வியாழன், 20 ஜனவரி, 2022

The Other Pair - குறும்படம்



 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

வாழ்க்கை என்பது சூரியன் அல்ல என்றும் முழுமையாய் பிரகாசிக்க அது நிலாவை போன்றது அதில் வளர்பிறை தேய்பிறை என அனைத்தும் இருக்கும். ஒரு நாள் மறைந்தும் போகும்.

 

******

 


குறும்படங்களையும் விளம்பரங்களையும் தேடித் தேடிப் பார்ப்பது எனக்கு எப்போதுமே பிடித்தமான விஷயம். அப்படி பார்ப்பவற்றில் பிடித்த சிலவற்றை இங்கேயும் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். அந்த வரிசையில் இன்று நான் பார்த்து ரசித்த ஒரு குறும்படம் உங்கள் பார்வைக்கு

 

உங்கள் காலணிகளில் ஒன்று மட்டும் தொலைந்து விட்டால் மற்ற ஒன்றை வைத்து எதாவது செய்ய முடியுமா? ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்?  சில மாதங்கள் முன்னர் வீட்டின் வாசலில் வைத்திருந்த மகளின் காலணி - புத்தம் புதியது - ஒரு காலுக்கானது காணாமல் போனது - எங்கே போனது? எப்படிப் போனது என்று தெரியவில்லை! எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை!  ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு என்ன செய்வது என அதனை தூக்கி எறிந்தார் என் அம்மா - யார் எடுத்தார்களோ அவர்களை மனதார திட்டி விட்டு! நான் கூட விடுங்கள் போனால் போகிறது என சொல்லிக் கொண்டு இருந்தேன்.  ஒன்றரை மாதத்திற்கு பிறகு படிகளுக்குக் கீழே (இரண்டாம் மாடியிலிருந்து தரைத் தளம் வரை வந்து எப்படி மாடிப்படிகளுக்கு கீழே வந்தது என்பது புரியாத புதிர் தான்).  ஏற்கனவே ஒன்றை விட்டு எறிந்து விட்டதால், இரண்டாவதையும் தூக்கி எறிந்தார் அம்மா - மீண்டும் திட்டியபடியே! 

 

இந்தக் குறும்படமும் ஒரு காலணி குறித்தது தான்.  ஒரு ஏழைச் சிறுவன் - அவனது காலணிகளில் ஒன்று பிய்ந்து போக, அதைச் சரி செய்ய முடியாது சோகத்துடன் அமர்ந்திருக்கிறான் - ஒரு இரயில் நிலையத்தில்! அங்கே அவன் வயதொத்த சிறுவன் - அவன் அணிந்திருக்கும் காலணி - மினுமினுக்கிறது என்றாலும் அதனை துடைத்துக் கொண்டே இருக்கிறான். இரயில் ஒன்றில் ஏறும்போது அவனது காலணிகளில் ஒன்று கீழே விழுந்து விட, பிறகு என்ன நடக்கிறது என்பது தான் குறும்படம் சொல்லும் விஷயம்.  நடித்த இரண்டு சிறுவர்களுமே அபாரமாக நடித்து இருக்கிறார்கள்.  வசனங்களே இல்லாத இந்தக் குறும்படத்தில் தனது முக பாவத்திலேயே சொல்ல வரும் விஷயத்தினை அழகாகச் சொல்லி விடுகிறார்கள்.  பாருங்களேன். 


 



மேலே உள்ள காணொளி வழி பார்க்க இயலவில்லை என்றால், கீழேயுள்ள சுட்டி வழியும் பார்க்கலாம்! 

 

The Other Pair | Short Film - YouTube

 

*****

 

இந்த நாளின் பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து.

 

32 கருத்துகள்:

  1. மிக நல்ல காணொளி! அன்பின் கரங்கள் கொடுக்க நீள்கிறது...கொடுக்க நினைத்த நினைப்பிற்கு பரிசாய் அவனுக்கு பிடித்தது கிடைத்தது! அன்பின் மொழி புரிந்தவர்க்கு அனைத்தும் தேடி வரும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளி உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி காயத்ரி சந்திரசேகர் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  2. பிரயாணங்களில் அடிக்கடி நிகழ்வதுதான்.  அதற்கு ஒரு உணர்ச்சிக் கலவை கொடுத்திருக்கிறார்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    இன்றைய வாசகம் அருமை. தேய் பிறைகளையும், வளர்பிறைகளையும் மாறி மாறி சந்திக்கும் போதுதான் நிலாவின் தண்மையான ஒளியின் தன்மை புரியும். அருமையான கருத்து.

    தங்கள் மகளின் புதிய காலணி பற்றி கூறியது ஒருபக்கம் வருத்தத்துக்குரிய நிகழ்வாக இருந்தாலும், இதுதான் ஆண்டவனின் சித்தம் என்கிற போது ஒன்றும் செய்ய முடியாது. எதிர் காலம் தெரியாமல்தானே எப்போதும் நிகழ் காலத்தில் ஓடிக் கொண்டிருக்கிறோம்.

