புதன், 21 செப்டம்பர், 2022

ராமையா டாக்கீஸ் - பத்மநாபன்

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். சற்றே இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   பதிவுகள் எழுத முடியாத சூழலில் இருந்ததால் நண்பர் வெங்கட் அவர்களின் தளத்தில் எதுவும் எழுதவில்லை.  இதோ இப்போது ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்க வந்து விட்டேன்.  தொடர்ந்து எழுதவே ஆசை - பார்க்கலாம்!

 

நேற்றைய யாரிவள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

கல்விக்கு முடிவே இல்லை. ஒரு புத்தகத்தைப் படித்து, தேர்வில் தேர்ச்சி பெற்று, முடிப்பதல்ல கல்வி. நீங்கள் பிறந்தது முதல் இறக்கும் வரை, முழு வாழ்க்கையும், ஒரு கற்றல் செயல்முறையே. --ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி

 

******




 

அப்பாடா! படிச்சு முடிச்சாச்சு. ஒரு வழியா டிகிரியை கையில வாங்கியாச்சுன்னு நிம்மதியா இருக்க முடியுதா மனுஷனுக்கு. அடுத்த நாளே, பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அப்ளிகேஷன் போட்டுட்டியா, BSRB  அப்ளை பண்ணிட்டையா, ஊரைச் சுத்தாம RRB க்கு ப்ரிபேர் பண்ணு. நொய்யு.. நொய்யு...ன்னு யாராவது கேட்டு கேட்டு காது வலிச்சுக் கிடக்கு. எல்லாத்துக்கும் போட்டாச்சு, போட்டாச்சுன்னு ஒரு பதிலை கொடுத்துக்கிட்டு ஊரைச் சுத்த வேண்டியதுதான்.

 

காலையிலே ஒரு எட்டு மணிக்கு மெதுவா எந்திச்சு அப்படியே சோம்பேறியா சுத்திக்கிட்டு திரிய வேண்டியது. அப்படி சுத்திக்கிட்டு இருந்தப்போ ஒரு நாளைக்கு பக்கத்து தெரு குட்டிமாப்பிளைசார் "டிகிரி முடிச்சுக்கிட்டு ஊர்சுத்தி படிச்ச படிப்பை வீணாக்குகையே. நம்ம பய வளவன் கணக்குல தரிங்கணதோம் போடுகான். வளவனுக்கு கணக்கு கொஞ்சம் சொல்லிக் கொடேன். பயல நாளைக்கு காலையிலே வரச் சொல்லுகேன்"னாரு. நானும் சரின்னுட்டேன். 

 

அடுத்தநாள் காலையில் ஒரு அஞ்சு அஞ்சரை இருக்கும். நல்ல உறக்கம். டொக்கு டொக்குன்னு வளவன் உறக்க கலக்கத்துல  வந்து கதவை தட்டுகான். அட, ஆண்டவா! அஞ்சரைக்கேவா!  பாவம், அவன் என்ன செய்வான். அவனோட அப்பா எழுப்பி உட்டுருப்பாரு. என்ன செய்ய. நானும் இதை எதிர்பார்க்கல்லை. ஆனாலும் குடுத்த வாக்குன்னு ஒண்ணு இருக்குல்லா. மள மளண்ணு எந்திச்சு, பளபளண்ணு  பல்லை தேச்சு பாடத்தை ஆரம்பிச்சாச்சு. 

 

இந்த பய வளவன் நல்ல ராசியான பயல். ஆமா. அவன் நல்ல படிச்சானோ இல்லையோ, நான் டியூசன் எடுக்கறது தெரிஞ்சு பத்து பதினைந்து பேரு அவங்க பிள்ளைகளுக்கும் டியூஷன் எடுக்க சொல்ல ஒரு புதிய டியூசன் மாஸ்டர் உதயம். 

முதல்ல எட்டாம் கிளாஸ் ஒன்பதாம் கிளாஸ் பிள்ளைகளுக்குன்னு ஆரம்பிச்சு அப்புறம் பத்தாங்கிளாஸ் கணக்கு டியூசன் மாஸ்டரும் ஆயாச்சு. 

 

அப்புறம் நண்பர்கள் ப்ரேம் குமார், சிவா, வேலவன், மணி என்று கூட்டணி சேர்ந்து ஒரு ட்யூஷன் சென்டரும் ஆரம்பிச்சாச்சு.     சாயுங்காலம் ஒரு அஞ்சு மணியில் இருந்து ஒரு ஏழு மணி வரைக்கும் ஒருபக்கம் அசோகர் மரம் நட்டுக்கிட்டு இருப்பாரு. இன்னொரு பக்கம் திருவள்ளுவரு திண்டாடிகிட்டு இருப்பாரு. நம்ம பயலுகளப் பத்தி தெரிஞ்சதனாலதான அவரு ஒண்ணே முக்காலடிக்கு மேல மண்டையில ஏறாதுன்னு சின்னதா குறளை எழுதிக்கிட்டு போனாரு. இந்த ஒண்ணே முக்காலடியை அவன் மண்டையில ஏத்துகதுக்கு சிவா ஒண்ணரையடி கம்பை தூக்கிக் கிட்டு அவனுக்கு ஆயிரத்து முன்னூத்து முப்பதும் தெரிஞ்ச மாதிரி கத்துவான். அந்த கம்பை வாங்கி அவனை சொல்லப் சொன்னா ஒரு முப்பது சொல்லுவானா, தெரியலையே. 

