செவ்வாய், 11 ஜனவரி, 2022

தமிழகப் பயணம் - பயணங்கள் முடிவதில்லை - சில விஷயங்கள்


 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

இன்பத்திலும் துன்பத்திலும் நீங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டிய ஒரு உண்மை - இந்த நிமிடம் கூட நிரந்திரமில்லை.

 

******

 

செப்டம்பர் மாதத்தில் தமிழகத்திற்கு வந்தது பற்றி இதுவரை வெளியிட்ட பதிவுகளுக்கான சுட்டிகள் கீழே. 

 

ஓசியில் வேர்க்கடலை தருகிறார்களோ

 

Gகுரு Bபாயின் தங்கச் சங்கிலி

 

சுஜாதாவின் லாண்டரிக் கணக்கு - ஜன் ஷதாப்தியில்

 

மீன் செத்தா கருவாடு

 

பொண்ணு மாப்பிள்ளை லேட் எண்ட்ரி

 

தரங்கம்பாடி எனும் Tranquebar

 

திருக்கடையூர் கோவில்

 

திருக்கடையூர் - கல்யாண விசேஷங்கள்

 

தமிழகப் பயணம் குறித்து எழுத ஆரம்பித்து எழுதினாலும், இடையில் நிறைய தடங்கல்கள். ஒன்றிரண்டு மாதங்களாக எனது பதிவுகள் பெரும்பாலும் வெளியிடவில்லை.  இல்லத்தரசி எழுதிய பதிவுகள் தான் அதிகமாக வெளியிட்டு வந்தேன்.  பயணம் குறித்து எழுதியது பாதியில் இருக்க, மீண்டும் ஒரு தமிழகப் பயணம் முடிந்து திரும்பவும் தில்லி வந்தே ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது என்றாலும் இந்தத் தொடரை முடிக்க முடியவில்லை! நீண்ட இடைவெளி ஆகிவிட்டதற்கு வருந்துகிறேன். எழுதிக் கொண்டிருக்கும் பயணத் தொடரில் இன்னும் சில பகுதிகள் எழுத முடியும் என்றாலும் ஒன்றிரண்டு பதிவுகளுடன் தொடரை நிறுத்த வேண்டிய சூழல். சஷ்டியப்தபூர்த்தி விழாவில் கலந்து கொண்ட பிறகு நடந்த விஷயங்களையும் வேறு சில விஷயங்களையும் இந்தப் பதிவில் பார்க்கலாம்.

 

நண்பரின் சஷ்டியப்தபூர்த்தி விழாவில் கலந்து கொண்ட பிறகு திருக்கடையூரிலிருந்து திரும்பிய சமயம் இரயிலில் பயணிக்கவில்லை.  பேருந்து வழிப் பயணம் தான்.  திருக்கடையூரிலிருந்து மயிலாடுதுறை செல்லவே பேருந்து கிடைக்கவில்லை. சற்றேறக்குறைய ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. பிறகு மயிலாடுதுறையில் இறங்கி பழைய/புதிய பேருந்து நிலையம் வந்து அங்கேயிருந்து நேரடியாக திருச்சி வந்து சேர்ந்தேன்.  இரயில் பயணம் போல ஸ்வாரஸ்யமான பயணமாக இல்லாமல் சாதாரண பயணமாகவே அமைந்தது - நானும் ஈடுபாடுடன் கவனிக்கவில்லை என்றே சொல்ல வேண்டும்.  அதிக நேரம் எடுத்துக் கொண்ட அந்தப் பயணத்தில் குறிப்பிடும் விதத்தில் எந்த தகவலும் இல்லை.  வீடு சேர்ந்து குளித்து, இரவு உணவு முடித்த பிறகு உறக்கம் தான்.  



 

அடுத்த நாள் காலை சரி மொபைல்- கொஞ்சம் நோண்டலாம்னு உட்கார்ந்த போது.... 

 

"என்னங்க...." என்று ஒரு குரல்..... 