    குறும்படம் அருமையாக உள்ளது. அதில் நடிக்கும் இரு சிறுவர்களின் நடிப்பும் மனதில் ஆழப் பதிந்தது. தனக்கு எப்படியும் கிடைக்காத அந்த ஒற்றை காலணியை மட்டும் வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறோம் என்ற நிலையில் அந்த ரயிலில் இருந்த அந்தச் சிறுவன் எடுத்த முடிவு உண்மையிலேயே பாராட்டுக்குரியது. நல்லதொரு கருத்தாழம் நிறைந்த குறும்படத்தை பகிர்ந்ததற்கு உங்களுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி. பகிர்ந்துகொண்ட வாசகமும் காணொளியும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. உங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

      நீக்கு
  4. குறும்படம் ஏற்கனவே உங்கள் பதிவில் இடம்பெற்ற ஒன்றுதான், மீன்டும் பார்த்து ரசித்ததில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறும்படத்தினை நீங்களும் பார்த்து ரசித்ததில் மகிழ்ச்சி ரங்கராஜன் ஜி.

      நீக்கு
  5. குறும்படம் நல்ல செய்தியை தந்தது.
    எகிப்தியன் அரபிக் மொழி ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறும்படம் குறித்த மேலதிக தகவலுக்கு நன்றி கில்லர்ஜி. பார்த்து ரசித்ததில் மகிழ்ச்சி.

      நீக்கு
  6. அழகான நல்ல கருத்துள்ல குறும்படம் ஜி மீண்டும் இங்கு ரசித்தேன்.

    இது பார்த்த நினைவு இருக்கிறது... இங்கா அல்லது நான் வழக்கமாகப் பார்ப்பதில் பார்த்ததா என்று கொஞ்சம் குழப்பம்

    நான் சமீபத்தில் நியூ பாய் என்று ஒரு குறும்படம் பார்த்தேன் ஆஸ்கார் நாமினேஷன் என்று போட்டிருந்தது. நல்ல படம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறும்படம் உங்களுக்கும் பிடித்த விதத்தில் அமைந்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

      நீக்கு
  7. குறும்படத்தை ரசித்தேன். முடிவு கொஞ்சம் புரிந்து கொள்ள முடிந்தது என்றாலும் நல்ல கருத்தை நன்றாகச் சொல்லியிருக்கும் இயக்குநருக்கும் கதைஆசிரியருக்கும் நடித்த குழந்தைகள், அக்குழுவிற்கும் பாராட்டுகள் வாழ்த்துகள்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததாக அமைந்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி.

      நீக்கு
  8. அன்பின் வெங்கட் ,
    என்றும் நலமுடன் இருங்கள்.

    நிலவு தேய்ந்தாலும் வளர்ந்தாலும்
    குளுமை தருகிறது. என்றும் ஒரு சிரித்த முகம்,
    நாம் மறக்க முடியாத நம் முன்னோர்கள் போல.

    அருமையான காலணிச் சித்திரம்.
    என்ன ஒரு நடிப்பு.

    இது போலக் குழந்தைகள் தான் நம் வாழ்வை அர்த்தமுள்ளதாக
    ஆக்குகிறார்கள்.

    மகளுக்குப் புதுக் காலணிகள் கிடைத்ததும்
    நன்மை தான்.
    தேடும் போது கிடைக்காதது, தேடாமல் வந்து சேருவதும் வாழ்க்கையின் தத்துவம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லிம்மா. வாசகம் காணொளி மற்றும் பதிவு குறித்த தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

      நீக்கு
  9. குறும்படம் அருமை... பசங்க நடிப்பு சிறப்பு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      நீக்கு
  10. குறும்படம் நல்லதோர் செய்தியை சொல்கிறது இரு சிறுவர்களும் தங்கள் நடிப்பை அழகாக செய்துள்ளார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்த குறும்படம் உங்களுக்கும் பிடித்ததாக அமைந்ததில் மகிழ்ச்சி மாதேவி.

      நீக்கு
  11. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  12. பதில்கள்
    1. குறும்படத்தினை தாங்களும் ரசித்தது அறிந்து மகிழ்ச்சி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  13. பதில்கள்
    1. குறும்படம் உங்களுக்கும் பிடித்து இருந்ததில் மகிழ்ச்சி நாகேந்திர பாரதி. மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  14. தங்கள் வலைதளத்தை தினமும் பின்னோட்டம் இடாமல் வாசிப்பவனில் நானும் ஒருவன். சில நாட்களாக பதிவிடவில்லை நீங்கள்.

    நலம்தானே?

    ரமேஷ்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நலம்தான் ரமேஷ். தங்கள் அன்பிற்கு நன்றி. சில நாட்களாக பதிவிட முடியாத சூழல். விரைவில் பதிவுகள் வெளிவரும்.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  15. அருமையான காணொளி கண்ணில் நீர் வந்து விட்டது. இரண்டு சிறுவர்களின் செயல் கண்டு.

    பதிவுகள் இல்லயே! வேலை பளுவா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா. சில நாட்கள் பதிவுகள் வெளியிட முடியவில்லை. இப்போது மீண்டும் பதிவுகள் வெளியிட ஆரம்பித்து விட்டேன். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  16. பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....