அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட பயண ஸ்வாரஸ்யங்கள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
A SEED GROWS WITH NO SOUND, BUT A TREE
FALLS WITH HUGE NOISE; DESTRUCTION HAS NOISE, BUT CREATION IS QUITE. THIS IS
THE POWER OF SILENCE.
******
அன்பின் நண்பர்களுக்கு, இந்த நாளில் நண்பர் அரவிந்த் அவர்களின் வாசிப்பனுபவம் ஒன்றினை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. வாருங்கள் அவரது வாசிப்பனுபவத்தினை வாசிக்கலாம்! - வெங்கட் நாகராஜ், புது தில்லி.
******
வீட்டுக்கு ஒரு மருத்துவர்: ஒவ்வொருவருள்ளும் ஒளிந்துள்ள ஒரு மருத்துவரைக் கண்டறிதல்.
மக்கள் எங்கு பசியும் பட்டினியும், நோய் நொடியும் இல்லாது இருக்கிறார்களோ அதுவே நல்ல நாடு என்று திருக்குறள் கூறுகிறது.
திருக்குறள் எழுதி இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்டுகள் ஆகி, அறிவியலும் தொழில்நுட்பமும் பெரும் பாய்ச்சலை நிகழ்த்திக்கொண்டிருக்கும் இந்நாட்களிலும், உலகெங்கும் நோய்களும் நோய் குறித்த பயங்களும் பெருகி வருவது வருத்தத்திற்குரியதே.
தரமான மருத்துவ வசதிகள் கிடைக்காமல் பலர் ஒருபுறம் தவிக்க, செல்வந்தர்களோ, தொட்டதற்கெல்லாம் மருத்துவமனை செல்லும் அதீத பயத்தை விழிப்புணர்வாகக் காட்டிக் கொள்வதையும் கண்ணெதிரே காண்கிறோம்.
ஒரு காலத்தில் இயற்கைக்கும், பிறகு கடவுளுக்கும் அஞ்சிய நாம், இன்று நித்தமும் கண்டறியப்படும் புதுப்புது கிருமி வகைகளுக்கு அஞ்சி கிருமி நாசினிகளின் விளம்பரங்களால் நிறைந்த ஊடக வெளியை உருவாக்கியுள்ளோம்.
'விற்கப்படும் இடத்தில் முடிவாகும் விலை, பொருளுக்கு மட்டுமல்ல; அதைப் பற்றிய அறியாமைக்கும் சேர்த்துத்தான்' என்ற வணிகத்தின் நியதியை உணராமல், மருத்துவம் இன்று வியாபாரம் ஆகிவிட்டதாகப் புலம்புவதில் என்ன பயன்?
இந்த அறியாமையைக் களையும் வண்ணம், நோய்கள் குறித்தும், நம் உடல் இயக்கம் குறித்துமான தெளிவான விளக்கங்களுடன், வாழ்வின் தலையாய செல்வமான ஆரோக்கியத்தை நோக்கி நம்மை அழைத்துச் செல்வதே திரு "அக்கு ஹீலர் அ. உமர் பாரூக்" அவர்களின் "வீட்டுக்கு ஒரு மருத்துவர்" நூல்.
இந்நூலை எனக்கு அறிமுகம் செய்த நண்பர் நவரசன் அவர்களுக்கும், நூலை அனைவருக்கும் அறிமுகம் செய்ய தூண்டுகோலாய் அமைந்த 'தவம்' மின்னிதழின் 'எண்ண ஓட்டம்' கட்டுரைத்தொடர் ஆசிரியர், சி. குலசேகர பாண்டியன் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
பொருளியல் பயன்களுக்காகக் கணினி மொழி உட்பட்ட பல மொழிகளைக் கற்கும் நமக்கு, நோய்களைப் பல்லாண்டுகளுக்கு முன்பே அறிவிக்கும் நம் உடலின் மொழியைப் புரிய வைத்து, ஆரோக்கிய வாழ்விற்கு அடித்தளமிடுவதே நூலின் தலையாய அம்சம் எனலாம்.
உடலைத் தனித்தனி பாகங்களாகப் பிரித்து, ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு துறையாக வளர்ந்து, பெரும் சிக்கலானதாக காட்சியளிக்கிறது இன்றைய மருத்துவ அறிவு.
அத்தகைய மருத்துவ ஞானத்தை, ஒத்திசைவான, ஒழுங்கமைவுடன் அமைந்துள்ள உடலின் இயக்கமாக, அனைவரும் புரிந்துகொள்ளும் வண்ணம் எளிதில் விளக்கியிருப்பதே நூலின் தனித்தன்மை.
கண்ணிற்கே தெரியாத உயிரணுவை அருவம், உருவம், அருஉருவம்... போன்ற 9000 வகையான இயக்கங்களாக விளக்குகின்றன நம் பாரம்பரிய மருத்துவங்கள்.
