திங்கள், 26 ஜூலை, 2021

வாசிப்பனுபவம் - மின்னூல் - இது அன்பின் ராகம்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கடந்து வந்த பாதை பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


மஹான் போல வாழ வேண்டும் என்று அவசியமில்லை; மனசாட்சிப்படி வாழ்ந்தால் போதும்.


******

சஹானா இணைய இதழின் வாசிப்புப் போட்டிக்காக நான் படித்த ஒரு மின்னூல் ராஜேஸ்வரி D அவர்கள் எழுதிய “இது அன்பின் ராகம்” எனும் நாவல். அந்த மின்னூல் குறித்து இன்றைய பதிவில் பார்க்கலாம் வாருங்கள்! 


வெளியீடு: அமேசான் கிண்டில்

பக்கங்கள்: 281

விலை: ரூபாய் 199

மின்னூல் தரவிறக்கம் செய்ய சுட்டி கீழே:


இது அன்பின் ராகம். (Tamil Edition) eBook : d, Rajeswari


பிரதான கதாபாத்திரங்கள்: ராம், குரு, திலகவதி, சுமித்ரா


ராம்:  அம்மா திலகவதியிடம் தனக்குப் பார்த்து இருக்கும் பெண் சுமித்ராவிற்கும் தனக்கும் ஆறு வயது வித்தியாசம் இருப்பதால் வேண்டாமென்று சொல்வதில் ஆரம்பிக்கிறது கதை.  ஆனால் நிச்சயம் வரை வந்து விட்ட பிறகு இப்படிச் சொல்வது சரியல்ல – அத்தனை அழகான ஜோடிப் பொருத்தம் இருக்கிறது – என்று அவனை சமாதானம் செய்கிறார் அம்மா.  கல்யாண வேலைகள் ஜரூராக நடக்கிறது.  முதலில் வயது வித்தியாசம் பற்றி சொல்லி இருந்தாலும் பின்னர் ஒப்புக்கொண்டு தனக்கு வரப் போகும் மனைவி சுமித்ரா பற்றிய கனவுகளில் இருக்கிறான் ராம்.  அமைதியானவன், எப்போதும் வீட்டிலேயே இருக்கப் பிடிக்கும் ராம்-க்கு ஒரு தம்பி – குரு!  


குரு:  அண்ணன் ராமிற்கு நேர் மாறாக எப்போதும் வெளியே செல்லவும், பயணங்கள் மேற்கொள்ளவும், நிழற்படங்கள்/காணொளிகள் எடுக்கவும் வனப்பகுதிகளுக்குள் செல்லவும், Adventure பயணங்கள் மேற்கொள்ளவும் மிகவும் பிடித்த விஷயங்கள் குருவிற்கு! (இந்த குருவின் கதாபாத்திரத்தில் என்னைக் கண்டேன்! பயணம் மற்றும் நிழற்படங்கள் எடுப்பது குறித்த ஆர்வத்தில் மட்டும்! ஹாஹா!) பயணம் செல்லும்போதெல்லாம் தனது அலைபேசியைத் தொலைத்துவிடுவதும், அதனால் தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்று விடுவதும் இவனது வாடிக்கையாகவே போயிற்று!  இவனது பயணங்களில் ஒன்றாக மலையேற்றம் – மலைப்பகுதியில் தீவிபத்து ஏற்பட்டு அதில் பலர் உயிரிழந்த நிகழ்வினையும் கதையில் ஸ்வாரஸ்யமாகச் சேர்த்திருக்கிறார் ஆசிரியர். தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதால் தனது அண்ணனின் நிச்சயதார்த்த நிகழ்வுக்கே வர இயலாத சூழல். அண்ணனும், தம்பியும் சகோதரர்கள் என்று சொல்வதை விட நெருங்கிய நண்பர்களாகவே பழகுகிறார்கள்.


சுமித்ரா:  அண்ணன் ராமிற்குப் பார்த்திருக்கும் பெண்! வரதட்சிணை தருவது அறவே பிடிக்காத விஷயம் சுமித்ராவிற்கு!  பெண் பார்க்கும் படலம் முடிந்த பிறகு ராமின் குடும்பத்திற்குத் தெரிந்த ஒருவர் வந்து நகை, பணம் பற்றி பேச வந்த போது, இப்படி பணம், நகை கொடுத்து தனக்கு திருமணம் வேண்டவே வேண்டாம் என்று கராறாகச் சொல்கிறார் – மாப்பிள்ளை ராமிற்கும் அதையே சொல்கிறார்.  தாங்கள் கேட்கவில்லை, அவராகவே வந்து இப்படி ஒரு தகவலைச் சொல்லி இருக்கிறார் என்று சொல்லி, தங்களுக்கு அப்படியான எண்ணம் இல்லை என்று சொன்ன பிறகு தான் கொஞ்சம் சாந்தம் அடைகிறார்.  தன் திருமணம் முடிந்து தான் வாழப் போகும் வாழ்க்கை எப்படி இருக்கும் என்ற நினைவுகளில் இருக்க திருமணமும் நடக்கிறது.  அதன் பிறகு?