 

அதெல்லாம் சரி, நல்ல வருமானமான்னுதான கேக்குறீங்க. ஹி! ஹி! காசு வரும் ஆனா வராது. ஆனாலும் ஒரு வசதி. உள்ளூர் அதனால சாரம் உடுத்துக்கிட்டே பாடம் எடுக்கலாம். சாரம்னா என்னவா. அதான் சார் கைலி. ஆமா, லுங்கியைத்தான் எங்க ஊர்ல சாரம்ன்னு சொல்லுவோம். கொத்தனாரும் சாரம் கட்டிக்கிட்டுத்தான் சாரம் மேல நிண்ணு சாந்து பூசுவாரு. 

 

அது இருக்கட்டும். என்னதான் டியூஷன் வாத்தியாரானாலும் நம்ம சந்தோஷத்தையும் விட்டுக் கொடுக்க முடியுமா. வந்த காசு ஏதாவது ஒரு டீக்கடையில் டீக்கும் முறுக்குக்கும் சரியாயிருக்கும். ஆனா ஒண்ணு. ஏழு மணிக்கு டியூஷன் முடிஞ்சதும் நாலு பேரும் அப்படியே கிளம்பி ஏதாவது டீக்கடையில பட்டறையை போட்டு ஊர்க்கதை உலகக்கதையின்னு ஒரு ஒம்பது மணி வரையில அரட்டை அடிப்போமுல்லா. அது ஒரு கனாக்காலம். 

 

அப்போதான் எங்க ஊருக்கு ஒரு டூரிங் டாக்கீஸ் வந்தது. பக்கத்து ஊரு ராமையா அண்ணன்தான் ஆசையா ஆரம்பிச்சாரு. குறுங்காட்டு சாத்தான்கோயிலுக்கு பின்னால்தான் டாக்கீஸு. 

 

தரை டிக்கெட்டு, பெஞ்சு டிக்கெட்டு அப்புறமா கடைசியில் ஒரு வரிசையில செயர் டிக்கெட்டு. என்னது, குஷன் வச்ச செயரான்னா. குஷன் வச்ச செயருன்னா நம்ம ஊர்க்காரன் சுகுப்போட்டே கிழிச்சிர மாட்டானா. அதனால மடக்கு செயருதான். 

 

தரை டிக்கெட்டு அம்பத்தஞ்சு பைசா. பெஞ்சு தொண்ணூறு பைசாவோ என்னவோ. செயரு ஒண்ணே கால் ரூபா. வாரத்துக்கு ஒரு நாளு டியூஷன் முடிஞ்சதும் ராமையா டாக்கீஸுக்கு விசிட் போயிருவோம். என்ன ஆனாலும் நாங்க வாத்தியாராச்சுல்லா, அதனால செயர் டிக்கெட்டுத்தான். 

 

இப்படி இருக்கையில் ஒரு நாளு ஒரு நல்ல எம்ஜிஆர் படம் போட்டான். என்ன படமுன்னு ஞாபகம் வரமாட்டங்கே. அன்னைக்கு கையில வேற காசு குறைவு. ஒரு பயலும் டியூஷன் ஃபீஸை அன்னைக்கு கொண்டு வரல்ல. எங்களுக்கோ சினிமா பாக்க மூடு வந்துட்டுது. தரை டிக்கெட்டுக்குள்ள காசுதான் தேறிச்சு. சரி, தரை டிக்கெட்டுக்கு போய்த்தான் பாப்போமேன்னு நினைச்சா ப்ரேம் குமார் சொன்னான், எடே, தியேட்டரில நம்மக் கிட்ட டியூஷன் படிக்கிற பயலுக எவனாவது வந்தா மானம் போயிருமேடே. 

 

சரி, ஒண்ணு பண்ணுவோம். படம் ஆரம்பிச்சதும் லைட்ட அணைப்பான். அந்த இருட்டுல அனக்கம் காட்டாம போய் இருந்துருவோம். படம் முடிஞ்சதும் மூச்சுவுடாம வந்துருவோம். சரின்னு இருட்டுல தரை டிக்கெட்டுல போய் இருந்தாச்சு. ஆனா இன்டர்வல்ல லைட்டைப் போடுவானே, அதை மறந்துட்டோம். சொன்ன மாதிரியே ரண்டு மூணு நம்ம பயலுக தலையும் தெரியுது. இன்டர்வெல்லும் வந்தது. லைட்டும் போட்டுட்டான். அப்போதான்யா நம்ம கைலி கை கொடுத்தது. கைலியை அவுத்து தலையோடு முக்காடு போட்டுக்கிட்டு உக்காந்துட்டோம்லா. முறுக்கு, முறுக்கு, முற்....றுக்குன்னு முறுக்குகாரனும் சோடா, சோடா கோ.....லி சோடான்னு சோடகாரனும் சுத்திச் சுத்தி வாராங்க. முக்காட்டை இன்டர்வெல் முடிஞ்சு லைட்டை அணைக்கது வரை நீக்கல்லையே. படம் முடிஞ்சதும் கூட்டத்தோடு கூட்டமா வெளில வந்து வீடு சேர்ந்தோம்.

