்கே இருக்கும் அவரது “டச்” மிகவும் பிடித்தது.  தற்போதைய உத்திராகண்ட் மாநிலத்தில் இருக்கும் பத்ரிநாத் சென்று வந்தது பற்றிய கட்டுரை அது. 


திருமங்கையாழ்வார் எட்டாம் நூற்றாண்டில் பாடிய கீழ்க்கண்ட பாசுரத்தினை எடுத்துக்காட்டி, பத்ரி நாராயணனை வணங்க பயணப்பட தீர்மானித்ததாக எழுதி இருக்கிறார். 


முதுகு பற்றிக் கைத்தலத்தால் முன்னொரு கோலூன்றி

விதிர் விதிர்த்துக் கண் சுழன்று மேற்கிளை கொண்டு இருமி

இது வென்னப்பர் மூத்தவாறு என்று இளையவர் ஏசாமுன்

மது வுண் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே –1-3-2-


அவருக்கு அமைந்த மகிழுந்து ஓட்டுனர் நாராயண் சிங் வாகனத்தினை ஓட்டியதை இப்படிச் சொல்கிறார் - “நாராயண் சிங் எடுத்த எடுப்பிலேயே ரூர்க்கி போகும் ரஸ்தாவில் நூறு கிலோ மீட்டரைத் தொட்டான். மலைப்பாதைகளில் சரேல் சரேல் என்று தெலுங்குப் படத்தின க்ளைமாக்ஸ் காட்சி போல ஓட்டினான்”.  படிக்கும்போதே நமக்கு, நாமும் அந்த மகிழுந்தில் பயணிப்பது போல ஒரு உணர்வு வரும்.  மேலும், “பத்ரி போனால் மோட்சம் கிடைக்கும் என்றாலும், இத்தனை சீக்கிரத்தில் போக விரும்பவில்லை” என்று சொல்லும் போது நமக்குள்ளும் பதட்டம் ஒட்டிக் கொள்ளும்! 


மலைப்பிரதேசத்தில் அவர்கள் பயணித்த பாதையில் கூடவே வரும் அலக்நந்தா நதியினைப் பற்றிய விவரங்கள் இருக்கும் பகுதிகள் ரசனையானவை. பயணிப்பவர்கள் எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்களில் ஒன்றாக அவர் சொல்வது - ஊறுகாய் - காரணம் - சப்பாத்தி சாப்பிட்டு நாக்கு செத்துப் போகும்! ஹாஹா… சப்பாத்தி பழகாதவர்களுக்கு இந்த விஷயம் கொஞ்சம் கடினம் தான். கூடவே சொம்பு - மொண்டு குளிக்க, நதியில் இறங்க முடியாது. குளிரில் சுருங்கிப் போய் முற்றுப் புள்ளியாகிவிடுவீர்கள் - என்கிறார்! கூடவே எடுத்துச் செல்ல வேண்டிய மாத்திரைகள் பற்றி சொல்லிக் கொண்டு வரும்போது, சொல்வது “டைகர் பாம், அமிர்தாஞ்சன் போன்ற மெழுகுகள். மூச்சு முட்டினால் மார்பைத் தேய்த்து விட மனைவி!”


அங்கே இருக்கும் சிறுவர்கள் குறித்துச் சொல்லும்போது, “பைசா என்பதன் அர்த்தமோ, பிச்சை என்பதன் கொடுமையோ தெரியாத அறியாமையிலேயே பிச்சையெடுக்கத் துவங்கி விட்ட கடவுள் துண்டங்கள். இத்தனை ஏழ்மைக்கும் காரணமாக இந்திய தேசத்தின் மகத்தான தோல்வியான அரசியலைச் சொல்லவா? எதைச் சொல்வது? இத்தனை வருஷம் ஆகியும் ஆதார ஏழ்மையை ஒழிக்கவில்லையே…. எங்கே தப்பு? ஜனநாயகத்தை தூக்கி எறிந்து விடலாமா?” என்று  எழுதி இருப்பதை படிக்கும்போதே நம் நாட்டின் மஹா ஜனங்களில் பலருக்கும் இப்போதும் இருக்கும் ஏழ்மை நினைவுக்கு வந்து மனது வலிக்கிறது. 


தெலுங்கும், கன்னடமும், பெங்காலியும் இந்தியும் பஞ்சாபியும் ஒலிக்கும் ஒரு மினி இந்தியாவின் பக்தர் கூட்டம். வழக்கம் போல இச்சிலி பிச்சிலி சாமான்கள் விற்கும் கடைகள். இட்லி, தோசை “கிக்கும்” தென்னிந்திய ஹோட்டல்கள். என்ன… இட்லி கொஞ்சம் கல்லாக இருக்கும். தயிர் தோயாது. அங்கிள் சிப்ஸ் கூடக் கிடைக்கிறது (ஜாக்கிரதை! பொட்டலம் வெடிக்கிறது!” என்று எழுதி இருப்பதைப் படித்தபோது சிரிப்பு!  மலைகளை வெட்டி வெட்டி அழித்துக் கொண்டிருப்பது குறித்தும் எழுதி இருக்கிறார்.  மொத்தத்தில் ஒரு சிறப்பான பயணக் கட்டுரை - அவரது பாணியில். மிகவும் ரசித்துப் படித்தேன்.  முடிந்தால் இந்தப் பயணக் கட்டுரையை மட்டுமாவது வாசித்துப் பாருங்கள். 


