சனி, 15 ஜனவரி, 2022

காஃபி வித் கிட்டு - 139 - பாரம் - Gகேவர் - கோலங்கள் - Exam Collection - அவரும் நானும் - மூன்றாம் அலை - தமிழில் தட்டச்சு

 

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட திருப்பட்டூர் கோவில் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

நீங்கள் ஒரே எதிரியுடன் அடிக்கடி போர் செய்யக் கூடாது; அப்படிச் செய்தால் உங்கள் போர்க்கலைகளை அவர்களுக்கு கற்றுக் கொடுத்துவிடுவீர்கள் - நெப்போலியன்.

 

******

 

இந்த வாரத்தின் ரசித்த கதை - பாரம் :




 

சொல்வனம் தளம் போலவே அவ்வப்போது பிரதிலிபி தளத்திலும் வாசிப்பதுண்டு.  அங்கே வாசித்த ஒரு சிறுகதை தான் பாரம்வெளிநாட்டிலிருந்து இந்தியா வரும் ஒருவருடைய எண்ணங்கள் தான் இந்த சிறுகதை.  நன்றாகவே எழுதி இருக்கிறார் கதாசிரியர் சாரதா. சாரு!

 

******

 

இந்த வாரத்தின் உணவு/இனிப்பு - Gகேவர் :



 

Gகேவர் எனும் இந்த இனிப்பு குறித்து முன்னரும் பதிவு செய்திருக்கிறேன்.  இந்த வாரம் வெளியிட்டு இருக்கும் இந்தப் படம் சமீபத்தில் ஒரு கண்காட்சியில் எடுத்தது - அங்கே விதம் விதமாக உணவு வகைகள் இருந்தன - அவற்றில் சிலவற்றை நானும் படம் பிடித்தேன்.  இந்த Gகேவர் உடன் ரப்டி சேர்த்து சாப்பிட்டால் ஆகா எனச் சொல்ல வைக்கும்! 

 

******

 

பழைய நினைப்புடா பேராண்டி: கோலங்கள்

 




2015-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - வண்ண மயமாய் போகி கோலங்கள்

 

பதிவிலிருந்து சில வரிகள் இங்கே! முழு பதிவினையும் படிக்க, மேலே உள்ள சுட்டியைச் சொடுக்கலாம்! 

 

பல வருடங்களுக்குப் பிறகு பொங்கல் சமயத்தில் தமிழகத்தில் இருக்கிறேன்.  தில்லியில் பொங்கல் அன்று விடுமுறை இல்லை. அதனால் பொங்கல் அன்று பெரும்பாலும் அலுவலகத்தில் தான். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழகத்தில் இருப்பதால் பொங்கல் இம்முறை சிறப்பானது என்று நினைக்கிறேன். 

 

திருவரங்கத்தில் பொதுவாகவே கோலங்கள் நிறைய போடுவார்கள்.  இந்த சமயத்தில் இங்கே இருப்பதால் நேற்று காலை திருவரங்க வீதிகளில் கேமராவுடனும் மகளுடனும் ஒரு வீதி உலா வந்தேன்! பல வீடுகளில் அருமையான கோலங்கள் வண்ண வண்ணக் கோலங்கள் போட்டு இருக்க அவற்றை புகைப்படங்கள் எடுத்து வந்தேன்.  கிட்டத்தட்ட 75 புகைப்படங்கள் அவற்றிலிருந்து தேர்ந்தெடுத்த சில புகைப்படங்கள் மட்டும் இன்றைய பதிவில்.



******

 

இந்த வாரத்தின் ரசித்த காணொளி - The Exam Collection :

 

சமீபத்தில் நெய்வேலி தோழி ஸ்ரீமதி முகநூலில் ஒரு விளம்பரம் பகிர்ந்து இருந்தார்.  மிகவும் பிடித்ததாக இருந்தது.  நான் ரசித்ததை நீங்களும் ரசிக்க இதோ அந்த காணொளி! 


