வியாழன், 1 ஜூலை, 2021

பயணம் செய்ய ஆசை - 3 - GURUDONGMAR LAKE, SIKKIMஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கடந்து வந்த பாதை பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


எண்ணத்திற்கேற்ப வசதிகளைப் பெருக்குவதை விட, வசதிகளுக்கேற்ப எண்ணங்களை குறைப்பது நலம்!


******


பயணம் செய்ய ஆசை என்ற தலைப்பில் இது வரை இரண்டு பதிவுகள் எழுதி இருக்கிறேன்.  இதோ மூன்றாவதாக அதே தலைப்பில் ஒரு பதிவு.  முதல் பகுதியில் உத்திராகண்ட் மாநிலத்தில் உள்ள (CH) சோப்டா எனும் இடத்திற்குச் செல்வது பற்றி எழுதினேன் என்றால், இரண்டாவது பகுதியில் மேகாலயா மாநிலத்தில் இருக்கும்  Umngot River - Dawki எனும் இடத்திற்குச் செல்வது குறித்து எழுதினேன்.  அதே வரிசையில் இன்று நான் பார்க்க, பயணம் செய்ய ஆசைப்படும் இடமாக, சிக்கிம் மாநிலத்தில் உள்ள ஒரு இடம் பற்றி சொல்லப் போகிறேன்.  சிக்கிம் மாநிலம் - இந்தியாவின் இருபத்தி இரண்டாவது மாநிலமாக 1975-ஆம் ஆண்டில், இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் 1975 (36-ஆவது திருத்தம்) மூலம் உருவாக்கப்பட்டது.  மலைகள் சூழ்ந்து, திபெத் மற்றும் சீன எல்லைகளுக்கு அருகே இருக்கும் மாநிலம் இது. 


சிக்கிம் மாநிலத்திற்குப் பயணிக்க திட்டமிட்டு, தங்குமிடங்கள், வாடகை ஊர்தி என ஏற்பாடுகள் செய்து, கடைசி நேரத்தில் என்னால் பயணிக்க முடியாமல் போனது.  நண்பர்கள் மட்டுமே சென்று வந்தார்கள்.  அதன் பிறகு பல முறை நினைத்தாலும், யோசித்தாலும், பயணம் செய்ய வாய்ப்பு அமையவில்லை. அங்கே தனியாகச் செல்வது அதிக செலவாகும் ஒரு பயணமாக இருக்கும் என்பதால், தனியாகச் செல்ல விருப்பமில்லை.  மீண்டும் ஒரு குழு அமைய வேண்டும் - அப்படி அமைந்தால் பயணிக்கலாம் - இன்றைய தீநுண்மியின் தீவிரமும் குறைய வேண்டும் என்பதால் இப்போதைக்கு அங்கே பயணிக்க வாய்ப்பில்லை.  ஆசையை மட்டும் மனதுக்குள் வைத்துக் கொள்வதோடு, இப்படி எழுதி மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டியது தான் - வேறு வழியில்லை. சிக்கிம் மாநிலத்தில் பார்க்க வேண்டிய இடங்கள் நிறையவே உண்டு.  ஒரு வாரமாவது அங்கே இருக்கும்படிச் சென்றால் நிறைய இடங்களை, அழகான, அற்புதமான சீதோஷ்ணம் கொண்ட இடங்களை நீங்கள் பார்த்து வர முடியும்.  அப்படி பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றைக் குறித்து மட்டும் இங்கே, இந்தப் பதிவில் பார்க்கலாம். 