நிறைய பயணக் கட்டுரைகள் படித்திருந்தாலும், சுஜாதா அவர்கள் எழுதிய இந்தப் பயணக் கட்டுரை பிடித்திருந்தது.  நீங்களும் விரும்பினால் படிக்கலாமே! பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள். நாளை மீண்டும் வேறொரு பதிவு வழி சந்திக்கும் வரை…


நட்புடன்வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து...


18 கருத்துகள்:

 1. என்னிடம் புத்தகம் இருக்கிறது.  சமீபத்தில் கூட மீள் வாசிப்பு செய்திருந்தேன் எனபதால் எளிதாக நினைவுகூர முடிந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மீள் வாசிப்பு - நல்லது. சுஜாதாவின் எழுத்து மீண்டும் மீண்டும் படித்தாலும் அலுக்காதது தான் ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. இன்று புதுமையாக சுஜாதா புத்தகம், பயணக்கட்டுரை பற்றி... அவர் எழுத்துக்குக் கேட்கவா வேணும்.

  இந்தப் பயணக் கட்டுரை படிக்கும் ஆவல் இருக்கிறது. நான் சென்ற வருடம் மே, பத்ரி போயிருக்க வேண்டியது. இந்தப் பிரச்சனை தீர்ந்து யாத்திரை அமைந்தால்தான் செல்ல முடியும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //இன்று புதுமையாக சுஜாதா புத்தகம்// - முன்னரும் அவரது நூல்கள் குறித்து எழுதியிருக்கிறேன் நெல்லைத் தமிழன்.

   //அவரது எழுத்துக்குக் கேட்கவா வேணும்// அதானே.

   விரைவில் உங்களுக்கும் பத்ரி பிரயாணம் அமையட்டும். சூழல் சரியாக வேண்டும். எனக்கும் ஒரு பயணம் செல்ல வேண்டும் என்ற ஆவல் உண்டு. பார்க்கலாம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. நூலை விரைவில் வாசிக்கிறோம் சார்.
  சுஜாதா அவர்களின் எழுத்துகள் சுவாரசியம் நிறைந்தது.
  எனக்கு பள்ளியில் திருக்குறள் சுத்தமாக பிடிக்காது.
  முதல்வன் படத்தில் சுஜாதா அவர்கள் வசனத்தில் ரகுவரன் சொல்லும் திருக்குறளின் அர்த்தத்தை வாழ்வோடு பொருத்தி உணரும்போதுதான் அதன் அருமை புரிந்தது.
  அவர் எழுத்துக்களை பொழுதுபோக்காகவும் வாசிக்கலாம், நிறைய உலகியல் விஶயங்களையும் அறிந்துகொள்ளலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முடிந்த போது நூலை வாசித்துப் பாருங்கள் அரவிந்த். உங்களுக்கும் பிடிக்கலாம்!

   பல விஷயங்களை, அதன் பலனை காலம் கடந்தே நாம் உணர்ந்து கொள்கிறோம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. பதில்கள்
  1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

   நீக்கு
 5. பதில்கள்
  1. வாசிப்பனுபவம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

   நீக்கு
 6. வணக்கம் சகோதரரே

  இன்றைய வாசகம் அருமை. திரு. சுஜாதா அவர்களின் எழுத்தை நானும் மிக விரும்பி படித்திருக்கிறேன். எழுத்தில் அவரின் புதிய அணுகுமுறை எப்போதுமே படிக்க சுவாரஸ்யமாக இருக்கும். அவரின் பயணக்கட்டுரை குறித்த தங்கள் தந்துள்ள சில வரிகளே படிக்க நன்றாக உள்ளது. இந்த நூலையும் கண்டிப்பாக நேரம் கிடைக்கும் போது படிக்கிறேன். உங்கள் அருமையான விமர்சனத்திற்கும், தகவல்களுக்கும் மிக்க நன்றிகள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

   வாசகமும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. பதில்கள்
  1. உங்களுக்கும் பதிவு பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 8. வாசகம் அருமை. சுஜாதாவின் எழுத்து ஒரு புதுத் தென்றல். எத்தனை படித்தாலும்
  அலுக்காது.
  அதை அழகாகப் பதிவிட்டிருக்கிறீர்கள்.
  மிக மிக மகிழ்ச்சி மா.
  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகமும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. வாசகம் அருமை. சுஜாதாவின் பயணக்கட்டுரை அருமை.
  //“பைசா என்பதன் அர்த்தமோ, பிச்சை என்பதன் கொடுமையோ தெரியாத அறியாமையிலேயே பிச்சையெடுக்கத் துவங்கி விட்ட கடவுள் துண்டங்கள்.//

  நாங்கள் கையிலை சென்ற போது குழந்தைகள் கையேந்தி நின்றது மனதுக்கு மிகவும் வருத்தமாய் இருந்தது
  அந்த அழகிய குழந்தைகளுடன் போட்டோ எடுத்து இருக்கிறேன்.

  பத்ரியிலும் அப்படித்தான் . பொருட்களை விற்கும் குழந்தைகளும் நம்மை மொய்த்துக் கொள்வார்கள்.
  நம் பஸ் நின்றவுடன் அப்படியே குவிந்து விடுவார்கள் .
  அருமையான விமர்சனம் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகமும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

   வட இந்திய நகரங்கள் பலவற்றில் இப்படியான குழந்தைகள் உண்டும்மா - குறிப்பாக உத்திரப் பிரதேசத்தில்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....