இவற்றை மிக எளிமையாக்கி, தான் உட்கிரகித்த ஆற்றலைச் செரிமான சக்தி, இயக்க சக்தி, பராமரிப்புசக்தி என உடல் எவ்வாறு பிரித்து உபயோகிக்கிறது என்ற விளக்கத்தால், நாம் அஞ்சும் நோய்களுக்கான அடிப்படைக் காரணங்கள் தெளிவாக்கப்பட்டுள்ளன.
வைட்டமின்கள், கார்போஹைட்ரேட்டுகள் உள்ளிட்ட சத்துக்களை உடல் தயாரிக்கும் முறையை விளக்கும் நூலின் பகுதிகளால், ஊட்டச்சத்துகளின் குறைபாடு குறித்த கவலைகளைக் களைகிறார் ஆசிரியர்.
ஆற்றலை உட்கிரகித்த பின்னர், எஞ்சிய கழிவுகளை உடல் கையாளும் முறை குறித்த விளக்கத்தால், கிருமிகளின் உலகம் குறித்த தெளிவான புரிதலை ஏற்படுத்தி அவற்றின் மீதான அச்சத்தை அகற்றிவிடுகிறார் ஆசிரியர்.
இவ்வாறு, "உடல் எப்போதும் தவறு செய்வதில்லை. உடலை அதன் போக்கில் அனுமதித்தால், எப்போதுமே உடல் நலக்கேடு இல்லை" என்பதை நூலின் முதல் பகுதி நமக்குத் தெளிவாக்குகிறது.
உடல் குறித்த விழிப்புணர்வின் அடுத்த கட்டமாக, உடலை வளமாக்கும் தனிச்சீர் உணவு முறையின் அவசியத்தை விவரிக்கிறது நூலின் இரண்டாம் பகுதி.
'உணவே மருந்து' என்ற சான்றோர் வாக்கை மறந்த நாம், உணவை வெறும் நாவில் தெரியும் சுவைக்கானதாகவே கருதுகிறோம்.
ஒவ்வொரு சுவைக்கும் பின்னால் உள்ள உணவின் தன்மைகளும், அத்தன்மைகளால் பயனடையும் உள்ளுறுப்புகள் குறித்த தகவல்களும், மிகைச் சுவையால் பாதிக்கப்பட்ட உள்ளுறுப்பை எதிர்ச் சுவையால் குணப்படுத்தும் பாரம்பரிய ஞானமும் வாசகரைப் பிரமிப்பில் ஆழ்த்துபவை.
இதற்கும் மேல், சமையல் கலையுடன் கூடிய மருத்துவ முறைகளை அறியச் செய்பவை; அவித்தல், தாளித்தல், வறுத்தல் போன்ற வெவ்வேறு சமையல் முறைகளால் உணவில் ஏற்படும் அமிலத்தன்மை, காரத்தன்மை குறித்த விளக்கங்களே.
எங்கும் எதிலும் கலப்படம் என அஞ்சும் நமக்கு, நூல் காட்டும் பயனுள்ள உணவுகளை அடையாளம் காணும் எளிய முறைகள், உலகோர் அனைவரிடமும் சென்று சேர வேண்டியது அவசியமாகப்படுகிறது.
பஞ்ச பூதங்களால் உருவான இப்பிரபஞ்சத்தின் பிரதிபலிப்பான நம் உடல் குறித்த மேலும் விசித்திரமான தகவல்களால் நூலின் மூன்றாம் பகுதி நிறைந்துள்ளது.
இந்த ஐந்து மூலகங்களின் இயல்புகளை ஒத்த நம் இராஜ உறுப்புகள் குறித்தும், அவற்றால் புறத்தோற்றத்தில் தெரியும் நிறம், சுவை, மற்றும் குண மாற்றங்கள் மூலம், வெவ்வேறு நோய்களை ஆரம்பத்திலேயே அறியும் அதிசய உக்தியும் நூலின் தலையாய பகுதியாகும்.
உணவிலிருந்தும், சுவாசம் மூலமும் உடல் ஆற்றலைப் பெறுவதை அறிந்த நமக்கு, தோலில் உள்ள நுண் துளைகளும் பிரபஞ்ச ஆற்றலை பெறும் அதிசய தன்மையும், அதை உபயோகிக்கும் மருத்துவ முறையும் புதுச் செய்தியாக இருக்கலாம்.
‘இந்திய அக்குபங்சரின் தந்தை’ டாக்டர். ஃபஸ்லூர் ரஹ்மான் அவர்களின் கண்டுபிடிப்புகளின் வழிகாட்டலால் உருவான இந்நூல், விரல்களாலேயே நோய்களைக் குணமாக்கும் எளிய முறையை உடலின் வெறும் பத்து பிரதான மூலகப் புள்ளிகளைக் கொண்டு விளக்கியுள்ளது.