GURUDONGMAR LAKE - மலைச்சிகரங்களுக்கு இடையே, கடல் மட்டத்திலிருந்து 5183 மீட்டர் உயரத்தில் இருக்கும் பனிப்பிரதேச ஏரி இந்த குருடாங்மார் ஏரி.  குரு பத்மசம்பவா எனும் புத்த மத குரு ஒருவரின் பெயரால் அழைக்கப்படும் இந்த ஏரி திபெத்/சீன எல்லையில் இருப்பதால் இந்த ஏரிப்பகுதிக்குச் செல்ல, இந்தியர்களுக்கு மட்டுமே அனுமதி - அதுவும் அனுமதிச் சீட்டு பெற்ற பிறகு செல்ல முடியும்.  பொதுவாகவே சிக்கிம் மாநிலத்திற்குச் செல்வதற்கே, இந்தியராக இருந்தாலும் கூட, அனுமதிச் சீட்டு ஒன்றைப் பெற வேண்டும் - Inner Line Permit என்ற பெயரில், சிக்கிம் அரசாங்கத்தினரால் வழங்கப்படும் அனுமதிச் சீட்டு பெற்ற பிறகே நீங்கள் சிக்கிம் மாநிலத்திற்குச் செல்ல முடியும். இந்த அனுமதிச் சீட்டு மட்டுமின்றி ஏரிப்பகுதிக்குச் செல்லவும் இந்திய இராணுவத்திடம் அனுமதி பெற வேண்டியிருக்கும்.  இதனை தனிநபராக பெறுவது கொஞ்சம் கடினம் என்பதால், பயண ஏற்பாட்டாளர்கள் மூலம் ஏற்பாடு செய்து கொள்வது நல்லது.  
கடல் மட்டத்திலிருந்து 17000 அடி உயரத்திலிருக்கும் இந்த ஏரியானது பூமிப் பந்தில் இருக்கும் அதிஅற்புதமான, ஆச்சர்யம் அளிக்கும் ஏரிகளில் ஒன்று என்று சொல்வார்கள்.  KHANGCHENGYAORANGE (கன்சன்ஜங்கா என நாம் படித்த KHANGCHENJUNGA மலைச்சிகரம் கூட இந்தப் பகுதியில் தான் இருக்கிறது) என அழைக்கப்படும் ஹிமாலய மலைத் தொடரின் வடப் புறம் அமைந்திருக்கும் இந்த ஏரி சுற்றிலும் மலைச்சிகரங்களால் சூழப்பட்டு இருக்கிறது.  வருடத்தின் பெரும்பகுதி நாட்களில் உறைந்து விடும் இந்த ஏரிப்பகுதி முழுவதுமே இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு இடம். சுற்றிலும் மலை, பனிச் சிகரங்கள் எனக் காண்பதற்கே அழகாக இருக்கும் இந்த இடத்திற்குச் செல்ல உங்களுக்கும் ஆசை வரலாம்!  வருடத்தின் நான்கு மாதங்கள் மட்டுமே - மார்ச் முதல் ஜூன் வரை - இங்கே செல்ல உகந்த மாதங்கள்.  இந்த மாதங்களிலும் தட்பவெப்ப நிலை +5 டிகிரி செல்சியஸ் முதல் -5 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்பதால் அதீத குளிரைத் தாங்கும் உடைகள் மிக மிக அவசியம்! 

ஹிந்துக்கள் மட்டுமல்லாது புத்த மதத்தினர்களாலும் மிகவும் புனிதமாகக் கருதப்படும் ஏரியின் தண்ணீருக்கு சிறப்பான சக்திகள் இருப்பதாக நம்பப் படுகிறது - அப்படி என்ன சக்தி?  குழந்தைகள் இல்லாத தம்பதிகள் இந்த ஏரியின் சுவையான தண்ணீரைப் பருகினால் குழந்தை பெற வாய்ப்பு உண்டாக்கக் கூடிய சக்தி தான் - என்ற நம்பிக்கை இங்கே உள்ளவர்களுக்கு இருக்கிறது.  இந்த ஏரிக்கு, குருடாங்மார் ஏரி என்ற பெயர் வரக் காரணமாக இருந்த குரு பத்மசம்பவா எனும் புத்த மத குரு, திபெத் செல்லும் போது இந்தப் பாதை வழியே சென்றதாகவும் அதனால் அவர் பெயராலேயே இந்த ஏரி அழைக்கப்படுகிறது என்றும் சொல்கிறார்கள். தவிர ஏரியின் ஒரு பகுதியை அவர் தொட்டதால், கடுமையான குளிர் நாட்களில் கூட ஏரியின் அந்தப் பகுதி மட்டும் உறைந்து போவதில்லை என்றும், குளிர்காலத்தில் கூட அங்கே தண்ணீர் பஞ்சமில்லை என்றும் சொல்கிறார்கள். மிகவும் அழகான இந்த ஏரி, குளிர் காலத்தில் உறைந்து விடுவதால் ஆபத்தானதும் கூட! 