 


விளம்பரம் சொன்ன விஷயம் உண்மை தானே! படிக்க ஆசைப்படுவதை படிக்க இங்கே முடிவதில்லை! வெளிநாடுகளில் இந்த மாதிரி வசதிகள் உண்டு என்பதை படிக்கும்போது கொஞ்சம் வருத்தம் உண்டாவது வழக்கம்.  ஆனாலும் நம் நாட்டின் மக்கள் தொகை போன்ற சில விஷயங்களை கருத்தில் கொள்ளும் போது முன்னேற்றம் ஏற்படுவது கடினம் என்றே தோன்றுகிறது. 

 

******

 

இந்த வாரத்தின் எண்ணம் - அவரும் நானும் - எனது எண்ணங்கள் :

 

இல்லத்தரசி எழுதிய அவரும் நானும் தொடர், முகநூலிலும் நண்பர்கள் வட்டத்திலும் நிறைய பாராட்டுகளைப் பெற்றது.  மின்னூலாகவும் வெளியிடும் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.  தொடர் குறித்த எனது கருத்துகள் என்ன என்று அவ்வப்போது பதிவுகளில் சிலர் கேட்டிருந்தார்கள்.  அது குறித்து வீட்டில் பேசிக் கொண்டிருந்த போது, நான் வேணும்னா அவளும் நானும்என்று தலைப்பிட்டு தொடராக எழுதவா? என்று வம்பு வளர்த்துக் கொண்டிருந்தேன்.  அதற்குக் கிடைத்த பதில் - எழுதிட்டாலும்! நீங்க சரியான அமுக்குணாங்கிழங்கு! என்ன நினைக்கிறீங்கன்னு சொல்லிடவா முடியும்?”   சரியாத்தான் புரிந்து வைத்திருக்கிறார்!  :) சரி நீங்களே சொல்லுங்களேன் - என் எண்ணங்களை இப்படி ஒரு தொடராக எழுதலாமா? வேண்டாமா?  நீங்கள் சொல்லும் பதிலை வைத்து நான் எழுதலாமா வேண்டாமா என முடிவு செய்து விடுகிறேன்! ஹாஹா. 

 

******

 

தீநுண்மியின் கொடுமை - அதிவேகமாக பரவும் நிலை :

 

தீநுண்மி - இந்த வார்த்தையைக் கேட்டுக் கேட்டு அலுத்து விட்டது.  எத்தனை முறை அலை வரும், எத்தனை எத்தனை பேரை பாதிக்கும்; இன்னும் எத்தனை பேரை விழுங்கி குடும்பங்களை தத்தளிக்கச் செய்யும் என்ற வேதனையான சூழலில் தான் இன்னமும் நம் நாடும் மொத்த உலகமும் இருகின்றது.  எங்கள் அலுவலகத்திலும் தொடர்ந்து பலரும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.  சென்ற மாதம் தான் எனக்கு அலுவலகத்தில் ஒரு பிரிவிலிருந்து வேறொரு பிரிவுக்கு மாற்றல் ஆனது - புதிய பிரிவு தினம் தினம் பலரும் வந்து போகும் இடம் என்பதால் எப்போது தீநுண்மி யாரிடமிருந்து நம்மை பற்றிக் கொள்ளுமோ என்ற கவலையுடனே நாட்கள் நகர்கின்றன.  சமீபத்தில் எங்கள் அலுவலகத்தில் 150 பேருக்கு சோதனை செய்ய, அதில் 55 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது!  என்ன நடக்குமோ அது நடந்தே தீரும் என்று மனதைத் தேற்றிக் கொண்டு தொடர்ந்து அலுவலகம் சென்று வந்து கொண்டிருக்கிறோம். - நல்லதே நடக்கட்டும் என்ற பிரார்த்தனையோடு!