 

"சும்மா தான இருக்கீங்க, இந்தக் கீரையை கொஞ்சம் ஆய்ஞ்சு கொடுங்க........." 

 

அப்புறம் மொபைலாவது ஒண்ணாவது, களத்தில இறங்கிட்டோம்ல! வந்திருக்கும் நேரத்துல இது கூட செய்யலேன்னா எப்படின்னேன்!



 

ஒவ்வொரு முறை தமிழகம் வரும்போதும் சில வேலைகள் எனக்காகவே காத்திருக்கும்! அப்படியான வேலைகளிலேயே அதிக நேரம் சென்று விடுகிறது.  இந்த முறையும் அப்படி நிறைய வேலைகள் - அதில் ஒன்று பெரியம்மா/பெரியப்பா அவர்களின் குலதெய்வம் கோவிலுக்குச் சென்று வர வேண்டிய வேலை.  அப்படிச் சென்ற போது எடுத்த நிழற்படங்களை ஒரு ஞாயிறில் உலாவாக வெளியிட்டு இருந்தேன். அந்தப் பதிவினை பார்க்காதவர்கள் இங்கே படங்களை பார்க்கலாம், ரசிக்கலாம்! மற்ற விஷயங்களை இங்கே எழுதி இருக்கிறேன். 

 

அதிகாலை நான்கரை மணிக்கே துயிலெழுந்து, காலைக்கடன்கள் முடித்து, ஐந்தரை மணிக்குள் வீட்டை விட்டுப் புறப்பட்டாயிற்று. இல்லத்திலிருந்து திருவரங்கம் பேருந்து நிலையம் வரை நீண்ட நடை. அங்கிருந்து சத்திரம் பேருந்து நிலையம் வரை தனியார் பேருந்தில் பயணம் - இளையராஜாவின் இசை மழையில் நனைந்தபடியே! 

 

அதன் பிறகு கல்லணை வரை செல்லும் பேருந்தில் இயற்கை அன்னையின் எழிலை ரசித்தபடியே பயணம். வழியெங்கும், வாழை, தென்னை, நெல் என, பசுமையான, கண்ணுக்குக் குளிர்ச்சி தரும் காட்சிகள். சின்னச் சின்னதாய் காணொளிகள் எடுத்துக் கொண்டேன். கல்லணையில் இறங்கி காவேரி ஆற்றின் அழகையும் அதில் மீன் கொத்தித் தின்னக் காத்திருக்கும் பறவைகளையும் பார்த்து ரசித்தபடியே ஒரு நடை. பாவம் பறவைகள்..... பெரிய வலை போட்டு காத்திருக்கும் சில மனிதர்கள் இருக்கும்போது, பறவைகளுக்கு மீன் கிடைப்பது கடினம் தான். ஆனாலும் நம்பிக்கை இழக்காமல் காத்திருக்கும் பறவைகள்.....

 

காட்சிகளை ரசித்து, விலக மனம் இல்லாமல் விலகி, கல்லணை, தோகூர், நேமம், திருக்காட்டுப்பள்ளி வழி தஞ்சை செல்லும் லின்கன் பேருந்து -  எனக்காகவே காத்திருந்தது. அதில் ஏறிக்கொள்ள, பேருந்து புறப்பட்டது. முதலில் இளையராஜா என்றால் இரண்டாவதாக ரஹ்மான் துணைக்கு வந்தார்.... நேமம், ஸ்ரீ அலங்காரவல்லி/ஆதி அலங்காரவல்லி சமேத ஐராவதேஸ்வரர் சன்னதி வாயிலில் காத்திருந்தேன் - பூஜை செய்யும் குருக்களுக்காக!   அவர் வந்த பிறகு நிம்மதியாக, நின்று நிதானித்து அவர் செய்த அபிஷேகம் மற்றும் பூஜைகளைக் கண்டு  மனதில் ஒரு வித அமைதி தவழ அங்கிருந்து புறப்பட்டேன். கோவிலுக்காக பெரியம்மா கொடுக்கச் சொன்ன தொகையையும் கொடுத்து, பயனுள்ள விதத்தில் அதனை உபயோகிக்கச் சொல்லி அங்கிருந்து புறப்பட்டேன்.  மீண்டும் பேருந்து பயணம் - நேமத்திலிருந்து கல்லணை, கல்லணையிலிருந்து திருச்சி சத்திரம் பேருந்து நிலையம், அங்கிருந்து திருவரங்கம் என பேருந்து மாற்றி மாற்றி! 