கடல் மட்டத்திலிருந்து 17000 அடி உயரத்தில் இருப்பதால் ஆக்ஸிஜன் (பிராண வாயு) அளவு குறைந்து விடும் என்பதால், மூச்சுத் திணறல் போன்ற தொல்லைகள் சிலருக்கு ஏற்படலாம்!  அதனால் இந்தப் பகுதிக்குச் செல்லும் வேளையில் உடலை அதிகமாக அலட்டிக் கொள்ளக் கூடாது - குதிப்பது, வேகமாக நடப்பது, ஓடுவது போன்றவை அறவே ஆகாது! - ”பதவிசா போய்ட்டு பதவிசா வரணும்” என்று பெரியவர்கள் சொல்வது இந்த இடத்திற்குச் சாலப் பொருத்தமான வரிகள்!  குளிர் எல்லா நாட்களிலும் இருக்கும் என்பதால் குளிர்கால உடைகள் அத்தியாவசமாக எடுத்துச் சென்றே ஆக வேண்டும். மலைப்பகுதி என்பதால், கரடுமுரடான சாலைகள் தான் - இந்த இரண்டும் சிலருக்கு ஒவ்வாமையை உண்டாக்கக் கூடும் - அதற்கான மருந்துகளும் கைவசம் வைத்துக் கொள்வது நல்லது! ஐந்து வயதுக்குக் குறைவான சிறுவர்/சிறுமியர்களுக்கு அனுமதி இல்லை என்பதையும் நினைவில் கொள்க!

எப்படிச் செல்வது - செல்லும் வழி:  சிக்கிம் தலைநகர் (G)காங்க்டாக்-லிருந்து லாச்சன் (LACHAN) வழியே குருடாங்மார் ஏரிக்குச் செல்ல சுமார் 180 கிலோமீட்டர் பயணிக்க வேண்டியிருக்கும்.  ஒரேயடியாக இந்தத் தொலைவினைக் கடக்க முடியாது என்பதால் வழியில் லாச்சன் பகுதியில் இருக்கும் தங்குமிடங்களில் ஏதாவது ஒன்றில் தங்கி அடுத்த நாள் காலையிலேயே புறப்பட்டு ஏரிப்பகுதிச் சென்று லாச்சன் திரும்பி, அங்கே தங்கி மீண்டும் காங்க்டாக் வரை பயணிக்கலாம். இதற்கு நான்கு நாட்கள் தேவை. லாச்சன் பகுதியில் மட்டுமே தங்குமிடங்கள் உண்டு என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.  கூடுதலாக ஒரு செய்தியும் - குருடாங்மார் ஏரிப்பகுதியில் மாலை நேரங்களில் குளிர் அதிகமாகத் தெரியும் என்பதால் மதியத்திற்குள் அங்கிருந்து புறப்பட்டு விடுவது நல்லது.  லாச்சன் தவிர லாச்சுங்க் என்ற இடமும் உண்டு.  உங்களிடம் அதிக நாட்கள் இருந்தால், அங்கேயும் சென்று வரலாம்.  வாழ்க்கையில் ஒரு முறையேனும் சிக்கிம் மாநிலத்திற்கும், குறிப்பாக இந்த குருடாங்மார் ஏரிக்கும் சென்று வர வேண்டும் என ஆசை உண்டு.  ஆசைகள் நிறைவேறினால் நல்லதே - அப்படி இல்லை என்றால், கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை.  வசதிகள் பெருகிவிட்ட இந்த நாட்களில், இணையம் வழியே இந்த இடங்களைக் கண்டு விடவோ, அந்த இடங்கள் குறித்த தகவல் பெறவோ வழி இருக்கிறது என்பதால், கவலை இல்லை!  அங்கே சென்று இயற்கையை, சூழலை ரசிக்க இயலாதவர்கள் இப்படியாவது ரசித்து விடலாமே!  ஒரு சிலர் ஆசைப்பட்டதை அடைந்து விடுகிறார்கள்.  அப்படி ஆசைப்பட்டு இங்கே பயணித்த ஒருவரின் கட்டுரை - ஆங்கிலத்தில் - இந்தத் தளத்தில் இருக்கிறது. வாய்ப்பிருந்தால் படித்துப் பாருங்களேன்! இந்தப் பதிவில் இணைத்திருக்கும் படங்கள் அனைத்துமே இணையத்திலிருந்து எடுத்தவை. படங்களை எடுத்தவர்களுக்கு நன்றியுடன்! மீண்டும் வேறு ஒரு இடம் - பயணிக்க ஆசைப்பட்ட இடம் குறித்த தகவல்களுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன்.  