 

*****

 

இந்த வாரத்தின் தகவல் - தமிழில் தட்டச்சு

 

வீட்டில் கணினி இல்லாததால் பெரும்பாலான பதிவுகளை அலைபேசி வழி தான் படிக்கவும், கருத்திடவும் செய்கிறேன்.  அப்படி கருத்திடுவதும் கூட GBoard பயன்படுத்தி தான்.  எழுத வேண்டிய கருத்தினை பேச, அதைக் கேட்டு வார்த்தைகளாக தட்டச்சு செய்து தரும் வசதி இருப்பதால் அலைபேசியில் பயன்படுத்துவது எளிதாக இருக்கிறது என்றாலும் பல சமயங்களில் நாம் சொல்வதைக் கேட்டு விட்டு, அதாகவே எதையாவது தட்டச்சு செய்து விடுகிறது! அதனால் மீண்டும் படித்த பிறகே கருத்தினை வெளியிட வேண்டியிருக்கிறது.  நாம் ஒன்று சொல்ல, அது ஒன்றை புரிந்து கொள்ள சொல்ல வந்த விஷயம் அர்த்தத்திலிருந்து அனர்த்தமாகி விடுகிறது!  உதாரணத்திற்கு ஒன்று - நலமே விளையட்டும்!என்று நான் சொல்ல, அதாகவே வேறொன்றாக புரிந்து கொண்டு மனமே கலையட்டும்!என்று தட்டச்சு செய்து காண்பிக்கிறது!  ஹாஹா.  இரண்டுக்கும் எத்தனை வித்தியாசம் என்று பாருங்கள்!

 

*****

 

இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து.

 

30 கருத்துகள்:

  1. ஆரம்ப காலங்களில் ப்ரதிலிபி பக்கம் சென்றதுண்டு.  இப்போதெல்லாம் செய்வதில்லை.

    அந்த உணவு வடகம் போலவும் இருக்கிறது, ரொட்டி போலவும் இருக்கிறது.  ரப்டி என்றால் என்ன?

    அவரும் நானும் தொடரில் நீங்கள் சேர்ந்து எஹுதி இருந்தால் (ஒரு வாரம் நீங்கள், ஒரு வாரம் உங்கள் மனைவி) கண்டாய் இருந்திருக்கும் என்று இப்போது தோன்றுகிறது.  இப்போது தனியாய் அதே போலஎழுதுவது  சரியாய் வருமா என்று தெரியவில்லை.  வேறு மாதிரி யோசிக்கலாம்.

    தீ நுண்மி - ஆம், திக்கெட்டும் ஜோராய்ப் பரவுகிறது!

    தமிழில் தட்டச்சு - கணினியில் அழகி எப்போதாவது உபயோகிப்பேன்.  99.9% கூகுள் டிரான்ஸ்லிட்.தான்.  அலைபேசியில் செல்லினம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருத்தம் :

      அவரும் நானும் தொடரில் நீங்கள் சேர்ந்து எழுதி இருந்தால் (ஒரு வாரம் நீங்கள், ஒரு வாரம் உங்கள் மனைவி) நன்றாய் இருந்திருக்கும் என்று இப்போது தோன்றுகிறது.  இப்போது தனியாய் அதே போல எழுதுவது  சரியாய் வருமா என்று தெரியவில்லை.  வேறு மாதிரி யோசிக்கலாம்.  

      நீக்கு
    2. //ரப்டி என்றால் என்ன// கிட்டத்தட்ட பாசந்தி போல இருக்கும். பாலாடையில் செய்யப்படும் ஒரு இனிப்பு. சொஜ்ஜி அப்படத்தின் மேல் ரப்டி போட்டு பால் பூவா என்று தருவார்கள்.