திலகவதி:  எல்லா மாமியார்கள் போல இல்லாமல், தனது மருமகளை மகளாகவே, வீட்டில் பெண் இல்லாத குறையை தனது மருமகள் போக்குவார் என்ற எண்ணத்துடன் இருக்கிறார் திலகவதி.  பார்த்துப் பார்த்து எல்லா விஷயங்களையும் செய்கிறார்.  திருமணம் சிறப்பாக நடந்து முடிய வீட்டுக்கு அழைத்து வருகிறார்கள்.  திருமணம் முடிந்து எல்லோரும் புறப்பட, ராமின் தம்பி குருவும் அவன் வேலை பார்க்கும் ஊரான பெங்களூருவிற்கு திரும்ப வேண்டும்!  தம்பியை வழியனுப்பி வைத்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பும்போது திருஷ்டி சுத்திப் போடுகிறேன் என வீதியில் உடைத்துப் போட்டிருக்கும் பூசணிக்காய் காரணமாக விபத்துக்குள்ளாகி அந்த இடத்திலேயே மரணிக்கிறான்.  இந்த இடத்தில் தான் திலகவதி தனது மருமகளுக்கு, சடங்கு என்ற பெயரில் நடக்கும் அனியாயங்களை அறவே கூடாது என்று சொல்வதோடு பெரிய ஆறுதலாக இருக்கிறார்.  அது மட்டுமல்லாது தனது இரண்டாவது மகன் குருவிற்கே திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று முடிவெடுக்கிறார்.  அவர் எடுத்த முடிவு சரியானதா, இல்லையா, மருமகள் சுமித்ரா தனது துக்கத்திலிருந்து விடுபடுவதற்குள் அடுத்த கல்யாணம் செய்வது சரியா என்ற குழப்பங்கள் இரண்டு வீடுகளிலும்!


சுமித்ரா – குரு திருமணம் முடிந்த உடன் பெங்களூருக்குச் சென்று விடுகிறார்கள்.  குரு தனது அண்ணனின் மனைவியாக வந்து தனக்கே மனைவியாகிவிட்ட சுமித்ராவினை எப்படி நடத்தினான், அவர்களுக்குள் உண்டான திடீர் உறவு எப்படி ஆனது என்பதை எல்லாம் மிகச் சிறப்பாக சொல்லி இருக்கிறார் ஆசிரியர்.  காதல், பயணம், ஊடல், நட்பு, சமூகத்தில் புறையோடி இருக்கும் லஞ்சம், ஊழல், எதிர்பார்ப்புகள் என பல விஷயங்களை நடுநடுவே சொல்லிச் சென்றிருக்கிறார் ஆசிரியர்.  சிறப்பானதோர் குடும்ப நாவலை வாசிக்க விரும்புபவர்கள் ”இது அன்பின் ராகம்” என்ற இந்த மின்னூலை தரவிறக்கம் செய்து வாசிக்கலாம்.  சிறப்பாக எழுதிய கதாசிரியருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்!


இதுவரை நான் வெளியிட்ட மின்னூல்களுக்கான சுட்டி கீழே.  முடிந்தால் எங்களது நூல்களை தரவிறக்கம் செய்து வாசிப்பதோடு, உங்கள் வாசிப்பனுபவங்களையும் பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி!  


சந்தித்ததும் சிந்தித்ததும்: மின்புத்தகங்கள்...


நண்பர்களே, இந்த வாரத்தின் வாசிப்பனுபவம் குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டம் வாயிலாகத் தெரிவிக்கலாமே! நாளை வேறொரு பதிவின் வழி உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து...


16 கருத்துகள்:

 1. நல்லதொரு முடிச்சு. மனப்போராட்டம். அந்தப் பெண்ணின் மனநிலைதான் எப்படி இருக்கும் என்று என்ன வைக்கிறது. நல்ல பகிர்வு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு குறித்த உங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. கதையின் போக்கு புதுமையாக இருக்கிறது. விமர்சனம் அருமை ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. வாசகம் அருமை.
  கதை மனதை கஷ்டபடுத்தினாலும் முடிவு நிறைவு தருகிறது .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகமும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. வணக்கம் சகோதரரே

  இன்றைய வாசகம் அருமை. அறிமுகப்படுத்திய இக்கதை படிக்கவே மனதுக்கு கஸ்டமாக இருந்தது. மாமியார் நல்ல முடிவாக எடுத்துள்ளார். கதையானாலும் அவர்கள் நன்றாக இருக்கவேண்டும் மனது பிரார்த்திக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

   வாசகமும் கதையும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. நூலின் மதிப்பீடு, பழைய தமிழ்த் திரைப்படத்தைப் பார்த்த உணர்வினைத் தந்தது. நூலாசிரியருக்குப் பாராட்டுகள். உங்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நூல் விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. வித்தியாசமான கதை! முற்போக்கு சிந்தனைகள் உள்ள மாமியார்! கதையை இன்னும் ஆழமாகப்படிக்கையில் நிச்சயம் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று நம்புகிறேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முடிந்தால் கதையைப் படித்துப் பாருங்கள் மனோம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. சுவாரசியமான கதை... நீங்கள் சொல்லா விட்டாலும் உங்களை நினைக்க வைக்கும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 8. வித்தியாசமான கதை. இன்றைய வாசகம் பிடித்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகமும் பதிவும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....