 

அடுத்த நாள் டியூஷனுக்கு போனா ஒரு விளைஞ்ச வெள்ளாமை இருக்கான். அவன், அண்ணே, நாலு வாத்தியாரையும் தரை டிக்கெட்டில பார்த்தேனே. சிவா உடனே அவங்கிட்ட அக்ரிமென்ட் போட்டான். வெளியில யாருகிட்டையும் சொல்லாதலே. உன்னை நான் இனி அடிக்க மாட்டேன். அவனுக்கு சந்தோஷமாகப் போச்சு. ஆனா பயல் அதுக்கு முன்னாலேயே நாலு பயலுகள்ட்ட எங்களை தரை டிக்கெட்டு, தரை டிக்கெட்டுன்னு சொன்னது எங்களுக்கு தெரியாதுல்லா.

 

ம்ம். டியூஷன் வாத்தியாரு ஆனாலும் ஆனோம். ஒரு சினிமாவை நிம்மதியா பாக்க முடியல்லையே. டியூஷன் வாத்தியாருக்கே இந்த நிலைமையின்னா ஸ்கூல் வாத்தியாரு பெஞ்சு டிக்கெட்டுல கூட உக்கார முடியாது போல இருக்கே!

 

எங்கேயாவது இந்த டூரிங் டாக்கீஸுன்னு ஒண்ணக் கண்டா சொல்லுகேளா. ஆசையா இருக்குல்லா!

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

பத்மநாபன்

 

11 கருத்துகள்:

  1. சுவாரஸ்யமான மீள் ஆரம்பம். டியூஷன் வாத்தியார் அவதாரம் ஜாலி!

    பதிலளிநீக்கு
  2. நல்ல ஜாலியான பதிவு நண்பரே தொடர்ந்து எழுதுங்கள்...

    பதிலளிநீக்கு
  3. ராமையா டாக்கீஸ் கதை, சிரிச்சு மாளலை. சாரத்துல இருந்து ஆரம்பிச்சு, பட்டறை போடுவது, செயர் சீட்டு, கிழிப்பதுன்னு நெல்லைப் பேச்சைக் கண்ணுல கொண்டுவர்றாரு. பத்நாபன் அண்ணாச்சி அண்ணாச்சிதான். அருமையான எழுத்தும் அனுபவமும்.

    பதிலளிநீக்கு
  4. மிக அருமையான நினைவுகள், நிகழ்வுகள் பகிர்வு.
    தொடர்ந்து எழுதுங்கள் .

    பதிலளிநீக்கு
  5. அண்ணாச்சி தூள் கிளப்பிடார். இனிமே அண்ணாச்சி பேறு டூரிங் டாக்கீஸ் பத்மநாபன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பத்மநாபன் அண்ணாச்சியின் ஒவ்வொரு பதிவை வைத்தும் அவருக்குப் பெயர் கொடுக்கலாம். அவ்வளவு நல்லா நகைச்சுவையா அனுபவங்களை நேட்டிவிட்டி மாறாம பதிவு செய்கிறார். ஒவ்வொருத்தருக்குள்ளதான் எழுத்துத் திறமை எப்படி ஒளிஞ்சிக்கிட்டிருக்கு என்று வியக்கிறேன். நம்ம திருநெவேலி எழுத்தாளர் சுகா மாதிரி புகழ்பெற வேண்டியவர் பத்மநாபன் அண்ணாச்சி (எழுத்தில்)

      நீக்கு
  6. பப்பு அண்ணாச்சி வெல்கம் வெல்கம்...

    நம்ம ஊரு பாஷை கேட்டு ஒரே சந்தோஷம். சிரித்து முடியலை...பதிவு வாசித்து...நம்ம ஊர் கைலி - சாரம்...இதை வைச்சு ஒரு வரி போடலாமேனு அதையும் //கொத்தனாரும் சாரம் கட்டிக்கிட்டுத்தான் சாரம் மேல நிண்ணு சாந்து பூசுவாரு. // சொல்லிட்டீங்க

    தரை டிக்கெட், பெஞ்ச் டிக்கெட், சேர் டிக்கெட் நினைவு படுத்திட்டீங்க

    ரசித்து வாசித்தேன்..

    கீதா

    பதிலளிநீக்கு
  7. வாசகமும் செம பதிவுக்கு பொருத்தமாக்

    கீதா

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....