      நீக்கு
    3. சொஜ்ஜி அப்பத்தின்மீதா? அது ஜாமூனுக்குச் செய்யும் மிக்சில் செய்த அப்பம் போன்ற ஒன்று என்றுனா இதுவரை நினைத்துக்கொண்டிருக்கிறேன். மால் Bபுவா

      நீக்கு
    4. மால்புவா எப்படி செய்வது என்று யூ வில் சில காணொளிகள் உண்டு. முடிந்தபோது செய்து பார்ப்பதோடு அதை அப்படியே எங்கள் பிளாக் திங்க பதிவுக்கும் அனுப்பி வைக்கலாமே நெல்லைத் தமிழன். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
    5. Rabri குறித்த கேள்விக்கு பதில் அளித்தமைக்கு நன்றி பாணும்மா. மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
    6. வாரம் ஒருவராய் எழுதி இருக்கலாம் என்பது முன்னர் எங்களுக்கு தோன்றவில்லையே.....

      பிறிதொரு சமயத்தில் இப்படி எழுத முயற்சிக்கிறேன் ஸ்ரீராம். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
    7. பதிவின் பகுதிகள் குறித்த தங்களது விரிவான கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. இந்த மூன்றாவது அலை கோவிட்டின் பதினைந்தாவது வேரியண்டாம். பரவும் வேகம் அதிகம், வீரியம் குறைவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மூன்றாம் அலை அதிக பாதிப்பு இல்லாமல் விலகினால் மகிழ்ச்சிதான் பானும்மா. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. இன்றைய பகுதிகளை ரசித்தேன்.

    நிச்சயம் கேவர் பெங்களூரில் சில இடங்களில் செய்வார்கள். எங்க போய் எப்படி வாங்குவது? ஆனால் நன்றாக இருந்ததாக மனைவி சொல்லியிருக்கிறார்.

    தீநுண்மி... எவ்வளவு காலம்தான் பயந்துகொண்டு இருப்பது?

    மொபைலில் தட்டச்சுவது... எனக்கு மடிக்கணிணியில்தான் வக்கு வேகமாக தட்டச்சு செய்ய முடியும். ஐபேடிலேயே நிறைய மிஸ்டேக் வருது.

    அவரும் நானுமே நன்றாக அமைந்தது. நீங்கள் அதைத் திரும்பி எழுதுவது அதே லெவலை அடையுமா? ரொம்ப வித்தியாசங்கள் இருக்காதே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் குறித்த தங்களது விரிவான கருத்துரைக்கு நன்றி நெல்லைத் தமிழன். மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  4. பதிவு சுவாரஸ்யமாக இருந்தது ஜி

    கூகுள் தரும் தமிழை நம்பினால் சில நேரங்களில் பிரச்சனையை சந்திக்க நேரிடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கூகுள் தரும் தமிழ் - கவனமாகவே இருக்கிறேன் கில்லர்ஜி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  5. தொற்று எண்ணிக்கை பயமுறுத்துகிறது...

    'G'Board - அப்படித்தான்...! 'அரசியலை' அறிந்து கொண்டது...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் வழி சொன்ன விஷயங்கள் குறித்த தங்களது கருத்துரைக்கு நன்றி தனபாலன்.

      நீக்கு
  6. பல்சுவைப் பதிவு அருமை. நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் முடிந்ததில் மகிழ்ச்சி நாகேந்திர பாரதி. மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  7. பாரம் - கதை அருமை வெங்கட்ஜி. நான் சமீபத்தில் ஊருக்குச் சென்று வந்ததும் இப்படியாக ஒன்று எழுதத்தொடங்கினேன். தலைப்பு வேறு. கிட்டத்தட்ட சேம் ஃபீலிங்க். ...

    கேவ்ரா...ஆஹா வீட்டில் இரு முறை வீட்டில் உள்ளதை வைத்தே ஷேப்பிற்கு அட்ஜஸ்ட் செய்து நல்லாத்தான் வந்தது ஆனால் நெய் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப என்பதால் அப்புறம் செய்யவில்லை. ரொம்பப் பிடித்தது வீட்டில். கேவர் ரப்டி....ஆஹா தான்.