நண்பர்களே, இந்தப்  பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை பின்னூட்டங்கள் வாயிலாகச் சொல்லுங்கள்.  மீண்டும் வேறொரு பதிவின் வழி சந்திக்கும் வரை…


நட்புடன்வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…


18 கருத்துகள்:

 1. ஏக்கத்துடன் எழுதி இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். படிக்கும் எனக்கே அங்கு ஒருமுறை செல்ல விருப்பம் ஏற்படும்போது, அங்கு செல்ல திட்டமிட்டு செல்ல முடியாமல்போன உங்களுக்கு எப்படி இருக்கும் என்று உணர முடிகிறது. விருப்பம் சீக்கிரமே பிரார்த்திக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏக்கம் - ஹாஹா... அப்படியும் சொல்லலாம்! நாம் திட்டமிடுவது எல்லாமே நடந்து விடுவதில்லையே! அது தெரிந்திருப்பதால் அத்தனை துக்கம் இல்லை ஸ்ரீராம்.

   முடியும் போது நிச்சயம் சென்று வருவேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. தங்களது சிக்கிம் ஆசை விரைவில் நிறைவேறட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆசைகளுக்கு அளவேது? ஹாஹா! நிறைவேறினால் மகிழ்ச்சியே கில்லர்ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. மிக மிக அற்புதமான இடம். நீங்கள் கட்டாயம் அங்கே போய் வந்து எழுதுவீர்கள் மா.
  நினைத்தாலே குளிரும்ம்ம்ம்ம்ம்ம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அற்புதமான இடம் தான் மா. முடிந்த போது பயணிப்பேன் வல்லிம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. சரியான திட்டமிடல்... விரைவில் பயணம் நிறைவேற வாழ்த்துகள்... ஏரியின் சிறப்புகளும் அருமை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பயணம் நிறைவேறினால் மகிழ்ச்சியே தனபாலன். தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. வணக்கம் சகோதரரே

  வாசகம் அருமை. பதிவில் குறிக்கப்பட்டிருக்கும் சிக்கிம் மாநில மலை பிரதேச இடங்கள், உறைந்த /உறையாத ஏரிபடங்கள் எல்லாமே பார்க்க அழகாக உள்ளது. அந்த ஏரியின் நீர் பற்றிய தகவல் உபயோகமானது. புத்தமத குருவின் கைபட்ட இடம் இன்று வரை குளிர்காலங்களில் உறைந்து போகாமல் இருப்பது அதிசயந்தான். இன்றைய குரு வாரத்தில் அந்த மகாகுருவை மானசீகமாக வணங்கிக் கொள்கிறேன். உங்களுக்கும் இங்கு பயணம் செல்ல சந்தர்ப்பம் கூடிய விரைவில் நல்லபடியாக அமையட்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

   வாசகமும் பதிவின் வழி சொன்ன விஷயங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. உங்கள் ஆசையைப் புரிந்துகொள்ள முடிகிறது. சாப்பாட்டிற்குத்தான் என்ன செய்வீர்களோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சைவ உணவு கிடைக்கும். ரசம், சாம்பார், சாதம், தயிர் போன்றவை மட்டுமே வேண்டுமென்றால் கடினம் தான் நெல்லைத் தமிழன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. குளிர்காலத்திலும் பஞ்சம் ஏற்படுவது புதுமை தான்.
  சீக்கிரம் தங்கள் பயணம் தொடங்க வாழ்த்துகிறோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தண்ணீர் முழுக்க உறைந்து விடும் போது, பஞ்சம் தானே அரவிந்த்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. பயணம் செய்ய வாய்ப்பு விரைவில் வரட்டும்.
  வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்
  அழகான இடம். பார்க்க ஆவலைத் தூண்டும் கட்டுரை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவும், பதிவின் வழி சொன்ன விஷயங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா. வாய்ப்பு கிடைத்தால் செல்ல வேண்டும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. திட்டமிட்ட பயணத்தில் கடைசி நேரத்தில் கலந்து கொள்ள இயலாமல் போவது பெரும் வேதனை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....