 

இனிய பாடலைக் கேட்டபடி தனலக்ஷ்மி என்ற பெயரிட்ட தனியார் பேருந்தில் ரசனையான பயணம்...... நேமம் கிராமத்திலிருந்து கல்லணை நோக்கி....

 

காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்....."  

 

ஆஹா.... அடுத்ததாக இன்னுமொரு இனிமையான பாடல்.....

காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே...... 


இப்படி இனிமையாக பாடல்களைக் கேட்டபடியே ஒரு பயணம் - கல்லணை வந்து சேர்ந்து விட்டேன்.  கல்லணையிலிருந்து வீடு நோக்கிய பயணம் எப்படி இருந்தது?  நாளைய பதிவில் சொல்கிறேனே!  (பின் குறிப்பு - இந்தப் பயணத் தொடரை, தொடர்ந்து வரும் ஒன்றிரண்டு நாட்களில் எழுதி முடித்து விடுகிறேன்!)

 

******

 

நண்பர்களே, இந்த நாளில் பகிர்ந்து கொண்ட தகவல்கள் உங்களுக்கும் பிடித்திருக்கலாம், பயனுள்ளதாகவும் இருக்கலாம்! பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாகச் சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து

 

28 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரரே

    வாசகம் அருமை. பதிவும் நன்றாக உள்ளது. கல்லணையை எடுத்த படம் நன்றாக உள்ளது. பெரியம்மா/பெரியப்பாவின் நேமம் குலதெய்வ கோவிலுக்குச் சென்று தரிசித்து வந்தது சிறப்பு.சென்று வந்த வழி விபரங்களை இசையுடன் துணை வந்தவர்களின் விபரங்களுடன் தெளிவாக சொல்லியுள்ளீர்கள். தொடரட்டும் தங்கள் பதிவுகள். படிக்க ஆவலாக இருக்கிறோம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி....

      பதிவும் பதிவு வழி சொன்ன விஷயங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      நீக்கு
  2. பாதியிலே நின்றுவிட்ட பயணம் இன்னும் நினைவில் இருந்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாதியிலே நின்று விட்ட பயணம் இப்போது தொடங்கி விட்டது. விரைவில் முடிந்துவிடும் நெல்லைத் தமிழன்.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. ஒரு பயணக் காதலனின் டயரி குறிப்புகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணக் காதலனின் டைரி குறிப்புகள் - ஆமாம் ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  4. சொல்லிச் செல்லும் விதத்தில் சுவாரஸ்யமான தகவல்கள் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி சொன்ன விஷயங்கள் உங்களுக்கும் பிடித்தது அறிந்து மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  5. பயணங்கள் தொடரட்டும்..........

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணங்கள் தொடர வேண்டும் என்பதே ஆசையும் கூட ராமசாமி ஜி.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி தனபாலன்.

      நீக்கு
  7. நீங்க தமிழகம் வருவதே சும்மா இருக்கதானே (மனைவுக்கு உதவதானே)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சும்மா இருக்கத் தானே.... ஹாஹா..... எனக்கான வேலைகள் நிறையவே காத்திருக்கும் மதுரைத்தமிழன்.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  8. ஆமாம் வெங்கட்ஜி நீங்கள் பாதியில் விட்ட பயணம். நினைவிருந்தது.