    இது பத்தி நீங்கள் முன்னரே எழுதியிருக்கீங்க நினைவு இருக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் வழி சொன்ன விஷயங்கள் குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி கீதா ஜி. கேவர் குறித்து முன்னரும் எழுதியிருக்கிறேன். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  8. ”நான் வேணும்னா ’அவளும் நானும்’ என்று தலைப்பிட்டு தொடராக எழுதவா?” என்று வம்பு வளர்த்துக் கொண்டிருந்தேன். அதற்குக் கிடைத்த பதில் - “எழுதிட்டாலும்! நீங்க சரியான அமுக்குணாங்கிழங்கு! என்ன நினைக்கிறீங்கன்னு சொல்லிடவா முடியும்?” சரியாத்தான் புரிந்து வைத்திருக்கிறார்! :)//

    சொல்லப்போனால் நான் நினைத்தது - நீங்களும் கூடவே எழுதியிருக்கலாமே என்று. அதாவது ஆதி அவரது அனுபவங்களை ஒரு வாரம் எழுதும் போது அவர் உங்களைப் பற்றி அவரது கோணத்தில் சொல்லியிருப்பார் இல்லையா அதையே அதே அனுபவங்களை உங்கள் கோணத்தில்...எழுதியிருக்கலாமோ என்று தோன்றியது.

    இப்போதும் எழுதலாம்...ஒன்று செய்யலாம்...அவர் எழுதிய பகுதிக்கு உங்கள் அனுபவங்களையும் கூடவே உங்கள் நினைவில் இருப்பதையும்...எழுதலாம் ஜி.

    ஸ்டார்ட் ம்யூஸிக்!!! வித்தியயசமாக இருக்கும்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவரும் நானும்.... என்னுடைய பார்வையிலும் எழுதலாம். ஆனாலும் இப்போதைக்கு எழுதும் சூழல் இல்லை. முடிந்தபோது எழுதுவேன். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  9. அலைபேசியில் பயன்படுத்துவது எளிதாக இருக்கிறது என்றாலும் பல சமயங்களில் நாம் சொல்வதைக் கேட்டு விட்டு, அதாகவே எதையாவது தட்டச்சு செய்து விடுகிறது! அதனால் மீண்டும் படித்த பிறகே கருத்தினை வெளியிட வேண்டியிருக்கிறது. நாம் ஒன்று சொல்ல, அது ஒன்றை புரிந்து கொள்ள சொல்ல வந்த விஷயம் அர்த்தத்திலிருந்து அனர்த்தமாகி விடுகிறது! உதாரணத்திற்கு ஒன்று - “நலமே விளையட்டும்!” என்று நான் சொல்ல, அதாகவே வேறொன்றாக புரிந்து கொண்டு “மனமே கலையட்டும்!” என்று தட்டச்சு செய்து காண்பிக்கிறது! //

    ஹாஹாஹாஹா அதே அதே...நானும் முயன்றிருக்கிறேன். கணினி ரிப்பேர் ஆன போது. ஆனால் என்னால் முடியவில்லை ஹாஹாஹாஹா...அது வேறாக எழுத எழுத நான் திருத்த திருத்த....என்னால் முடியவில்லை அதிக நேரம் எடுத்ததால்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போதெல்லாம் அலைபேசியில் இந்த வகையில்தான் தட்டச்சு.. பேசி முடித்தபின் வந்திருக்கும் கருத்தினை மீண்டும் ஒரு முறை படித்து பின் வெளியிடுகிறேன். சுலபமாக இருக்கிறது என்றாலும் வெளியிடுவதற்கு முன் மீண்டும் ஒரு முறை படிக்க வேண்டியிருக்கிறது. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  10. காணொளியும் ரசித்தேன் ஜி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளி உங்களுக்கும் பிடித்த விதத்தில் அமைந்ததில் மகிழ்ச்சி கீதா ஜி. மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  11. விளம்பர படம் அருமை. உங்கள் தொடரையும் படிக்க ஆவலாக இருக்கின்றது வெங்கட் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி ராமசாமி ஜி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  12. கோலம், விளம்பர படம் பிடித்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்து இருந்ததில் மகிழ்ச்சி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....