மேலோட்டமாகப் பார்த்தால், ஆங்கில மருத்துவத்தின் மீதான காட்டமான விமர்சனமே, இந்நூலின் குறையாகத் தெரிய இடமும் உண்டு.
எவரையும் தாழ்வாகக் கருதாமல், நம்மை நாமே உணர ஒரு கருவியாக இந்நூலைப் பயன்படுத்துவதே ஆசிரியரின் உயரிய நோக்கமாக ஆழ்ந்து வாசித்து உணரலாம்.
நோய்த் தொற்று மிகுந்த இக்காலத்தில், ஒத்திசைவான நம் உடல் இயக்கத்தையும், அதற்குத் துணை செய்யும் உணவையும், எளிய சிகிச்சை முறைகளையும் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய இந்நூலை பின்வரும் சுட்டியில் வாங்கி வாசிக்கலாம்.
வீட்டுக்கு ஒரு மருத்துவர் வாங்க
“பலசாலியாகவும் அச்சமூட்டாதவனாகவும் ஒரேசமயத்தில் ஒருவனால் இருக்க முடியுமானால், அவனே அதிகம் நேசிக்கப்படுவான்.” என்பதை கிரேக்க மாவீரர் அலெக்சாண்டர் ஒரு இந்திய சாதுவிடமிருந்து கற்றதாக வரலாற்றாசிரியர்கள் கூறுவர்.
அவ்வாறே, உலகளாவிய ஒருங்கிணைப்பு என்னும் மானுட பலத்திற்குக் காரணமான வணிகத்தால் வளர்ந்து வரும் நவீன மருத்துவத்தை, நம் பாரம்பரிய ஞானத்தால் வழிநடத்தி, அன்பும், ஆரோக்கியமும், விழிப்புணர்வும் நிறைந்த உலகை உருவாக்குவோம்.
நட்புடன்,
இரா. அரவிந்த்
******
இந்த நாளின் வாசிப்பனுபவம் குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கலாமே! மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லியிலிருந்து….
முன்னர் ஒரு நேரம் இது பரபரப்பாக விளம்பரம் செய்யப்பட்டு புத்தகக் கண்காட்சியில் வைக்கப் பட்டிருந்த நூல் என்று நினைவு.'மேலோட்டமாகப் பார்த்தால் இது ஆங்கில மருத்துவத்தின் மீதான காட்டமான விமர்சனம் என்று தோன்றுவது' உள்ளதை உள்ளபடி சொல்லி இருக்கிறார் அரவிந்த். அதே போல இது மாதிரி நூலை ஒரு மூச்சில் நாவல் படிப்பது போல படிக்க முடியாது என்பதும் புரிவதால், அர்விந்துக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும். நல்ல விரிவான விமர்சனம்.
பதிலளிநீக்குஆம் ஐய்யா.
நீக்குஇதை பலமுறை படித்து இதில் சொல்லப்பட்டவற்றை ஏழு மாதங்களாக ஓரளவு கடைபிடித்து அதன் பயன்களை அருவடை செய்த பின்பே இதை அணைவருக்கும் அறிமுகப்படுத்தும் முடிவை எடுத்தேன்.
தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்விர்க்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் ஐய்யா.
நல்லதொரு விமர்சனம்...
பதிலளிநீக்குமிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் சார்.
நீக்குநூல் இன்றைய சூழலில் அனைவரும் படிக்க வேண்டிய பாடமாக இருக்கிறது.
பதிலளிநீக்குநண்பர் திரு.இரா.அரவிந்த் அவர்களுக்கு நன்றி.
ஆம் கில்லர்ஜி சார்.
நீக்குநம் உடலே நமக்கான சிறந்த பாடம் இன்றைய சூழலில்.
தங்களின் வருகைக்கும் கருத்துறைக்கும் மிக்க நன்றி ஐய்யா.
நல்ல் விமர்சனம் அரவிந்த்.
பதிலளிநீக்குஎன் அத்தை பெண்கள் இருவர் அக்குபங்க்சர்/ப்ரெஷர் கற்றுக் கொண்டுத் தங்களுக்கும் சில உபாதைகளுக்கு அதைச் செய்து கொண்டு அதனால் பயன் இருக்கு என்று சொல்கிறார்கள்தான்.
நன்றி அரவிந்த்.
கீதா
தங்கள் சொந்தத்திலேயே இதனால் பயனடைபவர்கள் இருப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி கீதா மேடம்.
நீக்குதங்கள் வருகைக்கும் தொடர் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி.
நல்லதொரு நூல் விமர்சனம்.
பதிலளிநீக்குமிக்க நன்றி மாதேவி மேடம்.
பதிலளிநீக்கு