    கல்லணையில் இறங்கி காவேரி ஆற்றின் அழகையும் அதில் மீன் கொத்தித் தின்னக் காத்திருக்கும் பறவைகளையும் பார்த்து ரசித்தபடியே ஒரு நடை. பாவம் பறவைகள்.....//

    ஆஹா காட்சி ஈர்க்கிறதே. யுட்யூபில் காணொளிகள் வரும் தானே!! கொஞ்ச நாளாச்சு போல போட்டு!! பார்க்க ஆவலுடன் வெயிட்டிங்க்!

    பேருந்துப் பயணம் அப்படித்தான் ஆகிறது பல சமயம். ஓப்பன் ஜன்னல் இருந்தாலாவது காட்சிகள் பார்க்கலாம்.

    பாடல்கள் தெரியவில்லை. என்ன பாடல்கள் என்று பார்க்கிறேன். கல்லணை படம் நன்றாக இருக்கிறது. அந்தச் சுட்டியும் சென்று பார்க்கிறேன். பார்க்கவில்லை என்று நினைக்கிறேன்.

    தொடர்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளிகள் சில எடுத்தாலும் இன்னும் பகிரவில்லை. விரைவில் பகிர்ந்து கொள்வேன். தங்கள் தொடர்ந்த ஆதரவுக்கு மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  9. படங்கள் பார்த்த நினைவு கொஞ்சம் வருகிறது...கல்லணை இங்கு விட கொஞ்சம் வேறு ஆங்கிளில், குதிரைகள்...மரம் ...என்று நினைவு...நினைவு சரியா என்று பார்க்கிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  10. பார்த்துவிட்டேன்...கருத்தும் போட்டிருக்கிறேன். பதிவும் நினைவுக்கு வந்துவிட்டது!!

    நானும் பயணத் தொடர் என்று தொடங்கி இடையில் ரொம்பவே இடைவெளி வரத்தான் செய்கிறது ஜி. மனம் ஒரு பக்கம் ஏதேதோ...நேரம் என்று...அப்படியும் இப்படியுமாக போராடி இன்று இரண்டாவது பகுதி எழுதி படங்கள் சேர்த்து ஷெட்யூல் செய்திருக்கிறேன்..ஹப்பா என்றிருக்கிறது!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவிடுவது இப்போதெல்லாம் கடினமாகவே இருக்கிறது எனக்கும் கீதா ஜி. சூழல் சரியாக வேண்டும். பார்க்கலாம் எப்போது தொடர்ந்து பதிவிட முடிகிறது என.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  11. வெகுநாட்கள் கழித்துத் தொடர்வதால் சுருக்கமாகவே முடித்து விட்டீர்கள் போல..  சோழ நாடு சோறுடைத்து என்பார்கள்.  பின் பசுமை இல்லாமல் எப்படி இருக்கும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுருக்கமாகவே முடிக்கவே நினைத்திருக்கிறேன் ஸ்ரீராம்.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  12. அன்பின் வெங்கட்,
    என்றும்வாழ்க வளமுடன்.
    தொற்றில்லா வாழ்வு தொடரட்டும்.

    நெடு நாட்கள் உங்களைக் காணவில்லையே என்று நினைத்தேன்.
    இப்போது விளக்கமாக எழுதுங்கள்.
    குலதெய்வம் கோயில் பயணம் நன்மை.

    நீண்ட பயணம் சென்றாலும் களைப்பாகத்தான் இருக்கும். கல்லணைக் '
    காட்சிகளும் உங்கள் விவரணைகளும் மிகச் சிறப்பு அப்பா.

    பசுமைக் காட்சிகள் ஆற்றுடன் வருகின்றன.

    நிறைய எழுதுங்கள் தொடர்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில நாட்களாக பதிவிடும் சூழல் இல்லை வல்லிம்மா. விரைவில் சரியாகிவிடும்.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  13. பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  14. பசுமை காட்சிகள். பயணங்கள் மனதுக்கு உற்சாகம் அளிக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி மாதேவி. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....